🥀🥀🥀🥀சார்தாம் 🌻🌻🌻🌻
#சார்தாம் 10
கால் போன போக்கிலே....
- நந்து சுந்து
10. குரங்கு பாய்ந்தது.
மறு நாள் காலை. கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்தவுடன் சென்னை ஞாபகத்தில் கீழே குனிந்து கசிந்து கொண்டிருக்கும் பால் பாக்கெட்டை எடுக்கப் போனேன். “காபி ரெடி” என்று கையில் காபி குவளையோடு பையன் நின்று கொண்டிருந்தான். போன ஜென்மத்தில் அவன் வீட்டில் நான் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்திருக்க வேண்டும்.
ஹரித்வார் வந்து மூன்று நாட்கள் ஆகிறது. ஹரித்வாரில் எனக்கு ரேஷன் கார்டு கொடுப்பதற்குள் அடுத்த ஊருக்கு கொட்டகையை மாற்றி விட வேண்டும். ஆனால் இந்த இமய மலை தான் கலெக்டர் ஆபீஸ் பியூன் மாதிரி யாரையும் உள்ளே விடாமல் குறுக்கே கையைக் காட்டிக் கொண்டிருந்தது..
குளித்து முடித்து விட்டு எங்கள் லாட்ஜ் பக்கத்திலேயே இருக்கும் ராஜ ராஜேஸ்வரி கோவிலுக்கு சென்றோம். அமைதியான கோவில். அம்மன் சிவப்பு புடவையோடும் கிரீடத்துடனும் அழகாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்தார்.
அந்த காலை வேளையில் எங்களை தவிர கோவிலில் வேறு யாரும் இல்லை.யாருமே இல்லாத கோவிலில் நாம் மட்டும் தனியாக தரிசனம் செய்வது ஒரு மன நிறைவான அனுபவம் தான். இந்த விதி சினிமா தியேட்டருக்கு செல்லத்தக்கதல்ல.
எங்கள் கோஷ்டியிலிருந்து ஒரு ஜோடி கோவிலுக்கு வந்தது. மணி அடிப்பதற்காக காத்திருந்து சரியாக மணி அடிக்கும் முன் “ நாளைக்கு நல்ல சேதி வரும்” என்று கூறினேன். “சார் நீங்க சொன்னதும் கரெக்டா மணி அடிச்சிடுச்சு..” என்றார் ஷேவ் கூட செய்யாத அந்த அப்பாவி மனிதர்.
காலை டிபன் முடிந்தது. டிபனுக்கு என்ன சாப்பிட்டேன் என்று நினைவில்லை. இப்படி ஒரு பயணக் கட்டுரை எழுதுவேன் என்று அப்போது நினைக்கவில்லை. எனவே எதுவும் குறித்து வைக்கவில்லை...சாம்பாரில் வெங்காயம் போடவில்லை என்பது மட்டும் நினவில் இருக்கிறது.
இப்போது சண்டி தேவி கோவில் நோக்கிப் பயணம். மானச தேவி மாதிரி இதுவும் ஒரு குன்றின் மீது இருக்கும் கோவில் தான். இங்கும் ரோப் கார் இருக்கிறது. அதே மாமாக்கள். மாமிகள். அதே டிஜிட்டல் காமிராக்கள். ஆனால் பலரின் வாயும் இப்போது மகிஷாசுர மர்த்தினி ஸ்தோத்திரம் சொல்லிக் கொண்டிருந்தது.
இவர்களைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம். எவ்வளவு குளிரிலும் அதிகாலை எழுந்து குளித்து விடுகிறார்கள். சுப்ரபாதம் சொல்கிறார்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் சரியான ராகத்தில் சொல்கிறார்கள். அந்தந்த கோவிலுக்கு ஏற்ற மாதிரி ஆன் டிமாண்ட் சரியான ஸ்தோத்திரம் சொல்கிறார்கள்.
ஆனால் சாப்பிட்ட தட்டை கழுவ எல்லோரையும் தள்ளி விட்டு குழாய்க்கு முன்னால் போகிறார்கள். “அசமந்தி மாதிரி நிக்காதீங்கோ..சீக்கிரம் வாங்கோ..” என்று கணவனையும் விதி மீற வைக்கிறார்கள்.
ஒன்று மட்டும் நிச்சயம். என்னை விட அதிகமாக ஆன்மீகமும் வேதாந்தமும் தெரிந்தவர்கள் என்பதை மட்டும் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்.
கன்னத்தில் கொஞ்சம் போட்டுக் கொண்டு மறுபடியும் சண்டி தேவி பற்றிப் பேசுவோம். கங்கைக் கரையில் ஒரு புறம் மானச தேவி என்றால் மறுபுறம் சண்டி தேவி.
