🥀🥀🥀🥀சார்தாம் 🌻🌻🌻🌻
#சார்தாம் 6
கால் போன போக்கிலே...
- நந்து சுந்து
6.மானச மந்திர்
தட்ச மகாதேவ் கோவில் தரிசனம் முடித்து விட்டு எல்லோரும் பஸ்ஸில் ஏறினோம். சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்று கத்திக் கொண்டிருந்தார்கள் மனைவிமார்கள். சக்தி இல்லையேல் பஸ் ஓடாது என்று டிரைவர் டீசல் போட்டுக் கொண்டிருந்தார். டீசல் இறங்குவதற்குள் நாங்கள் போகப் போகிற மலைக் கோவில் பற்றி ஒரு ட்ரெயிலர் ஓட்டி விடலாம்.
ஹரித்வாரில் கங்கை ஆற்றுக்கு இரண்டு புறமும் குன்றின் மேல் இரண்டு அம்மன் கோவில்கள் உள்ளன. நம் ஊர்களில் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பது போல வட இந்தியாவில் குன்று இருக்கும் இடமெல்லாம் சக்தி இருக்கிறார். ஒரு குன்றின் மீது மானச தேவியும் இன்னொரு குன்றின் மீது சண்டி தேவியும் இருக்கிறார்கள்.
மானச தேவி கோவில் ஹரித்வாரிலிருந்து மூன்று கி.மீ தூரத்தில் உள்ளது. பஸ்ஸில் போய் இறங்கினோம். தள்ளு வண்டிகளில் கடுகு எண்ணையில் செய்த பதார்த்தங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். அந்த வாசனையை நாசிக்கள் நாசூக்காய் புறம் தள்ளின. நேராக ரோப் கார் ஸ்டேஷனுக்குப் போனோம்.
மானச மந்திரானது சிவாலிக் என்றழைக்கப்படும் இமய மலைத் தொடரில் உள்ளது. இமய மலைத் தொடருக்கு நான்கு நிலைகள் உள்ளன. முன்னால் இருக்கும் சிவாலிக் தொடர் உயரம் குறைவு. நடுவில் உள்ள தொடர்களில் தான் பத்ரி கேதார் எல்லாம் உள்ளன. நான்காம் நிலையில் பின்னால் இருப்பது தான் நந்தா தேவி, கஞ்சன்ஜங்கா, எவரெஸ்ட் போன்றவை.
மானச தேவி கோவில் 600 அடி உயரத்தில் உள்ளது. மொத்தம் 786 படிகள். கால் நடையாக ஏறிப் போகலாம். மனிதனாகவும் போகலாம். நேரமாகிவிடும் என்பதால் எல்லோரும் ரோப் காரில் போனோம்.
ரோப் கார் என்றதும் எல்லோருக்கும் குஷி வந்து விட்டது. எழுபது வயது மாமிகள் கூட டிஜிடல் காமிராவை வெளியே எடுத்தார்கள். காமிராக்களின் மேல் இருந்த வெளி நாட்டு மருமகனின் வியர்வையைத் துடைத்தார்கள்.
“என் பொண்ணு ஸ்டேட்ஸ்ல இருக்கா..அவ வாங்கி அனுப்பினா..” என்று நாம் கேட்காமலேயே சொல்வார்கள். “அப்போ என் பையன் என்ன பிச்சையா எடுத்துகிட்டு இருக்கான்?’ என்று சொல்லத் தோன்றியது. அந்த அம்மா ஜாடையில் கொஞ்சம் சொர்ணாக்கா மாதிரி இருந்ததால் சொரணையை சுருட்டிக் கொண்டு டிக்கட் வரிசையில் நின்றேன்.
பஸ்ஸில் போகும் போது இப்படித்தான் பெண்கள் சுய புராணம் பாடிக் கொண்டே வருவார்கள். “ போன தடவை அந்தமானுக்கு ப்ளைட்ல போனப்ப இப்படித்தான்...” என்று ஆரம்பிப்பார்கள். நடு நடுவே பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் கணவரை சாட்சிக்கு அழைப்பார்கள். “என்னங்க நான் சொல்றது சரியா?” என்று சட்டையைப் பிடித்து இழுப்பார்கள். “ஆமாம்..ஆமாம்... நேத்து டின்னருக்குப் போட்ட பூரி மசால் சூப்பர்...” என்பார் கணவர்.
