🥀🥀🥀🥀சார்தாம் 🌻🌻🌻🌻
#சார்தாம் 23
கால் போன போக்கிலே..
நந்து சுந்து
23. ராம் பூர் திரும்பினோம்.
இருட்டிக் கொண்டிருந்தது. மலைக்கு நடந்து போன இரண்டு பேரைக் காணவில்லை. எல்லோரும் திரும்பி வந்தால் தான் போக முடியும் என்று சரவணன் சொல்லி விட்டார்.
'யார் காணாமல் போயிருப்பார்கள்?’ – எனக்கு சிதம்பரம் காரர் நினைவுக்கு வந்தார். கண்டிப்பாக அவர் காணாமல் போயிருக்க மாட்டார். ஏனென்றால் அவர் மலை ஏறியே இருக்க மாட்டார் என்று எனக்குத் தெரியும். கீழேயே தூங்கிக் கொண்டிருப்பார்.
நான் நினத்தது சரி தான். ஒருபடிக்கட்டில் அவர் கண்களை மூடி அமர்ந்திருந்தார். “சார் மலை ஏறல்லியா?’ என்று கேட்டேன். சரவணனுக்கு கோபம் வந்து விட்டது. “சார், என்ன இப்படி கேக்கறீங்க? அவர் நடந்தே போய் எல்லாருக்கும் முன்னால திரும்பி வந்துட்டாரு தெரியுமா?"
என்னால் நம்ப முடியவில்லை. ரிப்பீட்டு என்று கேட்டேன்.
சிதம்பரகாரர் கண்ணைத் திறந்தார். “ஆமாம் சார். நடந்து போய் வந்துட்டேன்..நம்பல்லேன்ன கோவில் முன்னால எடுத்த போட்டோ காட்டறேன்” என்று காமிராவை எடுத்தார்.
சிதம்பரம் நடராஜரை கும்பிட வேண்டும் போல இருந்தது. “சார். இந்த கைய காலா நினைச்சு என்னை மன்னிச்சுடுங்க..” என்று கைகளால் பிடித்துக் கொண்டேன்..
“என் கால் தான் சார் அது ...” என்றார் அவர்.
இந்த தொடரில் இனிமேற்கொண்டு அவரை கலாய்த்தால் என்னுடைய ஸ்மார்ட் போன் சுக்கு நூறாக உடைந்து விடும் என்பதால் அவரை கலாய்ப்பது இத்துடன் நிறுத்தப்படும். அவருக்கு பதிலாக வேறு ஒரு நபரை தேடிய போது எம்.எஸ்.சுப்புலட்சுமியாக தன்னை பாவித்துக் கொண்டிருந்த ஒரு மாமி மாட்டினார். இனி அவ்வப்போது அவரது அலட்டல்கள் வரும்.
காணாமல் போன (வயது 62..மாநிறம்..கழுத்தில் தளும்பு இருக்கும்) மனிதர்களைத் தேடி சரவணனின் ஆட்கள் போனார்கள். அரை மணி நேரத்தில் அவர்களை எப்படியோ தூக்கி வந்து விட்டார்கள்.
இப்போது எண்ணிப் பார்த்தால் ஆள் கணக்கு சரியாக வந்தது. பள்ளிக் கூடத்தில் மூன்றாம் வகுப்பு பயல்களை மகாபலிபுரத்துக்கு கல்விச் சுற்றுலா கூட்டிப் போன நடேசன் வாத்தியார் கூட இந்த அளவுக்கு கஷ்டப்பட்டிருக்க மாட்டார்.
கேதார்நாத் தரிசனம் பல இன்னல்களுக்கு இடையே முடிந்தது. இனி பிரச்சினை இல்லை...போய் பஸ்ஸில் ஏற வேண்டியது தான் என்று நினைத்ததை சரவணன் பொய்யாக்கினார். இன்னும் இரண்டு ஃபைட் ஒரு க்ரூப் டான்ஸ் வந்த பிறகு தான் படம் முடியும் என்றார்.
“நாம கத்தால பாத்த பள்ளம் இன்னும் சரியாகல்லே..இப்போ ஷேர் ஆட்டோல போகனும். பஸ் காத்தால விட்ட இடத்துலயே நிக்குது. மறுபடியும் பள்ளத்தை தாண்டி போயி பஸ் ஏறனும்” என்றார்.
ஷேர் ஆட்டோவில் ஏறுவதற்கு கொஞ்சம் பிரயத்தனப் பட வேண்டியிருந்தது. ரஜினி படத்திற்கு முதல் காட்சி சினிமா டிக்கெட் கூட இன்னும் சுலபமாகக் கிடைத்திருக்கும். ஒரு வழியாக ஷேர் ஆட்டோ உள்ளே நுழைந்து இடம் பிடித்தாகி விட்டது. இந்த ஊர் ஷேர் ஆட்டோ ஒரு வால் இல்லாத குதிரை. கான்க்ரீட் மிக்சர் மாதிரி ஆட்டோ ஆட்டோவென்று ஆட்டி விட்டு எங்களை திரவ நிலையில் கொண்டு போய் கொட்டியது.
