Wednesday, October 6, 2021

பாப்பா

 எங்கள் பூர்வீக கிராமம் மாதானம் குறித்த திரு பூவராகவ மூர்த்தி அவர்களின் பதிவு..

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

பாப்பா.

அண்மையில் திருமணம் முடிந்த என் மகன் மருமகள் கூட என் சொந்த ஊருக்கு காரில் போயிருந்தேன். அது என் தந்தை வழியில் எனக்கு சொந்த ஊர். சில நூற்றாண்டுகளுக்கு முன் என் மூதாதையர் கர்நாடக மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்த போது வந்து நிலை கொண்ட கிராமம். அங்கு இருந்த குறு நில மன்னர் அவர்களுக்கு தானமாக கொடுத்ததால் அது மாதானம் என்று பெயர் பெற்றதாக சொல்வார்கள்.

  கண்ணபிரானடி என்று அதற்கு ஒரு பெயர் உண்டு. என் இளமைக் காலம் வரை அங்கு அக்ரஹாரம் என்று சொல்லும் தெருவில் எங்கள் சொந்த வீடு இருந்தது. அப்பாவின் அப்பா பக்கத்து ஊரில் பட்டாமணியாராக இருந்தவர். நிலம் நீச்சு, வில் வண்டி மாடு, கறவை மாடு வைக்கல் போர் வீட்டின் பின் பக்கம் பெரிய தோட்டம் அது அடுத்த தெரு வரைக்கும் நீண்டதாக இருந்த்து. வாசலில் கம்பீரமாக ஒரு வேப்ப மரம் கிளை பரப்பி நிழல் தந்து கொண்டிருந்த்து. வீடு செல்வச் செழிப்போடும் உறவும் நட்பும் வந்த வண்ணமாக இருந்தது.

1946ல் பாட்டி இறந்து விட்டார். தாத்தா 1957ல் இறக்க பிள்ளைகள் கொஞ்சம் வருடம் இருந்து அதன் பிறகு என் பெரியப்பா தாத்தாவின் வேலையை ஏற்றுக்கொண்டு பக்கத்து கிராமத்தில் குடியேறிவிட்டார். கணவனை இழந்த அத்தை தன் குழந்தைகளுடன் அந்த வீட்டில் சில ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். பராமரிக்கத் தவறிய வீடு மூப்படைந்து கொஞ்சம் கொஞ்சமாக சிதல மடைந்தது.

நிலத்தில் போதிய வருவாய் இல்லை பொருளாதார சீர்கேடும் சூழ வாழ்விடம் களையிழந்த்து. அப்பா மாயவரத்தில் பணி நிமித்தம் வந்து விட்டார். பெரியப்பா இருந்த கிராமத்திற்குப் போகும் வழியில் இடிந்த வீட்டை ஒரு முறை பார்த்து விட்டு கிணற்று மேடையில் அமர்ந்து இளநீர் பறித்து குடித்து விட்டுப் போவோம்.

என் பள்ளிப்படிப்பு முடிந்த போது வீடு விற்கப்பட்டது ஊரில் எங்களுக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லாமல் போனதின் வருத்தம் எங்களுக்கு இருந்த்து. 

இருந்தாலும் பக்கத்து ஊரில் பெரியப்பா குடும்பம் இருந்ததால் எங்கள் தொடர்பு முற்றிலுமாக அறுபடவில்லை. எங்கள் தெருவில் இருக்கும் பல குடும்பங்களும் நகரங்களை நோக்கி நகரத் தொடங்க அக்ரஹாரம் முற்றிலுமாக புறக்கணிக் கப்பட்டது. அங்கு இருக்கும் ஒரு வாதிராஜ ஸ்வாமிகள் மடம் ஒரு டிரஸ்ட் இருந்த்தால் ஆண்டுக்கொரு முறை அதில் விழா நடக்கும். ஊருக்குள் நுழையும் வாயிலில் இருக்கும் முத்து மாரியம்மன் கோவில் தீமிதித் திருவிழா மிகச் சிறப்பாக நடக்கும்.

எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு முடியிறக்கும் வழக்கம் உண்டு .கோடை காலத்தில் ஒரு முறை நாங்கள் உறவுகளுடன் அந்த கிராமத்திற்குப் போவோம். இடிந்து போய் யார் வசமான அந்த பாரம்பரிய மிக்க வீட்டின் முன் ஒரு சில கணங்கள் நின்று அந்த நாட்களை நினைக்க கண்ணில் நீர் வரும்.

இந்த முறை என் மருமகளுக்கு எங்கள் அரண்மணை இருந்த இடத்தைக் காட்டி என் நினைவுகளை அவளுடன் பகிர்ந்து கொண்டேன். தெருவில் தெரிந்தவர் யாருமே இல்லை. கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துகொண்டு எதிரில் இருக்கும் பேச்சியம்மன் கோவிலுக்குப் போனோம். எங்களுக்குப் பின்னால் வந்த என் மனைவியிடம் அங்கு நின்ற பெரியவர் ஒருவர் நீங்கள்ளாம் யார் வூடு என்று கேட்டாராம். என் மனைவி பட்டாமணியார் வீடு என்று சொல்லி விட்டு கோவிலுக்குள் வந்து விட்டார்.

புதிதாய் இருந்த குருக்களிடம் அந்த பெரியவர் எங்கள் வீட்டுப் பெருமைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். நாங்கள் வரும்போது அவர் இவங்க வீட்டுக்கு பாப்பா தான் வேலை. மணி, ராமசாமி எல்லாம் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தார்கள் என்று சொன்னது என் காதில் விழுந்தவுடன் எனக்கு அந்த மனித தெய்வங்களின் நினைவு நெஞ்சில் நிழலாடியது.

 அதைத் தொடர்ந்து துவரைப் பருப்பு சாம்பார் சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆச்சு. அவங்க செய்யற ரஸ மண்டிய மறுநாள் தயிர்சாத்த்துக்கு தொட்டுகிட்டா எம்மா நல்லா இருக்கும்? அதெல்லாம் விட அந்த காலத்தில அந்த வீட்டுல எல்லாம் மடி அம்மா புளி மிளகா உப்பு போட்டு பிணைஞ்சு துணியில வடிகட்டி ஒரு கொட்டு ரஸம் வைப்பாங்க அது ருசியே தனிதான் என்று நாக்கு சப்புக் கொண்டார். அவருக்கு என் வயது இருக்கும். அவர் சொன்ன காலம் இந்த தெரு மனிதர்கள் நிறைந்து வாழ்ந்த காலம் ஒரு ஐம்பது அறுபது வருட்த்திற்கு முன் கதை. 

அவர் அம்மாவோ பாட்டியோ அந்த வீட்டில் வேலை செய்திருப்பார்கள். இவர் என்னை மாதிரி ஒரு பையனாக டிராயர் போட்டு அருணாகுடி பெல்ட் போட்டு வீட்டுக்கு வந்து சாம்பாரையும் சாத்த்தையும் ரஸத்தையும் வீட்டுக்கு கொண்டு போயிருப்பார். 

என் மனிதர்கள் இப்போது இல்லை, என் வீடு இல்லை என் தெரு இல்லை யாரோ ஒருவர் அந்த சாம்ராஜ்யத்தின் பெருமை சொல்கிறார். அவருக்கு ஒரு ஐம்பது ரூபாய் கொடுத்துவிட்டு நன்றியோடு நகர்ந்தேன்.

அது ஒரு பொற்காலம்தான். நான் பதிலுக்கு அவருக்கு நீங்க யார் வீட்டில் வேலை பார்த்த குடும்பம் என்றேன். நாங்க பீமண்ணய்யா வீட்டு வேலை என்றார்.முந்தய தலைமுறையின் வச்ந்த காலத்தின் இறுதியில் என் குழந்தைப் பருவம் இருந்த பெருமை எனக்கு உண்டு.

