சிங்கார சிக்கிம் – Episode 6
By நந்து சுந்து
அறைக்கு வந்து ஏமாற்றம் தீர குளித்தோம்.
ஹோட்டலில் கொடுத்த டர்க்கி டவலை இடுப்பில் கட்டியதும் ஒரு கிலோ எடை கூடியது.
Nandhu’s Towel Law – The size and weight of the hotel towel is directly proportional to the rent you pay.
ரெஸ்டாரண்டில் கடனுக்கு சாப்பிட்டோம். ஐ மீன் க்ரெடிட் கார்டில் பேமெண்ட் செய்தோம்.
மறுபடியும் வண்டி வந்து விட்டது.
முதலில் பத்மஜா நாயுடு மிருகக் காட்சி சாலைக்கு கூட்டிப் போனார்கள்.
குறுகலான மேடான சாலையில் இருந்தது அது. கார் பார்க் செய்ய இடம் இல்லை. எங்களை zoo வில் இறக்கி விட்டு விட்டு டிரைவர் ஜூட் விட்டு விட்டார்.
சிறிய மிருகக் காட்சி சாலை தான். வண்டலூர் மிருகக்காட்சி சாலை உத்தர் ப்ரதேஷ் என்றால் இந்த மிருகக் காட்சி சாலை பாண்டிச்சேரி மாதிரி இருந்தது. ஒரு ரவுண்ட் அரை மணி நேரத்தில் முடிந்து விடும்.
உள்ளே மேடான சாலைகள். ஒரு கரடியைப் பார்க்க கோடம்பாக்கம் ஃப்ளை ஓவர் ஏற வேண்டுமா? களைப்பாக இருந்தது. ஒரே ஆறுதல். நிறைய மரங்கள் இருந்தன.
நாங்கள் லோயர் பெர்த்தில் இருந்தால் மிருகங்கள் அப்பர் பெர்த்தில் இருந்தன. Topography அப்படி.
பாண்டா போன்ற சில விசேஷ மிருகங்கள் இருப்பதாகச் சொன்னார்கள். எனக்கு பாண்டாவுக்கும் பன்னிக்கும் வித்தியாசம் தெரியாது. எனவே நான் அதிக ஆர்வம் காட்டவில்லை.
இரண்டு பெரிய பஞ்சவர்ணக் கிளிகளைப் பார்த்தேன். டைரக்டர் சங்கர் படத்தில் வரும் பெயிண்ட் அடித்த தொப்பை மாதிரி அதன் உடம்பில் பல வர்ணங்கள் இருந்தன.
சுரத்தில்லாமல் சுற்றி வந்தோம். மெயின் கேட் அருகே கை வினைப் பொருட்கள் விற்றுக் கொண்டிருந்தார்கள். லோக்கல் வளையல்கள் கூட இருந்தன. விலைதான் ஓவர். ஒரு வளையல் வாங்கும் காசில் நம்மூரில் வளைகாப்பே நடத்தி விடலாம்.
வண்டலூரைப் பார்க்காத வாண்டுகளுக்கு வேண்டுமானால் இந்த இடம் பிடிக்கலாம். எனக்கு ரசிக்கவில்லை.
அடுத்து Himalayan Mountaineering Institute என்ற இடம் முன்னால் கார் நின்றது. இது கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம். முதன் முதலில் 1953 ல் டென்சிங், ஹில்லாரி இருவரும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார்கள். டென்சிங் ஒரு நேபாளி இந்தியர்.
1954 ல் இந்த மலையேறும் பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு டென்சிங் அதன் டைரக்டராக இருந்தார்.
இங்கே ஒரு ம்யூசியம் இருக்கிறது. இரண்டு தளங்கள். மலையேறுபவர்கள் உபயோகிக்கும் உடைகள், உபகரணங்கள் போன்றவைகளை வைத்திருக்கிறார்கள். இமய மலை சிகரங்களைப் பற்றி தகவல்கள் உள்ளன.
மலையேறுவதற்கான பயிற்சியும் கொடுக்கிறார்கள். Short term கோர்ஸ் கூட உள்ளது.
பழனி மலை ஏற Winch, Rope car ஆகியவைகளுக்காக காத்திருக்கும் போது நேரத்தை எப்படி ஓட்டுவது என ஏதேனும் டிரெயினிங் கொடுப்பார்களா எனத் தெரியவில்லை.
வெளியே டென்சிங்கின் சிலை உள்ளது. பத்து சிங் அல்ல. ஒரே ஒரு சிங் தான். சிலைக்குக் கீழே நின்று போட்டோ பிடித்துக் கொண்டேன். வரலாறு முக்கியம் வாசகர்களே!
அடுத்து டீ எஸ்டேட் பார்க்கலாம் என்றார் டிரைவர்.
ஆஹா..டீ எஸ்டேட். பச்சைக் கம்பளம் விரித்த மாதிரி இருக்கும் என்று ஆவலாகப் போனால் பெரிதாக ஒன்றும் இல்லை. பர்மா பஜார் மாதிரி வரிசையாக கடைகள். அதன் பின்னால் டூரிங்க் டாக்கீஸுக்குப் போவது போல ஒரு சிறிய ஓப்பனிங். அதில் போனால் ஒரு டீ எஸ்டேட் இருக்கிறது.
