Thursday, October 7, 2021

எங்கே என் வாசுதேவன்

 ராம் ராமச்சந்திரன்

நான்  பேச்சிலராக இருந்து கொட்டமடித்துக் கொண்டிருந்த த்ரேதாயுக '70s காலத்தில் மதுரையின் வடக்கு மாசி வீதியில் ஒரு மேன்ஷனில் நண்பர்கள் சிலருடன் தங்கியிருந்தேன்.  

சிலர் என்னைப் போலவே 'கையில பை, கழுத்துல டை, வாய்ல பொய்' மெடிக்கல் ரெப்ரசென்டேடிவ்கள்,  சிலர் மதுரா மில்ஸ் எஞ்சினியர்கள். ஒருத்தன் இன்டர் சி ஏவுக்கு முக்கிக் கொண்டிருந்தான்.  ஒருத்தன் உரம் விற்க ஊர் ஊராய்ச் சுற்றுவான்.  ட்ராக்டர் ஸ்பேர்ஸ் விற்க முயன்ற ஒருத்தன் பிற்காலத்தில் சென்னையில் இன்கம் டேக்ஸ் கமிஷனர் ஆனான். செட்டியார், அய்யர், முஸ்லிம் என்று கலந்துகட்டியான ஜாலிக் கும்பல்.

எங்கள் குரூப்பில் புல்லெட், ராஜ்தூத், லேம்ப்ரெட்டா, ஜாவா என்று பலவித வாகனங்கள். எந்த வண்டியில் பெட்ரோல் இருக்கிறதோ அது தன் வண்டியாக அன்று நண்பர்களால் பாவிக்கப்படும்.

யாருக்கும் எதுவும் சொந்தமில்லை. எல்லாமே கம்யூனிடி ப்ராபர்டி தான். யாராவது ஒருததர் ஏதோ ஒரு ஆட்டத்தில் வின் பண்ணி எல்லோருக்கும் சேர்த்து செலவு செய்வார்கள்.  இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது காந்தி கணக்கு!

வீட்டு ஓனர் செட்டியாரின் பையன் சுப்புவும் எங்கள் நண்பர் வட்டத்தில் ஒருவன்.  ஒரு கை குறைகிறது என்று மாடியில் நின்றுகொண்டு கீழ்ப்பக்கமாக விசிலடித்தால் மேலே ஓடி வந்து விடுவான்.

எங்கள் மேன்ஷனுக்கு அடுத்த பில்டிங் எஸ்எஸ் கஃபே என்கிற பிரபலமான ஹோட்டல். ஹோட்டல் ஓனர், மேனேஜர் சுதாகர் எல்லோருமே எங்கள் நண்பர்கள். இதெல்லாம் போதாத குறைக்கு மதுரை விடலை வட்டம் ஒன்றும் அவ்வப்போது எங்கள் பில்டிங்கில் வந்து சங்கமிக்கும்.

மொட்டை மாடியில் இருந்தபடி விசிலடித்து ஒரு ஆர்டர் கொடுத்தால் சூடான பஜ்ஜியோ, மசால் தோசையோ, ஜிலீர் ரோஸ் மில்கோ, ஆட்டோமேட்டிக்காக எங்கள் ரூமுக்கு வந்துவிடும். யார் ஆர்டர் பண்ணினாலும் முக்காலே மூன்று வீசம் என் கணக்கில் சுதாகர் எழுதி விடுவான். கோபித்துக் கொண்டால், கேட்காமலேயே குருமா, ஜாங்கிரி என்று ஏதாவது எக்ஸ்ட்ரா ஐட்டம் அனுப்பி சரிக்கட்டி விடுவான்!

கேரம்போர்ட், சீட்டு, தம், ஐஸ் கோல்ட் பியர்,  அவ்வப்போது சினிமா என்று வாழ்க்கை படு அட்டகாசமாகப் போய்க் கொண்டிருந்தது.

நெருப்புப் பெட்டி மாதிரி மூன்று மாடிகள், அதற்கு மேல் மொட்டை மாடி. ஆனால் பில்டிங் புதிய பில்டிங். அந்த மாடியில் தான் நானும் எஸ்பிபியாக மாறி 'ஆயிரம் நிலவே வா', 'இயற்கை என்னும் இளைய கன்னி' எல்லாம் பாடுவேன்.  கோரசுக்கோ பஞ்சமில்லை. ஆனாலும் ஹிந்தி பாடல்கள் பாட யாருமில்லாத குறையைப் போக்க வாசுதேவன் வந்து சேர்ந்தான்.

அதுவரை பேபி ஆஃப் தி டீம் ஆக இருந்த என் ஜூனியர் ஸ்டேடஸ் வாசுவிடம் பறி போயிற்று.

அவனும் ஏதோ ஒரு தக்கணாமுட்டி குஜராத்தி/பாம்பே உஜாலாவோ என்னவோ ஃபார்மா கம்பெனியில் புது ரெப் ஆக சேர்ந்திருந்தான். நிஜமாகவே தக்கணாமுட்டி தரித்திரக் கம்பெனி அது. எனக்குத் தெரிந்து மணி ஆர்டரில் சம்பளம் வாங்கிய ஒரே மெடிக்கல் ரெப் வாசுதான்.  அதுவும் ஆடிக்கு ஒரு நாள், அமாவாசைக்கு ஒரு நாள், தவணை முறையில் தான் சம்பளமோ கமிஷனோ வரும். நாங்கள் அதெல்லாம் கண்டுகொள்ளாமல் வாசுவுக்கும் சேர்த்தே செலவு செய்வோம். நல்லவேளையாக என்னிடம் நல்ல பணப் புழக்கம்.

