🥀🥀🥀🥀சார்தாம் 🌻🌻🌻🌻
#சார்தாம் 7
கால் போன போக்கிலே....
- நந்து சுந்து
7.கங்கா ஆரத்தி
மானச மந்திரிலிருந்து திரும்பி வந்ததும் சூடான சாப்பாடு. அதன் பிறகு சற்று நேரம் லேசான தூக்கம். கர் கர் என்று என்னிடமிருந்து கொஞ்சமாக சத்தம் வந்து கொண்டிருந்தது. சென்னையில் இருக்கும் என் கர் (வீடு) பற்றி தூக்கத்தில் கூட நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று ஹிந்தி காரர்கள் வாவ் வாவ் என்று சிலாகித்துக் கொண்டு போனார்கள்.
மாலையில் ஹரித்வாரின் முக்கிய தலமான ஹரி கீ பாரி போனோம். ஹரீ கீ பாரி என்றால் ஹரியின் பாதம். இமயமலையில் இருக்கும் இறைவனின் பாதமாக ஹரித்வார் இருப்பதால் இப்படி ஒரு பெயர்.
ஹரித்வாரில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக குவிவது இங்கு தான். இங்கு தான் கங்கையில் எல்லோரும் புனித நீராடுகிறார்கள். ஹரித்வாருக்கு மேலே கர்நாடகா இல்லாததால் கங்கையில் நீர் புரண்டு ஓடுகிறது.
அருகில் ஒரு அணை இருக்கிறது. அந்த அணையிலிருந்து திறந்து விடப்படுகின்ற நீர் ஒரு வாய்க்காலில் புலி மாதிரி சீறி வருகிறது. அகலமான கங்கை நதி சற்றுத் தள்ளி அமைதியாக ஓடுகிறது.
இந்த வாய்க்காலை இரண்டாகப் பிரித்து விடுகிறார்கள். நடுவில் சிறிய தீவு போன்ற இடத்தில் ஒரு மணிக்கூண்டு உள்ளது. அந்த இடத்திற்குப் போனால் இரண்டு பக்கத்தில் எங்கு வேண்டுமானாலும் குளிக்கலாம். நீர் வேகமாக வருவதால் ஐந்து அடிக்கு ஒரு தடவை பெரிய இரும்பு சங்கிலி கட்டி இருக்கிறார்கள். அதை பிடித்துக் கொண்டு நிறைய பேர் சங்கிலி முருகனாக குளித்துக் கொண்டிருந்தார்கள். நீரில் இறங்கினால் ஜில்லென்று அப்படியே அடி வயிற்றில் சுர்ரென்று இழுக்கும்.
கச முச வென்று மக்களின் சத்தம். நீரில் இறங்கியவுடன் குளிர் தாங்காமல் வீல் என்று அழகாகக் கத்தும் குழந்தைகள், மறுபடியும் கரைக்கு ஓடி வரும் பெண்கள். மனதிற்கு உற்சாகம் கொடுக்கக் கூடிய நிகழ்வு அது. நமது 500 ரூபாய் நோட்டில் இருக்கும் அத்தனை மொழிகளிலும் பெண்கள் வீறிட்டுக் கொண்டிருந்தார்கள்..
எங்கு பார்த்தாலும் ஹோலி பண்டிகையில் வீசி எறியப்பட்ட வண்ணங்களைப் போல குழந்தைகள், பெண்கள். அவர்களின் உடைகளைக் காவல் காத்துக் கொண்டு கரையில் அமர்ந்திருக்கும் ஆண்கள்.
நம்மில் பாதி பேருக்கு குளியல் என்பது பாத் ரூம் டைல்ஸ்களுக்கு மத்தியில் பச்சை பக்கெட்டுடன் நடக்கும் தினசரி போராட்டம்... பாத் ரூம் குளியல் ஒரு அளவுச் சாப்பாடு...நதி நீரில் குளிப்பது அன்லிமிடெட் மீல்ஸ்...பாத் ரூம் குளியலுக்கும் ஆற்று குளியலுக்கும் ஆறு வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது.
இந்த இடத்தின் முக்கிய நிகழ்வே மாலை நடைபெறும் கங்கா ஆரத்தி தான். குளிர் காலத்தில் மாலை 5:30 மணிக்கும் வெயில் காலத்தில் 6:30 மணிக்கும் இது நிகழும். இதைப் பார்ப்பதற்கு தினமும் முப்பதாயிரம் பேர் அளவுக்கு கூடி விடுவார்கள். ஒரு மணி நேரம் முன்பாகவே வந்து வசதியான இடத்தில் கங்கைக் கரையில் அமர்ந்து விடுவார்கள்.
