Thursday, October 7, 2021

கால் போன போக்கிலே சார்தாம் 13

 🥀🥀🥀🥀சார்தாம் 🌻🌻🌻🌻

#சார்தாம் 13

கால் போன போக்கிலே....

- நந்து சுந்து

13. ஆபத்தான வளைவுகள்

பஸ் டிரைவர் வளைவான மலைப் பாதைகளில் லாகவமாக ஓட்டிக் கொண்டிருந்தார். மாருதி டிரைவிங் ஸ்கூல் (பெண்களால் பெண்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும்) மூலமாக டிரைவிங் லைசென்ஸ் வாங்கிய ஆத்மாக்கள் இந்த சாலையில் ஓட்டினால் ஜன்னி காண்பது நிச்சயம். 

எங்கள் டிரைவர் சொன்ன பேச்சை எல்லாம் கேட்டு ஸ்டீயரிங் வளைந்து கொடுத்துக் கொண்டிருந்தது. ரிட்டயர் ஆன ஸிவராமன் மாதிரி என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டிருந்தது அந்த ஸ்டீயரிங். 

ஓட்டிக் கொண்டே இருக்கும் போது அறுபது டிகிரியில் ஒரு வளைவு வரும். ஸ்டீயரிங் சரியாக ஒடியாவிட்டால் ஆறிலும் சாவு அறுபதிலும் சாவு தான். ஒவ்வொரு வளைவும் டிரைவரின்  மண்டையில் ஹார்ட் டிஸ்க்கில் பதிவாகி இருக்க வேண்டும். குறுகலான சாலை. சாலைக்கு கைப்பிடி சுவர் கிடையாது.  வேகவைத்த முழு உருளைக்கிழங்கு மாதிரி சாலை  ஓரம் மொழுக் என்று இருக்கும். 

கடைசி நுனி வரை முன் சக்கரம் போய் விர்ரென்று இடது பக்கம் திரும்பும். டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து சாலையைப் பார்த்தால் உங்கள் உடம்பில் ஐந்து லிட்டர் நீர்ச் சத்து காணாமல் போகும்.

அங்கங்கே போர்டுகள் வேறு. கற்கள் விழும் பகுதி (rock falling zone) நிறுத்தாமல் போகவும் என்று. கம்பி வேலிகள் போட்டு மலைச் சரிவை மூடியிருப்பார்கள். அதையும் பிய்த்துக் கொண்டு கற்களும் மண்ணும் விழுந்திருக்கும். தெர்மோகோல் போட்டு மலைச்சரிவை நிறுத்தலாம் என்று வட இந்தியர்களுக்கு தெரியாமல் போனது விசித்திரமாக  இருக்கிறது.

கற்கள் விழும் பகுதி போர்டை பார்த்து வயிறு கலங்கும். ஏதோ கடையின் பெயர்ப் பலகையை படிப்பது போல படித்து விட்டு டிரைவர் கண்டும் காணாமல் அதை கடந்து போவார்.. நிம்மதி பெரு மூச்சு விடுவோம். பத்து நிமிடத்தில் அதே மாதிரி இன்னொரு போர்டு. வாட்ஸ் அப்பில் ஒரே மேஸ்ஸெஜ் தொடர்ந்து ஃபார்வேர்டாக வந்து கொண்டிருப்பது போல அதே போர்டுகள் திரும்பித் திரும்பி வந்து கொண்டிருக்கும்.

 ரிஷிகேஷ் தாண்டி போகும் போது அதல பாதாளத்தில் கங்கை நதி தெரிந்தது. இமயமலை யாத்திரையின் போது நம் கூடவே நதிகள் வந்து கொண்டிருக்கும். ஒரே நதி என்று தப்பாகக் கணக்கு போட்டு விடக் கூடாது. வேறு வேறு நதிகள். வேறு வேறு பெயர்கள். கொஞ்சம் ஹோம் வோர்க் செய்து படித்து விட்டுப் போனால் நதிகளின் பின் புலம்  புரியும். வட நாட்டான் வேட்டி கட்டிய தென்னிந்தியர் அனைவரையுமே மதராஸியாக நினைப்பது போல இமயத்தில் ஓடும் எல்லா நதிகளும்  கங்கை என்று மதராஸிகள் நினைப்பதும் சரியல்ல. 

அப்போது தான் சாலைகள் திறந்திருந்ததால் மேலே மாட்டிக் கொண்டிருந்த வண்டிகள் எல்லாம் கீழே வந்து கொண்டிருந்தன. அடர்த்தியான டிராபிக். மேலே போவதில் எங்கள் வண்டிகள் தான் முதல்.

