🥀🥀🥀🥀சார்தாம் 🌻🌻🌻🌻
#சார்தாம் 3
கால் போன போக்கிலே....
- நந்து சுந்து
3.டில்லியில் குழப்பம்
ரயிலை விட்டு இறங்கப் போனால் வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது. வேறு வழி இல்லாமல் ப்ளாட்பாரத்தில் இறங்கி விட்டோம். ஓடிப் போய் கூரையின் கீழே நின்று கொண்டோம்.
டில்லி ராஜ்ய சபா மாதிரி ப்ளாட்பாரம் ஒரே களேபரமாக இருந்தது. சரவணன் வந்து “பைட்டியே..பைட்டியே” என்று கெஞ்சினார்.
வட இந்தியா முழுக்க மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருப்பதாக ரமணா தேசாய் வானிலை அறிக்கை சொல்லிக் கொண்டிருந்தார். லேசாக எங்களுக்குள் கலவரம் மூண்டது. ரமணா தேசாய் ஸ்கூலுக்கு வேண்டுமானால் லீவு விடலாம். யாத்திரைக்கு விடலாமா?
ஓரளவுக்கு மழை நின்றவுடன் எங்கள் பஸ்ஸில் ஏறி ஹோட்டலுக்குப் போனோம். ஹோட்டல் தமிழர்கள் அதிகமாக வாழும் கரோல் பாக் பகுதியில் இருந்தது.
கொஞ்சம் சுமாரான லாட்ஜ் தான். ரிசப்சனில் இருந்த பெண் நமீதா மாதிரி தமிழ் பேசினாள். டில்லி நகரில் வேறு வழியில்லை. எங்கே சமைப்பதற்கு அனுமதி கொடுக்கிறார்களோ அந்த இடத்தில் தானே ரூம் போட முடியும்.
காலை டிபன் காபி எல்லாம் முடித்த பிறகு சரவணன் வந்தார். வட இந்தியா முழுக்க மழை பெய்வதாகவும் இமய மலையில் பல இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டு உள்ளதாகவும் கூறினார். டூர் தொடர்ந்து நடத்த முடியுமா என்று யோசித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
எனக்கு கவலை வந்து விட்டது. பத்ரி நாத் போவதாக ஊரில் நாய், பூனை எல்லாவற்றிடமும் சொல்லி விட்டு வந்து விட்டேன். இரண்டே நாளில் திரும்பிப் போனால் சரித்திரம் சிரிக்கும்.. போன வேகத்தில் டக் அவுட் ஆகி திரும்பி வரும் கிரிக்கெட் வீரரை விமரிசிப்பது போல ஆளாளுக்கு பேசுவார்கள்.
மனதை திடப் படுத்திக் கொண்டு கரோல் பாக் வீதிகளில் நடை பாதை கடைகளில் வலம் வந்து கொண்டிருந்தோம். கரோல் பாக் என்பது சரவணா ஸ்டோர் இல்லாத தி.நகர் மாதிரி. அஜ்மல் கான் சாலைக்குப் போனால் அணகோண்டா கூட கிடைக்கும். எங்கள் கூட்டத்தில் பாதி பேர் பைஜாமா ஜிப்பா வாங்கி பஜன் லால் ஆக முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.
ஒரு ஆண்டி சூடிதார் வாங்கினார். “நல்லா இருக்கா?” என்று என்னிடம் கேட்டார். “உங்களுக்கு என்ன சினிமா ஸ்டார் மாதிரி இருக்கீங்க..” என்றேன். அவர் கமலா காமேஷ் மாதிரி இருப்பார்.
மதியம் சரவணன் வந்தார். மாலை நான்கு மணிக்கு ஹரித்வார் புறப்படுவதாகவும் தயாராக இருக்கும் படியும் கூறினார்.
லாட்ஜ் இருக்கும் ரோடு மிகவும் குறுகல். ஒரு உசிலை மணி நடந்தால் எதிரே ஒரு ஓமக்குச்சி நரசிம்மன் வரலாம். அவ்வளவே...பஸ் உள்ளே வராது. மெட்ரோ லைன் அருகே இருக்கும் பெரிய சாலைக்குப் போய் காத்திருந்தோம்.
