🥀🥀🥀🥀சார்தாம் 🌻🌻🌻🌻
#சார்தாம் 17
கால் போன போக்கிலே....
- நந்து சுந்து
17. வியூகம் தயாரானது
ராம்பூர் கடல் மட்டத்திலிருந்து 6500 அடி உயரத்தில் உள்ளது. கேதார்நாத் 11800 அடி உயரத்தில் உள்ளது. கிட்டத் தட்ட 5000 அடி வித்தியாசம். இந்த உயரத்தை கடந்தால் தான் கேதார் நாத் தரிசனம்.
11800 அடி...1180 மாடி உயரம்..நினைத்துப் பார்க்கும் போதே மனதுக்குள் லிப்ட் ஓடியது. ஜியாமெட்ரி பாக்ஸுக்குள் அரை அடி ஸ்கேல் மட்டுமே பார்த்துப் பழக்கப் பட்டிருந்த எனக்கு 11800 அடி என்ற தகவலே பிரமிப்பாயிருந்தது.
நாளைக் காலை கேதார் நாத் மேலே இருக்கப் போகிறோம். குளிருக்குத் தேவையான உடைகளை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டோம்.சென்னையில் செங்கல் சூளைக்குப் பழக்கப் பட்ட உடம்பு. இந்த குளிர் தாக்குதலை சமாளிக்குமா என்று பயம் வந்தது.
வெளியே ஜில்லென்ற காற்று. இப்போதே கொஞ்சம் நடுங்கிக் கொள்கிறேன் என்றன விலா எலும்புகள். குளிர் உடம்பை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தது.
இமய மலை மரங்கள் லாட்ஜில் கட்டிலாக மாறியிருந்தது. மெத்தை இருந்தது. போர்த்திக் கொள்வதற்கும் ஒரு மெத்தை கொடுத்திருந்தார்கள். நாலு ஊத்தப்பம் ஒன்று மேல் ஒன்றாய் அடுக்கின மாதிரி தப்பமாக இருந்தது. ஆனால் புளித்த ஊத்தப்பம். ரொம்ப பழைய மாவு. அரதப் பழசு.
அதை ரஜாய் என்று சொல்கிறார்கள். அந்த ரஜாய் எஞ்சாய் செய்யும் படி இருக்கவில்லை. நாங்கள் கொண்டு போயிருந்த போர்வையை போர்த்தி பரிகாரம் செய்து கொண்டோம். அதன் மேல் ரஜாய் போர்த்திக் கொண்டு விடுவது என்று தீர்மானம் செய்தோம்.
சற்று நேரத்தில் சரவணன் வந்தார். காலையில் பஸ்ஸில் பத்து கி.மீ தள்ளி இருக்கும் கவுரி குண்ட் என்னும் ஊருக்குப் போவதாகவும் அதற்கு மேல் பஸ் போகாது என்றும் கூறினார்.
அதன் பிறகு 14 கி.மீ மலைப் பாதை. ரோடு கிடையாது.
கேதார் நாத் மலை ஏற நான்கு முறைகளைக் கடைப் பிடிக்கலாம் என்று கூறினார்.
1.நடந்து போவது
2.குதிரையில் போவது.
3.டோலியில் போவது
4.ஹெலிகாப்டரில் போவது
ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கினார். நடந்து போனால் கால் வலிக்கும். திரும்பி வரும் போது முழங்கால் முட்டியை பையில் போட்டுக் கொண்டு வருவதாக இருக்கும். நேரம் அதிகமாக எடுக்கும். மாலைக்குள் மறுபடியும் கவுரி குண்ட் வந்து சேர வேண்டும்.
சில விதண்டாவாதிகள் நீதி கேட்டு நடைப் பயணம் போகும் தலைவர்கள் போல நாங்கள் நடந்து போகிறோம் என்றார்கள். அவர்களைப் பார்த்தால் அவ்வளவு ஆரோக்கியமானவர்களாகத் தெரியவில்லை. மலை ஏறுவதற்கு பயிற்சி அவசியம். முதல் நாள் ராத்திரி மட்டும் படித்து விட்டு ஐ.ஏ.எஸ் எழுத முயற்சிக்கிறார்கள் என்று தோன்றியது.
குதிரையில் போனால் தொடை வலிக்கும் என்றார். குதிரைக்கு தொடை வலித்தால் எனக்கென்ன என்று நான் குதிரை கட்சிக்கு கை தூக்கினேன். பின்னாலேயே பல குதிரை வீரர்கள் கை தூக்கினார்கள். ஆச்சரிய கரமாக சில ஜான்சி ராணிகளும் குதிரையில் வருவதாக கை தூக்கினார்கள்.
