Wednesday, October 6, 2021

சிதம்பரத்திலிருந்து காசி,கயா,அலகாபாத்,ஹரித்வார்,மதுரா….பகுதி 3

சிதம்பரத்திலிருந்து காசி,கயா,அலகாபாத்,ஹரித்வார்,மதுரா….பகுதி 3

3 ந்தேதி காலை. சிதம்பரம் நினைவுகள் மறைந்து  வாரணாசி டூர் நினைவுகள். இரவு சரியாக ட்ரெய்னை பிடிக்க வேண்டுமே என்ற கவலை தொற்றுகிறது. மேலும் கூடுவாஞ்சேரியில் கட்டிய வீட்டிற்கு ஏழு வருடங்களாக ஃபிக்ஸ் செய்யப்படாத வீட்டு வரியை ஃபிக்ஸ் செய்து மொத்தமாக செலுத்த மற்றும் கமிஷன் என ஒரு இடைத்தரகர் பெற்ற 38,000 க்கு ரசீது குடியிருப்பவரிடம் கொண்டு தரவில்லை என்ற தகவல் வேறு. 

இதற்கிடையில் நிலம் குறித்த பழைய ரெக்கார்டுகளை தோண்டி எடுத்து பெயர் மாற்றம் செய்ய சில இடங்களுக்கு அலைய வேண்டியிருக்கும் அல்லது பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும் என விஏஓ நாசூக்காக சொல்ல புரிந்து கொண்டு அவரைப்பாரக்க பணத்துடன் மறுநாளும்்மாதானம் செல்கிறேன்...

மாதானம் முத்து மாரியம்மன் தரிசனம் கிடைக்கிறது.(கோயில்  விவரம் பின்னர்)

நியாயமான ஒரு குத்தகை தாரரின் வாரிசு மோகன்.  (இவர் மட்டும் பட்டா என் பெயரில் மாறிய பின் ஒரு ஏக்கர் ஒரு லட்சத்திற்கு எடுத்துக்கொள்வதாக சொல்கிறார். மற்றவர்கள் நிலம் தங்களது எனவும் எங்கள் அப்பா அவர்கள் தாத்தா எனவும் கேஸ் போட்டு இருக்கிறார்கள்)மோகன் தரை மட்டமான எங்கள் கொள்ளு தாத்தா இருந்த வீட்டை காட்டுகிறர். அம்மிக்கல்லும் கல் உரலும் மண்ணில் புதைந்து கிடக்க நூறாண்டுகள் பின்னோக்கி பயணித்து மண்ணை வணங்குகிறேன்..

சிதம்பரம் திரும்ப பழையார் பஸ் வர காத்திருக்கையில் மனம் மீண்டும் சிதம்பரம் நினைவுகளை அசை போடுகிறது…

ஸ்ரீ நடராஜர் 

ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் வாழ்விற்கு மிக அவசியமாகிய ஒலிக் கருவியையும் (டமருகம்), ஒளிக் கருவியயும் (தீச் சுடர்) கரங்களில் ஏந்தியவர். கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர்.அந்த முடிவிலா ஜோதிக்கு தீஷிதர்கள் பல் வேறு தீபங்களை ஒளி வடிவிலும் மந்திரங்களை ஒலி வடிவிலும் காட்டி பூஜை செய்ய பக்தி பரவசத்தில் பக்தர்களின் மன நிலை. இடையில் தமிழ் தேவாரமும் ஒலிக்கிறது. 

பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத மகரிஷிகளின் பெருந்தவத்திற்கு வரம் தரும் விதமாக, கைலாயத்திலிருந்த வந்த பரமேஸ்வரன், முன்னர் கொடுத்த வாக்கின்படி, தில்லை ஸ்தலத்தில், இரு திருவடிகளில் ஒன்றை முயலகன் எனும் அரக்கன் மீது ஊன்றி நிறுத்தி, மறு திருவடியைத் தூக்குவதில் தொடங்குகிறது ஆனந்த நடனம்.

அண்ட சராசரமனைத்தையும் ஆட்டுவிக்கும் நாயகன் தன் ஆட்டத்தைத் துவங்குகிறார்.

காலில் சிலம்புகள் சிலம்புகின்றன. வலக்கையில் உள்ள டமருக ஒலி அண்டம் எங்கும் பரவுகின்றது. இடக்கயில் உள்ள அக்னி ஒளி பால் வெளியெங்கும் திரள்கிறது. முகத்தில் புன்னக பூக்கின்றது. தனது ஆட்டத்தில் மயக்கம் கொண்ட, அருகிலிருக்கும் சிவகாமியை சற்றே திரும்பிப் பார்க்கும் பார்வை. தலையில் கொக்கிறகும், ஊமத்தம் பூவும் அலங்கரிக்க, உதரபந்தம் விரிய, மார்பில் துலங்கும் ஆதிவராகக் கொம்பு அசைய, பனியால் நனைந்த தலையிலிருந்து கங்கையின் நீர்த்திவலைகள் திசையெங்கும் சிந்த, உடல் முழுவது பூசிய வெண்ணீறு சிதற ஆட்டம் நிகழ்கிறது.

