Thursday, October 7, 2021

கால் போன போக்கிலே சார்தாம் 24

 🥀🥀🥀🥀சார்தாம் 🌻🌻🌻🌻

#சார்தாம் 24

கால் போன போக்கிலே

நந்து சுந்து

24.  மீண்டும் வந்த வழியே   

காலையில் எல்லோரும் சீவி முடித்து சிங்காரித்திருந்தார்கள். குதிரை சவாரியின்  கனைப்பு நீங்கி....மன்னிக்கவும் களைப்பு நீங்கி இருந்தார்கள். இந்த தொடரில் குதிரைக்கு செகண்ட் ஹீரோ அந்தஸ்த்து கொடுத்து விட்டேன். அது அதிகம் தான். இனிமேல் குதிரைக்கு திரை போட்டு விடுவோம். 

குளிருக்கு சூடான காபி கிடைத்தது. வாயருகே கொண்டு போவதற்குள் ஆறிப் போனது. ஹிண்டு  பேப்பர் படித்துக் கொண்டே அரை மணி நேரம் காபி குடிப்பது இங்கு சாத்தியமாகாது. அடுப்பிலிருந்து எடுத்தவுடன் இன்ஸ்டண்ட் காபியாக குடிக்க வேண்டும்.

காபி குடித்தவுடன் பஸ் புறப்பட்டது என்று நினைக்க வேண்டாம். எல்லோரும் டம்ளர் கழுவியவுடன் புறப்பட்டது..

 திருப்பி வந்த வழியிலேயே பஸ் போக வேண்டும். மறுபடியும் ருத்ர பிரயாகை போக வேண்டும். அதன் பிறகு தான் ரோடு பிரிகிறது. அதே குப்த காசி, குண்ட் சட்டி, அகஸ்திமுனி, தில்வாரா வழியாக ருத்ர பிரயாகை. 

இந்த இரண்டு நாட்களில் ஒன்றும் மாறி விடவில்லை. இந்த ஊர்கள் எல்லாம் அதற்குள் ஸ்மார்ட் சிடி ஆகி விடவில்லை. போக்குவரத்து மட்டும் சிறிதளவு குறைந்திருந்தது. மழை முற்றிலுமாக நின்று வானம் உஜாலாவுக்கு மாறியிருந்தது.

ஆங்கிலப் படம் போனால் கூட கூடவே வரும் மனைவி போல மந்தாகினி நதி கூடவே வந்து கொண்டிருந்தது. மிகவும் கடினமான கேதார் விஜயம் முடிந்து விட்டதால் மனம் அமைதியாக இருந்தது. மந்தாகினியை நன்றாக ரசிக்க முடிந்தது. மந்தாகினி அதல பாதாளத்தில் பைனாகுலருக்கு மட்டுமே காட்சி அளித்துக் கொண்டிருந்தது.

மறுபடியும் ருத்ர பிரயாகை வந்தது. இப்போது சங்கமத்தை நன்றாகப் பார்க்க முடிந்தது. ஊர் கொஞ்சம் பிசியாக இருந்தது. கேதார் பத்ரி சாலைகள் இங்கு பிரிவதால் டூரிஸ்ட் வண்டிகள் அதிகம் இருந்தன. சாலை ஓரத்தில் குத்துகால் இட்டு  யாத்திரீகர்கள் உட்கார்ந்திருந்தார்கள். காது குடைந்து விட்டு அப்படியே சப்பாத்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

இப்போது ஒரு வாழ்த்து மடல் பாடி மந்தாகினியை  பிரிந்து விடுவோம். இனி நம்முடன் பத்ரி வரை வரப் போவது அலக்நந்தா நதி. 

இதன் பிறகு பத்ரி போகும் வழியில் இன்னும் மூன்று பிரயாகைகள் வரும் என்று எனக்குத் தெரியும். பரிட்சைக்குப் படிப்பது போல படித்து விட்டுப் போயிருந்தேன். 

பஸ் போகும் போது கையில் மேப் வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஊர் பேராக டிக் அடித்துக் கொண்டே வந்தேன்.

ருத்ர பிரயாகை தாண்டி 20 கிலோ மீட்டரில் கவுச்சார் என்னும் ஊர் வந்தது. இங்கு ஒன்றும் இல்லை. என் மேப் அறிவைக் காட்டுவதற்காக உங்களுக்கு சொல்ல வேண்டியதாகி விட்டது.

இங்கிருந்து 12 கிலோ மீட்டர் போனவுடன் கர்ணப் பிரயாகை என்னும் ஊர் வந்தது. இதைப் பற்றி சொல்ல என்னிடம் கொஞ்சம் சரக்கு இருக்கிறது. இங்கு அலக்நந்தா நதியும் கர்ணா நதியும் சங்கமிக்கின்றன என்று நினைத்தால் நீங்கள் பெயில். அலக்நந்தா நதியும் பிண்டாரி நதியும் சங்கமிக்கும் இடம் இது. கர்ணனுக்கும் இந்த ஊருக்கும் என்ன சம்பந்தம்? கர்ணன் பட ஷூட்டிங் இங்கு தான் நடந்தது என்று சொல்லி மாமிகளை ஏமாற்றலாம். உங்களை ஏமாற்ற முடியாது.

கர்ணன் இங்கு  தவம் செய்து யாரலும் உடைக்க முடியாத கேடயத்தை பெற்றான் என்று கூறுகிறார்கள். சுவாமி விவேகாநந்தர் பதினெட்டு நாட்கள் இங்கு தியானம் செய்தாராம். நானும் பதினெட்டு செகண்ட் கண்ணை மூடி தியானம் செய்தேன்.

