🥀🥀🥀🥀சார்தாம் 🌻🌻🌻🌻
#சார்தாம் 22
கால் போன போக்கிலே
முன்னுரை
பயணக்கட்டுரை பாதி முடிந்த பிறகு முன்னுரை எழுதும் முதல் ஆள் நானாகத் தான் இருக்க வேண்டும்.
இடையுரை என்று ஒரு சொற்பிரயோகம் இல்லாததால் இதை முன்னுரை என்று கூறி விட்டேன்.
இந்த பயணக்கட்டுரை ஒன்றரை வருடங்களுக்க்கு முன்பாக நான் முக நூலில் பதிவிட்டு வந்து பின்னர் அது குமுதம் பக்தி இதழில் தொடராக வந்ததும் நினைவிருக்கலாம்.
குமுதம் பக்தியில் பிரசுரம் ஆக ஆரம்பித்ததும் 22 வது எபிசோடிலிருந்து முகநூலில் பதிவிடுவதை ஒரு தார்மீக அடிப்படையில் நிறுத்தினேன்.
இதோ இப்போது 22 ம் எபிசோடிலிருந்து முதன் முறையாக முகநூலில்.
இது நாள் வரை வந்த 21 எபிசோடுகளும் மீள் தான்.
எனவே பலரும் படிக்காமல் Take diversion எடுத்து அப்படீக்க போய்க் கொண்டிருக்கக் கூடும். இனி அப்படிப் போகாமல் புத்தம் புதிய பதிவுகளைப் படித்து என்னை ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இப்போது எபிசோட் 22 ஆரம்பம்....
22. மலை இறங்கினோம்
கேதார்நாத் கோவிலை விட்டு வெளியே வந்த நாங்கள் சிறிது நேரம் கடை வாசலில் நின்று கொண்டிருந்தோம். எதுவும் வாங்கக் கூடத் தோன்றவில்லை. குளிர் வாட்டி எடுத்தது. விரல்கள் எல்லாம் பத்து நாட்களாக ப்ரிஜ்ஜில் உதாசீனப்படுத்தின முள்ளங்கி மாதிரி சூம்பிப் போயிருந்தன.
கேதார் நாத் கோவிலின் பின் புறம் தான் ஆதி சங்கரரின் நினைவிடம் உள்ளது. ஆனால் அது தான் அவர் ஜீவ சமாதியான இடம் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. எட்டாம் நூற்றாண்டில் இங்கு விஜயம் செய்த அவர் ஒரு நாள் கோவில் பின் புறமாக நடந்து செல்கிறார். அதன் பிறகு அவர் திரும்புவதே இல்லை.
அப்போது அவருக்கு வயது 32. அந்த 32 வயதில் தான் நம்மில் பலர் முதல் மாத சம்பளமே வாங்குகிறோம். அதற்குள் அவர் பற்பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி விட்டு இந்த பூவுலகை விட்டே ஒதுங்கிக் கொள்கிறார்.
கேதார்நாத் கோவிலை குளிர் காலம் வந்ததும் கார்த்திகை முதல் தேதி மூடி விடுகிறார்கள். பின்னர் பிப்ரவரி மாதம் மகா சிவராத்திரி அன்று பண்டாக்கள் அனைவரும் கூடி கோவிலை எப்போது திறப்பது என்று முடிவெடுக்கிறார்கள். பொதுவாக ஏப்ரல் மே மாதங்களில் உரிய நாளில் திறக்கிறார்கள்.
நாங்கள் கேதார் நாத் போனது 2010 வருடம். மூன்று வருடங்கள் கழித்து 2013 ம் வருடம் தான் பெரும் வெள்ளம் வந்து கேதார் நாத் முழுக்க அழிந்தது. கோவில் உள்ளேயும் நீர் புகுந்தாலும் கோவில் எப்படியோ காப்பாற்றப்பட்டு விட்டது.
