Wednesday, October 6, 2021

சிங்கார சிக்கிம் 5

 சிங்கார சிக்கிம் – Episode 5

🌺😁😁😀😀😀😀😀😀🌺

By நந்து சுந்து

டார்ஜிலிங்கில் நாங்கள் தங்கும் ஹோட்டலின் பெயர் Zambala Retreat. ஏதோ Zandu Balm பெயர் மாதிரி இருக்கிறதே என யோசிக்க வேண்டாம். இந்த ஹோட்டலைப் பற்றி நிறைய நல்ல விஷயங்கள் கூற வேண்டியுள்ளது.

ஹோட்டல் வாசலுக்கு வந்து நின்றால் ஜஸ்ட் ஆறடி தள்ளி ரயில்வே லைன். மகாதேவி பட வீரப்பா மாதிரி காலை அகட்டி நின்றால் சக்கரம் ஏறி மரண தேவியை அடைய வாய்ப்பு உண்டு.

Darjeeling - Himalayan Railway Line அது. ஹோட்டல் வாசலிலிருந்து இடது பக்கம் முப்பதடி தூரத்தில் ரயில்வே ஸ்டேஷன். தாம்பரம் – வேளச்சேரி மெயின் ரோடில் மாடுகள் நிற்பது போல ஆங்காங்கு ரயில் பெட்டிகள் நின்று கொண்டிருந்தன.

கம்பங்கள் வைத்த ஸ்டேஷன் ப்ளாட்பாரம் இங்கிருந்தே தெரிகிறது. கம்பத்தில் மூலம் பவுத்திரம் நோட்டீஸ் இருக்கவில்லை. 

இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பொழுது போக வில்லையென்றால் லாட்ஜ் வாசலுக்கு வந்து ரயில் பெட்டிகளையும் இஞ்சினையும் வேடிக்கை பர்த்துக் கொண்டிருக்கலாம்.

ரிசப்ஷனில் இரண்டு அழகான பெண்கள் இருந்தார்கள். கோட் போட்டிருந்தார்கள். முகம் சந்தனக் காப்பு செய்த மாதிரி இருந்தது. அதில் ஒருத்தி என் போன் நம்பரை கேட்டு வாங்கிக் கொண்டாள். நாங்கள் டார்ஜிலிங்கை விட்டு புறப்பட்டு மீண்டும் பக்டோக்ராவுக்கு காரில் வரும் போது எனக்கு போன் செய்தாள். அது விபரம் பின்னால் வரும்.

அடுத்த நாள் காலை மூன்றரை மணிக்கு எழுந்திருக்க வேண்டும். டைகர் ஹில்ஸ் என்ற சிகரத்துக்குப் போய் சூரிய உதயம் பார்க்க வேண்டும். 

டிராவல் ஏஜண்ட் போன் செய்தார். காலை மூன்றரை மணிக்கு கார் வந்து விடும். தயாராக இருங்கள் என்றார்.

முன்றரை மணிக்கு எழுந்திருப்பதா? சென்னையில் மூன்றரை மணிக்குத் தான் நான் தூங்கவே போவேன். தினமும் இரவில் வாட்ஸ் அப் க்ரூப்களில் வந்த  மெஸ்ஸேஜ்களை ஒவ்வொன்றாக clear chat போடவே அவ்வளவு நேரம் ஆகி விடும்.

ஒரு வழியாக காலை மூன்று மணிக்கு எழுந்து விட்டோம். நான் தலை கூட வாரவில்லை. அது தான் குல்லாய் போடப் போகிறேனே!

ரிசப்ஷனுக்கு வந்தால் ரூம் பாய் கரப்பான் பூச்சி போல் எங்கேயோ டேபிளுக்கடியில் பதுங்கி இருந்தான். மீசை கூட எட்டிப் பார்க்கவில்லை.

நாங்களாகவே கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தோம். குளிர் அடித்தது. மூன்றே முக்கால் மணிக்கு கார் வந்தது. ஸ்லீப் மோடில் இருந்த ரயில்வே லைனை ஜாக்கிரதையாக க்ராஸ் செய்து சாலைக்கு வந்தோம்.

டிரைவர் கருப்பு கோட், குல்லா போட்டிருந்தார். பார்க்கவே பயமாக இருந்தது. பேயாக இருக்க வாய்ப்பில்லை. பேயால் ஆக்ஸிலேட்டர் மிதிக்க முடியாது.

கார் முக்கால் மணி நேரம் மலைப் பாதையில் பயணித்தது. இருட்டில் வெளியே இருப்பது எதுவும் சரியாகத் தெரியவில்லை. மேட்டில் போவதை மட்டும் உணர முடிந்தது.

டைகர் ஹில்ஸ் 8500 அடி உயரத்தில் இருக்கிறது. தொட்ட பெட்டா தவளைக்கு (8640 அடி) இது கம்பளிப் பூச்சி தங்கச்சி முறை ஆகிறது.