அடேய்..நாங்கள் வால்பாறையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை டீ எஸ்ட்டேட்டுகளை பார்த்தவர்கள். Welded mesh மாதிரி கட்டம் போட்டு எவ்வளவு அழகாக இருக்கும்! இதைப் போய் டீ எஸ்டேட் என்று கூறுகிறாயே என்று கோபம் வந்தது.
டார்ஜிலிங் டீ பிரசித்தம் தான். ஒரு வேளை டீ எஸ்ட்டேட்டுகள் விஸ்தாரமாக வேறு இடத்தில் இருக்கலாம். ஆனால் டூரிஸ்டுகளைக் கொண்டு போய் காட்டும் இடம் படு மொக்கை.
ஒரு கடையில் டீ ஆர்டர் செய்தோம். ஒரு மாதரசி தான் டீ போட்டார். ஒரு மாதிரியாக இல்லாமல் நன்றாகவே இருந்தது டீ.
St.Joseph School என்ற ஒன்றைக் காட்டினார் டிரைவர். மிகப் பெரிய போர்டிங் ஸ்கூல். ரிஷி கபூர்கள் படிக்கும் ஸ்கூல். 1883 ல் கட்டப்பட்ட இந்த பள்ளிக்கு North Point என்ற பெயரும் உண்டாம்.
லேசான மழையில் அந்த பள்ளி கட்டிடம் கம்பீரமாக இருந்தது. நான் எடுத்த பளிச் போட்டோவே சாட்சி.
அடுத்து Peace Pagoda எனும் இடம். பீஸ் பகோடா என்றால் தூள் பக்கோடா என்று நாக்கில் சப்பு கொட்ட வேண்டாம். அமைதிக்கான பகோடா.
பகோடா என்றால் புத்த கோவில். இந்த இடம் பார்க்க கொஞ்சம் பிரம்மாண்டமாக இருந்தது.
பெரிதாக ஒரு வெள்ளை Dome இருக்கிறது. தூரத்திலிருந்து பார்த்தால் வெள்ளைப் பூண்டை நட்டு வைத்த மாதிரி இருக்கிறது.
சில படிகள் ஏறிப் போனால் தான் பகோடாவை அடையலாம். வயதானவர்கள் ஏறுவது கஷ்டம். பல் இல்லாதவர்கள் பகோடாவுக்கு ஆசைப்படக் கூடாது.
ஜப்பானைச் சேர்ந்த ஒரு புத்த துறவி தான் இந்த பகோடாவை நிறுவினார். உலகின் அனைத்து இன மக்களையும் இணைப்பதற்காக இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.
நல்ல அமைதியான இடம். உள்ளே புத்தரின் நான்கு அவதாரச் சிலைகள் உள்ளன. அதில் ஒரு அவதாரத்தின் பெயர் மைத்ரேயர். அழகான பெயர்.
அதன் பிறகு வேறு சில இடங்களைப் பார்த்தோம். கருப்பு வெள்ளை சினிமா டைட்டிலில் மற்றும் பலர் என்று போடுவார்களே...அது போலத் தான் இந்த இடங்களும். விவரிக்க ஒன்றும் இல்லை.
மதியம் இரண்டு மணிக்கு ஹோட்டலுக்கு வந்து விட்டோம். நல்ல சாப்பாடு. தூக்கம்.
ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் பின்னால் இருக்கும் திறந்த வெளி வழியாகப் பார்த்தால் கஞ்சன் ஜங்கா தெரியும் என ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட் சொன்னார். ஆனால் மேக மூட்டம் காரணமாகத் தெரியவில்லை. கஞ்சன் ஜங்கா என்ற ஒரு சிகரம் உண்மையிலேயே உள்ளதா என்று எனக்கு சந்தேகமே வந்து விட்டது.
ரயில்வே ஸ்டேஷன் ப்ளாட்பாரத்தை காசி செட்டித் தெரு மாதிரி ஜனங்கள் யூஸ் செய்து நடந்து கொண்டிருந்தார்கள்.
மாலை. ஷாப்பிங் கிளம்பினோம். என்ன வாங்குவதென்றே தெரியாமல் விழித்தோம். ஏனென்றால் கடைகளே இல்லை. பிஸ்கெட் பாக்கெட் வாங்கக் கூட கடைகள் இல்லை.
பஜார் என சொல்லப்படும் இடத்தில் டீ பாக்கெட்டுகள் விற்றுக் கொண்டிருந்தார்கள்.
ஆவின் பால்கோவா போல அரை கிலோ வாங்கினோம்.
அடுத்த நாள் காலை. ஹோட்டலைக் காலி செய்து விட்டு பக்டோக்ரா நோக்கிப் பயணம்.
சாலையோரம் ரயில்வே லைன் வந்து கொண்டே இருந்தது. ஒரு இடத்தில் அந்த குட்டி ரயில் வந்தது.