வழியில் ஒரு இடத்தில் ஒரு சிறிய நீர்வீழ்ச்சி வந்தது. அந்த இடத்தில் காலை டிபனுக்காக வண்டி நின்றது. இமய மலையில் சாப்பிடும் முதல் இட்லி. நிதானமாக சாப்பிட்டோம். சூழ்நிலை ரம்மியமாக இருந்தது. அனைவர் தட்டிலும் எட்டிலி இருந்தது. 

டிரைவரும் சப்பாத்தியிலிருந்து இட்லிக்கு சந்தோஷமாக மாறியிருந்தார். எவ்வளவு சாப்பிட்டாலும் கிட்டத் தட்ட ஐம்பது அறுபது இட்லிகள் மீந்து விட்டன. வாங்கிக் கொள்ள அருகில் யாரும் இல்லை.  அப்படியே பள்ளத்தாக்கில் நீர் விழும் இடத்தில் கொட்டி இமய மலைக்கு நைவேத்யம் செய்ய வேண்டியதாகி விட்டது. சிறிய நீர் வீழ்ச்சியிலிருந்து லேசாக தூறல்  மாதிரி நீர். அதனுடன் சேர்ந்து இட்லி ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்தது. ரமணன் பாஷையில்  இட்லியுடன் கூடிய மழை. 

மறுபடியும் வண்டியில் ஏறினோம். வழியில் மறுபடியும் டிராபிக் ஜாம். இறங்கிப் பார்த்தால் ஒரு கேஸ் சிலிண்டர் லாரி நின்று கொண்டிருந்தது. மூன்று நாட்களாக சாலைகள் அடை பட்டுப் போனதால் இப்போது தான் அந்த லாரி அந்த சிறிய ஊருக்கு வந்திருக்கிறது. தள்ளு வண்டியில் இருக்கும் கொய்யாப் பழம் போல சிலிண்டர் வாங்குவதற்கு உள்ளூர் மக்களின் கூட்டம் குவியலாக இருந்தது. 

மலைப் பகுதியாக இருப்பதால் சிலிண்டர் டோர் டெலிவரி கிடையாது. லாரி வரும் நேரம் மக்கள் வந்து சிலிண்டர் வாங்கிக் கொண்டு மலைப் பகுதியில் முதுகில் வைத்துத் தூக்கிக் போக வேண்டும்.

பஸ்ஸிலிருந்து மாமிகள் இந்த காட்சியை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். “ மூனு மாடி தானேப்பா.. கொண்டு வந்து வெச்சிடேன்...” என்று டெலிவரி பாயிடம் வழக்கமாகக் கெஞ்சும்  கேஸ் புக் ப்ரெண்ட் மாமிகளுக்கு மலைப்பாக இருந்தது. வாழ்க்கையின் இன்னொரு பகுதி என்னவென்று புரிந்திருக்கும் அவர்களுக்கு. (எங்கள் அபார்ட்மெண்டில் piped gas என்பது ரகசியமாகவே இருக்கட்டும்) கேஸ் லாரி நகர்ந்ததும் பஸ் புறப்பட்டது. 

இப்போது மலையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை இன்னும் நன்றாக உணர முடிந்தது. ஸ்பூனால் வெட்டிய  ஹால்டிராம்ஸ் சோன்பப்டி மாதிரி செதில் செதிலாக இமயமலை  சிதைந்து போயிருந்தது. 

எனக்கென்னவோ இது ஒரு டிரெயிலர் தான்...மெயின் பிக்சர் இனிமேல் தான் வரப் போகிறது என்று உள்ளுணர்வு உறுத்தியது. 

அடுத்து வரப் போவது தேவப் பிரயாகை என்று எனக்குத் தெரியும். பக்கத்தில் தூங்கிக் கொண்டே வந்த சிதம்பரம் காரருக்குத் தான் தெரியாது. "சார்..கேதார் நாத் வந்தா என்னை இறக்கி விட்டுடுங்க” என்று சொல்லிவிட்டு “தோள் கண்டார்..தோளே கண்டார் “ என்று என் தோள் மேல் தொங்க ஆரம்பித்தார்.

தேவப் பிரயாகையைப் பற்றி இப்போதே சொல்லி விடலாம் தான். அது மரியாதை இல்லை. தேவப் பிராயகைக்கு ஒரு பெரிய சரித்திரம் இருக்கிறது. அதற்கு போன யுகத்திற்கு போக வேண்டியிருக்கும். அதில் புனிதமான பாகீரதி நதி வேறு சம்பந்தப்பட்டிருக்கிறது. எனவே இப்போதைக்கு சிதம்பரம் காரரை தொந்தரவு செய்யமல் கலைந்து போகலாம்.

                                                                               (பயணம் தொடரும்)



No comments:

Post a Comment