கார் பார்க்கிங்கில் ஏகப்பட்ட கார்கள் இருந்தன. கடைசியில் ஒரு இடம் கிடைத்தது. கார் நம்பரை போட்டோ எடுத்துக் கொண்டோம். 

“கரெக்டா இதே இடத்துக்கு வாங்க” என்றார் பேய்சாரதி.

ரயிலில் பாத் ரூம் போய் விட்டு வந்தாலே என் பெர்தை எனக்கு தேடி கண்டு பிடிக்கத் தெரியாது. அர்த்த ராத்திரியில் கார்  நிறுத்தியிருக்கும் இடத்தை எப்படி கண்டு பிடிப்பது? இருந்தாலும் “சரி” என்றோம்.

கீழே இறங்கி நடந்தோம். கிட்டத் தட்ட ஒரு கிலோ மீட்டர் நடக்க வேண்டியிருந்தது. சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு போவது போல ஜனங்கள் சாரி சாரியாக போய்க் கொண்டிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் ஸ்வெட்டர், குல்லா. குல்லா மேளாவில் நாங்களும் ஐக்கியம் ஆனோம்.

டைகர் ஹில்ஸ் பற்றி இப்போது ஓர் அறிமுகம்.

டைஹர் ஹில்ஸ் அந்தப் பகுதியிலேயே உயரமான சிகரம். Air distance ல் எவரெஸ்ட் சிகரம் அங்கிருந்து 172 கிலோ மீட்டர் தான். கஞ்சன்ஜங்கா சிகரம் இன்னும் கொஞ்சம் பக்கம். பூமியின் curvature காரணமாக கஞ்சன்ஜங்கா எவரெஸ்டை விட உயரமாகத் தெரியும். இடமாறு தோற்றப் பிழை.

டைகர் ஹில்ஸ்லிருந்து பார்த்தால் கஞ்சன்ஜங்கா சிகரம் தெரியும். கிழக்கு திசையில் சூரியன் உதிக்கும் போது சூரியனின் கிரணங்கள் கஞ்சன்ஜங்கா பனிச் சிகரத்தில் பட்டு சிகரம் அச்சு வெல்லம் மாதிரி பொன்னிறத்தில் ஜொலிக்கும் என்று சொன்னார்கள்.

ஒரே ஒரு Disclaimer மட்டும் உண்டு. மேகம் மூடியிருந்தால் கஞ்சன்ஜங்கா சிகரம் தெரியாது. பொன்முடியை பார்க்க முடியாது.

மேட்டில் நடந்தோம் நடந்தோம். டைகர் ஹில்ஸ் வரவில்லை. கர் கர் என்று மேல் மூச்சு தான் வந்தது.

கடைசியில் ஒரு சிறிய சமவெளி தென்பட்டது. தட்டில் போட்ட காராபூந்தி போல் பல தலைகள் அங்கு விரவிக் கிடந்தன.

ஒரு கேலரி மாதிரி காங்க்ரீட்டில் கட்டியிருந்தார்கள். சிறிய கேலரி தான். அதையே வருடக்கணக்கில் கட்டிக் கொண்டிருந்தார்கள். மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டி முடிப்பதற்குள் இதையும் கட்டி முடித்து விடுவார்கள் என்று நம்புவோம்.

கேலரியில் இடம் பிடித்தோம். 

நேரம் ஆக ஆக கூட்டம் அதிகமானது.

பக்கத்தில் இரண்டு தமிழ் குடும்பங்கள்  இருந்தன. மார்கழி மாசத்தில் வாசலில் கோலம் போடப் போவது போல் முக்கோணமாக தலையில் Scarf கட்டியிருந்தார்கள் அந்த பெண்கள்.

பக்கத்தில் கணவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“இந்த மாசம் D.A Arrears போட்டுடுவாங்கன்னு நினைக்கறேன்” என்றார் ஒரு கணவர்.

டார்ஜிலிங் வந்தும் டி.ஏ அரியர்ஸ் பத்தி சிந்திக்கும் அவர்களைப் பார்த்தால் சிரிப்பு வந்தது.

“அப்பா..என்னை தூக்கிக்கோ” என்று ஒரு ஐந்து வயது பெண் குழந்தை அடம் பிடித்தது.

“உஷ்..சும்மா இரு. பூச்சாண்டி வந்து பிடிச்சிட்டுப் போயிடும்” என்று மிரட்டினார் அதன் அப்பா. அவரே பூச்சாண்டி மாதிரி தான் இருந்தார்.

நேபாளிப் பெண்கள் சூடாக டீ விற்றுக் கொண்டிருந்தார்கள். அந்த அதிகாலை நேரத்திலும் டீயாக வேலை செய்து கொண்டு இருந்த அவர்களைப் பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

டிரம்மில் இருந்த டீ கணிசமாக காலியானதும் ஒரு பெண் சொன்னாள்.