குறிப்பிட்ட நேரம் வந்ததும் கங்கா மாதா கோவிலில் டங்...டங் என்று மணி அடிக்கும். மணி அடிக்க ஆரம்பித்ததும் ஒலி பெருக்கியில் கங்கா ஆரத்தி பாட்டு ஒலிக்கும்.
“ஓம் ஜய் கங்கா மாதா
மையா ஜெய் கங்கா மாதா
ஜோ நர் தும்கோ தயாதா
மன்வன்ச்சிட் பால் பாதா”
இந்த பாடலை கணீரென இனிமையான பெண் குரலில் கேட்டதும் கூட்டம் மெய் சிலிர்க்கும். முதன் முறை இந்த மணி ஓசையையும் பாடலையும் கேட்டது ஒரு நிமிடம் என் ரத்தமே உறைந்து விட்டது. மொழி தெரியாவிட்டலும் அந்த குரலும் பாவமும் சுண்டி இழுக்கும். அப்படியே மோன நிலக்குப் போய் கங்கை அன்னையின் திருவடியில் நம் மொத்த சரீரத்தையும் அடைக்கலம் கொடுத்த உணர்ச்சி மேலிட்டது.
மணி ஓசை, கங்கா மாதா பாடலுக்கு இணையாக ஆரத்தி ஆரம்பமாகி விடும். ஆரத்தி என்பது ஒரு பெரிய விளக்கு. அடுக்கு அடுக்காக ஏற்றப்பட்ட பல முகங்களில் திரிகள் ஏற்றப்ப்பட்ட தூப விளக்கு. கிட்டத் தட்ட மூன்று அடி உயரமாவது இருக்கும்.
அதை கோவில் பூசாரி கங்கை நதிக்கு ஆரத்தி மாதிரி சுற்றி சுற்றி காண்பிப்பார். விளக்குகளின் ஜோதி கங்கை நீரில் பட்டு பிரதிபலித்து கங்கை நீர் சிவப்பு நிறமாக மாறும். இதை காணக் கண் கோடி வேண்டும். எனக்குத் தெரிந்து நமது நாட்டில் தான் நதிகளை தெய்வமாக வழி படுகிறார்கள். இந்த புண்ணிய பூமியில் நாம் பிறந்தது ஒரு வரப் பிரசாதமே..
கிட்டத்தட்ட ஐந்து நிமிடம் கங்கா ஆரத்தி நடக்கும். விளக்கின் சூடு பூசாரி கையை தகிக்கும். சூடு தெரியாமல் இருக்க பக்கத்தில் ஒருவர் சொம்பில் நீர் மொண்டு மொண்டு பூசாரி கையில் ஊற்றிக் கொண்டே இருப்பார்.
ஆரத்தி முடிந்தவுடன் நடக்கும் நிகழ்வு தான் உங்களை எங்கேயோ கோண்டு போய் விடும். வந்திருக்கும் பெண்கள் அனைவர் கையிலும் ஒரு விளக்கு இருக்கும். தாமரை இலை போன்ற ஒரு அகலமான இலையில் ஒரு சிறிய அகல் விளக்கு. சுற்றி கொஞ்சம் மலர் இதழ்கள். அந்த விளக்கை ஏற்றி விட்டு அந்த இலையை பதமாக கங்கை நீரில் விடுவார்கள். எரியும் விளக்கு கங்கையில் மிதந்து செல்லும்.
இப்படி கிட்டத் தட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விளக்குகள் ஒரே நேரத்தில் கங்கையில் மிதந்து செல்லும். கங்கையில் மேற்பரப்பு முழுக்க நகரும் ஜோதிகளாகவே இருக்கும். கங்கை மீது ஒரு பெரிய சீரியல் லைட் கம்பளம் விரித்த மாதிரி இருக்கும்.
உண்மையை சொல்கிறேன். இதை எழுதும் போதே என் மெய் சிலிர்க்கிறது. இந்த ஒரு அனுபவத்திற்காகவே வாழ் நாள் முழுதும் ஹரித்வாரிலேயே இருந்து விடலாமா என்று தோன்றுகிறது.
No comments:
Post a Comment