சிங்கார சிக்கிம் – Episode 4
By நந்து சுந்து
அடுத்து நாங்கள் போனது Banjhakri Water Falls.
இது ஒரு அழகான நீர் வீழ்ச்சி. சிக்கிம்மிலும் அருவியில் நீர் மேலிருந்து கீழே தான் விழுகிறது.
இந்த அருவி 98 அடி உயரத்திலிருந்து தமிழ் பட ஹீரோ கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வது போல் விழுகிறது.
கீழே விழுந்ததும் கொஞ்சம் ஹாயாக இருபதடி ஓடி பிறகு ஒரு தேவதையின் வெள்ளை கவுன் போல அகலமாக வளைந்து விழுகிறது.
இந்த அருவிக்குப் போகும் பாதை அழகாக இருக்கிறது. அருவியில் குளிக்க முடியவில்லை. குற்றாலத் துண்டு விற்கும் கடைகள் எதுவும் இல்லை. கால்களை மட்டும் நனைத்தோம்.
கணபதி ஹோமம் முடிந்தவுடன் முகத்தில் தீர்த்தம் தெளிப்பது போல முகத்தில் நீர் திவலைகளை அருவி தெளித்தது.
அருவி இறங்கி ஓடும் பகுதியில் இக்கரையிலிருந்து அக்கரைக்கு ஒரு தொங்கு பாலம் அமைத்திருக்கிறார்கள். கலர் கலராக லாரி டயர் போட்டு பாலம். அந்த பாலத்தில் வீர விளையாட்டு செய்ய விரும்புகிறவர்கள் நடக்கிறார்கள்.
நாங்கள் போன சமயம் ஒரு பருவப் பெண் அதில் தடுமாறிக் கொண்டிருந்தாள். காசு கொடுத்து டயரில் மாட்டிக் கொண்டிருந்தாள்.
அருவி அருகே ஒரு சிறிய பூங்கா இருக்கிறது. ஒரு சிறிய செயற்கை நீர் நிலையும் இருந்தது. அதில் நட்ட நடுவே ஒரு டிராகன் சிலை வைத்திருந்தார்கள். Centre the dragon.
நீர் நிலையில் படகுகள் இருந்தன. ஸ்டேண்டில் நிற்கும் ஆட்டோக்கள் மாதிரி சும்மா நின்று கொண்டிருந்தன.
அடுத்து டிரைவர் எங்களை White Hall என்ற இடத்துக்கு கூட்டிப் போனார். அது ஒரு சிறிய பிரிட்டிஷ் காலத்து கட்டிடம். ஒரு நாட்டாமை வீடு மாதிரி இருந்தது. சொம்பு of Sikkim உள்ளே இருக்கலாம்.
அதன் அருகே Ridge Park என்று ஒன்று இருக்கிறது.
அதற்குள் ஒரு நிரந்தர மலர்க் கண்காட்சி உள்ளது. நிறைய பூச் செடிகள் இருந்தன.
பழமுதிர் நிலையம் கடையில் பப்பாளியும் பைனாப்பிளும் அருகருகே இருப்பது போல எல்லா பூச்செடிகளையும் அருகருகே வைத்திருந்தார்கள்.
போட்டோ எடுத்துக் கொள்வதற்கு அருமையான இடம். நானும் பூக்கள் அருகே நின்று கொண்டு நிறைய எடுத்துக் கொண்டேன். பொது நலன் கருதி நான் இல்லாத சில போட்டோக்களை மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன்.
கடைசியாக Do Drul Charten என்ற இடத்துக்குக் கூட்டிப் போனார் டிரைவர்.
இங்கு ஒரு ஸ்தூபி உள்ளது. வெள்ளை நிறத்தில் உள்ளது. 1945 ல் கட்டப்பட்ட இது இன்னும் அழுக்காகவில்லை.
அந்த ஸ்தூபியை சுற்றி 108 Prayer wheels உள்ளன. Prayer wheels எனப்படுபவை உருளைகள். நிற்க வைத்த அம்மிக் கல் மாதிரி இருக்கும். அதன் மேல் மந்திரங்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். இதை கையினல் சுற்றினால் அந்த மந்திரங்களை சொன்ன பலன் கிடைக்குமாம்.
சுற்றுலா பயணிகள் அனைவரும் அதை சுற்றுகிறார்கள்.
மறு நாள் காலை. காம்ப்ளிமெண்டரி ப்ரேக்பாஸ்ட் கபளீகரம் செய்து விட்டு டார்ஜிலிங் புறப்பாடு. எம்.ஜி.ரோட் சோகம் தாங்காமல் விம்மியது.
