சிங்கார சிக்கிம் – Episode 2
By நந்து சுந்து
மறு நாள் காலை. சீக்கிரமாய் எழுந்து தயாராகி விட்டோம். எழரை மனிக்கு லாட்ஜ் மேல் தளத்துக்குப் போனோம். அங்கு தான் Complimentary breakfast.
இந்த ஓசி டிபனை சபைக் கூச்சம் இல்லாமல் சாப்பிடுபவனே புத்திமான் என்று சாஸ்திரம் சொல்கிறது. க்ரேப் ஜூஸ் குடித்து விட்டு அடுத்த செகண்டே காபி குடிப்பதை கந்தர்வர்கள் அனுமதிக்கிறார்கள்.
இங்கு அதிகமான வெரைட்டி இருக்கவில்லை. கார்ன் ப்ளேக், பால் இருந்தது. ப்ரெட். பக்கத்தில் டோஸ்டர். பிறகு மஞ்சள் நிறத்தில் அவல் உப்புமா.
நல்லி சில்க்ஸ் சேல்ஸ் மேன் பட்டுப் புடவை அட்டை பெட்டிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி கொண்டு வருவாரே..அது போல ப்ரெட் ஸ்லைஸ்களை ப்ளேட்டில் அடுக்கி எடுத்து வந்தோம்.
டேபிளில் ஜாம் இருந்தது. ஸ்பூன் கொண்டு அதை எடுத்து போட்டுக் கொண்டே இருந்தோம். கொஞ்ச நேரத்தில் கார் வந்து விடும். இல்லாவிட்டால் ஜாமக் கோழி கூவும் வரை போட்டுக் கொண்டே இருந்திருப்போம். பிறகு இன்னொரு ப்ரெட் கொண்டு ஜாமை பொத்தினோம்.
முழுக்கை சட்டையை பேண்டில் இன் செய்தவுடன் தொப்பை பிதுங்குமே..அது போல ஜாம் ப்ரெட்டுக்கு வெளியே பிதுங்கியது.
சாப்பிட்டு முடித்து விட்டு கீழே வந்தோம்.
கார் டிரைவர் போன் செய்தார். பத்து நிமிடத்தில் வந்து விடுவதாகவும் உடனே காரில் ஏறி விட வேண்டும் என்றும் கூறினார். ஹோட்டல் வாசலில் கார் நிறுத்தி வைத்திருந்தால் நோ பார்க்கிங் என்று போலீஸ் ஃபைன் போட்டு விடுவார்களாம்.
ஹோட்டல் அறை வாசலுக்கு வந்து நின்றோம்.
காங்க்டாக் 5400 அடி உயரத்தில் இருப்பதால் ஏப்ரல் மாதத்திலும் இதமான குளிர் இருந்தது. நாங்கள் படிக்கட்டில் நின்று கொண்டிருந்ததால் 5401 அடியில் இருந்தோம்.
குழந்தைகள் யூனிபார்ம் போட்டுக் கொண்டு சிக்கிம் மங்கு சிக்கிம் மங்கு சிக்கிம் பாப்பாவாக ஸ்கூலுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். முகம் வெள்ளையாக உருண்டையாக ரவாலாடு மாதிரி இருந்தது. ரவா லாடில் இருக்கும் திராட்சைகள் மாதிரி சிறிய கண்கள்.
பத்து நிமிடத்தில் வெள்ளை இன்னோவா வந்து விட்டது. டிரைவர் சின்ன வயசு ஜாக்கிசான் மாதிரி இருந்தான்.
துவைத்த தலைகாணி உறைக்குள் தலைகாணியை திணிப்பது போல மெதுவாக காரில் ஏறினோம்.
“சீக்கிரம் ஏறுங்க. ஃபைன் போட்டுடுவாங்க” என்றான் ஜூ.ஜா (ஜூனியர் ஜாக்கிசான்)
“தம்பீ.. நீங்க எல்லாம் சின்ன வெங்காயம் மாதிரி இருக்கீங்க. லபக்னு உள்ளே ஏறிடுவீங்க. நாங்க சோனா மசூரி ரைஸ் தின்னு ஒரு சைஸா இருக்கோம். கொஞ்சம் பொறுப்பா. தமிழ்நாட்டுக்கு ஃபைன்லேந்து விலக்கு கோரி லெட்டர் போட்டிருக்கு. பயப்படாதே” என்று கூறி விட்டு தவணை முறையில் பாடியை உள்ளே நுழைத்தோம்.
ஒரு வழியாக கார் புறப்பட்டது.
ஒரு யூ டர்ன் அடித்து மேலே ஏறினான். இடது பக்கம் ஒரு கட்டிடத்தைக் காட்டினான்.
"இது தான் சிக்கிம் அசெம்பிளி. சட்ட சபை" என்றான்.
பழனி தேவஸ்தான சத்திரம் சைஸுக்கு ஒரு சிறிய கட்டிடம் தெரிந்தது. சிக்கிம் உருகுதைய்யா என்று டி.எம்.எஸ்ஸின் பாட்டு மட்டும் கேட்கவில்லை.
