🥀🥀🥀🥀சார்தாம் 🌻🌻🌻🌻
#சார்தாம் 16
கால் போன போக்கிலே....
- நந்து சுந்து
16. ருத்ரப் பிரயாகை.
மறு நாள் காலையில் எழுந்ததும் லாட்ஜுக்குப் பின் புறம் போனோம். அலக்நந்தா நதி ஆக்ரோஷமாய் ஓடிக் கொண்டிருந்தது. சூரியனின் பிம்பம் நதியில் பட்டுக் கொண்டிருந்தது. நதியில் விழுந்த சூரியன் குளிரில் கொஞ்சம் நெளிந்து கொண்டிருந்தது. சரவணன் ஆணைப்படி எல்லோரும் சீக்கிரமாகவே புறப்பட்டு விட்டோம்.
எங்கள் கூடவே அலக்நந்தா நதியும் வந்து கொண்டிருந்தது. கீழே அதல பாதளத்தில் வெள்ளி சரிகை மாதிரி வளைந்து வளைந்து ஓடிக் கொண்டிருந்தது.. இரண்டு மலைகளுக்கு நடுவே வாட்டமான இடத்தில் பட்டா போட்டிருந்தது. மலைகளின் பள்ளத் தாக்கு எங்கெல்லாம் திரும்புகிறதோ அங்கெல்லாம் நதியும் திரும்பும். ஒரு இடத்தில் பக்காவாக ஒரு எஸ் பெண்ட் எடுத்து திரும்பும். பார்க்க ரம்மியமாக இருக்கும்.
இன்னொரு இடத்தில் ஒரு யூ டர்ன் கூட எடுத்தது. ஒரு நதி யூ டர்ன் எடுத்து இப்போது தான் பார்க்கிறேன். ‘நோ யூ டர்ன்’ போர்டு எல்லாம் நதியிடம் செல்லாது.
அடுத்து 34 கி.மீ தூரத்தில் வரப் போவது ருத்ரப் பிரயாகை. இங்கு மந்தாகினி நதியும் அலக்நந்தா நதியும் சேருகின்றன. மந்தாகினி நதி கேதார் நாத்திலிருந்து வருகிறது. மந்தாகினி - எவ்வளவு அழகான பெயர்? கவிதை எழுதத் தெரிந்த ஏதோ ஒரு ரிஷி தான் இந்த பெயர் வைத்திருக்க வேண்டும். நமது நாட்டில் பிரம்ம புத்திரா தவிர மீதி எல்லா நதிகளுக்கும் பெண் பெயர் தான் வைத்திருக்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை. குறைந்த பட்சம் ஆண்களுக்கு 30% இட ஒதுக்கீடாவது கொடுத்திருக்கலாம்.
ருத்ரப் பிரயாகை சிவனின் இருப்பிடம். நாரத முனிவரை ஆசீர்வதிப்பதற்காக சிவன் ருத்ரனாக இங்கு தோன்றினார். இங்கு சிவன் ருத்ர வீணை வாசித்ததோடு ருத்ர தாண்டவமும் ஆடினார்.
ருத்ர பிரயாகையில் சாலை இரண்டாகப் பிரிகிறது. ஒரு சாலை அலக்நந்தா ஒட்டிப் போகும். அது பத்ரிநாத் போகிறது. இன்னொரு சாலை மந்தாகினி நதியை ஒட்டி போகும். அது கேதார்நாத் போகிறது. நாங்கள் முதலில் கேதார்நாத் போவதால் மந்தாகினியின் கையைப் பிடித்துக் கொண்டோம்.
ருத்ரப் பிரயாகை தாண்டியவுடன் ஏதோ ஒரு அணை கட்டிக் கொண்டிருந்தார்கள். நீர் மின்சார திட்டம் போல இருந்தது. மலை உச்சிகளில் போகும் உயர் அழுத்த மின் கம்பிகளையும் டவர்களையும் பார்க்கும் போது அதை நிர்மாணிக்க சிரமப்பட்ட பொறியாளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஊருக்குப் போனவுடன் மின்சார பில் உரிய தேதிக்கு முன்னதாகவே கட்டி விட வேண்டும்.
சிறிது தூரம் போனவுடன் ஒரு குறுகலான பாலம் வந்தது. தொல் பொருள் ஆராய்ச்சி இலாகா தத்து எடுக்க வேண்டிய பழைய காலத்துப் பாலம். பாலத்தைக் கடந்தவுடன் இடது பக்கம் வந்து கொண்டிருந்த மந்தாகினி வலது பக்கம் வந்தது. பெண்கள் இப்படித்தான் அடிக்கடி சைடு மாறுவார்கள் என்று மந்தாகினி கூட நிரூபித்தது.
சிறிது தூரத்தில் அகஸ்தி முனி என்று ஓர் ஊர் வந்தது. நமது பொதிகை மலை அகஸ்தியர் தான். இவ்வளவு சின்ன உடம்பை வைத்துக் கொண்டு அகஸ்தியர் எப்படி வடக்கு தெற்கு என்று சுற்றிக் கொண்டிருந்தார் என்று தெரியவில்லை.