காங்க்டாக்கிலிருந்து டார்ஜிலிங்குக்கு நேராகப் போனால் 102 கிலோ மீட்டர் தான். எனவே காரில் நாங்கள் அனைவரும் கோவில் தக்ஷிணாமூர்த்தி சிலை மாதிரி நேராக அமர்ந்திருந்தோம். டிரைவருக்கு வேறு திட்டங்கள் இருப்பது எங்களுக்குத் தெரியவில்லை.
முப்பது கிலோ மீட்டர் போனதும் டிரைவர் சொன்னார்.
“இங்கே ஒரு அரசாங்க பழச் சாறு கடை (Government Juice Factory Outlet) இருக்கு. அங்கே சுத்தமான ஜூஸ் கிடைக்கும். ஊருக்கு வாங்கிட்டுப் போங்க” என்றார்.
சற்று நேரத்தில் ஜூஸ் கடை முன் நிறுத்தினார் டிரைவர்.
அண்ணா ஜூஸ் கடை என்ற போர்டோடு மிக்ஸியில் அன்னாசி பழத்தை அடித்துக் கொடுப்பார்கள் என்று எதிர் பார்த்திருந்தோம்.
அதற்கு மாறாக கண்ணாடிக் கூண்டுக்குள் நிறைய ஜூஸ் பாட்டில்கள் இருந்தன.
“இதெல்லாம் Fresh orange juice” என்று சொன்னார் ஒரு சோனா.
நாக்கில் எச்சில் ஊறியது. ஆளுக்கு மூன்று பாட்டில் வாங்கி ஊருக்கு கொண்டு வந்து விடலாம் என்று முடிவெடுத்த போது திடீரென்று ஞானோதயம் தோன்றியது.
"இதை எப்படி விமானத்தில் கொண்டு போவது? திரவப் பொருள் எதையும் அனுமதிக்க மாட்டார்களே!”
“இந்த ஜூஸை மறுபடியும் ஆரஞ்சா மாத்திக் கொடுக்க முடியுமா? நாங்க ப்ளேன்ல ஈசியா கொண்டு போயிடுவோம்” என்றேன் சோனாவிடம்.
விமானப் பயணத்தில் இது தான் அவஸ்தை. நாம் விரும்பியபடி இருக்க முடியாது. பணத்தைக் கொடுத்து விட்டு அடிமை மாதிரி பயணிக்க வேண்டும். கடலை உரித்து சாப்பிட்டு விட்டு தோலை கீழே போட முடியாது. ‘காட்பாடி வந்தா என்னை எழுப்பி விட்டுடறீங்களா’ என்று பக்கத்தில் இருப்பவனிடம் சொல்ல முடியாது.
ஒரே ஒரு பாட்டில் ஜூஸ் வாங்கி வரும் வழியிலேயே காலி செய்து விட்டோம்.
“அங்கே பாருங்க” என்று இடது பக்கம் மலையைக் காட்டினார் டிரைவர். மலை மேல் ஒரு பெரிய கோவில் இருப்பது தெரிந்தது.
“அங்கே போலாமா? ரோடு மோசமா இருக்கும். மூனு மணி நேரம் கூடுதலா ஆகும். எக்ஸ்டிரா வாடகை ஆகும்”
“பரவாயில்லே. போலாம்”
வண்டி மாற்றுப் பாதையில் போக ஆரம்பித்தது. போனது. போனது. போய்க் கொண்டே இருந்தது.
ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு ஒரு வழியாக நம்ச்சி சென்ற ஊருக்குள் நுழைந்தது.
‘நம்ச்சியாக வாழ்க. நாதன்தாள் வாழ்க’ என்று கூறிக் கொண்டே இறங்கினோம்.
அங்கு ஒரு பெரிய புத்த கோவில் இருந்தது.
பத்மசம்பாபா என்ற குருவுக்கான கோவில். கெளதம புத்தரின் தந்தையார் அரசர் சுத்தனா இங்கு ஒரு ஸ்தூபியை ஸ்தாபித்ததாக அங்கிருக்கும் கல்வெட்டு கூறியது.
135 அடி உயர குருவின் சிலை உள்ளது. தங்கமும் காவியும் கலந்த நிறத்தில் ஜொலிக்கிறது. படிகள் ஏறிப் போக வேண்டும். கீழே ஒரு மிகப் பெரிய Prayer wheel உள்ளது. கான்க்ரீட் கலக்கும் மிக்ஸர் சைஸுக்கு இருந்தது. அதை சுற்றினோம். ஏகப்பட்ட அதிர்ஷ்டம் எங்கள் அக்கவுண்டில் டிபாசிட் செய்யப்பட்டது.
