🥀🥀🥀🥀சார்தாம் 🌻🌻🌻🌻
#சார்தாம் 5
கால் போன போக்கிலே....
- நந்து சுந்து
5. தட்ச மகாதேவ்
டிரைவர் பர்ஸ்ட் கியர் போட்டதும் பஸ் புறப்பட்டது.
"ஜெய் மாதாஜி" என்று எல்லோரும் கத்தினோம்.
காலை நேரத்தில் பஸ்ஸில் புத்துணர்வு அலை வீசியது. அப்போது தான் மார்க்கெட்டில் வந்து இறங்கிய கொத்தமல்லி கட்டு போல பெண்கள் மலர்ச்சியாக இருந்தார்கள். அணிந்திருந்த நவ ராத்திரி புடவையில் பக்தி பிரகாசித்தது.
நாங்கள் முதலில் தட்ச மகாதேவ் கோவிலுக்கு புறப்பட்டோம். தட்சன் என்பவரைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். திருவிளையாடல் படத்தில் வரும் ஓ.ஏ.கே தேவர் நினைவிருக்கிறதா? அவர் தான் தட்சன் (இந்த ஒப்பீடுக்காக தட்சன் என்னை ரட்சன் பண்ணுவாராக..).
பார்வதி தேவியின் தந்தையாகிய ரட்சன் ஒரு யாகம் செய்யும் போது முதல் மரியாதைக்கு மருமகன் சிவ பெருமானை அழைக்கவில்லை.
கோபம் கொண்ட பார்வதி தந்தையிடம் போய் நியாயம் கேட்கிறார். நியாயம் கிடைக்காமல் போகவே பார்வதி ஹோம குண்டத்தில் குதித்து விடுகிறார். (திருவிளையாடல் படத்தில் இப்படி இல்லையே என்று கேட்காதீர்கள்..அது திரைக் கதை...நான் சொல்வது புராணக் கதை)
விஷயம் கேள்விப்பட்டதும் சிவ பெருமான் வீரபத்திரரையும் பத்ரகாளியையும் அனுப்புகிறார். அவர்கள் கடும் போரிடுகிறார்கள். பின்னர் சிவ பெருமானே நேரில் சென்று தட்சனின் தலையைக் கொய்து கொல்கிறார். பார்வதி தேவியை ஹோம குண்டத்திலிருந்து உயிர்ப்பிக்கிறார்.
பின்னர் தட்சன் தவறை உணர்ந்து சிவனிடம் மன்னிப்பு கேட்கவே சிவன் அவரை மன்னித்து ஒவ்வொரு ஆண்டும் சிரவண மாதத்தில் (நமது ஆடி மாதம்) விஜயம் செய்து கெளரவப்படுத்துவதாக வாக்கு கொடுக்கிறார். அதற்காக ஏற்பட்டது தான் இந்த கோவில்.
ஹரித்வாரில் வாங்கியிருந்த புத்தகத்தில் இந்த கதையைப் படித்த போது எவ்வளவு முயன்றாலும் சிவாஜி கணேசன் சாவித்திரி நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை. அவர்கள் அந்த பாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தார்கள். இருப்பினும் அவர்களை விட ஏ.பி. நாக ராஜனின் வெற்றி இது என்றே சொல்லத் தோன்றுகிறது (சிவாஜி ரசிகர்கள் மன்னிக்கவும்)
இந்த கோவில் 1810 ம் வருடம் கட்டப்பட்டு 1962 ம் வருடம் புதுப்பிக்கப்பட்டதாக சொன்னார்கள். கோவில் வாசலில் கோபாவேசமாக ஒரு சிவன் உருவம் உள்ளது. பக்கத்தில் இரண்டு சிங்கங்கள் உள்ளன. பின்னால் கங்கை நதி ஓடுகிறது.
நாங்கள் காலை பத்து மணி சுமாருக்குப் போயிருந்ததால் அதிக கூட்டம் இல்லை. வட இந்தியர்கள் காலை டிபனுக்கு ஜிலேபி சாப்பிடும் நேரம் அது.
கோவில் அமைதியாக இருந்தது. பூசாரி நெற்றியில் சிவப்பு செந்தூரம் போக வெற்றிடம் கொஞ்சமாக கச்சத் தீவு சைஸில் தெரிந்தது.
சிவனின் சிலை நீல நிறத்தில் உக்கிரமாகத் தான் இருந்தது. தட்சனை துவம்சம் செய்த கோபம் உடம்பு முழுக்க இன்னும் தெரிந்தது.
இன்னொரு இடத்தில் தரையில் சிவலிங்கம் மாதிரி ஒன்று இருந்தது. அது தான் தலை கொய்யப்பட்ட தட்சன் என்று சொன்னார்கள்.
கோவிலில் எண்ணெய் வாசனை இருக்கவில்லை. எல்லா கடவுளுக்கும் கதம்ப மாலை தான். மாலையில் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம் தூக்கலாக தெரியும்.
பணக்கார பக்தர்கள் சின்னதாக குக்கர் கேஸ்கட் சைசில் ஒரு கதம்ப மாலையை கழுத்தில்போட்டு நடந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பின்னால் ஐந்து பேர் உப்பு சத்தியாக்கிரகம் போவது போல வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எல்லாம் மாலை கிடையாது.
பொதுவாகவே வட இந்தியாவில் கோவில்கள் பிரம்மாண்டமாக இருக்காது. நம்மூர் மாதிரி ஒவ்வொரு நிலையாகக் கடந்து முடிவில் கர்ப்பக்கிரகத்தில் கடவுளை தரிசிப்பது போன்ற ஒரு எதிர் பார்ப்பும் கம்பீரம் இருக்காது. கோவில் உள்ளே நுழைந்த உடனேயே நேராக கடவுள் தரிசனம் தான். பிரகாரம் சுத்துகிற வேலை எல்லாம் கிடையாது.அடிப் பிரதட்சினம், அங்கப் பிரதட்சினம் எல்லாம் அவர்கள் அகராதியில் இல்லை.
அங்கே பெரிய கோவில்கள் இல்லாததற்கு முகலாயர்களின் படையெடுப்புகள் ஒரு முக்கிய காரணம் என்று சொன்னார்கள். (மதுராவில் இருக்கும் கிருஷ்ண ஜென்ம பூமி கோவில் மட்டுமே முகலாயர் படையெடுப்பினால் மூன்று முறை அழிக்கப்பட்டதாக 2012 ம் வருடம் நான் மதுரா போயிருந்த போது கோவில் வாசலில் இருக்கும் அறிவிப்பு பலகையில் பார்த்தேன்)
இவைகள் எல்லாம் ஒரு காரணமாக இருந்தாலும் தென்னாட்டு மன்னர்கள் போல் பிரம்மாண்ட கோவில் கட்ட வேண்டும் என்ற ஈடுபாடு அங்கிருக்கும் மன்னர்களுக்கு இல்லாமல் போய் விட்டதோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. அதனால் தான் பிரிட்டனின் கலைக் களஞ்சியம் (Encyclopedia Brittanica) சோழ மன்னர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது The greatest Temple builders of India என்று குறிப்பிடுகிறது.
தரிசனம் முடிந்ததும் பெண்கள் கோவில் வாசலில் இருந்த கடைகளுக்கு படை எடுத்தார்கள். அவர்களை விரட்டி பஸ்ஸில் ஏற்றுவதற்கு சரவணன் கண்ணீர் குண்டை வீச வேண்டி இருந்தது.
அடுத்து ஹரித்வாரில் ஒரு மலைக் கோவிலுக்கு ரோப் காரில் விஜயம்.
No comments:
Post a Comment