🥀🥀🥀🥀சார்தாம் 🌻🌻🌻🌻
#சார்தாம் 19
கால் போன போக்கிலே....
- நந்து சுந்து
19. குதிரை ஏற்றம்
தான் மனதால் வரித்த சிவ பெருமானை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பார்வதி தேவி விரும்பினார். அதற்காக கேதார்நாத் மலை அடிவரத்தில் நெடுங்காலம் தவம் இருந்தார், அந்த இடம் தான் நாங்கள் இப்போது இருக்கும் கவுரி குண்ட். இதற்குப் பக்கத்தில் த்ரியுக் நாராயண் என்று ஓர் இடம் உள்ளது. அங்கு தான் திருமணம் நடந்ததாம். அப்படியானால் மதுரையில் ரிசப்ஷன் வைத்திருப்பார்களோ?
கவுரி குண்டிற்கான மிகச் சிறிய தல புராணம் இது. இப்போது மலை புராணத்தைப் பார்ப்போம். மலை ஏற வேண்டுமென்றால் குதிரையின் தயவு வேண்டும். குதிரையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது குதிரை என்னை தேர்ந்தெடுக்க வேண்டும். மலையடிவாரத்தில் குதிரை மேட்ரிமோனி.காம் மாதிரி நிறைய குதிரைகள் நின்று கொண்டிருந்தன. குதிரை புக் செய்வதற்கு டிக்கட் கவுண்டருக்குப் போனேன். அந்த இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.
“உங்க பொருள் எல்லாம் பத்திரமா வெச்சுக்குங்க “ என்றார் சரவணன்.
நான் என் பூரி மசால் பாக்கெட்டை நெஞ்சோடு அணைத்து வைத்துக் கொண்டேன். இரண்டு எபிசோடுகளாக பூரியின் தொல்லை அதிகமாக இருப்பதை பொறுத்தருளவும்.
எங்கள் குழுவில் வந்திருந்த ஒரு கனமான நபர் எனக்கு முன்னால் கவுண்டரில் நின்று கொண்டிருந்தார். அவரை டார்வின் பார்த்திருந்தால் யானையிலிருந்து தோன்றியவன் மனிதன் என்று விஞ்ஞானத்தை திருத்தி எழுதியிருப்பார்.
அவரின் எடையை 68 கிலோ என்று டன் கணக்கில் பொய் சொன்னார். அவர் தன் உடலில் பாதியை பார்வதிக்குக் கொடுத்து இருந்தால் கூட 50 கிலோ தேறுவார். டிக்கட் கவுண்டரில் அவர் முகம் மட்டுமே தெரிந்ததால் 68 கிலோவுக்கு டிக்கட் கொடுத்து விட்டார்கள். அல்லது தடிப்பா இருக்கும் மா தவன் பொய் சொல்ல மாட்டான் என்றும் நினைத்திருக்கலாம். பின்னால் நின்று கொண்டிருந்த எனக்கு மனதுக்கு கஷ்டமாக இருந்தது. ஒரு வாயில்லாத ஜீவனை ஏகப்பட்ட வாயுள்ள இன்னொரு ஜீவன் இப்படி ஏமாற்றியது அதிசயமாக இருந்தது.
என்னுடைய முறை வந்தது. எடையைக் கேட்டவுடன் பழமுதிர்ச் சோலையில் கோவக்காயை கிராம் துல்லியமாக எடை போடுவது போல் மில்லி கிராம் சுத்தமாக எடை சொன்னேன்.
என்னை குதிரை பக்கம் கூட்டிப் போனார்கள். என் கழுத்தில் போட எந்த குதிரை கையிலும் மாலை இல்லை. முன்னால் இருக்கும் ஒரு குதிரை சாணம் தான் போட்டது.
“பவர் ஸ்டீயரிங் இருக்கற குதிரையா கொடுப்பா..” என்றேன்.
பவர் ஸ்டார் மாதிரி ஒரு குதிரையை கொண்டு வந்து நிறுத்தினார்கள். தீய்ந்து போன தோசை கலரில் இருநதது.
குதிரைக்காரர் வந்து குதிரை ப்ரீமியர் லீக்கின் ப்ளேயிங் கண்டிசன்களைச் சொன்னார்.
1. இரண்டு குதிரைக்கு சேர்த்து ஒரு ஆள் கூடவே வருவார்.
2. எக்காரணத்தை முன்னிட்டும் அந்த ஆள் அனுமதி இல்லாமல் குதிரையை விட்டு இறங்கக் கூடாது.
3. குதிரை போகும் பாதையை மாற்றக் கூடாது.
4. குதிரை மேல் சவாரி செய்யும் போது உடம்பை பேலன்ஸ் செய்ய வேண்டும். மலை மேல் ஏறும் போது நமது உடம்பை முன் பக்கமாக சாய்க்க வேண்டும். கீழே இறங்கும் போது முதுகை பின் பக்கமாக சாய்க்க வேண்டும். படிக்கட்டில் இறங்கும் போது சேணத்திலிருந்து எழுந்து நிற்க வேண்டும்.
