முகநூலிலிருந்து வெங்கடேசன் SR
மறக்க மனம் கூடுதில்லையே
வாழ்ந்த ஊர்
இந்த தலைப்பில் நான் பிறந்து வளர்ந்த ஊரான செங்கல்பட்டு பற்றி தான் சொல்ல போகிறேன்.
நான் பிறந்து 20 வருடங்கள் அந்த ஊரில் தான் இருந்தோம். அந்த காலத்தில் அது ஒரு டவுன் தான். இப்போது கிட்டத்தட்ட சிட்டி ஆகிவிட்டது.
நான் ஒன்பதாவது பையனாக பிறந்ததால் எனக்கு முன்னால் இருந்த சகோதர சகோதரிகளின் நண்பர்கள் அனைவரும் எனக்கும் நண்பர்கள் தான். அதனால் அந்த ஊரே எங்களுக்கு மிகவும் பழக்கமான ஒரு ஊர் ஆகிவிட்டது. அந்த ஊரில் உள்ள அத்தனை சந்து பொந்துகளும் எங்கள் அனைவருக்கும் அத்துபடி.
எல்லோரும் ஒரே ஸ்கூலில் படித்து ஒன்றாகவே வளர்ந்ததால் ஊரே ஒரு குடும்பமாகத்தான் எங்களுக்கு தோன்றும்.
வருடம் ஒருமுறை ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ள ஒரு மைதானத்தில் ஜெமினி சர்க்கஸ் தவறாமல் வந்துவிடும் .அப்போது இந்த சர்க்கஸை எல்லாம் பார்ப்பதற்கு காண கண்கோடி வேண்டும். அவ்வளவு விலங்குகள் அவ்வளவு சாகசங்கள். அத்தனையும் ஒவ்வொரு வருடமும் நாங்கள் மிகவும் மகிழ்ந்து பார்த்த ஒன்று. சர்க்கஸ் கூடாரத்தின் மேல் புறத்திலிருந்து ஒரு பெரிய லைட் ஒவ்வொரு நாள் இரவு காட்சி தொடங்குவதற்கு முன்னால் ஒளி வெள்ளத்தை ஊர் முழுவதும் பாய்ச்சும். அந்த வெளிச்சத்தை கண்டு மகிழ்வதற்காகவே ஒவ்வொரு குடும்பத்தின் மொட்டை மாடியிலும் அந்தந்த குடும்பத்தினர் அனைவரும் கூடி விடுவோம். இந்த ரசிப்பு சர்க்கஸ் தொடங்கிய முதல் நாளிலிருந்து இறுதிநாள் வரை அனைத்து குடும்பங்களிலும் தொடரும்.
அடுத்ததாக மூன்று நாட்கள் தொடர்ந்து சைக்கிள் ஓட்டும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி அந்த ஊரில் ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஒன்றுதான். அதில் நடக்கும் ரெக்கார்ட் டான்ஸ்மிகவும் பிரபலமானது. சைக்கிள் ஓட்டும் அந்த சைக்கிள் நாயகனை உற்சாகமூட்ட நடனமாடும் மங்கையர்கள், கோமாளிகள் என்று ஒரு கும்பலே இருக்கும். இடை விடாது சைக்கிள் ஓட்டும் அந்த மூன்று நாட்கள் மக்களுக்கெல்லாம் நல்ல பொழுதுபோக்காகவே இருந்தது.
ஆண்களுக்கு பெண்கள் வேஷம் போட்டது போல் இருக்கும் அந்த மங்கையர்கள் ஆடிய நடனத்தில் 'தேன்கூடு நல்ல தேன்கூடு' என்ற பாடலுக்கு ஆடிய நடனம் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.
அடுத்து அந்தக்காலத்தில் செங்கல்பட்டு சிறு டவுன் ஆக இருந்ததால் காய்கறி வாங்குவதற்கு கடைக்கு சென்ற வரலாறே கிடையாது. தெருவில் எல்லா காய்களும் பச்சை பசேலென்று மிகவும் குறைந்த விலையில் கொண்டு வந்து விற்பார்கள். செங்கல்பட்டு காஞ்சிபுரம் பாதையில் ஆத்தூர் என்ற கிராமம் இருக்கும். இதுதான் சோவின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு விளையும் கத்தரிக்காய்களை செங்கல்பட்டு டவுனுக்கு கொண்டுவந்து கிலோ ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு விற்பார்கள். எங்கள் ஆத்தில் கத்தரிக்காயை கிலோ ஐம்பது பைசாவிற்கு வாங்கி வற்றல் போட்டு வைப்பார்கள். அந்த கத்தரிக்காய் வற்றல் போட்டு வைத்த சாம்பார், வத்தக்குழம்பு இரண்டும் இன்றும் என் நாவில் நீர் ஊற செய்கிறது. இதே போல் பல வகையான காய்கறிகள் அந்த ஊரில் தெருவில் தான் வந்து விற்கப்படும்.