அதனால் அந்த தலைமுறையின் பெயர்கள் எனக்குப் பரிச்சியமானவை. கார் சென்னையை நோக்கி பயணத்தைத் தொடர்ந்த்து. என் மனமோ கிராமத்தை விட்டு வர மறுத்தது.  பாப்பா சில வருடங்களுக்கு முன் கூட அவள் விட்டில் நடுங்கும் குரலில் மூர்த்தி வா எப்ப வந்தப்பா? நல்லா இருக்கியா ? சந்திராவெல்லாம் நல்லா யிருக்கா ? இந்திரா அம்மா எப்படி இருக்கு என்று நலம் விசாரிப்பாள். எங்கள் வீட்டு கல்யாணத்திற்கெல்லாம் ஒரு வாரம் முன்பே மாயவரம் வந்து விடுவாள். போகும்போது ரயில் சார்ஜ்ஜும் புடவையும் கொடுத்து அனுப்புவோம். 

அவள் என்னைத் தொட்டுத் தூக்கியவள். சின்ன வயதில் எனக்கு குளிப்பாட்டி விட்டவள். மலம் கழுவி விட்டவள். தூளியில் ஆட்டியும் தோளில் சுமந்தும் தூங்க வைத்தவள். உறவுகளற்றும் எப்படி எதிர் பார்ப்பில்லாத அன்பைப் பொழிவது என்பதை எனக்கு உணர்ந்தியவள்.

நான் பார்த்த நாட்களிலிருந்தே பாப்பா முதுமையில்தான் காட்சி தந்தாள் ரவிக்கை போடாத சேலை கட்டிய உருவம். தலையில் கோடாலிக் கொண்டை. முத்துப் போன்ற பற்கள். பாத்திரம் தேய்த்தும். நெல்லிடுத்தும் பெரிய வீட்டை பெருக்கியும் மொழிகியும் வஜ்ஜிரமாக போன உடம்பும்.கொண்டவள். ஆனால் அவள் கைகளின் அரவணைப்பு மட்டும் இன்னும் என் மனதில் மறையாமல் இருந்து கொண்டிருக்கும். 

கோடை விடுமுறைக்கு நாங்கள் அந்த ஊருக்குள் வர எங்கள் வீட்டு வண்டியை அவள் தம்பி ராமசாமியோ மணியோ ஓட்டி வருவார்கள். நான்கைந்து மைலில் இருக்கும் திருமைலாடியில் நின்று எங்களை இறக்கிவிட்டுப் போகும் ரயிலுக்கு கைகாட்டிக் கொண்டிருக்கும்போது எங்கள் பக்கத்தில் மணி வந்து முண்டாசை அவிழ்த்து துண்டை தோளில் போட்டுக் கொண்டு நிற்பார்கள். அப்பாவிடமிருந்து பெட்டியை வாங்கிக் கொண்டு வண்டியை நோக்கி நடப்பார்கள்.

ஸ்டேஷன் முடியும் இடத்தில்  கேட் இருக்கும் கப்பி சாலையில் மர நிழலில் வண்டி பூட்டு அவிழ்த்து போடப்பட்டிருக்கும். மாடு மரத்தடியில் வைக்கல் சாப்பிட்டுக்கொண்டிருக்கும். 

அம்மா எங்களை எல்லாம் ரோட்டைத் தாண்டிய வாய்க்கால் கரைக்கு அழைத்துப் போவாள். தொட்டாற்சுருங்கியை தொட்டு அது இலைகளை மூடிக்கொள்ளும் அழகை ரஸித்துக் கொண்டிருப்போம். அம்மா வீட்டிலிருந்து கொண்டு வந்த பூனைபோல் மெத்தென்று இருக்கும் வெள்ளை தோசையை பக்கத்தில் இருக்கும் பேத்தி இலையை கழுவி அதில் வைத்துக் கொடுப்பாள். அது அதிகாலையில் வார்த்து மிளகாய்ப் பொடி தடவி வெள்ளையும் சிவப்புமாய் பச்சை இலையில் அமர்ந்து கொண்டிருக்கும். முழங்கால் அளவு நீரில் நின்று அதை ருசியோடு சாப்பிட்டு காலில் சுற்றும் மீன்களுக்கும் கொடுப்போம். 