குதிரை சதாப்தி எக்ஸ்பிரஸ் மாதிரி சொகுசாக இருக்கும் என்று அந்த சாவித்திரிகள் நம்பிக் கொண்டிருந்தார்கள்.
குதிரைப் படையில் ஒரு முப்பது பேராவது தேறி இருப்பார்கள்.
அடுத்து டோலி. உங்களை ஒரு பிரம்பு நாற்காலியில் உட்காரவைத்து நான்கு பேர் தூக்கிச் செல்வார்கள். இது சவுகரியமாக இருக்கும் என்று நிறைய பேர் கை தூக்கினார்கள். என் அண்ணனும் அண்ணியும் அந்த க்ரூப்.
“டோலில போனா எங்கே வலிக்கும்?" என்றனர் மக்கள்.
“உடம்பு முழுக்க வலிக்கும்” என்றார் சரவணன். ஆக மொத்தம் நடந்து போனால் கால் வலிக்கும். குதிரையில் போனால் தொடை வலிக்கும். டோலியில் போனால் உடம்பு முழுக்க வலிக்கும்.
"வேற ஏதாவது வழி இருக்கா?"
என்று அவர்கள் கேட்டது "வேற ஏதாவது வலி இருக்கா?" என்று எனக்குக் கேட்டது.
" இது எதுக்கும் தயாரா இல்லாதவங்க ஹெலிகாப்டர்ல போகலாம்” என்றார் சரவணன்.
“வலிக்காதா?"
“பர்ஸுக்கு வலிக்கும்..7500 ரூபாய் " என்றார் சரவணன். சில மருத்துவ காரணங்களுக்காக என் தங்கையும் கணவரும் ஹெலிகாப்டர் கட்சியில் சேர்ந்தார்கள். கடைசியில் பார்த்தால் ஆகாயக் கட்சியிலும் 20 பேர் வந்து விட்டார்கள்.
“காத்தால எல்லாரும் சீக்கிரமே புறப்படனும். அப்போத்தான் சாயங்காலத்துக்குள்ள ரூமுக்கு ரிடர்ன் வர முடியும். லக்கேஜ் எதுவும் வேணாம். ஸ்வெட்டர் குல்லா கை உறை எல்லாம் எடுத்துக்குங்க”
சரி என்று குல்லாய்த் தலையை ஆட்டினோம்.
“ஹெலிகாப்டர்ல போறவங்க மெதுவா புறப்படலாம். 5 கி.மீ தூரத்துல ஹெலிபேட் இருக்கு. அங்க கொண்டு போய் விட்டுடுவோம்.”
சரி என்றனர் ஹெலிகாப்டர் வாசிகள்.
"ஹெலிகாப்டர்ல எலி ஹோஸ்டஸ் இருப்பாங்களா?" என்றார் ஏகாம்பர மாமா.
இப்போது தான் சரவணன் ஒரு அதிர்ச்சித் தகவலை வீசினார்..“சீக்கிரம் கிளம்பறதால யாருக்கும் டிபன் கிடையாது..” என்றார்.
இதை அவர் சொன்னதும் வட கிழக்கு வானில் வால் நட்சத்திரம் தோன்றியது. கெட்ட சகுனங்கள் தோன்றின.
“எல்லாருக்கு பூரி மசால் ஒரு பாக்கெட் கட்டிக் கொடுத்திடுவோம். நீங்க மேல போய் சாப்பிட்டுக்கலாம் “ என்றார்.
சரவணன் இதுவரை சொன்னதிலேயே இது தான் எனக்கு பிடித்திருந்தது. இரு முடி மாதிரி பூரி முடியை நாளை சுமந்து செல்லப் போகிறோம்.
" நீங்க தரிசனம் முடிச்ச உடனே பூரி சாப்பிட்டுக்கலாம்" என்றார்.
கல்யாணம் முடிந்தவுடன் ஆரத்தி எடுப்பது போல தரிசனம் முடிந்தவுடன் பூரித்தி எடுத்து விட வேண்டியது தான்.
இரவு படுக்கையில் படுத்தால் தலையில் 5 ஹார்ஸ் பவர் மோட்டார் ஓடிக் கொண்டே இருந்தது. எனக்கு அலெக்ஸாண்டர் குதிரை வருமா..சத்ரபதி சிவாஜி குதிரை வருமா என்று எதிர் பார்ப்பிலேயே தூங்கிப் போனேன். கனவில் என்னவோ சின்ன வயதில் பார்த்த காஜா பாய் குதிரை வண்டி குதிரை தான் வந்தது.
No comments:
Post a Comment