🥀🥀🥀🥀சார்தாம் 🌻🌻🌻🌻
#சார்தாம் 20
கால் போன போக்கிலே....
- நந்து சுந்து
20. மலைப் பயணம்.
குதிரை மேல் மெதுவாகப் போய்க் கொண்டிருந்தேன். குதிரைப் பயணம் கடினம் என்று வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரச்சாரம் செய்திருக்கின்றன என்று தோன்றியது.
தேன் நிலவு படம் மாதிரி பாட்டுப் பாடவா என்று பாடிக் கொண்டே போகச் சொன்னால் கூட பாடியிருப்பேன். கறுப்பு வெள்ளை படத்தில் நடிப்பதில்லை என்ற கொள்கையால் சும்மா இருந்தேன். வழியில் அற்புதமான காட்சிகள். இயற்கை அழகு பயங்கரமாகக் கொட்டிக் கிடந்தது. குதிரைகளின் சாணமும் கூட...
குதிரை கொஞ்ச நேரம் நேராகப் போனது. அதன் பிறகு குசும்பு வேலையைக் காட்ட ஆரம்பித்தது. கொஞ்சம் கோணலாகப் போய் சாலை விளிம்புக்குப் போகும். விளிம்பில் கைப் பிடி சுவர் கிடையாது. எட்டிப் பார்த்தால் இமய மலையின் பைல் பவுண்டேஷன் தெரியும். ‘பர்’ரென்று குதிரை ஒரு ரீ ரிக்கார்டிங் கொடுக்கும். பிறகு மறுபடியும் சரியான பாதைக்குப் போகும்.
இப்படியே பாம்பு மாதிரி வளைந்து வளைந்து போய் நம்முடைய தைரியத்தை சோதிக்கும். எங்கள் வீட்டு வாசலில் போடும் நெளிக் கோலத்தை அது பார்த்து விட்டது போல இருக்கிறது.
எதிரே இரண்டு குதிரைகள் இறங்கிக் கொண்டிருக்கும். நம் குதிரை அதெல்லாம் கண்டு கொள்ளாது. நேராக அந்த குதிரைகள் மேல் இடிப்பது போலப் போகும். அந்தக் குதிரைகளும் வழி விடாது. இரண்டு குதிரைகளுக்கு மத்தியில் நம் குதிரை நுழையும். பக்கத்தில் இருக்கும் இரண்டு குதிரைகளையும் இடித்துக் கொண்டு அது பாட்டுக்கு போகும். நம்மூர் டவுன் பஸ்ஸில் இந்த குதிரை அடிக்கடி போயிருக்க வேண்டும். எதிர் குதிரையில் வந்த கணேஷ் லால் தொடை நம் தொடை மேல் இடித்து குங்கும சாயம் எல்லாம் டிரான்ஸ்பர் ஆகும். அவர் சொத்தில் கொஞ்சம் டிரான்ஸ்பர் ஆகியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
என் குதிரைக்குண்டான கோச் எங்கு என்று தேடினேன். அவன் எங்கோ நூறு மீட்டர் தள்ளி இருந்தான். கடுக்கண் போட்ட அவனை என்னால் அடையாளம் கண்டு பிடிக்கவும் முடியவில்லை.
என் முன்னே போய்க் கொண்டிருந்த எங்கள் க்ரூப் மாமி ஒருவரது ஒரு செருப்பு கீழே விழுந்து விட்டது. “ நிறுத்து..செருப்பு..செருப்பு “ என்று கத்திய அவர் ஏதேதோ பிதற்றினார். இந்த மாமி பேசுவது அவர் கணவருக்கே புரியாத நிலையில் குதிரைக்கு எப்படிப் புரியும்?
குதிரை பாட்டுக்குப் போய்க் கொண்டே இருந்தது. பின்னால் போகும் என்னாலும் உதவி செய்ய முடியவில்லை. அந்த மாமி குதிரை முதுகின் மேல் கோபமாகத் தட்டினார். குதிரை வேகமாகப் போக ஆரம்பித்து விட்டது. தட்டுவது என்பது கியர் மாற்றுவது என்று அந்த அம்மாவுக்குத் தெரியவில்லை.
பிறகு அந்த குதிரையின் ஆள் வந்து குதிரையை சமாதானப் படுத்தி நிலைக்கு கொண்டு வந்தார். ஆக மொத்தம் எங்கள் குழுவில் ஒருவருக்கு பர்ஸ் காலி. இன்னொருவருக்கு செருப்பு காலி. தோல் ஐட்டங்களாக போய்க் கொண்டிருந்தன. என் இடுப்பு பெல்டைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். எங்க வீட்டுப் பிள்ளையில் எம்.ஜி.ஆர் உபயோகித்த பெல்ட் அது.