இந்திரன் புல்லாங்குழல் இசைக்க, தும்புரு கீதம் ததும்ப, பிரம்மா தாளம் போட, சரஸ்வதி வீணை மீட்ட, சிவகணங்கள் எழுப்பும் ஜம் ஜம் எனும் தாள சப்தம் எழ, ரிஷிகளின் வேத கோஷம் விண்ணை முட்ட, நந்தி மத்தளம் வாசிக்க, விஷ்ணு முரசு கொட்ட, லக்ஷ்மி மதுரகீதம் பாட, பானுகம்பன், பாணாசுரன் எழுப்பும் சங்கு முழக்கத்தினாலும், ஓங்கார நாதத்தாலும் விண்ணதிர, ஆனந்தத்தில் விநாயகராட, மயிலோடு குமரனாட, தேவ கன்னியராட, நட்டமாடும் நம்பெருமானின் ஆட்டத்தினை, நெஞ்சம் உருக, ஆனந்தக் கண்னீர் சொரிய, பரவச நிலையை சிரிப்பார், களிப்பார் என்பதன்படி, முன்னம் செய்த தவப்பயனின் விளைவாக அனைவரும் திருநடனத்தினைக் காணப் பெறுகின்றனர்.

நடராஜராஜரின் அற்புத ஆனந்த நடனம் இன்றும் என்றும் நடக்கிறது.

நடராஜப் பெருமானுக்கு நாள் ஒன்றுக்கு ஆறு கால பூஜைகள் நடைபெறும். 1. காலசந்தி, 2. மதிய வேளை இரண்டாம் காலம், 3. உச்சிகாலம், 4. மாலை சாயரக்‌ஷை, 5. இரவு இரண்டாம் கால பூஜை, 6. இரவு பத்து மணிக்கு அர்த்தஜாம பூஜை.

ஒவ்வொரு கால பூஜையிலும்,  நடராஜப் பெருமான் தனது சந்திர கிரணங்களில் இருந்து திரட்டிப் பெற்று, நித்திய ஆறு கால அபிஷேக பூஜைக்காக         தீக்‌ஷிதர்களிடம் தந்தருளிய ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். (நித்யம் ஷட்கால பூஜாம் .. எனும் 15ம் செய்யுள், குஞ்சிதாங்கிரிஸ்தவம், உமாபதி சிவம்)..

நடராஜருக்கு அமர்க்களமான பூஜைகள் முடிந்த பின் அனைவர் கவனமும் அமைதியாக பள்ளி கொண்டு இருக்கும் கோவிந்தராஜரின் புறம் திரும்புகிறது. 

நேர் செங்குத்தான திசைகளில் இந்து மதத்தின் இரு பெறும் கடவுள்கள் ஒரே இடத்தில் காண்பது கண் கொள்ளா காட்சி.  

இக்கோயிலின் மற்றொரு சிறப்பு, இங்கு பாரம்பரியமாக விளங்கும் சைவ, வைணவ ஒற்றுமைதான். ஆமாம், இரு சமயத்தினரும் ஒருங்கே வழிபடக் கூடியவாறு நடராஜர் கோயிலும், கோவிந்தராஜர் கோயிலும் அடுத்தடுத்து அமைந்திருப்பது மனிதநேயத்துக்கு ஓர் அரிய எடுத்துக்காட்டு. ஒரே இடத்தில் நின்று சிவபெருமானின் ஆனந்த தாண்டவ கோலத்தையும், திருமாலாகிய கோவிந்தராஜப் பெருமானின் சயன கோலத்தையும் கண்டு தரிசிக்கலாம். அரியும், சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை இக்கோயில் விளக்குகிறது.

சிலபடிகள் ஏறி உள் நுழைகிறோம்.

சமய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இக்கோயிலிலும் ஏற்பட்ட சரித்திர விபரீதங்களும் கிருமி கண்ட சோழனும் அவன் கல்லை மட்டும் கண்டு கடவுளை மறந்த செயலும் மனத்திரையில்…..

திரண்ட புஜங்களும், தொங்குகிற பூணூலும், ஆவேசப் பார்வையுமாக ரங்கராஜ நம்பி சரித்திர உண்மையா? கமலின் கட்டுக்கதையா?

கிருமிகண்ட சோழன் என்று வைணவ, குரு பரம்பரைகளில் அழைக்கப்படும் அரசன் ஒரு சைவ தீவிரவாதியாகக் கருதப்படுகிறான்.தசாவதாரம்திரைப்படத்தில் வரும் காட்சிகளுக்கு சரித்திர ஆதாரம் உள்ளதா?

தில்லை கோவிந்தனை கிள்ளையில் எறிந்தவன்கிருமி கண்டு மாய்ந்தானா?  இனி காண்போம்.  

(வெங்கடேசன் வரதராஜன் 6381369319)


No comments:

Post a Comment