Wednesday, October 6, 2021

சிங்கார சிக்கிம் 3

 சிங்கார சிக்கிம் – Episode 3

By நந்து சுந்து

எம். ஜி ரோட், சிக்கிம்.

டிரைவர் இந்தப் பெயரை சொன்னதும் அங்கே போக நாங்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. இருந்தாலும் அகர்வால் பவன் அங்கே உள்ளது என்பது ஆசை காட்டியது. இமயத்தில் இட்லி சட்னி சாப்பிட்ட பெருந்தகை என்று சரித்திரத்தில் இடம் பிடித்து விட வேண்டும் என்று ஒரு வேட்கை  வந்தது.

ஹோட்டல் ரூமுக்கு வந்து கை கால் கழுவிக் கொண்டு ரிசப்ஷனுக்குப் போனோம். “எம்.ஜி. ரோட் எப்படிப் போகனும்?” என்று கேட்டோம்.

“ஹோட்டல் பேஸ்மெண்ட் போங்க. அங்கே ஒரு ப்ளைவுட் தடுப்பு வரும். அதுல புகுந்து போங்க”

ப்ளைவுட்டில் புகுந்து போக நாங்கள் என்ன கரையான்களா? 

குழப்பத்துடன் கீழே போனால் ப்ளைவுட் தடுப்பு இருந்தது. ஆனால் அதில் ஒரு கதவும் இருந்தது.

கதவை சாய்ஸில் விட்டிருந்தார் அந்த ரிசப்ஷனிஸ்ட்.

படிக்கட்டு ஒரு சாலைக்கு இட்டுச் சென்றது.

அது ஒரு சிறிய சந்து. இது தான் எம்.ஜி. ரோடா? அரை ஜி.பி கூட இருக்காது போல் இருக்கிறது. இதைப் போய் அப்படி சிலாகித்தார்களே!

சந்தில் கொஞ்ச தூரம் நடந்ததும் ஒரு பெரிய சாலை தெரிந்தது. வாவ்!!! எதிரே கம்பீரமாக எம்.ஜி. ரோட் வரவேற்றது. 

நிறைய ஜனங்கள் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். எம்.ஜி. ரோடில் எந்த வண்டியும் போகக் கூடாது. சைக்கிள் கூட போகக் கூடாது. காங்க்ரீட் பதித்த சாலை. மக்கள் உட்கார இரண்டு பக்கமும் பெஞ்ச்கள்.

கீழே துப்பக் கூடாது. மேலே துப்பலாம். ஆனால் கீழே விழக்   கூடாது. புகை பிடிக்கக் கூடாது. குப்பை போடக் கூடாது. இது போல பல கூடாதுகள். மீறினால் அபராதம். நிஜமாகவே அபராதம் போடுகிறார்கள்.

இருநூறு மீட்டர் நடந்ததும் அகர்வால் பவன் வந்தது. சிறிய கடை. ஒரு ஜெராக்ஸ் கடை சைஸுக்குத் தான் இருந்தது. உள்ளே ஜெராக்ஸ் எடுத்த மாதிரி முகங்களோடு நேபாளி குமரிகள். குந்தியிருந்த குமரன்கள் என் கண்ணுக்குத் தெரியவில்லை.

சுவற்றில் மெனு எழுதியிருந்தது. அதில் தோசை இருந்தது. அந்த சுவர் தோசைக்கு ஆர்டர் கொடுத்தோம்.

சாப்பிட்டு விட்டு மறுபடியும் அறைக்கு வந்து விட்டோம். ஒரு குட்டி தூக்கம். ஹோட்டல் மெத்தையில் தூங்குவதே ஜாலி தான். பெட்ஷீட்டை நாம் மடித்து வைக்க வேண்டாம்.

சிறிது நேரம் தூங்கி விட்டு மறுபடியும் பாதாளச் சுரங்கம் வழியாக எம்.ஜி.ரோட். இப்போதைய விஜயம் பர்ச்சேஸுக்காக.

நிறைய சிக்கிம் Handicrafts பொருட்கள் விற்கிறார்கள். ஸ்வெட்டர், ஷால் விற்கிறார்கள். 

பல நிகழ்ச்சிகளிலும் நிறைய பொய் சொல்லி விட்டு போர்த்திய பொன்னாடைகள் ஏற்கனவே வீட்டில் நிறைய இருந்ததால் நான் எதுவும் வாங்கவில்லை.

விவரமில்லாத சில பெண்கள் ஷால் வாங்கினார்கள். அந்த ஷாலினிகளைப் பார்த்தால் பாவமாக இருந்தது. 