மறுபடியும் அதே பள்ளம். அதே சேறு. எல்லா நாடகமும் காலையில் வெளிச்சத்தில் நடந்தது. இப்போது அரை இருட்டில் நடந்தேறியது. வித்தியாசம் எதுவும் இல்லை. சரோஜா மாமி வனஜா மாமியின் கையை இந்த முறை பிடிக்கவில்லை. யார் கையை யார் பிடித்தார்கள் என்று இருட்டில் தெரியவில்லை.
குத்து மதிப்பாக சேற்றில் நடந்து பள்ளத்தின் மறு பகுதிக்கு வந்தோம். ரோடு கும்மிருட்டாக இருந்தது. சாலை விளக்குகள் இல்லை. இமயமலையின் பாறைகள், நெடிய மரங்கள் சேர்ந்து அமானுஷ்ய சூழலைக் கொடுத்தது. விர்ரென்று சத்தத்துடன் காற்று வேறு அடித்தது.
“மாமி..நீங்க பி.டி சாமி எழுதின ‘மலை மேல் முண்டம்’ பேய்க் கதை படிச்சிருக்கீங்களா?” என்று பக்கத்தில் இருக்கும் மாமியிடம் கேட்டேன்.
“கடன்காரா..” என்று கத்தி எனக்கு ஹவுஸிங் லோன் பாக்கி இருப்பதை சுட்டிக் காட்டினார் அவர்.
மணிரத்தினம் படம் மாதிரி எல்லா முகங்களும் இருட்டாக இருந்தன.“ஏன்..எனக்குமட்டும் இப்படி..முடியல்லே..வேணாம்... விட்டுடுவோம்..” என்று துண்டு துண்டாக எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
இருட்டில் பஸ் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. கொஞ்ச தூரம் நடந்தவுடன் ஏதோ ஒரு வண்டி கண்ணில் தட்டுப் பட்டது. ஏறி விட்டோம். அது போலீஸ் வேனாக இருந்தால் கூட எங்களுக்குத் தெரிந்திருக்காது.
கொஞ்சம் கொஞ்சமாக பஸ்ஸில் கூட்டம் சேர்ந்தது. சேறும் சேர்ந்தது. சரவணன் வந்து மறுபடியும் கணக்கெடுத்தார். எல்லோரும் உள்ளேன் அய்யா சொன்ன பிறகு பஸ் ராம் பூர் நோக்கி புறப்பட்டது. இரவு எட்டரை மணிக்கு ராம்பூரில் எங்கள் லாட்ஜ் எதிரே போய் நின்றது.
காலையில் அரிசியாய் பஸ் ஏறினவர்கள் இப்போது குருணையாக வந்து இறங்கியிருந்தார்கள். லாட்ஜ் படிக்கட்டிலேயே சில பேர் படுத்துத் தூங்கி விடுவார்கள் போலத் தெரிந்தது.
மாமாக்கள் எல்லாம் இடுப்பு வலியால் குடியரசு தின சிப்பாய் மாதிரி விறைப்பாக நின்று கொண்டிருந்தார்கள். மாமிகளுக்கு ஷார்ட் டெர்ம் ஊமை நோய் வந்திருந்தது. பேச்சு வரவில்லை. காது கேளாதவர்களுக்கான நியூஸ் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நர்சரி ஸ்கூல் புத்தகத்தில் இருக்கும் குதிரை பொம்மையைக் கூட இனி பார்க்க மாட்டார்கள்.
ஹெலிகாப்டரில் போய் வந்திருந்த என் தங்கையும் அவள் கணவரும் பளிச்சென்று இருந்தார்கள்.
சாப்பாடு தட்டை எடுத்துக் கொண்டு போனால் அந்த குளிரிலும் சுடச்சுட சாம்பாரும் பொறியலும் வந்து விழுந்தது.
சாப்பிட்டு முடித்தவுடன் சரவணன் கூறினார் ‘ எல்லாரும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ..பேசணும்”
பாதி பேருக்கு படுக்கையில் விழுந்தால் போதும் என்று இருந்தது. இருந்தாலும் காத்திருந்தனர்.
“கேதார்நாத் பாத்தாச்சு..அடுத்தது பத்ரிநாத் போகப் போறோம்”
“இந்த இருட்டுலயா..எப்படி?” – கேட்டார் ஒரு மாமா.
பாவம் அரண்டவன் கண்ணுக்கு எல்லாம் இமய மலையாக தெரிந்தது.
“குதிரைல போகனுமா?” என்று கேட்டார் சில எலும்புகள் இடம் மாறியிருந்த நீலு மாமி.
“பயப்படாதீங்க....இன்னும் 250 கிலோ மீட்டர் போகனும். பத்ரி நாத் கோவில் வரைக்கும் பஸ் போகும்...காத்தால ரெடியா இருங்க..”
அன்று இரவு நிறைய பேர் கனவில் குதிரை வந்திருக்க வேண்டும். ஒரே ஒரு மாமி கனவில் மட்டும் மலை மேல் முண்டம் வந்து கொண்டிருந்தது..
No comments:
Post a Comment