Thursday, October 7, 2021

கால் போன போக்கிலே சார்தாம் 21

 🥀🥀🥀🥀சார்தாம் 🌻🌻🌻🌻

#சார்தாம் 21

கால் போன போக்கிலே....

- நந்து சுந்து

21.சிவ தரிசனம்


கேதார் நாத் கோவில் பகுதியை நோக்கி நடக்கும் போது தோன்றிய காட்சி ஒரு கணம் பிரமிப்பாக இருந்தது. ஒன்றன் பின் ஒன்றாக மலை சிகரங்கள். எல்லாமே  பனி மூடிய தொடர்கள். நாங்கள் நிற்கும் இடமே தரை மட்டத்திலிருந்து .12000 அடிக்கு மேல். பின்னால் இருக்கும் பனிச் சிகரங்கள் இருபதாயிரம் அடிகளாவது இருக்கும்.

சுற்றிலும் ஒன்றும் இல்லை. யாத்திரீகர்கள் வசதிக்காக சில உணவு விடுதிகள். வழக்கமான கடைகள். இதைத் தவிர  அந்த மலைப் பகுதியில் செயற்கையான கட்டிடங்களே இல்லை.

கொஞ்ச நேரம் எண்ணிப் பார்த்தேன். ஒரு வாரத்திற்கு முன்பாக சென்னையில் ஜன சந்தடியில் தலைப்புச் செய்தி ஊழல்களுக்கு மத்தியில் கிடந்தேன். இப்போது அதிலிருந்து முற்றிலும் தள்ளி இருக்கிறேன். இது வேறு ஒரு உலகம். கடவுள் சிருஷ்டித்த அழகு இன்னும் 95 சத வீதம் சிதையாமல் இருக்கிறது.

 இங்கு இருப்பது நான் அல்ல. வேறு யாரோ.. நான் எனும் அவன் தற்காலிகமாக காணாமல் போயிருக்கிறான். இந்த மலைச் சிகரத்துடனான உறவு  நீடித்து இருக்கப் போவதில்லை. மலை இறங்கியவுடன் அழிந்து விடப் போகிறது. ஆனால் இந்த நினைவுகள் என்றென்றும் அழியப் போவதில்லை.

ஒரு வித மயக்க நிலையில் நடக்கிறேன். போகும் வழியில் ஓர் இடத்தில் ஒரு சிறிய அருவி ஒன்று உயரத்திலிருந்து விழுகிறது. அதை பால் அருவி என்று சொல்கிறார்கள். நீர் எந்த விதமான கலப்பும் இல்லாமல் வெள்ளை நிறத்தில் கண்ணாடித் துகள்களாய் விழுகிறது. நகைக் கடையில் இருக்கும் சாண்டிலியர் விளக்கு மாதிரி நீர் பிரகாசிக்கிறது.

அருவி மேல் ஒரு சிறிய பாலம் இருக்கிறது. கொஞ்ச நேரம் நின்று அந்த அருவியைப் பார்க்கிறேன். முகத்தில் குளிர்ந்த நீர்த் துளிகள் மின்சாரம் மாதிரி தெறிக்கிறது.

 மேலும் சிறிது தூரம் நடந்தால் ஒரு சிறிய தெரு. இரண்டு பக்கமும் சிறிய கடைகள் இருக்கின்றன. அதன் முடிவில் அமைதியாய் நிற்கிறது கல்லினால் ஆன ஒரு ஆலயம். பற்பல இன்னல்கள், புண்ணிய நதிகள் கடந்து வந்து நாம் தரிசிக்கப் போகும் கேதார் நாத் ஆலயம்.

நம் ஊரில் ஒரு கிரவுண்டு நிலம் என்று சொல்வார்களே.. அவ்வளவு பரப்பு தான் இருக்கும் கோவில். ஆனால் ஒரு புராதனம் தெரிகிறது. நம்மை வேத காலத்திற்கு இட்டுச் செல்கிறது. கோவில் முன்பாக கூட்டமே இல்லை. நிலச் சரிவு காரணமாக எல்லா கூட்டமும் கீழே இறங்கி விட்டது. நாங்கள் தான் முதல் கோஷ்டியாகப் போகிறோம். கோவில் வாசலில் பத்து பதினைந்து உள்ளூர் மக்களும் சில பண்டாக்களும் அமர்ந்திருந்தார்கள்.

என்னுடைய அண்ணனும் அண்ணியும் டோலியில் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக் காத்திருந்தேன். கோவில் முன்பு இருந்த ஒரு கடை ஓரமாகப் போய் நின்று கொண்டேன். கை உறைகளைக் கழட்டினால் விரல்கள் விறைத்து விடும். லேசாக மழை வேறு பெய்து கொண்டிருந்தது. நடுங்கிக் கொண்டு நின்று கொண்டிருந்தேன். வாயைத் திறந்தால் வாயிலிருந்து புகை வருகிறது.

நான் நெடு நாள் காண வேண்டும் என்று ஆசைப்பட்ட பனிச் சிகரங்கள் எதிரே எல்லையற்றுக் கிடக்கின்றன.  பார்த்துக் கொண்டே இருக்கிறேன். இயற்கையின் விந்தை விளையாட்டு இது. பெரிய பெரிய மலை சிகரங்களை வைத்து விட்டு அதன் மீது எக்காலத்திலும் உருகாத  பனிப் போர்வையை அமைத்து விட்ட இறைவன் படைப்பின் அற்புதத்திற்கு இணையே இல்லை. 

