Wednesday, October 6, 2021

கால் போன போக்கிலே சார்தாம் 9

 🥀🥀🥀🥀சார்தாம் 🌻🌻🌻🌻

கால் போன போக்கிலே....

- நந்து சுந்து

 9.மழையில் ரிஷிகேஷ்

எங்கள் பஸ் ரிஷிகேஷ் நோக்கி போய்க் கொண்டிருந்தது. மதிய உணவு முடிந்து கொஞ்ச நேரத்தில் கிளம்பியாகி விட்டது. அவசரமாகக் கிளம்பியதால் மாமிகள் முகத்தில் எல்லாம்  மேக்கப் சரியாக ஒட்டவில்லை. வேலைக்காரிக்கு கொடுக்க வேண்டிய புடவைகளை கட்டி வந்திருந்தார்கள். மன்னிக்கவும்..ஆன்மீக கட்டுரை அவ்வப்போது பெண்மீக கட்டுரை ஆகி விடுவதை தவிர்க்க முடியவில்லை.. 

 சார் தாம் போகக் கூடிய சாலைகள் இன்னும் சரியாகததால் எங்கள் ஹரித்வார் தங்குதல் நீடித்துக் கொண்டு போனது. திரும்பி வரும் போது ரிஷிகேஷ் பார்ப்பதாக இருந்த திட்டம் மாற்றப்பட்டு இப்போதே ரிஷிகேஷ் பயணப்பட்டோம். போகும் பாதை அழகாக இருந்தது. இரண்டு பக்கமும் மரங்கள்.  தலைவர்கள் மரம் நடு விழாவில் வைத்த மரங்கள் அல்ல. பறவைகளின் எச்சம் போட்ட பிச்சை.  

இதையெல்லாம் அனுபவிக்க முடியாமல் முதுகுப் பக்கம் ஏதோ தடங்கல்.  பின் சீட்டில் ஒரு தம்பதி. அந்த அம்மாவுக்கு கணவன் மேல் ஏதோ கோபம். பஸ்ஸில் வெளியே காட்ட முடியவில்லை.  இண்டக்‌சன் ஸ்டவ் மாதிரி வெப்பத்தை வெளியே காட்டாமல் கணவனைக் 800 வாட்ஸில் காய்ச்சிக் கொண்டிருந்தார்.

ஹரித்வாரிலிருந்து ரிஷிகேஷ் 25 கி.மீ தூரம் தான். ரிஷிகேஷ் என்பதன் நிஜப் பெயர் ஹ்ரிஷிகேஷ். இந்த பெயரை டைப் அடிக்கவே விரல் கீ போர்டில் பாண்டி ஆடுகிறது. எனவே பேச்சு வழக்கில் ரிஷிகேஷாக மாற்றி விட்டர்கள் போல இருக்கிறது. இதற்கு உணர்வுகளின் கடவுள் என்று பொருள் (God of Senses). இந்த தலத்தை ஆன்மீக தலம் என்று அரசு அறிவித்துள்ளதாகவும் இந்த ஊரில் நான் வெஜ் உணவுகளும் மதுவும் தடை செய்யப் பட்டுள்ளதாகக் கூறினார்கள்.

ஆதி காலத்தில் அக்னி தேவன் இங்கு உள்ள காடுகளை எல்லாம் தீயினால் அழித்து துவம்சம் செய்து கொண்டிருந்தாராம். கோபம் கொண்ட சிவ பெருமான் அக்னியை சபித்தாரம். தவறை உணர்ந்து அக்னி மன்னிப்பு கேட்டதும் சாப விமோசனம் கிடைத்தது. எனவே இதை அக்னி தீர்த்தம் என்றும் கூறுகிறார்கள்.

இங்கு தான் கங்கை நதி இமய மலையிலிருந்து சம வெளிக்கு இறங்குகிறது. கங்கை ஓரளவிற்கு அகலமாக இருக்கிறது. வெள்ளம் இல்லாத காலங்களில் நீர் பளிங்கு போல காட்சி தரும்.  குனியும் போது பாக்கெட்டிலிருந்து விழும்  ஐந்து ரூபாய் நாணயங்கள் கூட பளிச்சென்று தெரியும்.

கங்கை நதிக்கு குறுக்கே இரண்டு தொங்கு பாலங்கள் உள்ளன. லட்சுமண் ஜூலா என்று ஒன்று. இது 1889 ம் வருடம் சாதாரண கயிறுகளால் கட்டப்பட்ட தொங்கு பாலமாக இருந்து சிதிலமடைந்தது. பின்னர் 1924 ம் வருடம் இரும்பு கயிற்றினால் தொங்கு பாலம் அமைக்கப் பட்டது. இதன் மேல் காலை கோணலாக வைத்துக் கொண்டு பஜாஜ் ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டிருந்தார்கள் லகான் சினிமாவில் கிரிக்கெட் ஆடிய முண்டாசுப்பட்டிகள்.  

