Wednesday, October 6, 2021

கால் போன போக்கிலே சார்தாம் 8

🥀🥀🥀🥀சார்தாம் 🌻🌻🌻🌻

#சார்தாம் 8

கால் போன போக்கிலே....

- நந்து சுந்து

8. சாமியார்களின் சொர்க்க பூமி

கங்கா ஆரத்தி முடிந்து திரும்பி வந்ததும் சாப்பிட்டு விட்டு படுக்கையில் சாய்ந்தேன். மாலையில் பார்த்த ஆரத்தி வைபவம் இன்னும் கண் முன்னாலேயே ஓடிக் கொண்டிருந்தது. அந்த ரம்மியமான நினைவுகளுடனேயே கண்ணை மூடினேன். திடீரென ஒரு நெருப்பு ஜ்வாலை மூடிய கண் முன்னால் தோன்றியது. “ ஜெய் கங்கா மாதா தீ ” என்று பக்திப் பரவசத்துடன் எழுந்தேன். என் தங்கை கொசு வத்திச் சுருளை தீக்குச்சி வைத்து பற்ற வைத்துக் கொண்டிருந்தாள்.

காலையில் எழுந்து பாத் ரூம் போய் க்ரெடிட் கார்டு கடன்களை எல்லாம் கழித்து விட்டு சூடான காபி குடிக்கும் போது மறுபடியும் ஏதோ வாக்கு வாத சத்தம் கேட்டது.

சபாரி சூட் அணிந்திருந்த வையாபுரி  சரவணனிடம் கத்திக் கொண்டிருந்தார். “டூர் உண்டா இல்லையா?..மேலே போவோமா இல்லையா..ஐ வில் கோ டு கோர்ட்...” என்று சுப்ரீம் கோர்ட் சுப்ரமணிய சாமியாக பெடிஷன் போட்டுக் கொண்டிருந்தார். “ என் பையன் என்னை ரிடர்ன் வரச் சொல்றான்..என்ன சொல்றீங்க?’ என்றார்.

நிரம்பப் படித்தவர்கள் எப்போதும் ஆங்கிலத்தில் தான் கோபப்படுவார்கள். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட சரவணன் “ நீங்க திரும்பிப் போலாம்” என்று மூன்று வார்த்தையில் அவர் ஆங்கிலத்தின் மீது தார் பூசினார். பெட்டியை எடுத்துக் கொண்ட அந்த கோஷ்டி மறக்காமல் டிபன் சாப்பிட்டுச் சென்றது.

அந்த காலத்துப் படங்களில் எல்லாம் வி.நாகையா சுபம் போடும் வரை இருக்க மாட்டார். பாதி படத்தோடு ஏதோ ஒரு ரூபத்தில் முடிந்து போவார். அதே போல இந்த  கோபையாவும் அவரின் கூட்டாளிகளும் இத்துடன் இந்த யாத்திரையில் காணாமல் போயினர்.

காலையில் ஒன்றும் வேலை இல்லை. நாங்கள் ஐந்து பேரும் ஆட்டோ வைத்துக் கொண்டு மறுபடியும் ஹரி கீ பாரிக்கு போய் பகல் வெளிச்சத்தில் நிதானமாகப் பார்த்தோம். ஷாப்பிங் போனோம். ருத்திராட்ச மாலை, ஸ்படிக மாலை என்று கடும் பக்தர்களுக்கான சமாச்சாரங்கள் நிறைய இருந்தன. அந்த உன்னதமான நிலைக்கு நான் இன்னும் வரவில்லை என்று என்னுடைய ஜீன்ஸ் பேண்ட் உபதேசம் செய்தது. எதுவும் வாங்காமல் திரும்பி வந்தோம்.

இதிகாச காலங்களில் கபில முனிவர் என்று ஒரு ரிஷி இமய மலையில் வாழ்ந்து வந்தார். இவருக்கும் கங்கை ஆற்றுக்கும் ஒரு முக்கியமான தொடர்பு இருக்கிறது. அதைப் பற்றி பின்னர் சமயம் வரும் போது பார்ப்போம். 

கபில முனிவர் வாழ்ந்த இந்த இடத்திற்கு மாயாபுரி என்றும் ஒரு பெயர் உண்டு. பதினேழாம் நூற்றாண்டு வரை ஹரித்வார்  கங்காத்வார் என்று தான் அழைக்கப் பட்டது.