அம்மா மணிக்கும் கொடுப்பாள். அவன் இருக்கட்டும்மா என்று கொஞ்சம் மறுத்துவிட்டு பிறகு வாங்கி தூர நின்று சாப்பிட்டு மாடுகளை இழுத்து வந்து நுகத்தடியில் பூட்டுவான். வண்டி உள்ளே சாக்கு மூட்டையில் வைக்கல் பரப்பி மெத்தை அதன் மேல் ஜமுக்காளம் போடப்பட்டிருக்கும். அம்மா அப்பா நாங்கள் குழந்தைகள் ஏறிக்கொண்டவுடன் பின் பக்கம் இருக்கும் கம்பியைப் பொருத்துவான். 

முண்டாசை கட்டி முன் பக்கம் ஒரு பலகை சீட்டில் உட்கார்ந்து மாடுகளின் பூட்டாங்கயிறை ஒரு கையில் பிடித்துக் கொண்டு மற்றொரு கையில் ஒரு மூங்கில் குச்சியில் முனையில் ஒரு தார்க்குச்சியும் அதற்கு மேல் ஒரு சாட்டையும் இருக்கும். 

வார்த்தைளற்ற மொழியில் மாடுகளை விரட்டும் அழகே தனி. நாக்கை மடக்கி ஒரு குரல் எழுப்புவான். தே தே என்பான். இப்ப இழுக்கப் போறேன் பாரு, போங்கறேன் என்று அதோடு பேசிக்கொண்டு நாங்கள் கேட்ட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்லுவான். 

ஊர் நடப்புகளையும், வீட்டை விற்றுவிட்டுப் போனவர்களைப் பற்றியும் விளைச்சல் பற்றியும் வீட்டில் வந்திருக்கும் விருந்து பற்றியும் மாங்காய் காய்ப்பு பற்றியும் மாடு கன்னு போட்ட்தையும். கிடேரியை விற்று விட்ட்தையும் நாங்கள் வீட்டுக்கு வருவதற்கு முன் எங்களுக்குத் தெரிவித்து விடுவான். தெரு முனை திரும்பும் போது மாடு கழுத்துப் பட்டை சலங்கை சத்தம் ஒலிக்க வேகமாக விரட்டாமலேயே ஓடும். பெரியப்பா குழந்தைகள் பாப்பா எல்லோரும் எங்களை வரவேற்கத் தயாராகியிருப்பார்கள். 

வண்டி உயரத்திலிருந்து குதிக்க நினைக்கும் எங்களை இறக்கி விடுவாள் பாப்பா. ஆயி வா என்று அன்பொழுக அம்மாவை வரவேற்பாள்.

வெய்யில் ஏறியிருக்கும் நாங்கள் வந்த பொழுதில் வீட்டில் இருப்பவர்கள் கூப்பிடுவதையும் பொருட்படுத்தாமல் கொல்லைப் பக்கம் ஓடுவோம். கிணற்றில் வாளியில் இறைத்த நீரைக் கொண்டு கைகால் கழுவி கிணற்றில் எங்களுக்காக மிதக்கும் இளநீர் மேலே வர மணி அதை சீவிக் கொடுக்க பாத்திரத்தில ஊத்தி தரேன் கொண்டா என்று கெஞ்சும் பாப்பாவை சட்டை செய்யாமல் பெரியவர்கள் மாதிரி குடிக்க நினைத்து வாயில் கொஞ்சமும் மேலே நிறையவும் வழியவிட்டு குடிப்போம்.

