🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நவராத்திரி
நவராத்திரி என்றாலுமே அந்த காலத்து மலரும் நினைவுகள் தான்.ஐம்பது வருடங்கள் முன்பு சிதம்பரத்தில் அம்மா, அப்பா, அக்கா,அண்ணாவுடன்
கொலு வைக்கும் வைபவத்தில் அடித்த அலப்பறைகள் அலை அலையாக நினைவில் வந்து முட்டுகிறது.
எங்கள் வீடு ஓட்டு வீடு. இருக்கிற ஒரு ரூமில் பாதிக்கு ப்ளைவுட்டால் *ஃபால்ஸ் ஸீலிங் அடித்து*அதற்கு ஒரு வாசல் வைத்து பரண் கட்டியிருப்பார்கள்.அந்த பரணில்தான் கொலு பொம்மைகள் பெரிய மரப்பெட்டியில் துணி சுற்றப்பட்டு தூங்கி கொண்டிருக்கும்.
பீரோ மேல் ஸ்டூல் போட்டு ஏறி சிறிய மூடியை நகர்த்தி ஒரு ஆள் மட்டும் நுழைய முடியும் பொந்தில் கை வைத்து ஜம்ப் அடித்து பரணுக்குள் ஏற வேண்டும்.என்னை ஏற்ற மாட்டார்கள்.நான் ரொம்ப ஆசைப்பட்டதால் ஓரிரு முறை ஏறியிருக்கிறேன்.
பழகி புளித்துப்போன வீட்டில் அது ஒரு மாய லோகமாக இருக்கும்.ஓடு வழியே இறங்கிய தெருப்புழுதியின் மணம் சுவாசத்தில் நிறைய பழைய ட்ரங்க் பெட்டிகளை திறந்து புத்தக புதையல்களையோ,அரிதான தாத்தா காலத்து கடிதங்களையோ தேடுவோம். ஒரு கொள்ளு தாத்தாவின் எதோ பாஷ்யம் எழுதியதாக அப்பா சொல்லும் சுவடி கூட...
ஏறி பொம்மைகளை கை மாற்றி கீழே இறக்கும் போது கீழே நின்று பத்திரமாக வாங்கி வைக்கும் ட்யூட்டி தான் பெரும்பாலும் எனக்கு.
பொம்மைகளை எடுப்பதற்கு முன்பாக படி கட்டும் வைபவம்.வீட்டில் உள்ள பெஞ்சுகளும் மேஜைகளும் பலகைகளும் வைத்து படி கட்டும்போது நிறைய டிஸ்கஷன் நடக்கும்.
எல்லோரும் சிவில் என்ஜினியர்கள் போல் ஆகி விடுவார்கள். Building strong but basement weak என்று ஆகிவிட்டால்?
ஆரம்பத்தில் அம்மாவின் ஃப்ரெண்ட் ,பட்டு மாமி சூப்பர் விஷனில் படி ஆடாமலிருக்க வரட்டிகளை முட்டுக்கொடுத்ததனால் அம்மாவுக்கு அச்சோன்யமாகி
மாமி இல்லாமல் பழைய புத்தகங்கள் நாவல்களை வைத்து கட்ட தெரிந்து கொண்டாள். ஏகாலி வெளுத்து வந்த அப்பாவின் வேஷ்டியை பதமாக போர்த்தி விட்டால் பக்கா படி ரெடி.
ஆனால் நவராத்திரி லீவில் படிக்கு அடியில் மாட்டிக்கொண்ட அந்த குறிப்பிட்ட நாவலோ அல்லது பாட புத்தகமோ கரெக்டா எங்களுக்கு தேவைப்படும். அம்மாவுக்கு தெரியாமல் படியை கலைக்காமல் அதை எடுக்க ப்ரம்ம ப்ரயத்தனம் செய்வோம்.
ஒரு வழியாக படி கட்டும் படலமும் பொம்மைகளை இறக்கும் படலமும் முடிந்து ஒவ்வோரு பொம்மையை சுற்றிய துணியை அவிழ்க்க அவிழ்க்க, பெருமாளும் லக்ஷ்மியும், பாம்பும் , கண்ணனும், ராமனும், சீதையும், செட்டியாரும் , கல்யாண பெண், மாப்பிள்ளையும் ஒவ்வொருவராய் வண்ணமயமாய் வெளிப்படுவது கண்கொள்ளா காட்சியாய் இருக்கும்.
துணி குவியல்களை சுத்தம் செய்து பொம்மைகள் துடைத்து, படிகளுக்கு துணி போட்டு ஒவ்வொரு பொம்மையாய் , ஜாக்கிரதை
ஜாக்கிரதை என்ற அலப்பறைகளோடு ஒரு வழியாய் வைத்தால் கொலு ரெடி. அப்பாடா என்றிருக்கும்.
