🥀🥀🥀🥀சார்தாம் 🌻🌻🌻🌻
#சார்தாம் 15
கால் போன போக்கிலே....
- நந்து சுந்து
15. மண் சரிந்தது
தேவப் பிரயாகை பற்றிய கட்டுரை படித்து கொஞ்சம் பேர் கொட்டாவி விட்டு இருக்கலாம். அநியாயத்துக்கு வெறும் தகவல்களும் புராணங்களுமாக கோவில் வாசலில் விற்கும் மட்டி பேப்பர் தல புராண புத்தகம் போல இருக்கிறதே என்றும் தோன்றலாம். அவர்களுக்காக ஒரு சிறிய த்ரில்லிங்கான அனுபவம் இப்போது வரப் போகிறது.
தேவப் பிரயாகை தாண்டிய பிறகு போக்குவரத்து இன்னும் அதிகமாகி விட்டது. எதிரிலிருந்து நிறைய வண்டிகள் வர ஆரம்பித்தன. ரயில்வே கேட் திறந்த மாதிரி வாகனங்களின் ஒழுங்கீனமான படையெடுப்பு. பில் கேட்ஸ் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் எழுதினால் கூட இதை சரி செய்ய முடியாது. சில சமயம் எதிரே வரும் வண்டி எங்கள் வண்டிக்கு நேராக வந்து நின்று விடும். கீழே இறங்கி தடை செய்யப் பட்ட வார்த்தைகளில் சண்டை போட நேரம் இல்லை. யாராவது ஒருவர் ஒதுங்கி இடம் விட வேண்டும்.
எங்கள் டிரைவர் அநியாயத்திற்கு நல்லவர். அன்பு மணிக்கு கூட 150 தொகுதிகள் கொடுக்கும் அளவுக்கு தாராள மனசு உள்ளவர். வழி விடுவதற்காக வண்டியை ரிவர்ஸ் எடுப்பார். சாலை அகலம் குறைவு. ஸ்லிம் ஃபிட் சட்டை மாதிரி. எட்டிப்பார்த்தால் 2000 அடி பள்ளம். அவர் பாட்டுக்கு ஏதோ சினிமா தியேட்டரில் பார்க்கிங்கில் நிறுத்துவது போல ரிவர்ஸ் எடுப்பார். எனக்கு உதறல் எடுக்கும். ரிவர்ஸ் எடுத்து விட்டு டிரைவர் அநாவசயத்துக்கு சிரிப்பார். “சிலர் சிரிப்பார் ..சிலர் அழுவார்” என்று எனக்குள்ளே கண்ணதாசன் பயமுறுத்துவார்.
இன்னும் கொஞ்ச தூரம் போனவுடன் போக்குவரத்து குறைந்தது. வண்டி கொஞ்சம் வேகமாகப் போனது. எங்களின் ஆறு பஸ்களும் வரிசையாகப் போய் கொண்டிருந்தன. அதில் எங்களது பஸ் இரண்டாவது.
திடீரென எதிர் திசையிலிருந்து வந்து கொண்டிருந்த ஜீப் நின்றது. “ஸ்டாப்..ருகோ..ருகோ..” என்று கத்தினார்கள். பஸ்கள் நின்றன. அணு குண்டு சோதனை நடத்தியது போல மலையிலிருந்து சட சடவென பாறைகளும் மண்ணும் சரிந்தன. சரியாக முப்பதே செகண்டில் எங்கள் பஸ் முன்னால் இருந்த சாலை முழுக்க மூடிக் கொண்டு விட்டது.
எங்கள் பஸ் மட்டும் இருபது அடி முன்னால் போயிருந்தால் போதும். பஸ் மீது பாறைகள் விழுந்து எங்கள் பஸ் செய்தித் தாள்களில் போட்டோ ஆகியிருக்கும். பஸ்ஸிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
பத்திரிக்கைகளில் படித்திருந்த மலைச்சரிவை கண் முன்னால் லைவ் ஆக நேரில் பார்த்த அனுபவம் நடுங்க வைத்துக் கொண்டிருந்தது.
எல்லோரும் பஸ்ஸை விட்டு இறங்கினோம். மூன்றடி உயரத்திற்கு சாலை மூடியிருந்தது. இருபதடி நீளத்திற்கு சிறிய பாறைகளும் மணலும் குவிந்திருந்தன.
இனி முன்னாலும் போக முடியாது. பின்னாலும் போக முடியாது. சரியாகும் வரை குடித்தனம் இங்குதான்.
“கல்லைதான்..மண்ணைத் தான்..கரைத்துத்தான்..குடிக்கத் தான்..கற்றுத் தான் தந்தானா?” – அவ்வையார் இங்கு மாட்டிக் கொண்ட போது தான் பாடியிருக்க வேண்டும்.
