Thursday, October 7, 2021

கால் போன போக்கிலே சார்தாம் 14

 🥀🥀🥀🥀சார்தாம் 🌻🌻🌻🌻

#சார்தாம் 14

கால் போன போக்கிலே....

- நந்து சுந்து

14. தேவப் பிரயாகை

தேவப் பிரயாகை ரிஷிகேஷிலிருந்து 71 கி.மீ தூரத்தில் உள்ளது. இது ஒரு புன்ணிய தலமாகக் கருதப்படுகிறது. பிரயாக் என்றால் நதிகள் சங்கமிக்கும் இடம். தேவர்களின் புண்ணிய பூமி என்று கருதப் படுவதால் தேவப் பிரயாக் என்று பெயர் வந்திருக்கிறது. 

இங்கு தான் அலக்நந்தா நதியும் பாகீரதி நதியும் ஒன்று சேருகின்றன. பாகீரதி நதி கங்கோத்திரிக்கு மேல் கோமுக்கிலிருந்து வருகிறது. அலக்நந்தா நதி பத்ரிநாத்துக்கு மேல் குபேரனின் தலை நகரான அலகாபுரியிலிருந்து வருகிறது.

இந்த இரண்டு நதிகளுக்குமே பலம் அதிகம். தொண்டர்களும் அதிகம். இவை இரண்டும் கூட்டணி வைத்துக் கொண்டால் எப்படி இருக்கும்?.. அந்த கூட்டணியில் பிறந்தது தான் சக்தி வாய்ந்த கங்கை நதி. புரிகிற மாதிரி சொல்வதென்றால் தேவப் பிரயாகைக்குக் கீழே இறங்கி ஓடும் நதிக்குப் பெயர் தான் கங்கை. அதற்கு முன் பெயர் வேறு. அதைப் பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.

இங்கு சங்கமிக்கும் அலக்நந்தா நதியும் பாகீரதி நதி நீரும் வேறு வேறு நிறத்தில் இருக்கும். பாகீரதி பச்சை நிறத்தில் ஆர்பரித்து ஓடி வரும். அலக்நந்தா மண் நிறத்தில் கொஞ்சம் அமைதியாக வரும். சங்கமம் ஆவது கண்ணுக்கு தெளிவாகத் தெரியும். சங்கமம் ஆனதும் இரண்டும் கலந்து ஒரு புது உருவத்தில் தன் பாதையைத் தொடரும். புகுந்த வீட்டில் நுழைந்த மருமகள் ஒன்றர கலந்து விடுவது போல.  முதன் முறையாக தப்பான உதாரணம்  சொல்லி விட்டேனோ? 

நதிகளின் சங்கமம் மலைப் பகுதியில் கொஞ்சம் ஆழத்தில் நடைபெறுகிறது. இறங்கிப் போக வேண்டும். எங்களுக்கு நேரம் இல்லாததால் பஸ்ஸிலிருந்தே பார்த்தோம்.  V ஷேப்பில் பார்க்க அழகாக இருந்தது. பக்கத்தில் போய் பார்த்தால் கண்டிப்பாக பயமாக இருந்திருக்கும். சில இடங்களில் க்ளோஸ் அப் தவிர்ப்பது நல்லது.

பத்ரி நாத்தில் பூஜை செய்யும் பூசாரிகள் இங்கு தான் தங்குகிறார்கள். இவர்கள் எல்லாம் தென்னிந்தியாவிலிருந்து எட்டாம் நூற்றாண்டில் ஆதி சங்கரருடன் இங்கு வந்தவர்கள். இவர்களைப் பற்றி ஜோஷிமட் போகும் போது விரிவாகப் பார்க்கலாம். 

போக்குவரத்து வசதி இல்லாத அந்த காலத்தில் சார் தாம் யாத்திரைக்கு நடந்து தான் போவார்கள். தேவப் பிரயாகை வரும் போதே காய்ச்சல் வாந்தி எல்லாம் வந்து விடுமாம். அது வராமல் எதிர் கொண்டு ஒருவர் நின்று விட்டால் மேலே செல்வதற்கு உடல் தகுதியானது என்று அர்த்தம். அந்த காலத்திலேயே தேவப் பிரயாகையில்  நீட் நுழைவுத் தேர்வு வைத்திருந்தது ஆச்சரியம் அளித்தது.

இங்கு வந்து கலக்கும் பாகீரதி நதிக்கு ஒரு பெரிய வரலாறு இருக்கிறது.

கெளசல்ய தேசத்து அரசன் தசரதன் (ராமனின் தந்தை) தெரியும் அல்லவா?..அவரின் மூதாதையர்களில் ஒருவர் தான் சகரன். அவர் அசுவமேத யாகம் செய்ய நினைத்தார். குதிரையை நாடெங்கும் அனுப்பி மற்ற அரசர்களை அடிபணிய வைப்பதாகத் திட்டம். ஆனால் அந்த குதிரையை இந்திரன் கவர்ந்து சென்று விட்டார்.

