ரயில் பயணங்களில்-3
இது நடந்து ஏறக்குறைய முப்பது வருஷம் ஆயிருக்கும். நான் டெல்லியில் மத்திய அரசுப் பணியில் இருந்த நேரம். நண்பர்கள் ஆறேழு பேர் எப்பவும் ஒண்ணா சுத்திக் கிட்டிருப்போம்.
அப்போ புதுசா பிரகாஷ்னு ஒரு பையன் வந்து சேர்ந்தான். ஏதோ ஒரு மினிஸ்ட்ரில க்ளெர்க் வேலை கிடைக்கவே, அவனை வேலையில் சேர்த்து விட அவனோட அப்பா அவனை கூட்டி வந்திருந்தார். அவனை தங்க வைக்க இடம் தேடி யாரையோ விசாரித்து நாங்க தங்கியிருந்த லோதி காலனிக்கு வந்து நாங்க சாப்பிடும் மெட்ராஸ் மெஸ்ஸுக்கு வந்திருந்தார்.
வந்த இடத்தில் எங்களைப் பார்த்து ‘தம்பிங்களா, என் பையனுக்கு ரூமெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன். ஆனா அவனுக்கு அவ்வளவா விவரம் பத்தாது. கொஞ்ச நாள் அவனை உங்களோட சேர்த்துக்கிட்டு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க’ன்னு கேட்டுக்கிட்டார்.
இந்த பிரகாஷ் ஒரு வித்தியாசமான ஆள். சில சமயங்களில் அவனுடைய சில செய்கைகளும் பேச்சும் ஒரு மாதிரி கிறுக்குத்தனமாக இருக்கும். இவன் ஜோக் அடிக்க முயற்சி செய்கிறானா இல்லை சரியான மக்கா என்று எங்களால உறுதியாக சொல்ல முடியல. அவன் அந்த மாதிரி ஏதாவது லூசுத்தனம் செய்யும் போது ‘இவன் எப்படிடா பரீட்சை எழுதி பாஸ் பண்ணிருப்பான்?’ என்று யோசிப்போம்.
ஒரு உதாரணம் சொல்றேன். ஒரு ஞாயிற்று கிழமை எல்லாரும் என்னோட ரூம்ல உக்காந்து அரட்டை அடிச்சிக்கிட்டிருந்தோம். அப்போ “ஊருக்கு லெட்டர் எழுதணும், யாராவது பேப்பர் இருந்தா குடுங்க’ அப்படின்னு கேட்டான். நான் என் கிட்டே இருந்த இன்லேண்ட் லெட்டரை அவன் கிட்ட குடுத்து “இத யூஸ் பண்ணிக்கோ” அப்படின்னு சொன்னேன். நாங்கள் அரட்டை அடிச்சிக்கிட்டிருந்த போது அவன் ஒரு பக்கமா உக்காந்து லெட்டரை எழுதி முடிச்சிட்டு “கவரும் ஸ்டாம்பும் வேணுமே” அப்படின்னு கேட்டான். ‘எதுக்குடா?’ன்னு கேட்டதுக்கு ‘இந்த இன்லேண்ட அதுல போட்டு ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பணும் இல்ல?’ன்னான். செம்ம கடுப்பான சீனு “நீ பேசாம நியூடெல்லி ஸ்டேஷனுக்கு போய் தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் இல்ல ஜி.டி. ட்ரைவர் கிட்டேயே குடுத்து மெட்ராசுல போய் குடுத்துட சொல்லு” அப்படின்னு சொன்னான்.
அந்த வருடம் தீபாவளிக்கு மெட்ராஸ் வருவதாக நாங்க ஆறு பேர் ப்ளான் போட்டிருந்தோம். பிரகாஷ் வந்து ரெண்டு மாசம் தான் ஆயிருந்தாலும், ‘நானும் ஊருக்கு போகணும்’னு அவன் சொன்னதால அவனுக்கும் சேர்த்து தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸில் டிக்கெட் புக் பண்ணினோம்.
பயண தேதி அன்னிக்கு, எல்லாரும் ஒண்ணா நியூ டெல்லி ரயில்வே ஸ்டேஷனுக்கு போய் சேர்ந்தோம். ப்ளாடஃபாரத்துக்கு போய் சேர்ந்ததும் தான் கவனித்தோம் பிரகாஷை காணவில்லை. பத்து நிமிஷம் ஆச்சு, இருபது நிமிஷம் ஆச்சு...ஆள காணல. இது என்னடா வம்பா போச்சுன்னு ரெண்டு பேர லக்கேஜுக்கு காவல் வெச்சிட்டு மீதி பேர் ஆளுக்கொரு திசையா தேடி போனோம். அவன் யார் கண்ணுலேயும் படல. கடைசியில் ரயில் புறப்பட பத்தே நிமிஷம் தான் இருந்ததால், எல்லாரும் மறுபடியும் ப்ளாட்ஃபாரத்துக்கு வந்து சேர்ந்தோம். ஆனா அவன் வந்து சேரல. ‘ஐயோ அவங்கப்பாவுக்கு என்ன பதில் சொல்றது? என்ன செய்யறது’ன்னு ஒண்ணும் புரியாம முழிச்சுக்கிட்டிருந்தோம்.
ட்ரெயின் புறப்பட அஞ்சு நிமிஷம் தான் இருந்தது. அப்போ திடீர்னு “அதோ பாருடா வரான்” அப்படின்னு நான் கை காட்டிய திசையில் ஓட்டமும் நடையுமாய், வேர்க்க விறுவிறுக்க வந்து சேர்ந்தான் பிரகாஷ்.
“‘எங்கேடா போய் தொலைஞ்சே? அறிவிருக்கா? எவ்ளோ டென்ஷன் ஆயிட்டோம் தெரியுமா?” அப்படின்னு எல்லாரும் சேர்ந்து அவனை சரமாரியாக திட்டினோம்.
‘டேய் சும்மா இருங்கடா, உங்க யாருக்கும் பொறுப்பே இல்ல. நீங்க பாட்டுக்கு நேரா உள்ளே வந்துட்டீங்க. நான் கூப்பிடறேன் யார் காதுலேயும் விழுந்த மாதிரி தெரியல. சரின்னு நானே போய் வாங்கிட்டு வந்துரலாம்னு போனேன். அங்கே போய் நின்னா...யப்ப்பா...எவ்ளோ கூட்டம்!” அப்படின்னான்.
“எங்கே ராஜா போனே? என்ன கூட்டம்?” சீனு கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டான்.
“ஆங்…டிக்கெட் கவுண்ட்டர்க்கு....... ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் உங்க தாத்தாவா வாங்குவாரு?”
ஏழு ப்ளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை சட்டை பாக்கெட்டுலேந்து அவன் எடுத்து காட்டவும் ரயில் புறப்படவும் சரியா இருந்தது!
No comments:
Post a Comment