சிக்கிம் சட்டசபைக்கு மொத்தம் 32 எம். எல். ஏக்கள் தான். செவன்த் ஸ்டேண்டர்ட் சி செக்ஷன் மாதிரி உள்ளே கொஞ்சமாக பெஞ்ச் போட்டிருக்கும். எல்லா எம்.எல் ஏக்கும் சட்டையைக் கிழிப்பதென்றால் கூட முப்பது செகண்டுகள் போதும்.
சாலைகள் சுத்தமாக இருந்தன. மழை நீர் வடிந்து போவதற்கு ஒரு பக்கத்தில் வடிகால் அமைத்திருக்கிறார்கள். சாலைகளில் ஏற்ற இறக்கம் அதிகம்.
நாங்கள் முதலில் போகப் போவது Tsomgo Lake. லோக்கல் பாஷையில் சங்க்கு ஏரி என்று சொல்கிறார்கள். இந்த ஏரி கடல் மட்டத்திலிருந்து 12313 அடி உயரத்தில் உள்ளது. காங்க்டாக் நகரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தூரம்.
இங்கு போக முன் கூட்டியே பெர்மிட் வாங்க வேண்டும். நம்முடைய ஆதார், பாஸ் போர்ட் சைஸ் போட்டோ அனைத்தையும் முன் கூட்டியே ஏஜண்டுக்கு அனுப்பி விட்டால் பெர்மிட் வாங்கி வைத்து விடுவார்கள்.
வழியில் ஒரு ராணுவ செக் போஸ்ட் உள்ளது. அந்த செக் போஸ்டை காலை பத்து மணிக்குள் கடந்து விட வேண்டும். இல்லாவிட்டால் வாபஸ் தான்.
கொஞ்ச தூரம் பயணித்தவுடன் ராணுவ செக் போஸ்ட் வந்தது. வண்டியை செக் செய்தார்கள்.
ஆதார் அட்டையில் என் முகம் தீவிரவாதி மாதிரி இருக்கவே ஒரு மாதிரி பார்த்தார்கள்.
“எந்த தீவிரவாதி சார் பயணக்கட்டுரை எழுதியிருக்கான்? நான் வெறும் நானா சூனா” என்று மைன்ட் வாய்ஸ் பேசியதை அவர் கேட்டிருக்க வேண்டும். சலோ என்றார்.
ஏரிப் பகுதியில் உறை பனி இருக்கும். குளிரும். சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் என்றார் டிரைவர்.
குளிர் என்றவுடன் தான் பயமாகப் போய் விட்டது. எங்களிடம் இருந்தது சாதாரண ஸ்வெட்டரும் மார்கழி குளிர் எனப்படும் மாயைக்கு கட்டும் மப்ளரும் தான்.
“பயம் வேண்டாம். ஏரிக்கு போகும் வழியில் கம்பளி ஆடைகள் வாடகைக்குக் கிடைக்கும்” என்றார் டிரைவர்.
கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பயணம் செய்ததும் ஒரு கடை வாசலில் நிறுத்தினார் டிரைவர். கம்பளி உடைகள் வாடகைக்குக் கொடுக்கும் இடம்.
ஜெர்கின், Gum boots, கைக்கு கிளவுஸ் என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ரேட். நாமே அலமாரியிலிருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.
கருப்பு கலரில் ஒரு ஜெர்கின் எடுத்துக் கொண்டேன். கெட்டியாக கிளவுஸ். கணுக்கால் வரை வரும் பூட்ஸ். போர் வெல் பொந்துமாதிரி இருந்தது அந்த பூட்ஸ். செமி ஸ்லீப்பர் மாதிரி படுத்துக் கொண்டு தான் அதற்குள் காலை நுழைக்க முடிந்தது.
எல்லா உடையும் அணிந்து கொண்ட பிறகு காற்றடைத்த Lays chips pocket மாதிரி உப்பலாக இருந்தோம்.
கார் நகர்ந்தது. மலைச் சிகரங்கள் தெரிந்தன. என் கடன் பனி செய்து கிடப்பதே என மலை ஐஸை உற்பத்தி செய்து கொண்டிருந்தது. பார்த்தாலே ரம்மியமாக இருந்தது.
ஏரிப் பகுதியை அடைந்து வண்டியை பார்க் செய்தார். வண்டி நம்பரையும் டிரைவரையும் போட்டோ எடுத்துக் கொண்டேன். அவர் என்னை போட்டோ எடுத்துக் கொள்ளவில்லை.
ஏரிக்குப் பக்கத்தில் வரிசையாக Yak எனப்படும் காட்டெருமைகள் நின்று கொண்டிருந்தன.
ஆந்திரா பார்டரில் வரிசை கட்டி நிற்கும் லாரிகள் மாதிரி இருந்தன. கொம்புக்கு சிகப்பு வண்ணம் பூசியிருந்தார்கள். எருமைக்கு முதுகு முழுக்க நீளமாக முடி இருந்தது.