“இன்னைக்கு பொன் சிகரம் தெரியாது. மேக மூட்டமா இருக்கு” என்றாள்.

5 மணிக்கு சூரியன் ட்யூட்டிக்கு வந்து விட்டது. கீழ் வானம் லேசாக சிவக்க ஆரம்பித்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சூரியன் மேலே எழும்பியது.

ஸ்டேட்டஸ் போடுவதற்காக பலரும் செல்போனில் சூரியனை நுழைத்துக் கொண்டிருந்தார்கள். 

சூரியன் என்னவோ ஆரஞ்சுப் பழம் மாதிரி நன்றாகத் தான் இருந்தது. கஞ்சன்ஜங்கா தான் கஞ்சத் தனம் செய்து விட்டது. தெரியவே இல்லை.

இப்படியென்று தெரிந்திருந்தால் அடுத்த வீட்டு ஸ்கூல் பையன் அட்லஸிலேயே கஞ்சன்ஜங்காவைப் பார்த்திருக்கலாம். தூக்கத்தைத் துறந்து மூன்றரை மணிக்கு எழுத்தது எல்லாம் வீணாய்ப் போனது. தூக்கம் தொண்டையை அடைத்தது. 

வந்திருந்த பலருக்கும் ஏமாற்றம். இருந்தாலும் சூரியன் முன்னால் செல்பியும் க்ரூப் போட்டோவும் எடுத்துக் கொண்டார்கள்.

நானாவது பரவாயில்லை. வெளி நாட்டிலிருந்து ஒரு கோஷ்டி வந்து ஏமாந்து போயிருந்தது. அந்த கோஷ்டி க்ரூப் போட்டோ எடுத்துக் கொண்டது. அதை நான் போட்டோ எடுத்துக் கொண்டேன்.

பிறகு தான் தெரிந்தது. முக்கால் வாசி நாட்கள் மேக மூட்டம் இருக்குமாம். சிகரம் தெரியாதாம்.

டூர் ஆபரேட்டர்கள் இதை சொல்வதில்லை. டைகர் ஹில்ஸ் விசிட்டை பிரதான ப்ரோக்ராம் ஆக்கி காசு பார்த்து விடுகிறார்கள்.

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளும் அவ்வளவாக மெச்சும் படி இல்லை. 

மறுபடியும் நடந்து கீழே இறங்கி வந்தோம். கொஞ்சம் வெளிச்சம் வந்திருந்தது.

டாக்ஸியில் திரும்பி வரும் போது டார்ஜிலிங் ஊரைப் பார்த்தோம். மிகவும் ஏழ்மையாக இருந்தது. அழுக்காக இருந்தது. ஒரு மலை வாசஸ்தலம் என்று சொல்லும்படி இல்லை.

அடுத்து Bhatasia Loop எனும் இடத்துக்குப் போனோம். குரோம்பேட்டை குமரன் குன்றம் மாதிரி ஒரு உயரமான இடம்.

பக்கத்தில் Ghoom எனும் ரயில்வே ஸ்டேஷன் இருக்கிறது. இந்தியாவிலேயே மிகவும் உயரமான ரயில்வே ஸ்டேஷன் இது. 7400 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து மலைப் பகுதி சடாலென கீழே இறங்குகிறது. ரயில் பாதை 140 அடி கீழே இறங்க வேண்டும். 

கிணற்றுக்குள் தாம்புக் கயிற்றை விடுவது போல ரயிலை  சடாலென விட முடியாது.

எனவே வட்ட வடிவில் ஒரு லூப் மாதிரி அமைத்து அதில் ரயில் கொஞ்சம் கொஞ்சமாக இறங்குகிறது. 

Darjeeling – Himalayan Railway ல் இது ஒரு Engineering Marvel என்று சொல்கிறார்கள்.

நாங்கள் போன சமயம் ரயில் எதுவும் போகவில்லை. அந்த ரயில்வே லூப்புக்கு மத்தியில் ஒரு சிறிய பூங்கா அமைத்திருக்கிறார்கள். அதில் ஒரு War memorial ஸ்தூபி உள்ளது.

சுதந்திரப் போராட்டப் போரில் உயிர் நீத்த கூர்க்கா வீரர்கள் நினைவாக கட்டப்பட்டுள்ளது.

தண்டவாளத்தை ஒட்டி உழவர் சந்தை போல  நிறைய கடைகள் இருந்தன. கை வினைப் பொருட்களும் கம்பளி சமாச்சாரங்களும் விற்கிறார்கள்.

பிறகு லாட்ஜுக்கு வந்தோம். ரிசப்ஷன் பெண் தகதகவென்று கஞ்சத்தனம் இல்லாமல் மின்னிக் கொண்டிருந்தாள். 

(தொடரும்)






No comments:

Post a Comment