சிறுகுடி இராமமூர்த்தி வெங்கடேசன் என்றால் சினிமாவை சம்பந்தப்படுத்தாத பதிவு உண்டா!. அடுத்ததாக ஸ்ரீதர் வளர்ந்து டைரக்டர் ஆன ஊரும் அதே செங்கல்பட்டு தான். அவரின் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் முழு கதையும் படமாக்கப்பட்ட மருத்துவமனை, செங்கல்பட்டில் அப்போதுதான் கட்டி முடிக்கப்பட்ட பொது இலவச மருத்துவமனை ஆகும். அந்த மருத்துவமனையின் வாயிலில் அமைக்கப்பட்டிருந்த ஒரு சிலையின் முன்னால்தான் படத்தின் கடைசி பாடலான 'ஒருவர் வாழும் ஆலயம்' பாடலும் படமாக்கப்பட்டது.
நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் பெரும்பாலான காட்சிகள் செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் சாலையில் உள்ள ஆலப்பாக்கம் என்ற கிராமத்தில் தான் படமாக்கப்பட்டது. தினந்தோறும் படப்பிடிப்பு முடிந்தவுடன் தேவிகா கல்யாண்குமார் மற்றும் படக்குழுவினர் தங்கியிருந்த வீடு எங்கள் வீட்டுக்கு அருகிலேயே இருந்தது. தினந்தோறும் அவர்களை காண்பதற்காக அந்த வீட்டின் வாசலில் காத்துக் கிடந்த அனுபவம் எனக்கு உண்டு.
அதேபோல் சிறுகுடி ராமமூர்த்தி வெங்கடேசன் என்றால் சினிமாவை அடுத்து ஆன்மீகம் இல்லாமலா!.
செங்கல்பட்டில் இருக்கும் கோதண்டராமர் கோயில் மிகவும் விசேஷமானது. ஏனென்றால் அங்கு உள்ள ஆஞ்சநேயர் சன்னதி மிகவும் ஸ்பெஷல். இருக்கும். ஆஞ்சநேயருக்கு சனி மிதித்த ஆஞ்சநேயர் என்ற பெயர் உண்டு. அங்கு உள்ள ஆஞ்சநேயர் காலடியில் சனி மிதி பட்டிருப்பார். இது வேறு எந்த ஊரிலும் காண கிடைக்காத காட்சி.
மேலும் செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் சாலையில் அமைந்திருக்கும் நெம்மேலி கிராமம் இப்போது மிகவும் பிரபலமாகிவிட்டது . சிரார்த்தம் இந்த தலத்தில் செய்வது மிகவும் விசேஷமாகும்.
செங்கல்பட்டு பொது மருத்துவமனையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு கிராமம் திருமணி என்ற பெயரில் இருக்கும் .அந்த காலத்தில் அந்த இடத்தில் தான் முதன் முதலாக தொழுநோயாளிகள் புனர்வாழ்வு இல்லம் நிறுவப்பட்டது. ஒவ்வொரு ஞாயிறு அன்றும் அங்கிருக்கும் தொழு நோயாளிகள் செங்கல்பட்டு டவுனில் உள்ள தெருக்களில் வந்து பணம் கேட்டு செல்வார்கள். உடலால் ஊனமுற்ற அவர்களுக்கு அக்காலத்திலேயே செங்கல்பட்டு மக்கள் மிகுந்த தாராள மனப்பான்மையோடு பணம், பொருள் கொடுப்பதை நான் பார்த்து வியந்ததுண்டு. இப்போது அந்த புகலிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை.
செங்கல்பட்டில் நவராத்திரி மிகவும் பிரசித்தம். மைசூர், குலசேகரப்பட்டணம் இந்த இரண்டு ஊர்களையும் அடுத்து செங்கல்பட்டு தான் நவராத்திரிக்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஊர். ஊரில் உள்ள அத்தனை வியாபாரிகளும் பெரும் பொருட்செலவு செய்து பத்து பன்னிரண்டு இடங்களில் அழகாக அம்மனை ஒவ்வொரு நாளும் அலங்கரித்து
காணவரும் பக்தர்களுக்கு எல்லாம் ஏராளமான அன்னதானம் செய்வது வழக்கம். அந்த ஒன்பது நாள் இரவும் ஒரே வண்ணமயமாக மனதைக் கவரும் வகையில் ஊரே கல்யாண களை கட்டி இருக்கும் . கடைசி தினமான விஜயதசமி என்று எல்லா அம்மன்களும் ஒருசேர ஓரிடத்தில் கூடி நவராத்திரியை முடித்து வைப்பது மிகவும் கோலாகலமான வைபவம். ஏராளமான கடை கண்ணிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் என்று ஊர் முழுக்க ஒரே திருவிழாக் கோலம்தான்.
இவ்வளவு நல்ல விஷயங்கள் அந்த ஊரில் இருந்தாலும் ஒரே ஒரு விஷயம் என் மனதிற்கு பிடிக்காததுண்டு .மிகவும் கொசு அதிகம் என்பதால் யானைக்கால் வியாதி அங்கு கொஞ்சம் அதிகம்தான். இருந்தாலும் மேற்சொன்ன அவ்வளவு நல்ல விஷயங்களுக்காக இந்த ஒரே ஒரு குறையை கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டியதுதான்.
இவ்வளவு சிறப்புகள் நிறைந்த நான் பிறந்து வளர்ந்த ஊரை மறக்க மனம் கூடாதல்லவா!
No comments:
Post a Comment