ஆராதனா படத்தில் வரும் ரயில். ராஜேஷ் கன்னா ஜீப்பையும் ஷர்மிளா டாகூரையும் ஒரே நேரத்தில் ஓட்டுவாரே...அதே ரயில். ஜன்னலைப் பார்த்தோம். ஷர்மிளா டாகூரைக் காணவில்லை. யாரோ ஒரு சரண்சிங் இருந்தார்.
இரண்டு மணி நேரம் பயணம் செய்த பிறகு எனக்கு போன் வந்தது.
ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட் தான் பேசினாள். என் பெயரைச் சொல்லி அழைத்தாள்.
என்ன விஷயம் எனத் தெரியவில்லை. நான் ஹோட்டல் அறையில் காஃபி மேக்கர் பக்கத்தில் பாக்கு பொட்டலம் மாதிரி வைத்திருந்த சுகர் பாக்கெட்டை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டது சி.சி.டி.வியில் பதிவாகி விட்டதா?
“சார்..ஒரு சின்ன ஹெல்ப். நீங்க ஹோட்டல்ல தங்கினதைப் பத்தி Trip advisor ல Five Star Rating கொடுத்து நல்ல ரெவ்யூ எழுதுங்க” என்று கேட்டுக் கொண்டாள்.
“சரி” என்றேன்.
“எழுதறப்ப என் பேரைப் போட்டு அவங்க சர்வீஸ் நல்ல இருந்ததுன்னும் போடுங்க சார்” என்றாள்.
“உன் பேர் என்ன?” என்றேன்.
“சபீனா” என்றாள்.
சபீனாவா? ஓ..அது தான் சபினா போட்டு கழுவிய சேலம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரம் போல் பளபளவென இருந்தாளா?
“சபினா தானே எழுதறேன். உன் தங்கச்சி இருந்தா சொல்லு. அவ பேரையும் எழுதிடறேன்” என்றேன் தமிழில்.
ஓடும் காரிலேயே சுடச்சுட ரெவ்யூ எழுதி Trip Advisor site ல் போஸ்ட் செய்து விட்டேன். (அதனால் ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக்) சபினாவுக்கு இந்த மாச Salary க்கு உத்தரவாதம் உண்டு.
ரெவ்யூ போட்ட ஸ்க்ரீன் ஷாட் இணைத்துள்ளேன். கண்டு களிக்கவும்.
கார் ஒரு வழியாக சம வெளிக்கு இறங்கியது.
“டீ எஸ்டேட் பொதுவா மலைச் சரிவுல தான் இருக்கும். சமவெளில டீ எஸ்டேட் பாத்திருக்கீங்களா?” என்றார் டிரைவர்.
இல்லையென்றோம்.
“இதோ” என்று காட்டினார் டிரைவர். சிறிது நேரத்தில் எஸ்டேட்டுகளுக்கு இடையே கார் போனது. சாலையின் இரண்டு பக்கமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சம வெளி டீ எஸ்டேட். மிகவும் வித்தியாசமாகவும் ரம்மியமாகவும் இருந்தது.
ஒரு கடை வாசலில் வண்டியை நிறுத்தினார்.
நாங்கள் இறங்கி டீ எஸ்டேட்டுக்குள் போய் போட்டோக்கள் பிடித்துக் கொண்டோம்.
அந்த கடையில் ஒரு பெண் ஒரு இட்லிப் பானையில் மோமோ வேக வைத்துக் கொண்டிருந்தார். மோமோ எங்களை துரத்தித் துரத்தி வந்தாலும் நாங்கள் அதை சாப்பிடவேயில்லை.
அதன் பிறகு பக்டோக்ரா போய் விமானம் பிடித்து கெளஹாத்தி போய் அங்கிருந்து விமானம் பிடித்து சென்னை வந்து..அவையெல்லாம் சுவாரசியம் இல்லாத விஷயங்கள்.
நாங்கள் இந்த பயணத்தில் மிஸ் செய்தது சிக்கிம் மாநிலத்தில் வட பகுதியில் இருக்கும் Zero point.
சிக்கிமிலிருந்து 110 கிலோ மீட்டர் வடக்கே போனால் யும்தாங்க் பள்ளதாக்கு வரும். கடல் மட்டத்திலிருந்து 15000 அடி உயரம். அங்கே தான் Zero point உள்ளது.
சிவிலியன்கள் அதைத் தாண்டி போகக் கூடாது. ராணுவம் மட்டும் தான் போக அனுமதி.
அங்கிருந்து பார்த்தால் பனி மூடிய இமயமலை சிகரங்களை மிக அருகில் பார்க்கலாம். பனியில் விளையாடலாம். ஆக்ஸிஜன் குறைபாடு வரும். அதை மட்டும் எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.
டார்ஜிலிங் போனதற்கு பதிலாக அங்கு போயிருக்கலாம். தெரியாமல் போய் விட்டது.
அடுத்த முறை கண்டிப்பாக போய் விட வேண்டும். நடக்குமா? நடக்கும். நல்லதையே நினைப்போம்.
(நிறைவு)
No comments:
Post a Comment