Wednesday, October 6, 2021

கால் போன போக்கிலே சார்தாம் 4

 🥀🥀🥀🥀சார்தாம் 🌻🌻🌻🌻

#சார்தாம் 4

கால் போன போக்கிலே....

- நந்து சுந்து

4. ஹரித்வாரில் தஞ்சம்

ஹரித்வாரில் டாக்ஸிக் கரர்கள், ஹோட்டல் காரர்கள் எல்லாம் “சார் தாம் ...சார் தாம்” என்று அடிக்கடி கூறிக் கொண்டிருந்தார்கள். “யார் அந்த தாமு சார்?’ என்று நானும் குழம்பிக் கொண்டிருந்தேன். பிறகு தான் தெரிந்தது ..சார் தாம் என்பது என்பது வட இந்தியாவில் மிகவும் பிரபலமான யாத்திரை என்று.

சார்தாம் என்றால் நான்கு புண்ணிய தலங்கள் என்று பொருள். நம் ஊரில் நவக்கிரக யாத்திரை போவது போல அவர்கள் போகிறார்கள். ஆனால் மன வலிமையும் உடல் தெம்பும் உள்ளவர்கள் மட்டுமே போக முடியும்.

யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார் நாத் மற்றும் பத்ரி நாத் ஆகிய நான்கு தலங்களைத் தான் சார் தாம் என்று அழைக்கிறார்கள். யமுனோத்ரி யமுனை உற்பத்தியாகும் இடம். கங்கோத்ரி கங்கை உற்பத்தியாகும் இடம். கேதார் நாத் ஒரு சிவ ஸ்தலம். பத்ரி நாத் ஒரு விஷ்ணு ஸ்தலம். இவை நான்குமே இமய மலையில் கிட்டத் தட்ட பதினோராயிரம் அடி உயரத்தில் உள்ளன.

இந்த யாத்திரைக்கு பஸ், டாக்ஸி வைத்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக மக்கள் புறப்படுகிறார்கள். சாயம் போன பஸ்களில் ஜன்னல் ஓரத்தில் பான் பராக் பிரான்களும் முக்காடு போட்ட முன்னாள் அழகிகளும் அமர்ந்திருப்பார்கள். சினிமா படச் சுருள் பெட்டி மாதிரி பஸ்ஸில் சப்பாத்தி அடுக்கி வைத்திருப்பார்கள்.

மேற்குப் பகுதியில் முதலில் உள்ள யமுனோத்ரியிலிருந்து தான் யாத்திரை ஆரம்பிக்க வேண்டும் என்பது ஐதீகம். எனவே நாங்கள் ஹரித்வாரிலிருந்து முதலில் போக வேணடிய இடம் யமுனோத்ரி. 

நாங்கள் டில்லி போய் சேருவதற்கு இரண்டு நாள் முன்பு தான் இமய மலைப் பகுதியில் 65 ஆண்டுகளுக்கு இல்லாத அளவிற்கு பெரும் மழை பெய்திருந்தது. எங்கு பார்த்தாலும் நிலச் சரிவு. சாலைகள் எல்லாம் மூடிக் கொண்டு விட்டன. 

சென்னைலிருந்து விஜயா டிராவல்ஸ் என்ற கம்பெனி மூலமாக யாத்திரை புறப்பட்டவர்கள் பத்ரி நாத்திலிருந்து இறங்கி வரும் வழியில் நடு சாலையில் மாட்டிக் கொண்டதாகவும் இரண்டு நாட்களாக குளிரில் தவித்துக் கொண்டு பஸ்ஸிலேயே இருப்பதாகவும் தகவல் வந்தது.

அவர்கள் எல்லாம் குளிரில் நடுங்குவதாக செய்தி வந்ததும் எங்களுக்கு இங்கு உடம்பு குளிரில் நடுங்கியது. உடனடியாக லாட்ஜ் வாசலில் ப்ளாட்பாரத்தில் விற்றுக் கொண்டிருந்த குல்லாவும் கம்பளி கை உறையும் வாங்கிக் கொண்டோம். விலை வெறும் பத்து ரூபாய் தான். கை உறை வாங்கியதும் இமய மலையை ஒரு கை பார்த்து விடுகிறேன் என்று ஆழம் ( மன்னிக்கவும் - உயரம்) தெரியாமல் சபதமிட்டேன்.