குடை விற்கிறார்கள். மடக்கும் குடை மூன்று வாங்கிக் கொண்டேன். பார்சல் வாங்கிய பேப்பர் ரோஸ்ட் மாதிரி இருக்கும் அதன் உறையை இன்னும் கூட பிரிக்கவில்லை. 

சிக்கிம் தெருக்களில் அனைவரும் குடை வைத்துக் கொண்டு தான் நடக்கிறார்கள். அசலூர்க்காரர்கள் மடக்கும் குடை. உள்ளூர் மக்கள் நீளமான பெரிய குடை தான் வைத்திருக்கிறார்கள். மடக்கும் குடை பெரிய காற்றடித்தால் சாறு பிழிந்த எலுமிச்சை மூடி மாதிரி மேலே தூக்கிக் கொள்ளும் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. 

பெஞ்சில் அமர்ந்து மக்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம். சிக்கிம் சிங்காரிகள் ஜீன்ஸ் போட்டுக் கொண்டு நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். சந்தூர் சோப் போட்டுக் குளித்த மம்மிகள். எந்த நேரமும் மம்மீ என்று அழைத்துக் கொண்டு ஒரு சிறிய முள்ளங்கி வரலாம்.

இரவு வந்ததும் சாலையில் கலர் லைட்ஸ் போட்டார்கள். புஸ்வாணம் சைஸுக்கு ஒரு குட்டி நீரூற்று வேலை செய்ய ஆரம்பித்தது.

நன்றாக சுற்றியதில் பசி எடுத்தது. மறுபடியும் அகர்வால் பவன் போனோம். லேசாக மழை பெய்து கொண்டிருந்தது.

இப்போது பூரிக் கிழங்கு ஆர்டர் செய்தோம். சிக்கிம்மில் மோமோ எனப்படும் பதார்த்தம் மிகவும் விசேஷம். மோதகத்தின் மறு வடிவம் மோமோ. பக்கத்து டேபிளில் ஒரு தேவயானி மோமோ சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அந்த மோமோ மகள் என் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.  

முன்னே பின்னே மோமோவுக்கு வாய்க்கப்பட்டிருக்காததால் நாங்கள் ஆர்டர் செய்யவில்லை.

மறு நாள் காலை. இப்போது வேறு வண்டி வந்தது. இன்னோவாவுக்கு பதில் வேகன் ஆர். ஜாக்கிசானுக்கு பதில் ஜாக்கி செராப் மாதிரி ஒரு ஆள் வந்தார். முப்பது வயதிருக்கலாம். இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று சொன்னான். ஜாக்கி செராப்புக்கு அல்ல. அவருக்கு.

வண்டி கிளம்பியது. நகரத்துக்குள் போனோம். 

ஊர் சுத்தமாக இருந்தது. முதலில் Directorate of Handicrafts என்ற இடத்துக்குப் போனோம். பிறகு  Research institute of Tibetology. பயணக் கட்டுரையில் குறிப்பிடும் படி இந்த இடங்களில் பெரிதாக ஏதும் இல்லை. 

அந்தக் காலத்தில் சர்க்கஸ் விளம்பரங்களில் 285 பேர் பங்கு பெறும் சர்க்கஸ் என்று போட்டிருப்பார்கள். அதில்  கரடிக்கு கான்ஸ்டிபேஷன் வராமல் பார்த்துக் கொள்ளும் நபர் கூட இருப்பார். அது போல டிராவல் ஏஜண்டுகள் இது போல இரண்டு மூன்று இடங்களை திட்டத்தில் சேர்த்து விட்டு பில்டப் காட்டுவார்கள்.

டிரைவரிடம் சிக்கிம் பற்றி ஏகப்பட்ட கேள்விகள் கேட்டுக் கொண்டே வந்தேன். என் பெயரை கேள் ரத்னா விருதுக்கு பரிந்துரைப்பதாக டிரைவர் சொன்னார்.

சிக்கிமில் பல இடங்களில் கலர் கலராக தோரணங்கள் அல்லது கொடிகள் தொங்கிக் கொண்டிருந்தன. நீலம், வெள்ளை, சிவப்பு, பச்சை, மஞ்சள் என சரியான வரிசையில் எல்லா இடத்திலும் இருந்தன. அவைகள் Prayer flags என்று டிரைவர் சொன்னார். 

அதே போல் சில வீடுகளுக்கு மேல் வெள்ளை நிறத்தில் தோரணங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. வீட்டில் யாரேனும் காலமாகி விட்டால் ஒரு வருட காலத்துக்கு வெள்ளை தோரணம் இருக்குமாம்.