பொம்மைகளில் சிலது எனக்கு ரொம்ப பிடிக்கும்.சிலதை பார்க்கவே பயமாய் இருக்கும்.(ஆதிசேஷனில் பெருமாள், கண்ணனை சுற்றி இருக்கும் காளிங்கன், முழித்து பார்க்கும் பெரிய நாய் (இப்பவும் உடையாமல் இருக்கு)போன்றவை) பேபி சரோஜா என்ற பொம்மை(அம்மா காலத்து குழந்தை நட்சத்திரம் ,பத்மா சுப்ரமணியத்தின் சித்தப்பா பெண் போன 2019 ,14 அக்டோபர் நவராத்திரி சமயம் 89 வயதில் காலமானபோது எங்கள் அகத்து நவராத்திரி கொலுவில் இன்னும் பேபி ஆக...)
அடுத்து குளம் பார்க் என போட்டி போட்டு வைப்போம். கேட் அகத்து மாமி கொலுவில் ஒரு ஆட்டோ மேட்டிக் ட்ரெய்ன் போவது எங்களுக்கு பெரிய ஆச்சர்யம்
அதற்கு பிறகு அம்மாவின் சுவையான சுண்டல் , கொலுவுக்கு கூப்பிட குங்குமம்
எடுத்து போகும் கடமையை (அக்கா நைசாய் என் தலையில் கட்டி விடுவாள்) செய்வது, கொலுவுக்கு பாடுபவர்கள் (யார் என்ன பாட்டு பாடுவார்கள் என்று நமக்கு அவர்களை பார்த்த உடனேயே தெரிந்து விடும்)
பேபி சாஸ்திரி ஆத்து பானா(பானுவின் நீட்டல்)அலை பாயுதே என நீட்டி முழக்கி சங்கீத கச்சேரி செய்வாள். வருகின்ற குட்டீஸ்களிடமிருந்து கொலு பொம்மை அபேஸ் ஆகாமல் இருக்க கண் கொத்தி பாம்பாய் பார்க்க வேண்டும். அப்படியும் ஒரு தடவை வெண்கல பல்லி மிஸ்ஸிங்.
இதெல்லாம் ஒன்பது நாளும் தொடரும் நிகழ்ச்சிகள்.மாமி சுண்டல் என்று வீடு வீடாக சுண்டல் கலெக்ஷன் பசங்களின் ராவடிகளை சமாளிக்க பொறி,கடலை வாங்கி வைப்போம். நாங்களும் கூப்பிட்டவர்கள் வீடுகளில் வாங்கி வரும் சுண்டல்களின் சுவை விமர்சனங்களில் ஈடுபடுவோம். வெள்ளிக்கிழமை புட்டு மற்றும் சனிக்கிழமை சுவாமி விளக்கு மாவு. மற்ற நாட்களில் ஏழுவித சுண்டல் ஐந்து மணியிலிருந்து பரபரப்பாக வந்தவர்களை கவனித்து அவர்கள் வீடுகளுக்கு சென்று வந்த பின் அவசரமாக சாப்பிட்டு பெருமாள் தாயார் மாலை மாற்றல் சேவிக்க விரைவோம்..
அந்த மாமா பெருமாள் மாலையை தட்டில் வைத்து தட்டை தன் வழுக்கைத்தலையில் வைத்து விழாமல் தாயாரை நோக்கி நிதானமாக நடப்பது பெரிய ஆச்சரியமாக இருக்கும் ராதாக்ருஷணனின் நாதஸ்வரம் மேளம் கேட்டவாறே அதை கவனிப்போம்.
இதெல்லாம் ஒன்பது நாளும் தொடரும் நிகழ்ச்சிகள்.
நவராத்திரி முடிந்தவுடன் மறுபடி பொம்மைகளை பரணில் ஏற்றுவது, படிகளை கலைத்து அதன் அதன் இடங்களில் போடுவது இதெல்லாம் மெக்கானிக்களாக நடக்கும்.மனதில் ஒரு வெறுமை இருக்கும்.
இப்போது கொலு கான்செப்டே மாறி விட்டது. யாரும் ரொம்ப கஷ்டப்படுவதில்லை. குழந்தைப்பருவத்தில் நாங்கள் வைத்த கொலுவின்அழகும், சுவாரசியமும் இப்போது இருக்கும் குழந்தைகளுக்கு இருக்குமா என்று தெரியவில்லை.
மலரும் நினைவுகளாக சகோதரி கௌசல்யா கேசவராஜ் ,பகிர உடன் வெங்கடேசன் வரதராஜன்
படம் பேபி சரோஜா 1)குழந்தையாக,2)முதுமையில்
3)எங்கள் வீட்டு 100 வயது நாய் பொம்மையுடன்..க்ருஷணர் வேடத்தில்
No comments:
Post a Comment