இதற்கிடையில் என்னுடைய தங்கையும் அவள் கணவரும் ஹெலிகாப்டர் மூலமாக வந்து தரிசனத்தை முடித்து விட்டு திரும்பியே போய் விட்டார்கள். ஹெலிகாப்டர் பத்தே நிமிடத்தில் ராம்பூரிலிருந்து கேதார் நாத் வந்து விட்டது. பத்து நிமிடத்தில் 6000 அடி உயரம் ஏறியதை நமது நுரையீரல் ஏற்றுக் கொள்ளாது. காற்று அழுத்த வேறு பாடு காரணமாக மூச்சுத் திணறல் வந்து விடும். இதை அவர்களும் அனுபவித்தார்கள். ஹெலிகாப்டர் விட்டு இறங்கியதும் மூச்சு விட சிரமப் பட்டார்கள். 

சிறிது நேரம் அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டார்கள். பிறகு நடக்க ஆரம்பித்தவுடன் உடல் சுற்றுச் சூழலுக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டது. காலையிலேயே அவர்கள் வந்து விட்டதால் மலை சிகரம் முழுக்க பனி மூடியிருந்ததாம். அந்த அழகை அனுபவித்து விட்டு கேதார் நாத் ஸ்வாமியை தரிசித்து விட்டு அவர்கள் ஹெலிகாப்டரிலேயே மறுபடியும் ராம்பூர்  போய் விட்டார்கள்.

கேதார் நாத் கோவில் பாண்டவர்களால் கட்டப் பட்டது என்று தல புராணம் சொல்கிறது. பின்னர் ஆதி சங்கரர் எட்டாம் நூற்றாண்டில் புணருத்தானம் செய்திருக்கிறார். குரு க்ஷேத்திர யுத்தம் முடிந்ததும் பாண்டவர்கள் உலகப் பற்று எல்லாம் துறந்து விட்டு கேதார் நாத் வருகிறார்கள். சகோதரர்களைக் கொன்ற பாவம் தீருவதற்காக சிவ பெருமானிடம் பாப விமோசனம் கேட்க வருகிறார்கள். சிவ பெருமான் பாண்டவர்களைத் தவிர்க்க எண்ணுகிறார்.  பாண்டவர்கள் கண்ணில் படாமல் இருப்பதற்காக சிவ பெருமான் ஒரு எருது ரூபத்தை எடுத்து ஓடுகிறார்.. இதை அறிந்த பாண்டவர்கள் எருதைப் பிடிக்க ஓடுகிறார்கள். அவர்கள் கையில் சிக்காமல் எருது ஓடுகிறது.

பின்னர் எருது பூமிக்குள் புகுந்து ஒளிந்து கொண்டு விடலாம் என்று பூமிக்குள் நுழைகிறது. அதற்குள் பீமன் போய் எருதின்  வாலைப் பிடித்து இழுத்து தடுத்து விடுகிறார். பாதி உடல் பூமிக்குள் போன நிலையில் எருது அப்படியே நின்று விடுகிறது. எருதின்  பின் முதுகுப் பகுதி மட்டும் பூமிக்கு வெளியே காட்சி தருகிறது..

கேதார் நாத் கோவில் உள்ளே இப்படிப்பட்ட உருவத்தை தான் எல்லோரும் தொழுகிறார்கள். இது ஒரு சுயம்பு லிங்கம். நடுவில் எருதின் முதுகு வடிவில் மூலவர் இருக்கிறார். சுற்றி ஒரு தொட்டி மாதிரி பாத்தி கட்டி இருக்கிறார்கள். காலை நேரத்தில் போனல் நாமே மூலவரை தொட்டு  அபிஷேகம் செய்யலாம். அதன் பிறகு உள்ளே சுற்றி வர வேண்டும்.

மூலவருக்கு முன்னே ஒரு நந்தி இருக்கிறது. மூலவரை சுற்றி உள்ள சிறிய பிரகாராத்தில் பஞ்ச பாண்டவர்கள் சிலைகள் உள்ளன. அருகே திரெளபதியின் சிலையும் இருக்கிறது.

சிறிய கோவிலாக இருப்பதால் உள்ளே அதிக நேரம் செலவிட முடியாது. சிவ பெருமானின் அந்த ஏகாந்த வாசம் நம்முள் ஒரு பக்திப் பரவசத்தை உண்டாக்கி விடுவதென்னமோ உண்மை தான். 

குளிர் அதிகமாகிக் கொண்டே போனது. கிட்டத்தட்ட  அரை மணி நேரம் காத்திருந்த பிறகு அண்ணனும் அண்ணியும் வந்தார்கள். ஒரு பண்டா மூலமாக அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டோம். ஒரு பாத்திரத்தில் பால் வாங்கிக் கொண்டோம். உள்ளே போய்  மூலவருக்கு அருகில் போய் குனிந்து ஒவ்வொருவராக மெதுவாக பால் அபிஷேகம் செய்தோம். பின்னர் மலர்கள் சமர்ப்பித்தோம். சிவனை நம் இரு கரங்களால் தொட்டு கண்களை மூடி பிரார்த்தித்துக் கொண்டோம். சிவனை நம் கைகளால் தொட்டது ஒரு வித  சிலிர்ப்பை உண்டாக்கியது.

கூட்டம் உள்ள நாட்களில் இவ்வளவு நிதானமாக தரிசனம் செய்ய முடியாது. இயற்கை இடர் பாடுகளால் கூட்டம் வராமல் போனது கூட ஒரு விதத்தில் தெய்வச் செயல் தான் என்று எண்ணத் தோன்றியது.

 கோவிலை விட்டு வெளியே வந்தோம். இன்னும் மெலிதாக மழை பெய்து கொண்டிருந்தது. குளிர் இன்னும் அதிகமாகியிருந்தது.






No comments:

Post a Comment