ஹரித்வார் சாமியார்களின் சொர்க்கம். எங்கு பார்த்தாலும் சாமியார்களாக இருப்பார்கள். காசி போன்று அகோரிகள் இருக்க மாட்டார்கள். எல்லோரும் சாதுவான சாமியார்கள் தான். ஆனால் சாமியார்களில் பல விதமான க்ரேடு உண்டு. 

உலகப் பற்றுகளை முற்றிலும் துறந்து தெய்வீகத் தேடலோடு இங்கு வந்து அடைக்கலமான சாதுக்கள் முதல்  தரம். இவர்கள் ஆசிரமங்களில் இருந்து பூஜைகள் செய்து கொண்டு சமூகத் தொண்டும் ஆற்றி வருபவர்கள். எப்போதாவது அரசியல் அறிக்கை மட்டும் விட்டு டி.வி சேனல்களை கலங்கடிப்பார்கள்.

அடுத்த க்ரேடு கஞ்சா சாமியார்கள். இவர்களுக்கு பூஜை புனஷ்காரம் எல்லாம் கிடையாது. கால் போன போக்கில் நடப்பார்கள். பிக் பாஸ் ஸ்நேகன் மாதிரி நிறைய தாடி வைத்திருப்பார்கள். .அவ்வப்போது கஞ்சா அடிப்பார்கள். ஆனால் யார் வம்புக்கும் போக மாட்டார்கள். மொத்தத்தில் எப்போதுமே உலகை மறந்து ஒரு மாயா லோகத்திலேயே இருப்பார்கள்.

மூன்றாவது க்ரேடு முனிவர்கள் சாமியார் வேடத்தில் இருக்கும் பிச்சைக்காரர்கள். இவர்கள் ஏகத்துக்கு  காவி உடை அணிந்திருப்பார்கள். கங்கையில் எவ்வளவு வெள்ளம் ஓடினாலும் ஜிப்பாவை துவைக்க மாட்டார்கள். இவர்களுக்கு உணவு வழங்க நிறைய தர்ம சாலாக்கள் உள்ளன. எனக்குத் தெரிந்த ஒரு மார்வாரி சேட் நண்பர் தனசரி காலை எட்டு மணிக்கு கிட்டத்தட்ட இருநூறு சாதுக்களுக்கு சப்பாத்தியும் பருப்பும் வழங்கி வருகிறார். வருடக் கணக்கில் இது தொடர்ந்து நடந்து வருகிறது.

சாப்பாட்டுக்கு வழி இல்லை என்ற ஒரு மனிதன் ஹரித்வார் போய் விட்டால் போதும். ஆயுசுக்கும் சாப்பாடு பிரச்சினை இல்லை. தங்குவதற்கும் ஏதாவது இடம் கிடைத்து விடும். உங்களிடம் ஹரித்வாருக்கு ஒரு டிக்கட் இருக்கிறதென்றால் நீங்கள் தைரியமாக மனைவியிடமோ மருமகளிடமோ சண்டை போடலாம். 

இந்த இடத்தில் இன்னொரு உண்மையும் சொல்லியாக வேண்டும். எங்கள் யாத்திரையில் கலந்து கொண்டிருக்கும் பெரு வாரியான மாமியார்கள் மருமகளால் பணம் கட்டி அனுப்பப்பட்டவர்களே...

 பதினந்து நாள் தொல்லையில்லாமல் இருக்கலாம். தொலைந்து போகவும் வாய்ப்புகள் அதிகம்.  பதினைந்தாயிரம் ரூபாய் செலவில் ஹிமாசல் பிரதேஷ் லாட்டரி டிக்கட் வாங்கிய மருமகள்கள் அவர்கள். அவர்களின் கெட்ட காலம்  பீச்சில் வடிவேலு ஏறின குதிரை மாதிரி மாமியார்கள் புறப்பட்ட இடத்துக்கே மறுபடியும் வந்து சேர்ந்து விடுவார்கள். மருமகள்  அடுத்து வைஷ்ணவோ தேவி லாட்டரி சீட்டு வாங்க  பணம் சேர்க்க ஆரம்பிப்பார்.

இதற்கு இடையில் இந்துமதி அவர்கள்  சாலைகள் சீராகி விட்டதா...போக்குவரத்து சரியாகி விட்டதா என்று ஓயாமல் போன் செய்து விசாரித்துக் கொண்டே இருந்தார்.

                                                                               (பயணம் தொடரும்)




No comments:

Post a Comment