கேதர் நாத் கோவில் மேற்புறம் ஒரு நீர் நிலை உள்ளது. திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பால் (cloud burst) வெள்ளம் வந்து அந்த நீர் நிலை உடைந்தது. இரண்டு பாறைகளுக்கு நடுவே நீர் கடும் வேகத்தில் வந்தது. அப்போது ஒரு பெரிய பாறாங்கல் உருண்டு வந்து இரண்டு பாறைகளுக்கும் நடுவே விழுந்து வழியை அடைத்துக் கொண்டது. இதன் காரணமாக வெள்ள நீர் கோவிலை நேரடியாக தாக்காமல் இரண்டு புறமும் பிரிந்து சென்று விட்டது. ஆனால் சுற்றி இருந்த எல்லா கட்டிடங்களும் அழிந்து விட்டன.
வழியில் நாம் பார்த்த ராம் பாரா ஊர் முழுக்க அழிந்து போய் குதிரைகள் அனைத்தும் அடித்துச் செல்லப் பட்டன. என் ஸ்பரிசம் பட்ட அந்த குதிரை மட்டும் பிழைத்திருக்கும் என்று நம்புகிறேன்.
இதையெல்லாம் மூன்றாண்டுகள் கழித்து டி.வி யில் பார்த்த போது மனம் மிகுந்த வேதனை அடைந்தது.
அரை மணி நேரம் கோவில் வாசலிலேயே இருந்தோம். குளிர் இன்னும் அதிகமானது. மறுபடியும் மழை வரும் போலத் தோன்றியது.
இப்போது தான் எங்களுக்கு கட்டிக் கொடுத்த பூரி நினைவுக்கு வந்தது. பாக்கெட்டைப் பிரித்தோம். பூரியும் மசாலாவும் கலந்து போய் புஜ்ஜு குழந்தைக்குக் கொடுக்கும் பப்பு மம்மு மாதிரி ஆகியிருந்தது. ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு இடது வாய் வழியே நீர் ஒழுக சாப்பிட்டு முடித்தோம்.
பூரி வாசனை காட்டில் ஏதாவது கரடியின் மூக்குக்குப் போவதற்குள் கீழே இறங்கி விட வேண்டும் என்று முடிவெடுத்தோம்.
என் அண்ணனும் அண்ணியும் டோலி இருக்கும் இடத்துக்குப் போனார்கள். அவர்களை மூன்றாக மடக்கும் குடையைப் போல மடித்து டோலிக்குள் வைக்க நான்கு சப்பை மூக்குக்காரர்கள் தயாராக இருந்தார்கள். பாவம்....இன்னும் மூன்று மணி நேரத்திற்கு அவர்கள் கை கால்களை அசைக்க முடியாமல் சிரிக்கும் புத்தா சிலை மாதிரி வர வேண்டியது தான்.
நான் குதிரை ஸ்டாண்டுக்குப் போனேன். மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனில் மோட்டார் பைக்குகள் நிறுத்தியிருப்பது போல வரிசையாக குதிரைகள் நின்று கொண்டிருந்தன. இதில் என் குதிரையை எப்படி கண்டு பிடிப்பது?
கீழ் உதட்டில் விரல் வைத்து விசில் அடித்துக் கூப்பிட்டால் நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து வரலாம். விசில் அடிக்கத் தெரியாத கோண்டுவாக என் வீட்டில் என்னை வளர்த்து விட்டார்கள். குழம்பிய நிலையில் நின்று கொண்டிருந்தேன்.
திடீரென அந்த கடுக்கண் பையன் வந்தான்.”க்யா..தையார் ஹை..”என்று கூறி என் இடுக்கண் களைந்தான். அவன் என்னை எப்படி அடையாளம் கண்டு பிடித்தான் என்று தெரியவில்லை. அநேகமாக எனக்குப் பின்னால் ஏதாவது ஒளி வட்டம் தெரிந்திருக்க வேண்டும்.
குதிரையில் ஏறி அமர்ந்தேன். குதிரை கொஞ்ச தூரம் சமவெளியில் நடந்து விட்டு தாறு மாறாக கீழே இறங்க ஆரம்பித்தது. ஹார்ஸ் பவர் என்றால் என்ன என்று குதிரை டெக்னிகல் டிக்ஷனரியை திறந்து காட்டியது. சுயாட்சி பெற்ற பல்கலைக் கழகம் மாதிரி அதன் இஷ்டத்துக்கு ஏதேதோ செய்தது.