காசு கொடுத்தால் அதன் மேல் சவாரி செய்யலாம். சவுரி வைத்த எருமை மேல் சவாரி செய்ய எனக்கு இஷ்டமில்லை. பயம் தான் காரணம்.
ஏரிப் பகுதி மிகவும் அழகாக இருந்தது. ஏரியைச் சுற்றி மலைப் பகுதி. மலை முழுக்க உறை பனி மூடியிருந்தது. ஏரி நீரில் மலையின் பிம்பம் தெரிவது கொள்ளை அழகு. குளிர் காலத்தில் ஏரி நீர் முழுக்க உறைந்து பனியாகி விடும்.
பனிச் சரிவில் ஏறினோம். பிடிமானமே இல்லை. ஜான் ஏறினால் முழங்கால் சறுக்கியது. வேடிக்கையாக இருந்தது. சிலர் வேண்டுமென்றே வழுக்கி விழுந்தார்கள்.
கீழிருந்து ஐஸ் எடுத்து அதை யானைக் கவளம் மாதிரி உருட்டி ஒருவர் மேல் ஒருவர் எறிந்து கொண்டிருந்தார்கள். பல கணவன்மார்கள் ஆக்ரோஷமாக மனைவி முகத்தில் விட்டெறிந்து கொண்டிருந்தார்கள். Life time opportunity அல்லவா?
ஒரு மணி நேரத்துக்கு மேலாக பனியில் விளையாடிக் கொண்டிருந்தோம்.
பிறகு காருக்கு வந்தோம்.
“நாதுல்லா பாஸ் போக முடியாது. வெதர் சரியில்லே. அனுமதியில்லே” என்றான் ஜூ.ஜா.
நாதுல்லா பாஸ் என்பது இன்னும் மேலே போக வேண்டும். 14100 அடி உயரத்தில் இருக்கிறது. குளிர் வாட்டும். ஆக்சிஜன் குறைபாட்டுக்கு 100 சதவீதம் கியாரண்டி உண்டு.
நாதுல்லா பாஸ் சீன எல்லையில் உள்ளது. அங்கிருந்து 14 கிலோ மீட்டர் போனால் சீனா.
நாதுல்லா பாஸில் பாபா ஹர்பஜன் சிங் கோவில் உள்ளது.
இந்த ஹர்பஜன் சிங் ஸ்பின் போலர் அல்ல. கையில் மெஷின் கன் வைத்திருந்த மிலிட்டரி சோல்ஜர்.
1968 ல் தன் 22 வயதில் இந்த பார்டரில் இறந்து விட்டார் ஹர்பஜன் சிங். அதிலிருந்து அவரின் ஆவி அங்கே சுற்றிக் கொண்டிருப்பதாக ஐதீகம்.
அந்த ஆவி தான் ராணுவ வீரர்களை அங்கே காப்பாற்றி வருவதாக நம்புகிறார்கள். எனவே கோவில் கட்டி கும்பிட்டு வருகிறார்கள். சீன வீரர்கள் கூட பாபாவை வணங்கிறார்கள்.
அந்த பயம் இருக்கட்டும். ஆவி ஆர்மின்னா சும்மாவா?
இங்கு போக முடியாதது எங்களுக்கு வருத்தமே.
சங்க்கு ஏரிப் பகுதியின் மேலே கொஞ்சம் ஏறிப் போனால் ரோப் கார் இருக்கிறது. பனிப் பள்ளத்தாக்கு மேல் போகுமாம். 14000 அடி உயரம் வரை போகும்.
நேரமில்லாததால் இங்கும் போக முடியவில்லை.
திரும்பி வரும் வழியில் வாடகைக்கு எடுத்த கம்பளி ஆடைகளைத் திருப்பிக் கொடுத்தோம். ஹோட்டலுக்கு வந்த பிறகு தான் தெரிந்தது நான் க்ளவுசை திருப்பியே கொடுக்கவில்லை என்று. இது திருட்டு அல்ல அன்பர்களே. மறதியால் கிடைத்த வெகுமதி.
திரும்பி வரும் வழியில் சிறிய நீர்வீழ்ச்சி. அதன் முன்னால் நின்று படங்கள் எடுத்துக் கொண்டோம்.
மதியம் இரண்டு மணிக்கு ஹோட்டலுக்குத் திரும்பினோம்.
“உங்கள் ஹோட்டலுக்கு பின் பக்கமாக கீழே இறங்கிப் போனால் எம்.ஜி. ரோட் வரும். அங்கே அகர்வால் என்ற ஹோட்டலில் சவுத் இண்டியன் உணவு கிடைக்கும்” என்றார் டிரைவர்.
எம். ஜி. ரோட்.
அதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும். அடுத்த எபிசோடில் பார்ப்போம்.
(தொடரும்)
No comments:
Post a Comment