இந்திரன் இது மாதிரி சில பல விஷமத்தனமான காரியங்களை அவ்வப்போது செய்வது வழக்கம். பிறகு முனிவர்களின் சாபத்தை ஏற்று விசித்திர உருவங்களாக மாறி தண்டனையை  அனுபவிப்பதும் வழக்கம். நன்னடத்தை காரணமாக சாபத்திலிருந்து மீண்டு வருவார். கொஞ்ச நாளில் மறுபடியும் விஷமம். மறுபடியும் சாபம்.

 யாராவது மன்னரோ, ரிஷியோ கொஞ்சம் பலம் பெற்று விட்டால் இந்திரனுக்கு பயம் வந்து விடும். தன் தேவலோக அரசன் பதவிக்கு ஆபத்து வந்து விடும் என்று. இந்திர லோக வாசலில் “நிரந்தர அரசரே” என்று ப்ளெக்ஸ் பேனர் வைத்துக் கொள்ள வேண்டும்   என்ற அரசியல் வாதிக்கான நியாயமான ஆசை இந்திரனுக்கும் உண்டு. இதற்காக தேவ லோக பீனல் கோட் எல்லாம் அடிக்கடி மீறுவார். அவ்வப்போது ரம்பா மேனகை எல்லாம் ஏவி விட்டு முனிவர்களை இம்சைப் படுத்துவார். 

குதிரை காணாமல் போனதும் யாகம் நின்று விட்டது. குதிரையைத் தேடி சகரனின் மகன்கள் உலகெங்கும் போனார்கள். கடைசியில் பார்த்தால் பாதாள லோகத்தில் கபில முனிவரின் ஆசிரமத்தில் குதிரை இருந்தது (இங்கு ஒளித்து வைத்தது நமது இந்திரன் அவர்களே..)

சகரனின் குமாரர்கள் கபில முனிவர் தான் குதிரையைத் திருடி விட்டார் என்று மேலே பாய்ந்தார்கள். கோபம் கொண்ட முனிவர் கண்களைத் திறந்தார். குமாரர்கள் அனைவரும் அங்கேயே சாம்பல் ஆனார்கள்.

இந்த சூர்ய வம்சத்தில் பின்னர் பகீரதன் என்ற அரசன் தோன்றினார். அவருக்கு புத்திர பாக்யம் இல்லை. கபில முனிவர் சாபத்தால் இறந்து போன மூதாதையர்களுக்கு கங்கை நீரைக் கொண்டு திதி செய்ய முடியவில்லையே என்ற ஏக்கமும் இருந்தது. இந்த இரண்டு கோரிக்கைகளும்  நிறைவேறுவதற்காக கடும் தவம் இருந்தார். பிரம்மனால் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் போகவே சிவனை நோக்கி தவம் செய்தார். 

சிவன் பகீரதன் முன்னால் தோன்றினார். “உனக்காக கங்கையை நான் பூமிக்குக் கொண்டு வருவேன்” என்று அருளினார். அவர் சொல்படி கங்கை பூமிக்கு இறங்கினாள். அதி வேகமாக சிவனின் தலையில் விழுந்த கங்கை அதே ஆர்ப்பரிப்புடன் பாதாளத்திற்கு பாய புறப்பட்டாள். இந்த வேகத்தை பூமி தாங்காது என்று நினைத்த சிவன் கங்கையை தன் தலை முடியில் கட்டி விட்டார். பகீரதன் கவலைப் பட்டார். பின்னர் சிவன் தன் தலை முடி வழியாக கங்கையை மெதுவாக கீழே இறக்கினார். கங்கையும் சீரான வேகத்தில் பூமிக்கு வந்தது.

பகீரதன் முயற்சியால் பூமிக்கு வந்த நதிக்குப் பாகீரதி எனும் பெயர் வந்தது.

 கங்கோத்ரியிலிருந்து தேவப் பிரயாக் வரை கங்கைக்கு பாகீரதி என்று தான் பெயர். தேவப் பிரயாகையில் அலக்நந்தா சங்கமித்த பிறகு கங்கையாக பெயர் மாற்றம் ஏற்படுகிறது.

கங்கா சந்திரமுகி ஆன கதை போல பாகீரதி கங்கா ஆன கதை இது தான்.

பற்பல இன்னல்கள் வந்தாலும் எல்லாவற்றையும் எதிர் கொண்டு பகீரதன் கங்கை நதியை பூமிக்குக் கொண்டு வந்தார். அதனால் தான் முடியாத காரியங்களைக் கடும் முயற்சியால் முடிப்பதற்கு பகீரதப் பிரயத்தினம் என்று ஒரு சொற்தொடர் வந்தது.

 இந்த தொடரை நீங்கள் படித்து வருவது கூட ஒரு விதத்தில் பகீரதப் பிரயத்தனமே.. 


                                                                               (பயணம் தொடரும்)





No comments:

Post a Comment