Friday, October 8, 2021

சென்னையிலிருந்து திருப்பதி - பகுதி −6

 (சென்னையிலிருந்து திருப்பதி மார்க்கம்..)

(பகுதி − 6..)

சிங்கிரிகோனாவிலிருந்து  புறப்பட்ட எங்களது பயணம், அடுத்தது திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் கீழே இயங்குகின்ற மூன்றாவது கோயிலான கார்வேட்டி நகரம் ஶ்ரீவேணுகோபாலன் கோயிலை நோக்கி அமைந்தது..

புத்தூரிலிருந்து சுமார் பனிரெண்டு கி.மீ தொலைவில் இருக்கின்ற இந்தக் கோயில் பதினைந்தாம் நூற்றாண்டில் ஶ்ரீவேங்கட ராஜ வம்சத்தினரால் நிறுவப்பட்டு, அதன்பின்னர் நாராயணவனத்தை ஆண்ட ராஜ வம்சத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்ததாகத் தெரிகிறது..

தற்சமயம், இந்த ஆலயப் பராமரிப்பு முழுவதையும் TTD ஏற்றுக் கொண்டுள்ளதால், சீரமைப்புப் பணிகள் பெரிய அளவில், துரிதமாக நடைபெற்று வருவதைக் காணமுடிந்தது..

கோயில் சம்ப்ரோக்ஷணத்திற்கு இந்த வருடம் ஆவணிமாதம் தேதி குறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது..

கோயில் பாலாலயத்தில் இருப்பதால், கர்ப்பக்ருகத்தில் பாமா ருக்மிணி இருபுறமும் காட்சியளிக்க, பின்னே பசுவோடு எழுந்தருளி  இருக்கின்ற குழலூதி மனம் எல்லாம் கொள்ளைக் கொள்கின்ற ஶ்ரீவேணுகோபால சுவாமியாகிய மூலமூர்த்தியைத் தரிசிக்க இயலவில்லை!...

முன் இருமுறை சென்றபோது,  மூலமூர்த்தியின் அர்ச்சா திருமேனி, ஒரே கல்லினால் ஆனது என்று பட்டர்சுவாமிகள் குறிப்பிட்டிருந்தது, இப்பொழுது நினைவில் வந்து சென்றது..

இப்போதைக்கு அப்போதே சேவித்திருந்ததை ஞாபகத்தில் கொண்டு வந்து,  உற்சவர் தரிசனத்திற்காகச் சென்றோம்...

பாமா ருக்மிணி ஸமேத ஶ்ரீவேணுகோபாலனையும், ராமலக்ஷ்மணசீதா ஸமேத ஶ்ரீஆஞ்சநேயரையும், ஶ்ரீபார்த்தசாரதிப் பெருமாளையும் கண்குளிர தரிசித்து மகிழ்ந்தோம்..

நின்று நிதானமாக அர்ச்சனையை செய்துமுடித்து , கற்பூர ஹாரதியும் பட்டர் காட்ட...

.....பரவசத்தோடு சேவை ஆயிற்று!..

இங்கே எம்பெருமான் குழலூதுகின்ற யுவனாகச் சேவை சாதித்தாலும்,  இந்தக் குழலூதும் கோபாலன்...

மழலைச்செல்வம் வேண்டுவோர், தனது சந்நிதிக்கு வந்து பக்தியோடு தரிசனம் செய்தால், அவனே அவர்களுக்குக் குழந்தையாகப் பிறப்பதாகச் சொல்லிக் கேட்கும்பொழுது, இங்கு எழுந்தருளியுள்ள பெருமான் ஒரு வரப்ரசாதி என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது!..

வெள்ளிக் கிழமைகளில் ஸ்வாமி திருமஞ்சனம் கண்டு அருளுவதாகவும், பாரம்பரிய உடை அணிந்தவர்கள் மட்டுமே அதில் கலந்துகொள்ள அனுமதிக்கப் படுகிறார்கள் என்பதையும் கூடுதல் செய்தியாக அறிய முடிந்தது..

இந்தத் திருக்கோயிலில் வருடாந்திர ப்ரம்மோத்ஸவம், வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா, யுகாதி, கோகுலாஷ்டமி, ஸங்க்ராந்தி பண்டிகைகளுடன்....

கோயிலின் "ஸ்கந்த புஷ்கரிணி"யில் ப்ரதி வருடம் தெப்போத்ஸவமும் நடைபெறுகிறது..

....இப்படி செவிக்குத் தேவையான உணவாக, கோயிலைப் பற்றிய முக்கியமான சேதிகளைப் பகிர்ந்து கொண்ட பட்டர் ஸ்வாமிகள், எங்கள் வயிற்றுக்குத் தேவையான உணவாக அன்று பெருமானுக்கு அமுது செய்வித்த புளியோதரை, தயிர்சாதம் ஆகியவற்றையும் தாராளமாகத் தந்தருளினார்...

கண்களும் மனமும் தனது தரிசனத்தால் நிறைய வைத்த வேணுகோபாலன்....

எங்கள் வயிற்றையும் தனது பிரசாதத்தினால் நிறைத்து, வழியனுப்பி வைத்த போது...

தாய்வீட்டிற்குச் சென்று சீராடிவிட்டு வருகின்ற பெண்ணாகிப் போனது ஏழைநெஞ்சம்!...

(வளரும்..)



No comments:

Post a Comment