ஒரு நாளில் 18 மணி நேரமெல்லாம் தூங்கி கின்னஸ் ரெகார்ட் புரிந்தவன் என்பதால், பாதி ஆட்டத்தில் மூணு சீட்டை நிறுத்தி கும்பகர்ண வாசுவை எழுப்பி "குட்நைட்ரா மச்சான், சொல்ல மறந்துட்டோம்" என்று அவனை வெறுப்பேத்துவோம். "_த்தா" என்று அவன் சென்னை பாஷைக்குத் தாவிவிட்டுத் திட்டியபடியே தூங்குவான்.

இந்தக் கட்டுரையின் கதாநாயகனே வாசுதேவன் தான் என்பதால் அவனைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லப்பட வேண்டும்.

வாசு, சென்னை தி. நகரில் பரோடா தெருவில், சேட்டுக் குட்டிகளை தூரத்திலிருந்தே சைட் மட்டுமே அடித்து வளர்ந்த நல்ல தென்கலை அய்யங்கார் பையன். ஜெய்ன் காலேஜ் என்று நினைவு. செக்ஸி ஜலஜா, ஜில்ஜில் கிரிஜா என்று ஏதேதோ ஒருதலையாகப் புலம்புவான். ஆனால் டோட்டலி ஹார்ம்லெஸ் ஃபெல்லோ. ராமகிருஷ்ணா மிஷனா, பி எஸ் ஹைஸ்கூலா? 

அவன் நல்ல ஸ்பின் பௌலர். நான் ஃபாஸ்ட் பௌலர் என்று நானே சொல்லிக் கொள்வேன். எங்கள் லோக்கல் கிரிக்கெட் டீமிலும் அவன் ரொம்ப பாப்புலர். 

வாசுவுக்கு ஒரு அட்சரம் கூட ஹிந்தி தெரியாது என்றாலும் முஹம்மது ரஃபி, முகேஷ், கிஷோர் குமார் என்று மாறி மாறி ஹிட் சாங்ஸ் பாடி அசத்துவான். லதா மங்கேஷ்கர், ஆஷாவாகவும் உரு மாறுவான். ஹிந்திதான் தெரியாதே தவிர, பாட்டெல்லாம் அத்துபடி. அப்பா பர்மன், பிள்ளை பர்மன், லக்‌ஷ்மிகாந்த் ப்யாரேலால், கய்யாம் என்று எல்லா புள்ளி விபரமும் விரல் நுனியில் வைத்திருப்பான். 

வாசுவுக்கு நல்ல லய ஞானம். தினமும் அவன் கையில் ஏதாவது ஒரு டேபிள் தபேலாவாக உருப்பெறும். அட்டகாசமாக வாசித்துக்கொண்டே  பாடுவான்.

முஸாஃபிரு ஹுன் யாரோ, கபி கபி, ஆராதனா,  தீவார், ஜப் ப்யார் கிஸிஸே ஹோதாஹை, மேரே ஜீவன் ஸாதி, கட்டி பதங், கோரா காகஸ்,  அபிமான், பாபி, யாதோன் கி பாராத், அமர் ப்ரேம்,  முக்கந்தர் கா சிக்கந்தர், சிட் சோர் என்று ஏதாவது படத்திலிருந்து தப்பில்லாமல் பாடுவான்.

டெஸ்லா ஓட்டியபடி Spotify ல் ஹிந்தி பாட்டுகள் கேட்கும்போது இங்கே நான்  'எல்லே'யில் வாசுதேவனை நினைக்காத நாளில்லை.

ஸ்டேட் பேங்கிலிருந்து ரிட்டயர் ஆன பிறகு வாசுவின் அப்பா க்ரோம்பேட்டையில் வீடு கட்டிக்கொண்டு போய் விட்டதாகக் கேள்விப்பட்டு சென்னை நண்பர்களிடம் நான் வாசுவைக் கண்டு பிடியுங்கள் என்று கெஞ்சாத நாளில்லை. இதுவரை ஒரு கிராதகனும் அதில் வெற்றி பெறவில்லை.

அவன் இன்னும் பாடிக்கொண்டுதான்  இருப்பான். என்ன கொஞ்சம் வயசாகி இருக்கும். நரைத்திருக்கும். டை அடித்திருப்பான். ஆனாலும் குரல் மட்டும் அப்படியேதான் அட்டகாசமாக இருக்கும். 

நவராத்திரி கொலுவில் யாராவது ஒரு மாமா ஹிந்திப் பாட்டு பாடி எக்ஸ்ட்ரா சுண்டல் அப்ளாஸ் வாங்காமலா இருப்பார்?

கண்டுபிடிததுச் சொல்லுங்கள் நண்பர்களே!

எங்கே என் வாசுதேவன்?

No comments:

Post a Comment