🥀🥀🥀🥀சார்தாம் 🌻🌻🌻🌻
#சார்தாம் 18
கால் போன போக்கிலே....
- நந்து சுந்து
18. சாலையில் பள்ளம்
காலையில் அந்த குளிரில் கஷ்டப்பட்டு குளித்து தயாராகி விட்டோம். எல்லோரும் பஸ்ஸில் ஏறினோம். எல்லோர் கையிலும் ஒரு பாக்கெட் பூரி மசால் கொடுத்தார்கள்.
“பத்திரமா வெச்சுக்குங்க..மேல கிடைக்காது..” என்றார் சரவணன்.
“இதுக்கு மேல பூரி கிடைக்காது அவ்வளவு தான்” என்று சொல்கிறாரா.. மலைக்கு மேல் எதுவும் கிடைக்காது என்று சொல்கிறாரா என்று குழம்பினேன்.
பஸ்ஸில் ஏறியவர்களைப் பார்க்கும் போது வேடிக்கையாக இருந்தது. என்னையும் சேர்த்துத் தான்.
கேதார்நாத் மலை மேல் மிகவும் குளிரும் என்பதால் எல்லோரும் முழுக்கை ஸ்வெட்டருக்குள் புகுந்திருந்தார்கள். தலையில் கம்பளி குல்லாய். கண், வாய் மட்டும் தான் வெளியே தெரிந்தது. கை விரல்கள் எல்லாம் காணாமல் போயிருந்தன. தியாகி பென்சன் வாங்கும் ஸ்பைடர் மேன் மாதிரி இருந்தார்கள்.
வஞ்சனையில்லாத தொப்பை வேறு. ஹார்மோன் ஊசி போட்டு வளர்த்த சுரைக்காய் மாதிரி இருந்தார்கள். குதிரைக்கு வேஷ்டி பிடிக்காது என்பதால் பெல்ட் போட்ட பேண்டுக்கு மாறியிருந்தார்கள்.
மாமிகள் எல்லாம் சூரிதார் போட்டு காதலிக்க நேரமில்லை காஞ்சனா ஆகியிருந்தார்கள் (நல்ல வேளை 2010 ல் லெக்கிங்க்ஸ் இல்லை). ஆனால் எங்கேயோ பிசிறு தட்டியது. பிட்சா டப்பாவில் வைத்த உப்புமா மாதிரி இருந்தார்கள். மேலே பீட்ரூட் கலரில் கம்பளி ஸ்வெட்டர். கழுத்தில் கைப்பயை தொங்க விட்டிருந்தார்கள்.
இந்த கம்பளிப் பூச்சிகளை எல்லாம் ஏற்றிக் கொண்டு பஸ் புறப்பட்டது. எனக்கும் ஒரு பரபரப்பு இருந்தது. குதிரையில் 28 கி.மீ போகப் போகிறேன். குதிரையுடன் ஒரு போட்டோ பிடித்து வீட்டுக் கூடத்தில் மாட்ட வேண்டும். ஃபேன் ரிப்பேர் செய்ய வருகிறவன் அதைப் பார்த்து கோணலாக சிரிக்க வேண்டும்.
சரவணன் சில முக்கியமான பாயிண்டுகளை விளக்கினார்.
குதிரையில் போனாலும் சரி, டோலியில் போனாலும் சரி உங்கள் எடைக்கு தகுந்த மாதிரி தான் ரேட் என்றார்.
எடை அதிகமானால் ரேட் அதிகம்.
மூன்று ஸ்லேப் எடை சொன்னார். இப்போது மறந்து விட்டது. டிக்கட் கவுண்டரில் நம்முடைய எடையை சொல்ல வேண்டும். வெயிட்டிங் லிஸ்ட் என்பது இது தானா?
என்னுடைய எடை வறுமைக் கோட்டுக்குக் கீழ் இல்லா விட்டாலும் ரொம்ப அதிகமும் இல்லை. பர்ஸுக்கு பாதகம் வராது. கட்டிக் கொடுத்த பூரியை சேர்த்தால் அதிகமாகுமோ என்று புது சந்தேகம் வந்தது.
கவுரி குண்ட் நோக்கி பஸ் போய்க் கொண்டிருந்தது. என் வரவை எதிர் நோக்கி ஏக்கத்தில் குதிரையின் வால் மெலிந்து கொண்டிருந்தது.
திடீரென டிரைவர் பஸ்ஸை நிறுத்தினார். ஹிந்தியில் ஏதோ சொன்னார். நல்ல விஷயம் இல்லை என்று அவர் பதட்டத்துடன் இறங்குவதிலிருந்து தெரிந்தது.
வண்டிக்கு ஏதோ டெங்கு ஜூரம் என்று சொல்வாரோ என்று பயமாக இருந்தது. சாலையை காட்டி ஏதோ சொன்னார்.
எதிரே சாலை இரண்டாகப் பிளந்திருந்தது. மலைச்சரிவிலிருந்து சிறிய அருவி மாதிரி ஒரு அடி அகலத்தில் நீர் கொட்டிக் கொண்டிருந்தது. அது சாலையை சுரண்டி மூன்றடி அகலத்திற்கு பள்ளம் ஏற்படுத்தி விட்டது.
