Thursday, July 7, 2022

ஆட்டோ வைபவம்

 தம்பி ஒருவர் மூனு மாசத்துக்கு முன்னால பெங்களூர் மாற்றலாகி வீடு எடுத்திருந்தார். ஊரடங்குல வரமுடியல, வீட்ல கொஞ்சம் பொருட்கள் இருந்தது, வீட்டு ஓனர் நீங்க பொருட்களை எடுக்கும் வரை வாடகை குடுக்கனும்னு ரொம்ப நியாயமா நடந்துக்கிட்டார், எனக்கு போன் பண்ணி அண்ணே அந்தப் பொருட்களை எடுத்து வீட்ல வச்சுக்க முடியுமா? தெண்டமா 15000 குடுக்கனும்னு கேட்டார்.

நேத்து மத்தியானமா போயி பொருட்களை எல்லாம் எடுத்துக் கட்டி ஒரு ஆட்டோவைப் பிடித்தேன், நடு வயதுக்காரர், காலருக்கு அருகில் கிழிந்திருந்த சட்டையின் மேலே காக்கி சீருடை போட்டிருந்தார். போகுமிடத்தைச் சொல்லி "கொஞ்சம் பொருட்கள் இருக்கு, எடுத்துட்டுப் போகனும், எவ்வளவு?". மனசாட்சியோடு ஒரு தொகை சொன்னார், மேலே பேரம் பேசுவது அழகில்லை என்று ஒப்புக் கொண்டேன். "இந்த ஏரியாவுக்குப் புதுசு சார், வழி தெரியாது, நீங்கதான் வழிகாட்டனும்" என்றார்.

எங்க போனாலும் மனிதர்களை நம்புறவன் நான், பொருட்களை ஏற்றிவிட்டு, நான் முன்னால் வழிகாட்டியபடி போகிறேன் என்றேன், சரி சார் என்று தலையாட்டிவிட்டுப் பின் தொடர்ந்தார். இரண்டாவது திருப்பத்தில் படக்கென்று பாதை மாறினார், நானும் திரும்பிப் போய்ப் பிடித்து பாதை மாற்றினேன்.

பாதி வழி வந்து நெருக்கத்தில் ஆட்டோவைத் திரும்பிப் பார்த்தபடி வந்து கொண்டிருந்தேன், அடுத்த திருப்பத்தில் வண்டி மிஸ்ஸிங். அங்கேயே ஒரு 10-15 நிமிடம் நின்று பார்த்தேன். சலனம் இல்லை, அந்தப் பகுதி முழுவதும் ஒரு சுற்றுச் சுற்றினேன், அறிகுறிகளே இல்லை, திரும்ப அந்த வீட்டுக்குப் போய் நின்று பார்த்தேன், 1 மணி நேரத்துக்கு மேலாகி விட்டது, நம்பிக்கை விட்டுப் போச்சு, லேசா நாம ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்கிற ஆற்றாமை வந்தது.

மனிதர்களை நம்புவது எல்லாம் சரி, இவ்வளவு கண்மூடித்தனமாக நம்புவது சரியில்லை போலன்னு நினைச்சுக்கிட்டு இருந்தப்ப, வீட்ல இருந்து அழைப்பு, விஷயத்தை சொன்னேன், "இருக்குற காலத்துல அவன் திரும்ப வருவதெல்லாம் நடக்காது, வீட்டுக்கு வாங்க" ன்னாங்க.

தம்பியை அழைத்து விஷயத்தைத் தயங்கியபடி சொன்னேன், ஒரு 50000 மதிப்புள்ள பொருட்கள் இருக்கும், ஆனா அவரும் நம்மைப் போல மனுஷங்களை நம்புறவர் போல, "எப்பிடியும் திரும்ப வருவார்ணே, மேல் வீட்டுல போன் நம்பர் குடுத்துட்டுக் கெளம்புங்க, போனா போயிட்டுப் போகுது"ன்னார்.

இரண்டு மணி நேரத்துக்கு மேலானது, பசி, களைப்பு, ஏமாற்றம், சரி, போயி போன் நம்பர் குடுத்துட்டுப் வந்துருவோம்னு திரும்ப அந்த வீட்டுக்குப் போனேன், அங்கிருந்தவரிடம் விஷயத்தைச் சொல்லி நம்பர் கொடுக்கப் போனப்ப கீழே ஆட்டோ சத்தம்.

சார், பாதை தெரியல, சுத்தி சுத்திப் பாத்தேன், நீங்க சொன்ன இடத்துக்குப் போனேன், திரும்ப வந்து அதே இடத்துல நின்னு பாத்தேன், அப்பறமா பையனுக்கு போன் பண்ணி வரச்சொல்லி அவனையும் தேடச் சொன்னேன், நீங்க மிஸ்ஸான இடத்துல நிக்கச் சொல்லிட்டு எப்படியும் வீட்டுக்கு வருவீங்கன்னு இங்க வந்தேன்னார். 4 மணி இருக்கும், மனுஷன் களைப்போடு இருந்தார். நான் எதுவும் பேசல, வாங்கண்ணே போவோம்னு மறுபடியும் கிளம்பினோம்.

பொருட்களை ஏற்றி வைக்கும் போது ஆட்டோ நம்பரை நினைவில் வைக்க வேண்டும், மொபைல் நம்பர் வாங்க வேண்டும் என்றெல்லாம் தோன்றியது, பிறகு, அவரும் மேலே ஏறி வந்து என்கூடப் பொருட்களை எடுத்து வந்து கொடுத்ததைப் பார்த்த பிறகு ஏனோ அதையெல்லாம் நான் செய்யவில்லை.

வழியில் அந்தப் பையன் நின்று கொண்டிருந்தான், புன்னகைத்தான். நிறுத்தி அவன் கையை ஒருமுறை அழுத்தமாகப் பிடித்தேன், எவ்வளவு அழகான அப்பா இவனுக்கு என்ற அழுத்தம் அது.

வீட்டுக்கு வந்து மறுபடி பொருட்களை எடுக்க உதவியரின் முகத்தை மறுபடி பார்த்தேன், எவ்வளவு சோதனைகள் வந்தாலும் மனுஷங்க அந்த கொத்துக் கொத்தாப் பூக்குற அழகான நீதியைப் பிடிச்சுத் தொங்கியபடி மானுட நாகரீகத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திட்டுப் போறாங்கன்னு மனசு லேசாயிடுச்சு. பொருட்களை எல்லாம் வைத்துவிட்டுக் கீழே வந்து அவர் கையைப் பிடித்தேன்.

வாங்கண்ணே, சாப்பிடுவோம். கடைசி வரை அவரும் கணக்குப் பாத்து காசு கேக்கல, நானும் கணக்குப் பாத்துக் குடுக்கல. இந்தமுறை மறக்காம அவர் போன் நம்பர வாங்கிக்கிட்டேன், ஆட்டோ திரும்பும் போது நம்பரையும் நோட் பண்ணிக்கிட்டேன்.

கொரானா கிரானாவெல்லாம் ஒன்னியும் பண்ண முடியாது எங்களன்னு மனுஷன் உயரமா நின்னு கூவுற மாதிரி இருந்துச்சு.

Painting Courtesy : Milind Mulik

கை.அறிவழகன்

No comments:

Post a Comment