நாங்கள் போன சமயத்தில் (ஏப்ரல் 2018) பவன் குமார் சம்லிங் என்பவர் தான் சிக்கிம் முதலமைச்சராக இருந்தார். 1994 லிருந்து 2019 வரை தொடர்ந்து முதலமைச்சராக இருந்து சாதனை படைத்தவர். சிக்கிமின் வளர்ச்சிக்கு அவரின் தொண்டு முக்கிய காரணம் என்று டிரைவர் சொன்னார்.

பாவம். நாங்கள் போனதில் அவருக்கு அடுத்த வருடமே பதவி போய் ப்ரேம் சிங் தமங் முதலமைச்சர் ஆகி விட்டார்.

அடுத்து மிகவும் முக்கியமான புத்த கோவில். Rumtek Monastry. 

இந்த இடம் மிகவும் பெரிதாக உள்ளது. 16 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாம். தலாய்லாமா திபேத்திலிருந்து தப்பி வந்ததும் இங்கு கொஞ்ச நாள் இருந்தாராம்.

முன்னால் விஸ்தாரமாக ஒரு திறந்த வெளி. அதில் கொடி மரம். உள்ளே பத்தடி உயரத்தில் தங்க நிறத்தில் புத்தர் இருக்கிறார். மலை முழுக்க பல இடங்களிலும் மலபார் கோல்ட் கவரிங் புத்தர் தான்.

பல புத்த சன்யாசிகள் இங்கு வசித்து வருகிறார்கள். நம்மூர் வேத பாட சாலை போல் குட்டி சிக்கிம் பையன்கள் அங்கு தங்கி படித்து வருகிறார்கள்.

மொட்டைத் தலையுடன் எல்லா பையன்களும் ஒரே மாதிரி இருந்தார்கள். செஸ் போர்டில் முதல் வரிசையில் நிற்கும் White Pawns போல. ஒரு பான் பையன் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்ததை லபக்கென நான் போட்டோ பிடித்து விட்டேன் (காண்க: போட்டோ)

அடுத்து பக்கத்தில் இருக்கும் பொடானிக்கல் கார்டனுக்குக் கூட்டிப் போனார் டிரைவர்.

பொட்டானிக்கல் கார்டன் நன்றாகத் தான் இருந்தது. மிகவும் பெரிய ஏரியா. ஆனால் எங்கள் மூன்று பேரைத் தவிர வேறு யாரும் இல்லை.

கடலை போட அது மிகச் சிறந்த இடம் என சிக்கிம் வாசிகளுக்குத் தெரியவில்லை. ஒரு முறை அரசாங்க செலவில் கூட்டி வந்து மெரினா பீச்சையும் வள்ளுவர் கோட்டத்தையும் காட்ட வேண்டும்.

சிறிது நேரம் பொட்டானிக்கல் கார்டனில் சுற்றியதும் பயம் வந்து விட்டது. யாராவது வந்து பொடனியில் அடித்தால் கூட கேட்க ஆளில்லை. எனவே வெளியே வந்து விட்டோம்.

டிரைவரிடம் பேச்சு கொடுத்தோம். அவர் மிகப் பெரிய ரஜினி ரசிகர் என்று சொன்னார். ஹிந்தியில் டப் ஆகும் அத்தனை ரஜினி படங்களையும் பார்த்து விடுவாராம். சிவாஜி படத்தை பல முறை பார்த்தாராம். சிங்கம் சிங்கிளாக சிக்கிம் வரை போயிருக்கிறது என்று புரிந்தது.

சிக்கிம் திருமணங்களைப் பற்றி கேட்டோம். விளக்கமாக சொன்னார்.

பொதுவாக அரேஞ்ஜ்ட் மேரேஜ் தானாம். முதலில் ஜாதகம் பார்ப்பது. அது பொருந்தினால் பையனுடைய தாய் மாமா போய் பெண் கேட்க வேண்டும். பையனை பிடித்துப் போனால் பெண் வீட்டில் நிச்சயதார்த்தம் நடக்கும். நிச்சயதார்த்தம் முடிந்து இரண்டு வருடம் கழித்துத் தான் கல்யாணம். அது வரை பையனின் நன்னடத்தையை கவனிப்பார்களாம். 

பெண்ணின் தாய் மாமா பையனுக்கு Conduct Certificate கொடுத்தவுடன் கல்யாணம். 

நல்ல வேளை. நான் சிக்கிம்மில் பிறக்கவில்லை.

 கல்யாணத்துக்கு பையன் ஏகப்பட்ட தங்கம் வாங்கிக் கொடுக்க வேண்டும். இதோ..இப்போது எங்களுக்கு கார் ஓட்டியதில் அரை கிராம் தங்கம் சம்பாதித்து விட்டார் இந்த வருங்கால மாப்பிள்ளை.

(தொடரும்)






No comments:

Post a Comment