டி.வி செய்தி பார்த்தால் இமய மலையில் ஏற்பட்டிருக்கும் அழிவுகளையும் சாலைகளில் ஏற்பட்டிருக்கும் நிலச் சரிவுகளையும் சம்பிரதாயமாக ஹெலிகாப்டர் மூலமாக பார்த்துக் கொண்டிருந்தார் ஒரு வெள்ளைத் தலை அமைச்சர். 

ஹிந்தியில் ஏதோ பாரிஸ் பாரிஸ் என்று கூறிக் கொண்டிருந்தார்கள். பாரிஸிலும் மழை பெய்திருக்கிறது போலும் என்று நினைத்தேன். பிறகு தான் தெரிந்தது ஹிந்தியில் பாரிஷ் என்றால் மழை என்று. ஸ்கூல் படிக்கும் போது ஹிந்தி படிக்காமல் ஹிந்தி டீச்சர் மீது பேப்பர் ஏரோ விட்டதன் பாவம் எங்களை இப்போது வாட்டிக் கொண்டிருந்தது.

எங்கள் கம்பெனியின் நிர்வாகி திருமதி இந்துமதியும் எங்களுடன் டூர் வந்திருந்தார். அவர் தொடர்ந்து போன் பேசிக் கொண்டே செய்திகளை சேகரித்துக் கொண்டே இருந்தார்.

எங்கள் க்ரூப்பில் மொத்தம் 140 பேர். அதற்குள் 12 பேருக்கு பொறுமை இல்லாமல் போய் விட்டது. நம் ஊரில் இது போன்ற ஜனங்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பஸ் பஞ்சர் ஆகியிருக்கும். ஸ்பேனர் மேல் ஏறி நின்று ஐலசா பாடி மிதித்துக் கொண்டிருக்கும் பஸ் கண்டக்டரிடம் போய் “பஸ் எப்போ எடுப்பீங்க?’ என்று அனத்திக் கொண்டிருப்பார்கள். 

அதே மாதிரி இந்த 12 பேரும் சரவணனைப் பார்க்கும் போதெல்லாம் “எப்போ கிளம்புவோம்...டூர் உண்டா இல்லையா?” என்று கேட்டுக் கொண்டு கோஷ்டியாக பின் தொடர்ந்து கொண்டே இருந்தார்கள். வேறு வழி இல்லாமல் அவர்களை சர்க்கரை தீர்ந்து போன ரேஷன் கடைக்காரர் மாதிரி சரவணன் சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார்.

இதையெல்லாம் எட்ட நின்று பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும் சரவணன் ஏதாவது நல்ல அருள் வாக்கு சொல்லுவார் என்ற ஒரு எதிர் பார்ப்பும் இருந்தது.

எங்கள் ஒரிஜினல் திட்டப்படி ஹரித்வாரில் ஒரு நாள் தான் தங்குவதாக திட்டம். ஆனால் இருக்கும் நிலைமையைப் பார்த்தால் நிறைய நாட்கள் தங்க வேண்டி இருக்கும் போல் தோன்றியது. எனவே ஹரித்வாரில் உள்ள இடங்களை நிதானமாக சுற்றிப் பார்ப்பது என்று முடிவாயிற்று.

ஹரித்வார் என்றால் இறைவனின் நுழை வாயில் என்று பொருள். ஹரி என்றால் இறைவன். த்வார் என்றால் கதவு அல்லது வாசல். இமய மலைக்கு புனித யாத்திரை செல்பவர்கள் ஹரித்வார் வழியாகத் தான் செல்ல வேண்டும். ஹரித்வார் சமவெளியில் உள்ளது. அதன் பிறகு இமய மலை ஆரம்பிக்கிறது. ஊட்டிக்கு முன் உள்ள மேட்டுப்பாளையம் மாதிரி. இங்கிருந்து 25 கி.மீ தள்ளியிருக்கும் ரிஷிகேசிலிருந்து தான் மலை ஆரம்பிக்கிறது.

இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் எங்களுக்கு வேளா வேளைக்கு ருசியான சாப்பாடு மட்டும் தங்கு தடையில்லாமல் வந்து கொண்டிருந்தது.

“எல்லாரும் பஸ்ல ஏறி உக்காருங்க...ஹரித்வார்ல இருக்கற கோவில் எல்லாம் போறோம்” என்று சரவணன் கூறியதும் சந்தோஷமாய் பஸ்ஸில் ஏறி அமர்ந்தோம்.

டிரைவர் ஏறி பஸ்ஸில் முதல் கியரைப் போட்டார். 

(பயணம் தொடரும்)



No comments:

Post a Comment