5. வழியில் ராம் பாரா என்ற இடத்தில் குதிரையேட்டர் சூட்டை தணிக்க நிறுத்தப்படும். அப்போது குதிரைக்கு வெல்லம் வாங்கிக் கொடுக்க வேண்டும். (நல்ல வேளை..ஏலக்காய் முந்திரி எல்லாம் சொல்லவில்லை) கூட வரும் கோச்சுக்கு தாக சாந்திக்கு தம்ஸ் அப் வாங்கிக் கொடுக்க வேண்டும்.
அடுத்து டாஸ் போட்டு குதிரை மேல் நான் உட்கார வேண்டுமா அல்லது என் மேல் குதிரை உட்காருமா என்று சொல்வாரோ என்று பயமாக இருந்தது.
“சரி..ஏறுங்க” என்றார் அந்த கோச். தேவர் பிலிம்ஸ் யானை மாதிரி குதிரை மண்டியிட்டு எல்லாம் கீழே உட்காரவில்லை. அது பாட்டுக்கு கிரிக்கெட் மைதான சைட் ஸ்க்ரீன் மாதிரி நின்று கொண்டிருந்தது.
இதன் மேல் எப்படி ஏறுவது?
“குதிரைல லோயர் பர்த் எல்லாம் இல்லையா?’ என்று கேட்டேன்.
“க்யா?’ என்று கோச்சுக் கொண்டார் கோச்.
குதிரைக்கு பக்க வாட்டில் ஒரு பெல்ட் தொங்கிக் கொண்டிருந்தது. அதில் D மாதிரி கால் வைக்க ஒரு இடம் இருந்தது. என் காலை எடுத்து அதில் வைத்தார்கள். படுத்த மாதிரி மேலே ஏறச் சொன்னார்கள். குதிரை வயிறு வரைக்கும் தான் என்னால் போக முடிந்தது. அதன் முதுகு எங்கோ நாலாவது மாடியில் இருந்தது.
இரண்டு முறை முயற்சித்தும் முதுகு என் வசமாகவில்லை. ஆன் லைன் பாங்கிங்கில் மூன்று தடவைக்கு மேல் பாஸ் வேர்ட் தப்பாகப் போட்டால் காறித் துப்பிவிடும். அது போல குதிரை என்னை ரிஜக்ட் செய்து விடுமோ என்று பயமாக இருந்ததால் மூன்றாவது முயற்சியில் முதுகில் ஏறி உட்கார்ந்து விட்டேன். பின் பக்கமாக ஏழெட்டு கெட்டித் தையல் போட்டிருந்ததால் பேண்ட் கிழியவில்லை.
ஓரளவிற்கு உடம்பை பேலன்ஸ் செய்து கொண்டு முன்னால் இருக்கும் ஸ்டீயரிங் வாரை பிடித்துக் கொண்டேன். கேல் ரத்னா அவார்ட் வாங்கின மாதிரி சுற்று முற்றும் பார்த்தேன்.
மாமிகளைப் பற்றி இந்த இடத்தில் சொல்லாவிட்டல் குதிரை புராணம் முழுமை அடையாது என்பதால் அதைக் கொஞ்ச நேரம் பார்ப்போம்.
நிறைய மாமிகள் நடுக்கத்துடன் கோகுதிரை பூஜை செய்து கொண்டிருந்தார்கள். குதிரை கட்சிக்கு ஏன் வாக்களித்தோம் என்று விரல் மையை அழிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.
எவ்வளவு முயன்றும் அவர்களால் குதிரை மேலே ஏறவே முடியவில்லை. பரணில் இருக்கும் பழைய முறம் எடுப்பதற்கே பத்து பேர் உதவி வேண்டும் அவர்களுக்கு. அவர்களாவது குதிரை ஏறுவதாவது.
வேறு வழி இல்லாமல் குதிரைக்காரர்கள் இரண்டு பேர் சேர்ந்து மாமிகளை எல்லாம் அலேக்காகத் தூக்கி குதிரை மேல் வைத்தார்கள். எல்லா மாமிகள் முகத்திலும் குதிரைக் கண்ணீர். அவர்களை டூர் அனுப்பிய மருமகள்களுக்கு முதல் வெற்றி கிடைத்தது.
மாமிகள் குதிரைகள் முன்னால் போக என் குதிரை பின் தொடர்ந்தது. குதிரையின் விலா எலும்புகள் கிச்சு கிச்சு மூட்டின. ஸீட்லெஸ் திராட்சை மாதிரி ஏன் போன்லெஸ் குதிரையை ஆண்டவன் படைக்கவில்லை?
எடையை 68 கிலோ என்று சொன்ன உசிலை மணிக்கு வருவோம். திடீரென அவர் “என் பர்ஸ்...என் பர்ஸைக் காணோம் “ என்று கத்தினார். அவர் பர்ஸ் திருடு போயிருந்தது. ஒரு பக்கக் கதை மாதிரி நான் இந்த இடத்தில் வேண்டுமென்றே ஒரு ட்விஸ்ட் கொடுக்கவில்லை. நிஜமாகவே அவர் பர்ஸை யாரோ பிக் பாக்கெட் செய்து விட்டார்கள்.
“பர்ஸ் போச்சு..பர்ஸ் போச்சு” என்று புலம்பிக் கொண்டே அவர் குதிரையின் அருகே போனார்.
முனிவர்கள் போல குதிரைகளும் சாபமிடும் என்று அன்று தான் தெரிந்து கொண்டேன்.
(பயணம் தொடரும்)
No comments:
Post a Comment