ஆன்மீகத்திலிருந்து திசை மாறிப் போனதற்காக மானசா தேவியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு ரோப் காரில் பூரினோம்...மன்னிக்கவும்.. ஏறினோம்.
ரோப் கார் என்பது பழனியில் இருப்பது போல இரண்டு கார் போய் அதுவே திரும்பி வருவது போல அல்ல. நிறைய கார்கள் சுற்றிக் கொண்டே இருக்கும். ரோப் ஸ்டேசன் வந்ததும் செயினிலிருந்து கழண்டு கொள்ளும். நாம் ஏறியவுடன் மறுபடியும் செயினில் மாட்டி விடுவார்கள். நிறைய கார்கள் இருப்பதால் காத்திருக்கும் நேரம் குறைவு.
மானச என்றால் விருப்பம். இந்த தேவியிடம் வேண்டிக் கொண்டால் நினைப்பது நடக்கும் என்று ஒரு ஐதீகம். சிவ பெருமானின் மனதிலிருந்து தோன்றியது தான் மானச தேவி என்று சொல்கிறார்கள். அங்கு இருக்கும் ஒரு மரத்தில் பக்தர்கள் எல்லாம் வேண்டிக் கொண்டு ஒரு கயிறு கட்டி விட்டு செல்கிறார்கள்.
குன்றின் மேலே இருப்பது சிறிய கோவில் தான். அம்மன் கலர் கலராய் உடை அணிந்து இருந்தார். வட இந்திய கோவில்களில் கடவுளுக்கு டிசைன் டிசைனாக உடை அணிவிப்பார்கள். தேவி சிறியதாக இருந்தாலும் ஒரு வசீகரம் முகத்தில் தெரிகிறது. துஷ்டர்களிடமிருந்து நான் உங்களைக் காப்பாற்றுவேன் என்ற உறுதி மொழியை தேவியின் கண்கள் சொல்லிக் கொண்டிருந்தன.
தேவியிடம் மனதார வேண்டிக் கொண்டு வெளியில் வந்து கீழே தெரியும் கங்கை நதியையும் ஹரித்வார் ஊரையும் ஒரு பறவையின் கண்களில் பார்த்தோம். மேலேயிருந்து பார்க்கும் போது கங்கை அழகாக விஸ்தாரமாக தெரிந்தது. கங்கை நதியை நிறைய போட்டோ எடுத்தோம். நான் இன்னும் கல்கத்தா வரை ஓட வேண்டும்..தொந்தரவு செய்யாதே என்றது கங்கை.
ரோப் கார் ஊர்ந்து செல்லும் இரும்பு கம்பிகள் கொஞ்சமாக தொப்பை போட்டு தொங்கிக் கொண்டிருந்தன. ஆகாயத்தில் பட்டம் பறப்பது போல ரோப் கார்கள் பறந்து கொண்டிருந்தன. இந்த அழகு அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கும். ரிமோட் கண்ட்ரோல் கொண்டு மாற்ற முடியாது. தேவையும் இல்லை. கண்களில் காடராக்ட் வரும் வரை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
மறுபடியும் ரோப் கார் ஸ்டேசனுக்கு போன போது மனசு சுத்தமாக துவைக்கப்பட்டு அயர்ன் செய்யப்பட்டிருந்தது. மறுபடியும் அழுக்கு ஆக்குவது நம்முடைய சாமர்த்தியம்.
ரோப் கார் ஸ்டேஷன் பெஞ்சில் அமர்ந்து திரும்பிப் பார்த்தால் சக்திகளும் சிவன்களும் வந்து கொண்டிருந்தார்கள். சிவன்கள் எல்லாம் வேகமாக ஜிவ் என்று வந்து விட சக்திகள் எல்லாம் மில்லி மீட்டர் கணக்கில் வந்து கொண்டிருந்தார்கள். “பாத்து ஜாக்கிரதையா மெதுவா வா..” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள் கணவர்கள்.
இங்கிருந்து நாங்கள் தங்கியிருக்கும் இடம் முப்பது லட்சம் மில்லி மீட்டர் தூரத்தில் இருக்கிறதே என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்.
(பயணம் தொடரும்)
No comments:
Post a Comment