மத்யானம் சாப்பாடு மாலை வாசல் வேப்ப மரத்தில் வைக்கல் பிரியில் தொங்கும் ஊஞ்சலில் விளையாட்டு. பூவரச இலை சுருட்டு ஊதல், ஊமத்தங்காய் தூக்கிப் போட்டு புறங்கையில் ரத்தப் புள்ளிகள், பாண்டி என்று கொண்டாட்டம்தான். இரவு படுக்கும் வரைக்கும் பாப்பாவின் கண்காப்பில் தான் இருப்போம். போனதடவை பார்த்த்துக்கு இப்ப நல்லா வளர்ந்துட்டுது என்பாள். மருதாணி அரைத்துக் கொண்டு தருவாள். குளிப்பாட்டுவாள். எண்ணெய் தேய்த்து விடுவாள். சீயக்காய் பொடியை குழைத்து தலையில் தேய்த்து வெந்நீர் அண்டாவிலிருந்து சொம்பில் சுடச் சுட தண்ணீர் விடுவாள். அம்மா அம்மா என்று கத்தி ரகளை பண்ணுவோம். . அதை லட்சியம் பண்ணாமல் தேய்த்து துடைத்து விடுவாள். 

மாவடு, கொடுக்காபுளி காய் அரநெல்லிக்கா கொண்டு வது கொடுப்பாள். பனை ஓலையில் காத்தாடி பண்ணி ஆடாதொடை குச்சியில் கருவேல் முள் குத்தி கையில் கொடுப்பாள். அதை பிடித்துக் கொண்டு ஓடும் போது அது ஃபேன் மாதிரி சுத்துவது வேடிக்கையாக இருக்கும். பண்ம் விதை கதிர் சுட்டு உமியோடு சேர்த்து கார்த்திகை தீபத்திற்கு ஒரு சுழற்றும் பண்ணித் தருவாள்.

வீட்டுக்குத்தெரியாமல் பாப்பா வீட்டில்  இட்லியும் பூண்டு சட்னியும் சாப்பிடுவோம். கூழ் குடிப்போம். ஆட்டுக்குட்டியும் கோழியையும் துரத்துவோம். மாட்டுக்கு  வைக்கல் போடுவோம். தீனி போடுவோம். 

பாப்பா கதை சொல்லு என்போம். நான் என்னத்தை கதையை கண்டேன் கண்ணை மூடிகிட்டுப் படு என்பாள். வேணில் கட்டிகளுக்கு நுங்கு தடவி விடுவாள். மண்ணில் விளையாடி வரும் சிரங்குகளை நல்லா தேயு என்று தேய்த்து விடுவாள். சுளுக்குக்கு விளக்கெண்ணெய் தடவி நீவி விடுவாள். மாந்த்த்துக்கு வேப்ப எண்ணெய் விலாவில் தேய்ப்பாள். உரமெடுப்பாள். 

விடுமுறை முடிந்து புறப்படும்போது பாப்பாவுக்கு அம்மா ஒரு பழைய புடவையும்,அப்பா ரூபாயும் குடுப்பார். இருக்கட்டும் என்று சொல்லி வாங்க மறுப்பாள். வாங்கிக்க என்று அதட்டி அம்மா கொடுப்பாள். 

 நாங்கள் பாப்பாவிடம் போய் அவளைக் கட்டிக் கொண்டு பாப்பா போயிட்டு வரோம் என்போம். அவள் எங்களை வாரியெடுத்து போயிட்டு வா என் ராசா என்பாள் கன்னத்தை தடவி கையில் நெட்டி முறிப்பாள். எம்மா திருஷ்டி என்பாள். வண்டி மறையும் வரை வாசலில் நின்று கை காட்டிக் கொண்டிருப்பாள்..

பாப்பா மறைந்த செய்தி எனக்கு தாமதமாகத்தான் தெரிந்த்து. கடைசியில் அவள் முகம் பார்க்க வில்லை. அடுத்த முறை போகும்போது அவர்கள் வீட்டில் போய் துக்கம் கேட்டேன். இந்த இழப்பு என்னை ரொம்ப பாதித்தது.

காலம் கடந்து நான் வாழ்ந்த இடத்திற்கு தூரம் கடந்து  போனேன். அந்த பெரியவரின் வார்த்தைகள் என்னை அந்த நாட்களுக்கு அழைத்துப் போனது. நினைவுகளின் சுகமே சுகம்தான்.

அன்புடன்

மாதவ.பூவராக மூர்த்தி

No comments:

Post a Comment