போகும் வழியில் பெயர் பலகையில் எல்லாம் யூ.கே என்று போட்டிருக்கும். எனக்கு தெரிந்து யூ.கே என்றால் யுனைட்டெட் கிங்க்டம் தான். இங்கிலாந்து இங்கு எங்கு வந்தது என்று பார்த்தால் பின்னர் புரிந்தது. உத்தர் காண்டின் சுருக்கம் யூ.கே என்று. ஊருக்குத் திரும்பிப் போனவுடன் யூ.கே வுக்கு பஸ்ஸில் போய் விட்டு வந்தேன் என்று உங்கள் வீட்டு பூக்காரம்மாவிடம் நீங்கள் தைரியமாகச் சொல்லலாம்.
ஹரித்வாரில் பஸ் ஏறிய உடனேயே நான் சரவணனிடம் தொண தொணக்க ஆரம்பித்து விட்டேன்.” எனக்கு எப்போ ஐஸ் இருக்கற மலையைக் காட்டுவீங்க?”
“வரும் சார்..இப்போ வந்துடும்..” என்று அவரும் என்னிடம் போக்கு காட்டிக் கொண்டிருந்தார்.
ஐந்து கி.மீட்டருக்கு ஒரு தடவை ‘சந்தைக்கு போகனும் காசு கொடு’ கமல் மாதிரி ட்வீட் போட்டுக் கொண்டே வந்தேன்.
ஸ்கூலுக்கு போகும் ஸ்வெட்டர் குழந்தைகளை வியப்புடன் நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது சரவணன் என்னிடம் வந்தார். “அங்கே நேராப் பாருங்க..” என்றார்.
பார்த்தேன். அப்படியே உறைந்து விட்டேன். உறை பனி மூடிய சிகரங்கள் கண்ணுக்குத் தெரிந்தன. சூப்பர் ஸ்டார் பேர் டைட்டிலில் போட்டவுடன் வரும் அட்ரினல் ரஷ் உடம்பில் வந்தது. ஐ மேக்ஸ் தியேட்டர் ஸ்க்ரீன் மாதிரி பனி மலை முழு அகலத்திற்கும் வியாபித்திருந்தது.
கொஞ்ச நேரம் சரவணன் பஸ்ஸை நிறுத்த சொன்னார். எல்லோரும் இறங்கி தூரத்தில் தெரியும் பனிச் சிகரங்களைப் பார்த்தோம். நாளை இதன் அருகில் போகப் போகிறோம் என்ற நினைப்பே ஆனந்தம் கொடுத்தது.
நிறைய போட்டோக்கள் பிடித்தோம். அதிகமாக போக்குவரத்தும் இல்லை. சாலை வெறிச்சோடிக் கிடந்தது. சாலையோரம் அமர்ந்தோம்...குளிர் காற்று வீசியது. நெஞ்சிலும் தான்... .பின்னர் மறுபடியும் புறப்பட்டோம்.
வழியில் குண்டு சட்டி, குப்த காசி, சோனப் ப்ரயாக் ஊர்களையெல்லம் கடந்து மதியம் ராம்பூர் என்னும் ஊர் வந்து சேர்ந்தோம். இது கேதார் நாத்துக்கு முன் இருக்கும் ஒரு ஊர். இங்கு தான் எங்களுக்கு தங்குவதற்கு ரூம் போட்டிருந்தார்கள்.
கல்யாண கும்பல் மாதிரி லாட்ஜுக்குள் நுழைந்தோம்.
அந்த லாட்ஜ் ஒரு பக்கா ஹிமாசலப் பிரதேச லாட்ஜ். மலை சரிவுகளின் மேல் கட்டியிருந்தார்கள். அக்ரஹாரத்து வீடு மாதிரி வாசலில் நூறு அடி நீளத்தில் பெரிய திண்ணை இருந்தது.
இரண்டு மாடியுடன் பழைய கால ஸ்டைல். நயந்தாராவை வைத்து ஒரு திகில் படம் எடுக்கலாம் போல இருந்தது. இமயத்தில் அவ்வளவு உயரத்தில் இந்தளவுக்கு ஒரு தங்குமிடம் இருநததே பெரிய விஷயம் தான்.
மதிய உணவுக்குப் பிறகு அந்த சிறிய ஊரில் லாட்ஜ்ஜின் முன்னால் இருக்கும் சாலையில் நடந்தோம். ஆங்காங்கு ஆப்பிள் பழங்கள் விற்றுக் கொண்டிருந்தார்கள்.
பெண்கள் விளக்குக் கம்பம் மாதிரி வளைந்து முதுகில் சுமைகளைத் தூக்கி நடந்து கொண்டிருந்தார்கள்.
ஒரு கணம் மலைப்பாக இருந்தது. இந்த உலகத்தை விட்டே வேறு உலகம் வந்திருந்தது போல இருந்தது. மரம் செடி கொடிகள் தவிர அபூர்வமாய் கண்ணில் படும் மனிதர்கள். இங்கு எதுவுமே நம் வீடு தேடி வராது. நடந்தால் தான் சாப்பாடு.
“மெட்ரோ ரயில் வேலை ஏன் இவ்வளவு மெதுவாக நடக்கிறது?” என்று ஹிந்து பேப்பருக்கு கடிதம் எழுதும் பிரஜைகள் இங்கு ஒரு தடவை வர வேண்டும்..
(பயணம் தொடரும்)
No comments:
Post a Comment