 இங்கு கர்ணனுக்கும் உமா தேவிக்கும் கோவில்கள் உள்ளன. நேரம் பற்றாமை காரணமாக இங்கெல்லாம் போக முடியவில்லை.

இன்னும் 21 கிலோ மீட்டர் போனால் அடுத்த பிரயாகை வருகிறது. நந்தப் பிரயாகை. இங்கு அலக்நந்தாவுடன் சங்கமிக்கும் நதியின் பெயர் நந்தாகினி. மந்தாகினிக்கு ஒன்று விட்ட தங்கை மாதிரி. குழந்தைக்கு அழகான பேர் வைக்க விரும்புபவர்கள் இந்த பெயர் எல்லாம் குறித்து வைத்துக் கொள்ளலாம். நந்தா மலை சிகரத்திலிருந்து உருகும் பனி இந்த நதியில் வெண்மையாக ஒடி வருகிறது. 

கிருஷ்ண  பரமாத்மாவின் வளர்ப்புத் தந்தை நந்தா நினைவாக இந்த ஊருக்கு இந்த பெயர் வைக்கப் பட்டுள்ளது. இங்கு ஒரு பிரசித்தி பெற்ற கோபால்ஜி ஆலயம் உள்ளது.

ஆதி காலத்தில் யது சாம்ராஜ்யத்தின் தலை நகராக இந்த இடம் இருந்ததாம். இங்கு மன்னர் நந்தா ஒரு மாபெரும் யாகம் நடத்தியுள்ளார்.

அடுத்து வர வேண்டியது விஷ்ணுப் பிரயாகை.  இது இடை வேளைக்கு மேல் அநியாய விலையில் பாப் கார்ன் சாப்பிட்ட பிறகு தான் வரும். அதைப் பார்க்க வேண்டுமானால் ஜோஷிமட் தாண்ட வேண்டும். எனவே இப்போதைக்கு விஷ்ணுப் பிராயாகையை வெயிட்டிங் லிஸ்டில் வைப்போம்.

நடுவில் வழியில் டிபன் காபி மதிய உணவு எல்லாம் இனிதே அரங்கேறின. பஸ்ஸில் கடைசி சீட் முழுக்க சமையல் குழுவுக்கு. பஸ் பயணம் இருக்கும் போது அதிகாலை எழுந்து சமைத்து  பெருமாள் கோவில் தளிகை மாதிரி துணி போட்டு மூடி பஸ்ஸில் லோடு செய்து விடுவார்கள். 

என் மாதிரி சில ஆட்களுக்கு மட்டும் உள்ளே என்ன இருக்கிறது என்று வினாத்தாள் அவுட் ஆகி விடும். 

போகும் வழியில் சாப்பிடுவதற்கு தோதான இடம் எது என்று அவர்களுக்கு தெரியும். இளைப்பாற இடம் இருக்க வேண்டும். தண்ணீர் வசதியும் இருக்க வேண்டும். ஏதாவது தாபா அல்லது பெட்ரோல் பங்க் போன்ற இடங்களை இதற்காக ‌ஷார்ட் லிஸ்ட் செய்து வைத்திருப்பார்கள். பண்ட மாற்று முறையில் அவர்களுக்கு புளியோதரைப் பண்டம் கொடுத்து விட்டு வேறு வகையில் கவனித்து விட்டாலும் போதும். 

அடுத்து சமோலி என்னும் ஊர் வந்தது. இது ஒரு மாவட்ட தலைநகர். உத்தர்காண்ட் மாநிலத்தில் சமோலி இரண்டாவது பெரிய மாவட்டம். இந்த பகுதிக்கு வேத காலத்துடன் தொடர்பு இருக்கிறது. ஹிந்தி தவிர இங்கு கார்வாலி மொழியும் பேசப் படுகிறது. சமஸ்க்ரித மொழிக்கும் கார்வாலி மொழிக்கும் நிறைய பொதுவான வார்த்தைகள் உள்ளன.

இந்த ஊரிலும் டூரிஸ்ட் கூட்டம் அதிகம். 2003 ம் வருடம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் அதிகமாக பாதிக்கப் பட்டு யூ ட்யூப் வீடியோவில் அதிக ஹிட் கொடுத்தது இந்த மாவட்டம் தான்.

இன்னும் 17 கிலோ மீட்டர் போனவுடன் பிபால் கோடி என்ற ஒரு அழகான சிறிய ஊர் வந்தது. அதற்குள் மாலை ஆகி விட்டது. இங்கு தான் எங்களுக்கு தங்கும் இடம் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

 அலக்நந்தா நதி ஓரத்திலேயே லாட்ஜ். சுற்றிலும் தங்கும் அறைகள். மத்தியில் ஒரு அழகான இடம். 

உடம்பு வலி தீர அங்கு போய் அமர்ந்ததும் சொர்க்கம் போல இருந்தது.

காற்று ஜில்லென்று வீசிக் கொண்டிருந்தது. எதிரே இருந்த மாமி எம்.எஸ். சுப்புலட்சுமி மாதிரி வைரத்  தோடு போட்டிருந்தார். அதே மாதிரி நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்திருந்தார். காற்றினிலே வரும் கீதம் என்று பலமாக பாட ஆரம்பித்தார்.

காற்று பக்கத்து லாட்ஜுக்குப் போய் விட்டது.

                               (பயணம் தொடரும்)





No comments:

Post a Comment