எவ்வளவோ இடம் இருக்கும் போது இங்கு ஏன் அருவி கொட்ட வேண்டும்? திரைக்கதையை இறைவன் நிறைய திருப்பங்களோடு எழுதிக் கொண்டிருக்கிறார் என்று மட்டும் புரிந்தது.
நேரம் ஆக ஆக பள்ளம் பெரிதாகிக் கொண்டே போனது. பஸ் அந்த பக்கம் போக முடியாது.
இந்த நேரத்தில் தான் அடிக்கடி இந்த பகுதியில் யாத்திரை மேற்கொண்ட சரவணன் மற்றும் குழுவினரின் அனுபவம் வெளிப்பட்டது.
எல்லோரையும் பஸ்ஸை விட்டு இறங்கச் சொன்னார். அந்த பள்ளத்தைக் கடந்து மறு பக்கம் சென்று சிறிது தூரம் நடந்தால் ஒரு சிறு ஊர் வந்து விடும் அங்கிருந்து தனியார் பஸ் பிடித்து கவுரி குண்ட் போய் விடலாம் என்று சொன்னார்.
மறுபுறம் எப்படி போவது? சாலையில் இரண்டடி அகலத்திற்கு பள்ளம். தாவிக் குதிக்க முடியாது. ஒலிம்பிக்கில் தகர மெடல் வாங்கும் லெவலில் கூட யாரும் இல்லை. சாலை ஓரத்தில் ஒரு கட்டிடம் இருந்தது, அதை ஒட்டி இரண்டடி அகலத்திற்கு சாலை இன்னும் வெட்டுப் படாமல் இருந்தது. அதன் வழியாக அந்தப் பக்கம் போய் விடலாம்.
ஒருவர் ஒருவராகத் தான் போக முடியும். கீழே சேறும் சகதியும் சந்தனக் காப்பு செய்ய தயாராக இருந்தது. காலை வைத்தால் செருப்பு சேறில் மாட்டிக் கொள்ளும். எல்லோரும் செருப்பை கையில் எடுத்துக் கொண்டோம். மண் மிதிக்கிற சித்தாள் மாதிரி காலை உள்ளே விட்டோம். தோசை மாவுக்குள் கரண்டி போவது போல கால் போய்க் கொண்டே இருந்தது.
ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு ஒரு வழியாக மறு பக்கம் போய்ச் சேர்ந்தோம்.
எப்போதும் வம்புக்கு இழுத்துக் கொண்டிருக்கும் வனஜா மாமி கையைப் பிடித்துக் கொள்ள வேண்டியதாகி விட்டதே என்று சரோஜா மாமிக்கு ரொம்ப வருத்தம். புலம்பிக் கொண்டே வந்தார்.
பிறகு தனியார் பஸ் பிடித்து கவுரி குண்ட் போய்ச் சேர்ந்தோம்.
கவுரி குண்ட் கூட்ட குண்ட் ஆக இருந்தது. கேதார் போக இது தான் நுழைவு வாயில். எங்கு பார்த்தாலும் குல்லா தலைகளாக இருந்தது.
சரவணன் கேதார் உரையை ஆரம்பித்தார்.
“எல்லாரும் டோலியோ..குதிரையோ உங்க சவுகரியப்படி போங்க..ஆனா எப்படி இருந்தாலும் சாயங்காலம் அஞ்சு மணிக்குள்ள ரிடர்ன் வந்துடனும். அப்போத்தான் மறுபடியும் பஸ் பிடிச்சு ராம்பூர் போக முடியும்” என்றார்.
கொஞ்சம் முன்னே போனோம். இங்கு தான் வென்னீர் ஊற்று இருக்கிறது. 15 ஆம்ப்ஸ் ப்ளக் இல்லை. ஷாக் அடிக்கிற மின்வாரிய பில் இல்லை. அது பாட்டுக்கு இயற்கையாக வென்னீர் வந்து கொண்டே இருக்கிறது.
இருபதடிக்கு இருபதடி அளவில் ஒரு குளம் போல் உள்ளது. உள்ளே இறங்கினால் நல்ல சூட்டில் நீர் இருக்கிறது.
கால் மணி நேரம் எருமைகளாக அவதாரம் எடுத்து நீரில் மூழ்கி இருந்தோம். இந்த வென்னீர் ஊற்றுக்கள் எப்படி வருகின்றன என்று தெரியவில்லை. விஞ்ஞானக் காரணங்கள் இருக்கின்றன. அதெல்லாம் கருப்பு சட்டைக்காரர்கள் பார்த்துக் கொள்ளட்டும். நமக்கு வேண்டாம்.
குளித்ததில் உடம்பு வலி கொஞ்சம் குறைந்தது. இதற்கு மேல் நேரம் வீணாக்கக்கூடாது.
குதிரையைத் தேடிப் போனேன்.
(பயணம் தொடரும்)
No comments:
Post a Comment