ஏழு கிலோ மீட்டர் போனதும் ராம் பாரா என்ற இடம் வந்தது. இங்கு தான் குதிரைகளுக்கும் டோலி தூக்கும் ஆட்களுக்கும் டைம் அவுட். குதிரைக்கு வெல்லம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று அந்த ஆள் காசு கேட்டார். கொடுத்தேன். ஒரு தொட்டி அருகே குதிரையை கூட்டிப் போனார். அதன் உள்ளே இருந்தது வெல்லமா, வெள்ளமா (மலையாளம்) என்று தெரியவில்லை. கடுக்கண் ஆசாமி பள்ளத்தாக்கில் டைவ் அடித்து ஆகாயத்திலிருந்து ஒரு தம்ஸ் அப் எடுத்துக் குடித்தார். டி.வி விளம்பர தா(க்)கம்.
லேசாக மழை ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்தில் சிறிய ஐஸ் கட்டிகள் விழ ஆரம்பித்தன. அஞ்சு ரூபா காக்கா பிரியாணி மாதிரி என்னிடம் அஞ்சு ரூபா ரெயின் கோட் இருந்தது நினைவுக்கு வர எடுத்துப் போட்டுக் கொண்டேன். கொஞ்சம் மழை நின்றதும் குதிரை மேல் அமர்ந்தவாறு ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஸ்மார்ட் போனும் செல்ஃபியும் அப்போது டெஸ்ட் ட்யூப்பில் இருந்த காலம்.
டிஜிட்டல் காமிரா எடுத்து கோச்சிடம் கொடுத்தேன். நான் காமிரா விற்கிறேன் என்று நினைத்து “நை..நை “ என்றான்.
‘போட்டோ கரோ..கரோ” என்று அவனைக் கடித்து போட்டோ எடுக்க வைத்தேன். அவனுக்கு வரவில்லை. எனக்கு நன்றாக வந்தது கோபம். அந்த போட்டோவை இப்போது பார்த்தாலும் என் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதைப் பார்க்கலாம்.
டோலியில் வருபவர்களும் இங்கு தான் இளைப்பாறுகிறார்கள். டோலி என்றால் சபரி மலையில் இருப்பது போல சவுகரியமான பிரம்பு சேர் எல்லாம் இருக்காது. ஒரு குழியான சேர். குழிப் பணியார குழி மாதிரி வட்டமாக இருக்கும். கை கால்களை குறுக்கிக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் விசாரணைக் கைதி மாதிரி உட்கார்ந்திருக்க வேண்டும். போக மூன்று மணி நேரம். வர மூன்று மணி நேரம். இப்படியே இருக்க வேண்டும். வெளியே வரும்போது எல்லோரும் முட்டையிலிருந்து வந்த குஞ்சு மாதிரி குறுகிப் போயிருந்தார்கள்.
எல்லோரும் இளைப்பாறிய பிறகு மறுபடியும் பயணம் தொடர்ந்தது. மேலே விர்ரென்று சத்தம். ஹெலிகாப்டர் வானவில் ஷேப்பில் மேலே பறந்தது கொண்டிருந்தது. என் தங்கையும் அவள் கணவரும் ஏதோ ஒரு ஹெலிகாப்டரில் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
கடைசி ஏழு கிலோ.மீட்டர் பயணம் தான் மிகவும் அழகாக இருக்கும். செங்குத்தான மலைகளிலிருந்து 600 அடி உயரத்திலிருந்து வெள்ளிக் கம்பி மாதிரி நீர் வீழ்ச்சிகள் விழுந்து கொண்டிருக்கும். எங்கு பார்த்தாலும் பசுமை. பின் பக்கம் பனி படர்ந்த மலைத் தொடர்.
சில சமயம் நாம் போகும் பாதையிலேயே நீர் ஓடி கீழே விழுந்து கொண்டிருக்கும். என்னால் அந்த காட்சிகளை செம்மையாக விவரிக்க முடியவில்லை. அடுத்த முறை தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியது யார் என்று சரியாகத் தெரிந்த கவிஞர் ஒருவரை காசு கொடுத்து கூட்டிப் போக வேண்டும்.
குதிரை மேல் இரண்டு கைகளாலும் வாரைப் பிடித்திருந்ததால் போட்டோ எதுவுமே எடுக்க முடியவில்லை. அது தான் வருத்தமாக இருந்தது.
முடிவில் கேதார் போய்ச் சேர்ந்தோம். கோவிலுக்கு கால் கிலோ மீட்டர் முன்பாக குதிரை நிறுத்தப் பட்டது. இறங்கும் போது கால் D ல் மாட்டிக் கொண்டு வெளியே வரவில்லை.
குதிரைக்காரன் ஹிந்தியில் திட்டிய பிறகு கால் வெளியே வந்தது. தரிசனம் முடித்து சீக்கிரம் வரும்படி குதிரைக்காரர் கூறினார்.
கோவிலை நோக்கி நிதானமாக நடந்தேன். குனிந்து பார்த்தால் எனக்கு இரண்டே கால்கள் தான் இருந்தன.
(பயணம் தொடரும்)
No comments:
Post a Comment