லட்சுமணன் ஜூலாவுக்கு  இணையாக 1986 ம் ஆண்டு ராமர் ஜூலா என்று இன்னொரு பாலமும் கட்டப்பட்டது.

நாங்கள் ரிஷிகேஷ் போய் சேரும் போது மழை ஜோராகக் கொட்டிக் கொண்டிருநது. ஒரு பையன் வந்து மழைக் கோட்டு விற்றான். விலை வெறும் ஐந்து ரூபாய் தான். யூஸ் அண்ட் த்ரோ அதை நான் ஐந்து வாரம் வைத்திருந்தேன். எல்லோரும் அதை அணிந்து கொண்டோம். பெண்கள் எல்லாம் பம்பாய் பட மனிஷா கொய்ராலாவின் அம்மா  மாதிரி ஆகியிருந்தார்கள். 

எல்லா இடமும் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தோம். தொங்கு பாலத்துக்கு அருகில்  லட்சுமணன், பரதன், சத்துருக்கணன் ஆகியோருக்கு கோவில் உள்ளது.

ரிஷிகேஷ் அகில உலகின் யோகா தலைமை இடமாகக் கருதப் படுகிறது. எல்லா நாட்டிலிருந்தும் இங்கு டூரிஸ்ட்கள் வருகிறார்கள்.

 எங்கு பார்த்தாலும் ஆசிரமங்கள். குறிப்பிடத்தக்கது சிவானந்த ஆஸ்ரம் மற்றும் கைலாஷ் ஆஸ்ரம்.

1968 ம் ஆண்டு அப்போது புகழ் பெற்றிருந்த பீட்டில்ஸ் இசைக் குழுவினர் ரிஷிகேஷ் வந்து மகரிஷி மகேஷ் யோகி ஆசிரமத்தில் தங்கியிருந்து பல இசை ஆல்பங்களை உருவாக்கியிருக்கிறார்கள். நம்மவர்கள் ஷாப்பிங் லிஸ்டில் யோகா மேட் சேர்ந்து கொண்டது வெள்ளைக்காரன்  சிரசாசனம் செய்ய ஆரம்பித்த பிறகு தான்.

பல அடுக்கு மாடிகளைக் கொண்ட திரியம்பகேஸ்வர்  ஆலயம் இங்கு பிரசித்தி. கங்கை கரை ஓரம் அழகாக காட்சி அளிக்கும். சாப்பிட்ட சாப்பாடு ஜீரணிக்க எல்லா மாடிகளும் ஏறியே போனோம்.

 அடுத்து கீதா பவன். இது ஒரு ஆசிரமம். காதில் பென்சில் வைத்திருக்கும் சர்வர் உள்ள ஹோட்டல் அல்ல.  வரும் டூரிஸ்ட்கள் எல்லாம் இங்கு இலவசமாக இளைப்பாறலாம். குளிப்பதற்கான படித்துறையும் இங்குள்ளது.

ஏழு அடுக்கு மாடி கொண்ட பாரத மாதா கோவில், சப்த ரிஷி கோவில் எல்லாம் பக்கத்தில் உள்ளன. ஒரு அமைதியான சூழலில் இருந்து யோகா, தியானம் செய்வதற்கு இமயமலை அடிவாரத்தில் கங்கைக் கரையோரம் உள்ள ரிஷிகேஷை விட சிறந்த இடம் வேறு எதுவும் இருக்க முடியாது. அதனால் தான் ஞானிகள் இங்கு விரும்பிச் செல்கிறார்கள்.

இவை தவிர நதியின் நீர் ஓட்டத்தை எதிர்த்து படகில் போகும் ராப்டிங் என்ற வீர விளையாட்டை வீரம் உள்ளவர்கள் செய்கிறார்கள். இந்த மாத இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டாதவர்கள் மேலேயிருந்து வேடிக்கை  பார்க்கலாம்.

எல்லா இடத்தையும் மழையிலேயே சுற்றிப் பார்த்து ஒரு வித்தியசமான அனுபவத்துடன் தங்கும் இடம் வந்து சேர்ந்தோம்.

சாப்பாடு தயாராக இருந்தது.  கீழே உட்கார்ந்து சாப்பிட முடியவில்லை.முட்டி வலித்தது. நின்று கொண்டே சாப்பிட்டேன். ஆமாம்..குனிய முடியாத நான் எதற்கு அகில உலக யோகா தலைமையகத்திற்குப் போனேன்?




No comments:

Post a Comment