இந்த இடத்தில் தான் சர்தார்ஜிகளின் தைரியத்தையும் கடின உழைப்பையும் நேரில் பார்த்தேன். அந்த ஜீப்பில் வந்தவர்கள் சர்தார்ஜிகள். கீழே இறங்கிய அவர்கள் பாறைகளையும் மண்ணையும் அப்புறப் படுத்த ஆரம்பித்தார்கள். பிறகு மற்ற வண்டிகளில் இருந்தவர்களுக்கும் உணர்வு வந்து எல்லோரும் மண்ணை அப்புறப் படுத்த ஆரம்பித்தார்கள். எங்களுக்கு மண்ணாசை இல்லாததால் நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.
ஓரளவிற்கு அப்பறப் படுத்திய பிறகு ஒரு அடி உயரத்திற்கு மண் இருந்தது. எங்கள் பஸ் அந்தப் பக்கம் போனால் தான் சர்தார்ஜிகள் இந்தப் பக்கம் வர முடியும். சர்தார்ஜிகள் எங்களுக்கு முன்னால் இருந்த எங்கள் குழுவின் முதல் பஸ் டிரைவரிடம் வந்து வண்டியை அதன் மீதே ஓட்டிச் செல்லச் சொன்னார்.
டிரைவர் தயங்கினார். சர்தார்ஜிகள் “சலோ..சலோ..” என்று கத்தினார்கள்.
பயத்துடனேயே முன்னால் இருந்த பஸ்ஸை எடுத்தார் டிரைவர். பர்ஸ்ட் கியரைப் போட்டு ஆக்சிலேட்டரை அமுக்கியவுடம் மூன்று அடி மண் மேல் ஏறிய பஸ் அப்படியே பின்னால் வர ஆரம்பித்தது. கொஞ்சம் பேலன்ஸ் தவறி பாக்க வாட்டில் சாய்ந்தாலும் இரண்டாயிரம் அடி பள்ளம் தான்.
மறு படியும் கொஞ்சம் மணலெடுத்து சமன் செய்தார்கள். டிரைவர் ஏறி ஆக்ஸிலேட்டரை அமுக்கினார். சர்க்கஸில் இந்த பக்கத்திலிருந்து அந்த பக்கம் தாவும் ஜீப் போல பஸ் பத்திரமாக அந்த பக்கம் போய் லேண்டிங் ஆனது.
சர்தார்ஜிகள் விசில் அடித்தார்கள்.
அடுத்தது எங்கள் பஸ். எங்கள் டிரைவர் கெட்டிக்காரர் தான். பார்த்த சாரதிதான். இருந்தாலும் எங்களுக்கு வயிறு கலக்கியது. காலையில் சாப்பிட்ட பொங்கல் கருங்கல் ஆனது. டிரைவர் இஞ்சின் ஆன் செய்தார். பஸ்ஸில் இருந்த எல்லோரும் ஸ்தோத்திரம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். பஸ் உள்ளே ஒரு பக்கத்தில் வெங்கடேஸ்வரா பக்தி சேனலும் இன்னொரு பக்கம் சங்கரா டி.வி யும் ஓட ஆரம்பித்தது.
நானும் முருக பக்தனானேன். சஷ்டியை நோக்க சரவணபவனாருக்கு மேல் மறந்து போயிருந்த கந்த சஷ்டி கவசம் முழுவதுமாக நினைவு வந்தது. பஸ்ஸை ஒரு கிளப்பு கிளப்பினார் டிரைவர். பஸ் மேட்டில் ஏறி அதே வேகத்தில் கொஞ்ச நேரம் ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்தது. நான் ‘சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்’ சொல்லும் போது எங்கள் பஸ் பாதுகாப்பாக லேண்டிங் ஆகி இருந்தது.
எல்லோரும் போய் டிரைவருக்கு தேங்க்ஸ் சொன்னோம். அவர் மிக்சர் மாமா மாதிரி எந்த ரியாக்சனும் காட்டாமல் பான் பராக் மென்று கொண்டிருந்தார்.
மறு பிறவி எடுத்ததைக் கொண்டாடும் வகையில் வழியில் ஒரு வசதியான இடத்தில் பஸ்ஸை நிறுத்தி மதிய உணவை சாப்பிட்டோம்.அப்போதே மணி மூன்றுக்கு மேல் ஆகி விட்டது. ஒரு வழியாக ஆறு மணிக்கு மேல் ஸ்ரீ நகரை அடைந்தோம் (காஷ்மீர் ஸ்ரீநகர் அல்ல).
வெறும் 34 கி.மீ கடக்க எங்களுக்கு நான்கு மணி நேரம் ஆகியிருந்தது.
ஹோட்டல் போய் சேர்ந்ததும் பக்கத்து சீட் சிதம்பரம் அய்யா கேட்டார், “ வழில பஸ் ஏதோ ஸ்பீட் ப்ரேக்கர்ல ஏறின மாதிரி இருந்ததே..என்ன அது?”
No comments:
Post a Comment