செப்டிக் டாங்க் குறித்து ஒரு காண்ட்ராக்டர் எச்சரிக்கை
அப்புறமென்ன.. எல்லாம் பேசி முடிச்சாச்சுல்ல...? அக்ரிமெண்ட்ல கையெழுத்து போடலாம். இந்தாங்க அட்வான்ச வாங்கிக்குங்க..
இல்லை.. இந்த செப்டிக் டாங்க் கட்ட பில் தனியாத்தான் வரும். அதை நீங்க இன்னும் முடிவு பண்ணலயே..?
என்ன தம்பி.. ஐம்பது லட்சம் ரூபாய் வீட்டையே நீங்க தான் கட்டுறீக. சின்ன செப்டிக் டேங்க ப்ரீயா கட்டித் தர மாட்டீகளா..?
இப்படி ஒவ்வொரு வீடு கட்ட ஒப்பந்தம் போடும் போதும் எனக்கு இந்தப் பஞ்சாயத்து பெரிய பிரச்சினையா இருக்கும். ஏன்னா தற்கால விலைவாசி சூழ்நிலையில் 10 x 6 x 6 அளவில் செங்கல்லில் செப்டிக் டேங்க் கட்டவே 1.2 லட்சம் செலவு ஆகும். அதை எப்படி இலவசமா கட்ட முடியும்.
இப்படி எக்ஸ்ட்ரா செலவுகள் தெரியாமல் தானே கட்டிடம் கட்டிக் கொள்ளும் ஓனர்களும் செப்டிக் டாங்குக்காக வேலையை விடுவானேன் என ஒப்பந்தம் போட்டு அதில் செலவைக் குறைத்தால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள கடைசி பாராவரை படிக்க வேண்டும் நீங்கள்.
செப்டிக் டேங்கிற்கு குழி தோண்டி நான்கு பக்கமும் முக்கால் அடிச் சுவரே கட்ட வேண்டும். அதனை ஒரே நாளில் கட்டாமல் இரண்டு மூன்று நாள் கால அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். நன்கு க்யூரிங் செய்து விட்டு நான்கு பக்கமும் மண்ணைக் கொட்டி தண்ணீர் ஊற்றி நன்கு காய்ந்த பின் உள்பக்கம் கோழிவலை கட்டி மெத்தி விட்டுப் பூசவேண்டும்.
பிறகு சென்ட்ரிங் அடித்து தேவையான மூலையில்
2 X 2அளவில் ஓபன் விட்டு கம்பி கட்டி கான்கிரீட் போட வேண்டும். கான்கிரீட் தரமானதாகவும் கம்பிகள் ரூப் ஸ்லாப்பை விட நெருக்கமாகவும் குறைந்தது கான்கிரீட் கனம் ஆறு இன்ச்சாகவும் முக்கியமாக கம்பிகள் கான்கிரிட் மேல் மட்டத்தில் இருந்து ஒரு இன்ச் மட்டுமே இருக்க வேண்டும்..
இந்த ஒரு இன்ச் க்ளிய்ர் கவர் தான் ரொம்ப ரொம்ப முக்கியம். இது அனைத்து ரூப் சிலாப் மற்றும் லிண்டல் சன்ஷேடு பால்கனி போர்டிகோ பீம்ஸ் என அனைத்திற்கும் பொருந்தும்.
பில்லர் மற்றும் பீம்களின் பக்கத்திற்கும் ஒரு இன்ச் க்ளியர் கவர் ரொம்ப முக்கியம். இந்த க்ளியர் கவர் தான் நச்சுக்காற்று மற்றும் தண்ணீரால் கான்கிரீட்டை அதிகம் பாதிக்காமல் காப்பாற்றும்.
செப்டிக் டாங்க் மூடியும் தனியாக அதே ஆறு இன்ச் கனத்தில் அதே முறையில் தயார் செய்து குறைந்தது 10 நாட்கள் தண்ணீரில் ஊறவைத்த பின் மூடி போட்டு செப்டிக் டேங்க் பணியை முடிக்க வேண்டும்.
அல்லது மார்க்கெட்டில் கிடைக்கும் தரமான கனமான இரும்பு மூடி போட்டு மூட வேண்டும். பெட்ரோல் பங்குகளில் பல இடங்களில் இந்த மூடிகளைப் பார்த்திருக்கலாம். இவை குறைந்தது இருபது டன் எடை வரை தாங்கும்.
ஒரு செப்டிக் டேங்குக்கு இவ்வளவு அக்கப்போரா என நீங்கள் எகத்தாளிப்பது தெரிகிறது. வெயிட்..
சிம்பிளா குறைந்த செலவில் செப்டிக் டேங்க் கட்டி முடிக்கிறேன்னு நாலு பக்கமும் அரைக்கல் சுவரைக்கட்டி (4.5") சாதாப் பூச்சு பூசி சிலாப்ப தனித்தனியா ஒரு அடி அகலத்துல ஒரு இன்ச் கனத்துல வாங்கி மூடுறவுங்க..
மார்க்கெட்ல ஒண்ணரை இன்ச் கனமுள்ள கிணற்று உறைய வாங்கிப்போட்டு அதை மூடி போட்டு மூடுறவுங்க..
செப்டிக் டாங்க் மூடிய அலட்சியம் காரணமாக ரெண்டு இன்ச் கனத்துல போட்டு மூடுறவுங்களும் நிறைய பேர் இருக்காங்க..!
அப்படி ஏதோ ஒரு கவனக்குறைவோட வீட்டோட ஓனரோ இன்ஞினியரோ அல்லது கான்ட்ராக்டரோ இருந்ததால தான்..
ரெண்டு மூணு நாள் முன்னாடி நம்ம முகநூல் நண்பர் திரு. Murali Seetharaman அவர்கள் மனைவி பத்மாவதி அம்மையார்..
அவர் வீட்டு செப்டிக் மூடியின் மேல் ஒரு கால் வைத்து நடக்கும் போது சிலாப் உடைந்து உள்ளே விழுந்து விட்டார்.
இடுப்பளவு அசுத்தச் சேற்றில் சிக்கிக் கொண்ட அவரை மீட்டெடுத்து சுத்தம் செய்து மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்த்து அவர் உயிர் பிழைத்ததே அந்த ஆண்டவனின் கருணை தான்..!
இந்த சம்பவத்தை தெரிந்து கொண்ட பின் என் பேச்சைக் கேட்காமல், செலவு குறைவு என்பதற்காக தரமற்ற முறையில் செப்டிக் டேங்க் கட்டியவர்களை நினைத்து மிகுந்த வருத்தம் அடைகிறேன்.
இனிமேலாவது செப்டிக் டேங்க் தானே என அலட்சியப்படுத்தாமல் அதனை சரியான முறையில் அமைத்துக் கொள்ளுங்கள்
நன்றி..!
No comments:
Post a Comment