மேலே இருக்கும் சிலை மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. என் செல் போன் ஸ்க்ரீனுக்குள் அடங்காமல் பக்கத்தில் இருப்பவர் ஸ்க்ரீனுக்கும் போனது.
கோவிலைச் சுற்றி அழகான மலர்ச்செடிகள் இருந்தன. மொத்தத்தில் ஒரு ரம்மியமான இடமாக இருந்தது.
“அடுத்து நாம சார் தாம் பாக்கப் போறோம்” என்றார் டிரைவர்.
“தாமுவா? இந்த விஜய் டி.வில வந்து எல்லாரும் சமைச்சதை நக்கி நக்கிப் பாப்பாரே அவரா?”
”சார்தாம். நாலு புண்ணிய ஸ்தலம் ஒரே இடத்துல இருக்கும்”
பெய சுவாரசியம் காட்டாமல் தான் போனோம்.
உள்ளே போனதும் பிரமித்துப் போய் விட்டோம்.
வெள்ளை வெளேர் என மிகப் பெரிய சிவன் சிலை ஒன்று கம்பீரமாக இருந்தது. முன்னால் ஒரு பெரிய நந்தி. சிவன் சிலைக்கு இட்டுச் செல்ல ராஜாஜி ஹால் மாதிரி அகலமான படிகள்.
பண்ணிரண்டு ஜோதிர் லிங்கமும் இங்கே வைத்திருக்கிறார்கள்.
பாரத தேசத்தின் நான்கு திசைகளிலும் இருக்கும் புண்ணிய க்ஷேத்தரங்களை அப்படியே வடிவமைத்து வத்திருக்கிறார்கள்.
கிழக்கு – பூரி ஜெகன்னாதர்
தெற்கு – ராமேஸ்வரம்
மேற்கு – துவாரகா.
இந்த நான்கு கோவில்களைப் போன்றே தத்ரூபமாக கட்டியிருக்கிறார்கள். ராமேஸ்வரம் போல் கட்டியிருந்த கோவில் பரவசத்தை உண்டாக்கியது.
பத்ரிநாத் கோவில் வடிவமைப்பு தான் மிகவும் சிறப்பு. பத்ரிநாத் கோவிலை நேரில் பார்ப்பது போல் இருந்தது.
கோவில் சூழ்நிலை மிகவும் அமைதியாக இருந்தது. கூட்டம் அதிகம் இல்லை. அனுபவித்து ரசிக்க வேண்டுமென்றால் இரண்டு மணி நேரமாவது ஆகும்.
நுழைவு வாயிலில் ஒரு நல்ல ரெஸ்டாரண்ட் இருக்கிறது.
ரொட்டி சப்ஜி ஆர்டர் செய்தோம். வரத் தாமதம் ஆனாலும் சப்பு கொட்டி சாப்பிடும் வகையில் இருந்தது.
உங்களில் யாரேனும் காங்க்டாக் – டார்ஜிலிங் போவதாக இருந்தால் நம்ச்சி நகரத்தை மிஸ் செய்ய வேண்டாம். அவசியம் போய் வாருங்கள். மூன்று வருடங்கள் ஆனாலும் என் மனதில் இந்த ஸ்தலத்தின் நினைவுகள் அப்படியே உள்ளன.
மறக்கவே முடியவில்லை. இதன் சிறப்பை என்னால் வார்த்தைகளில் வடிக்க முடியவில்லை என்பது தான் உண்மை. இந்த தலம் மிகவும் சிறப்பாக இருந்ததால் இத்துடன் நிறைய போட்டோக்கள் பதிவு செய்துள்ளேன்.
டார்ஜிலிங் நோக்கி கார் பயணித்துக் கொண்டிருந்தது. கூடவே டீஸ்டா (Teesta River) எனும் நதி வந்து கொண்டிருந்தது. இமயமலையில் உற்பத்தியாகி சிக்கிம், மேற்கு வங்கம், பங்களா தேஷ் எனப் பயணித்து கடலில் கலக்கிறது இந்த நதி. நீர் தூய்மையாக இருந்தது.
டார்ஜிலிங் மலை ஏறும் பாதை மிகவும் அழகாக இருந்தது. இரவு ஏழு மணிக்கு டார்ஜிலிங் வந்து சேர்ந்தோம்.
(தொடரும்)
No comments:
Post a Comment