சில இடங்களில் படிக்கட்டுகள் வரும். அதில் எல்லாம் தடால் தடால் என்று இறங்கும். குதிரை முன்னோக்கி சாய்ந்து இருக்கும். ரூல்ஸ் புத்தகம் படி நாம் பேலன்ஸ் செய்ய பின்னோக்கி சாய வேண்டும். முதுகுத் தண்டு ஜிவ்வென்று இழுக்கும். வளைவதற்கு அது என்ன புடலங்காயா?...அது ஒரு சீவப்படாத பென்சில். நேர்மையாக வளைந்து கொடுக்காமல் நிற்கும். படிக்கட்டில் இறங்கும் போது நம் தொடைகள் குதிரை முதுகில் உராயும்.
வலி பிய்த்து எடுக்கும். ஏதாவது படிக்கட்டு வந்தாலே உடம்பு நடுங்க ஆரம்பித்து விடும். படிக்கட்டு கட்டிய பக்கிரி மேல் கோபம் வரும். இப்படியே கிட்டத்தட்ட ஏழு கிலோ மீட்டர் இறங்கினேன். அதற்குள் என் தொடை இரண்டும் பாவ் பாஜி மசாலா மாதிரி சிவந்து விட்டது. இதற்கு மேல் குதிரையில் இருந்தால் உடம்பு தாங்காது என்று கடுக்கன் ஆசாமியைக் கூப்பிட்டேன்.
“தம்பி..போதும்..இன்னும் ஏழு கிலோ மீட்டர் தானே..நான் இறங்கி நடந்து வர்ரேன்” என்று கூறினேன்.
அவன் குதிரையிடம் எதோ பேசினான். நோ அப்ஜெக்சன் சர்டிபிகேட் கேட்டான் போல இருக்கிறது.
குதிரை தலையை ஆட்டியதும் என்னை கீழே இறக்கி விட்டான். அந்த சந்தோஷத்திற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது. குதிரைக்கு ப்ரியா விடை கொடுத்தேன்.
குதிரையிலிருந்து இறங்கியதும் கொஞ்ச நேரம் உடம்பு நடுங்கியது. பிறகு நடக்க ஆரம்பித்தேன். நடப்பது ஒரு சுகமான அனுபவமாக இருந்தது. குதிரையில் வரும் போது ஒரு மன இறுக்கம் இருந்தது,. இப்போது எதுவுமே இல்லை.
இப்போது தான் சுற்றியிருக்கும் அழகை என்னால் ரசிக்க முடிந்தது. நாலா பாக்கமும் மெலிதான நீர் வீழ்ச்சிகள். ஆங்காங்கே சாலையைக் கடக்கும் நீர்த் தடங்கள். செங்குத்தான மலை. அதன் மேல் வெண்ணை காப்பு செய்த மாதிரி பனிச் சிகரங்கள்.
இறங்குவதற்கு ஒன்றரை மணி நேரம் தான் ஆனது. அந்த சிறிய கால அவகாசத்தை என்னால் மறக்கவே முடியவில்லை. அனுபவத்தை எழுத்தில் சரியாக என்னால் விவரிக்க முடியவில்லை.
மாலை ஐந்து மணி சுமாருக்கு கவுரி குண்ட் வந்து சேர்ந்தேன். சரவணனும் ஆட்களும் தயாராக நின்று கொண்டிருந்தார்கள். கூவத்தூர் எம்.எல்.ஏக்களை எண்ணுவது போல கணக்கெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவராக வந்து சேர்ந்து கொண்டிருந்தார்கள். என் அண்ணனும் அண்ணியும் கூட வந்து விட்டார்கள். மாமிகளும் மாமாக்களும் தொப் தொபென்று வந்து விழுந்தார்கள். வாசிங் மெசினிலிருந்து வெளியே எடுத்த புடவை மாதிரி சிக்கு விழுந்து சுருண்டு போய்க் கிடந்தார்கள். யாராலும் பேச முடியவில்லை.
ஒரு மணி நேரம் ஆயிற்று. சரவணன் கவலையில் இருந்தார்.
“இன்னும் ரெண்டு பேரைக் காணோம்..நடந்து மலை ஏறரேன்னு சொன்னதுல ரெண்டு பேரைக் காணோம்..அவங்க வந்தாத் தான் திரும்பிப் போக முடியும்..”
அவர் டென்சனாக இருந்தார். நாங்களும் தான்.
(பயணம் தொடரும்)
No comments:
Post a Comment