அந்த பிஸியான சாலையில் பஸ் நிறுத்தக் கூடாது. டில்லியில் போலீஸ் கெடு பிடி அதிகம். காசு கொடுக்க முடியாது. காசு வாங்க பக்கத்தில் இளநீர் விற்கும் பெண் எல்லாம் இருக்க மாட்டாள்.
ஒரு வழியாக நாலரை மணிக்கு பஸ் வந்தது. அவசர அவசரமாக ஏறினோம். டில்லியிலிருந்து ஹரித்வார் தூரம் 220 கி,மீ தான். ஆறு மணி நேரத்தில் போய் விடலாம். இரவு ஹரித்வாரில் தங்குவதாக ஏற்பாடு.
போகப் போகத் தான் நிலைமை எங்கள் கட்டுக்குள் இல்லை என்று புரிந்தது. டில்லி நகர எல்லை தாண்டுவதற்கே இரண்டு மணி நேரம் ஆகி விட்டது. மழையின் காரணமாக எல்லா ரோடுகளும் சீர் குலைந்திருந்தன.
இரவு 9 மணிக்கு எங்கள் வண்டியை போலீஸார் நிறுத்தினார்கள். தெஹ்ரி அணை நிரம்பி வழிவதாகவும் உபரி நீர் ஊருக்குள் புகுந்து சாலைகளில் ஓடுவதாகவும் கூறி வேறு வழியில் போகச் சொன்னார்கள்.
டிரைவர் ஏதேதோ கிராமத்துக்குள் எல்லாம் புகுந்து போனார். " என் இனிய ஹிந்தி மக்களே" என்று கை கூப்பிக் கொண்டே பஸ் போய்க் கொண்டிருந்தது. சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தன. உடம்பெல்லாம் வலி. பஸ் போய் கொண்டே இருந்தது.
வழியில் போலீஸ் மறுபடியும் ரூட் மாறிப் போகச் சொன்னார்கள்.
முடிவில் அதிகாலை ஐந்து மணிக்கு ஹரித்வார் போய் சேர்ந்தோம்.
பொதுக்குழு மாநாடு முடிந்த பந்தல் மாதிரி ஹரித்வார் அலங்கோலமாக இருந்தது.
வீதியெங்கும் வெள்ள நீர் காரணமாக ஒரு அடி உயரத்திற்கு மண்ணும் சகதியும் கொட்டிக் கிடந்தன. இதற்கு முன் இரண்டு முறை ஹரித்வார் வந்திருந்தாலும் இது போன்ற நிலையில் ஊரைப் பார்த்ததில்லை.
லாட்ஜ் நன்றாக வசதியாக இருந்தது. ஓய்வு எடுத்துக் கொண்டோம். கொஞ்ச நேரத்தில் எல்லோரும் ஆட்டோவில் அருகில் இருக்கும் கங்கை ஆற்றுக்கு குளிக்கப் போனோம். வெள்ளம் காரணமாக பில்டர் காபி நிறத்தில் கங்கை அசுர வேகத்தில் பாய்ந்து கொண்டிருந்தது.
படிக்கட்டில் அமர்ந்து ஒரு பாத்திரத்தில் நீர் மொண்டு குளித்தோம். ‘ஆத்து நிறைய தண்ணி போனாலும்.....’ என்ற பழ மொழியை தயவு செய்து நினைக்காதீர்கள்.
காலை டிபன் முடிந்ததும் சரவணன் வந்தார். நாங்கள் போக வேண்டிய மலைப் பாதை எல்லாம் நிலச் சரிவினால் மூடிக் கொண்டு விட்டதாகவும் அதனால் ஹரித்வாரிலேயே தங்கி நிலைமையை கண்காணிக்கலாம் என்றும் கூறினார்.
டி.வி செய்தி சேனல்களும் சரவணனுக்கு சாட்சி சொல்லின.
No comments:
Post a Comment