இந்த கோவில் காஷ்மீரத்து அரசரால் 1929 ம் வருடம் கட்டப்பட்டிருந்தாலும் மூல விக்கிரகமான அம்மன் ஆதி சங்கரர் அவர்களால் எட்டாம் நூற்றாண்டில் ஸ்தாபிக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
ஆதி காலத்தில் சும்பன் – நிசும்பன் என்று இரண்டு அசுரர்கள் இருந்தனர். அவர்களது பலம் வாய்ந்த படை தளபதிகள் சண்டா மர்றும் முண்டா. அவர்கள் குடி மக்களுக்கும் தேவர்களுக்கும் சொல்லொன்னா துயர் இழைத்து வந்தார்கள். கொடுமையைத் தாளாது அனைவரும் சண்டி தேவியிடம் முறையிட சண்டி தேவி சண்டா மற்றும் முண்டா இருவரையும் வதம் செய்கிறார். அந்த தலம் தான் இது.
ரோப் காரில் ஏறி மேலே போய் அம்மனை தரிசித்தோம். சிறிய கோவில் தான். அம்மன் சிறியதாக ஆரஞ்சு நிற ஜிகினா உடைகளுக்கு நடுவே அழகாகக் காட்சி தருகிறார். கண்கள் நன்றாக விரிந்து இந்த உலகத்தை தீவிரமாகப் பார்க்கிறது. எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அபயம் அளிப்பது போன்றதொரு பார்வை.
தரிசனம் முடித்து விட்டு நடந்தோம். மேலே தோட்டம் மாதிரி ஒரு இடத்தில் ஏதோ ஒரு பாட்டை பாடிக் கொண்டே நான் நடந்து கொண்டிருந்தேன்.
திடீரென ஒரு குரங்கு என் மேல் தாவியது. தொடைப் பகுதியில் என் பாண்டை பிடித்து இழுக்க ஆரம்பித்தது. பயத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. மதுரை வீரன் ஈ.வி.சரோஜா மாதிரி சுரத்தில்லாமல் “ஆபத்து..ஆபத்து…” என்று கத்தினேன்.
அருகில் இருந்த உள்ளூர் மக்கள் ஏதோ கத்தினார்கள். ஒரு குச்சி எடுத்து குரங்கை விரட்டினார்கள்.
சுற்றிலும் பார்த்தேன். என்னுடன் பஸ்ஸில் பக்கத்து சீட்டில் அமர்ந்து எனக்கு உயிர் நண்பனாகி என்னுடனேயே வந்து கொண்டிருந்த அன்பரைத் தேடினேன். அவர் ஒட்டன் சத்திரத்துக்கு ஓடிப் போயிருந்தார்.
எல்லோரையும் விட்டு விட்டு அந்த குரங்கு பாடிக் கொண்டிருந்த என்னை மட்டும் ஏன் பிடித்தது?. ஒரு வேளை நான் பாடிய பாட்டு குரங்கின் ஃபேமிலி சாங்க்காக இருக்குமோ?
அதன் பிறகு கையில் ஒரு குச்சி வைத்துக் கொள்ளுமாறு மக்கள் எல்லோரும் சொன்னார்கள். நானும் ஒரு குச்சியை கையில் எடுத்துக் கொண்டு குச்சி குமாராக நடந்து கொண்டிருந்தேன்.
அடுத்து வேத மாதா காயத்ரி தேவி ஆசிரமம். இது ஒரு பிரம்மாண்ட ஆசிரமம். பெரிய பெரிய தியான கூடங்கள், சொற்பொழிவு கூடங்கள் என பெரிதாக இருக்கிறது. உள்ளேயே அழகிய தோட்டங்கள், வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் செடிகள், நீரூற்றுகள் என ஒரு ரம்மியமான சூழ்நிலை. அமைதியாக இருக்கிறது.
நிதானமாக சுற்றிப் பார்த்தோம். நிழலில் ஓய்வெடுக்க அருமையான இடம் இருந்தது. இங்கும் வெளிநாட்டவர்கள் நிறைய பேர் வருகிறார்கள். அமைதியான இந்த இடத்தை சாந்தி கஞ்ச் என்றும் அழைக்கிறார்கள்.
மதிய உணவு ஓய்வுக்குப் பிறகு நாங்கள் ஐவர் மட்டும் சைக்கிள் ரிக்ஷா வைத்துக் கொண்டு உள்ளூர் கோவில்களைப் பார்க்கப் போனோம். அது ஒரு வித்தியாசமான அனுபவம்.
No comments:
Post a Comment