By பிரேமா ரமணி
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
உடைந்த பொம்மை_சிறுகதை
"_____________
"ஏன்னா... கொஞ்சம் டிரைவரை அனுப்பறேளா?லாஃப்ட்லேர்ந்து கொலு பொம்மைகள் பெட்டியை இறக்கணும்".
"என்னடி...பசங்கள் பேரன் பேத்திகள் எல்லோரும் வெளி நாட்டுலே
இருக்கா.போதாததற்குக் கொரோனா வேறு.யாரையும் கூப்பிட முடியாது.போன வருஷம் மாதிரி சுவாமி ரூம்ல நாலு பொம்மையை வெச்சிடு".
இல்லைங்க.நானும் முதல்ல அப்படித்தான் நினைத்தேன்.ஆனா மாடில குடி வெச்சிருக்கோமே அந்தப் பொண்ணு ஏதோ ஃபேஸ்புக் ல மத்யமர்னு குரூப்ஸ் இருக்காம்.அதுலே ZOலு ன்னு ஆன்லைன் ல கொலு பார்ப்பாங்களாம்"ஆன்டி.இது என் வீடு தானே ..நீங்க கொலு வைப்பீர்கள் தானே. நான் என் வீட்டில் கொலுவிற்கு வாங்கன்னு கூப்பிடப் போறேன்"னுசொல்லிச்சு.நாமளும் பிள்ளைங்க வெளிநாடு போனப்புறம் கொலுவே வைக்கவில்லை.பொம்மை எல்லாம் வீணாகி விடும்.எடுத்து புது வர்ணம் தீட்டி கொலு வைக்கலாமேன்னு".
சரி டிரைவரை அனுப்பறேன்". ரொம்ப சிரமப் படாதே",
ராதா டிரைவரின் உதவியுடன் பெட்டிகளை இறக்கி வைத்தாள்.ஒன்றில் புதிதாக அவள் வாங்கிச் சேர்த்த பொம்மைகள்.இன்னொன்று பரம்பரையாகக் குடும்பத்தில் இருப்பவை.
ஒவ்வொன்றும் பெரிது பெரிதாக அழகாக இன்னும் வண்ணம் மாறாமல் இருந்தன.சிறிது மங்கினாலும் ராதா வண்ணம் கொடுத்துப் புதுப்பித்து விடுவாள்.எல்லா பொம்மைகளுமே நூறு வருடங்களுக்கு மேல் பழையதாகும்.மிகவும் ஜாக்கிரதையாகக் கையாளுவாள்.
அவள் மாமியார் இருந்த போது "ஜாக்கிரதை ராதா..குடும்ப சொத்து.இலேசாக உடைந்தாலும் ஏதாவது அசம்பாவிதம் வருமாம்..இங்கே பாரேன் மீனாக்ஷி கையில் இருக்கும் கிளி மட்டும் புதியது.நான் துடைக்கும் போது பழையது உடைந்து விட்டது... மறுநாள் என் பெண் பத்து வயது.தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் போது கார் மோதி இறந்து விட்டாள்.அந்த வருஷம் கொலுவே இல்லை."என்று சொல்லியிருக்கிறார்.
"ஹை...எவ்ளோ பொம்மை..அழகு ஆன்டி..."மாடியிலிருந்து இறங்கி வந்த ஹேமா ராதா எச்சரிக்குமுன் ராஜராஜேஸ்வரி பொம்மையை ஒரு கையால் தூக்கி கனம் தாளாமல் கீழே போட்டு விட்டாள்.
உடைந்த பொம்மையைப் பார்த்து விக்கித்துப் போய் விட்டாள் ராதா..மனதில் பயம் வந்து அப்படிக் கொண்டது.
"ஸாரி..ஆன்டி....நான் இதே போல் வேறு பொம்மை வாங்கி வருகிறேன்"என்று சொல்லி விட்டு ஹேமா சென்றதைக் கூடக் கவனிக்க வில்லை.
அப்படியே எத்தனை நேரம் அமர்ந்திருந்தாளோ..!,
இரு பிள்ளைகளின் குடும்பம் பெண்ணின் குடும்பம் எல்லோரும் வெளி நாட்டில்.நல்லபடியாக இருக்க வேண்டுமே என்ற தவிப்பு.
ராகவனின் கார் நுழையும் போதே ஹேமாவும் புது பொம்மையோடு வந்தாள்.அதே போல் இன்னும் கொஞ்சம் பெரிதாக அழகான பொம்மை.உள்ளே வந்து "சாரி மாமா. பொம்மையை உடைத்து விட்டேன் அதான்"என்று கூறி புது பொம்மையைப் கொடுத்து விட்டு
"நாளைக்குத் தானே கொலு வைக்கணும்?காலையிலேயே வந்து விடுகிறேன்"என்று சொல்லி விட்டு ப் போனாள்.
திக்பிரமையுடன் அமர்ந்திருந்த ராதாவை ராகவன் உலுக்கியவுடன் "கோ"வென்று வெடித்து அழுதாள்.
"என் பிள்ளைகளை உடனே பார்க்கணும்"
"பைத்தியமா நீ..?இப்போ அங்கே நள்ளிரவு .. எல்லோரும் தூங்கிட்டிருப்பாங்க"
ஆனாலும் தன் மாமியார் சொன்னதை சொல்லி தன் பயத்தையும் சொல்ல அவர் "என் அம்மா ஒரு சென்டிமெண்டல் ஃபூல்.காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை"என்று தேற்றியும் கேளாமல் கதறியதால். .....எல்லோரையும் எழுப்பிப் பேசித் திட்டையும் வாங்கிக் கொண்டு அப்படியும் சமாதானம் ஆகாமல் புலம்பிக் கொண்டே இருந்தாள்.
டிரைவரை விட்டு ஹோட்டலில் இருந்து இரவு உணவை வாங்கி வரச்சொல்லி ராதாவை வலுக்கட்டாயமாகத் சாப்பிடச் சொல்லி தானும் சாப்பிட்டு அவளைப் படுக்கச் சொன்னார்.
காலையில் எழுந்த ராகவன் வழக்கத்திற்கு மாறாக ராதா இன்னமும் உறங்குவது கண்டு உலுக்கி எழுப்ப அவள் எழுந்திருக்கவே இல்லை.
டெய்ல் பீஸ்
______
ராதா இறந்தது பயத்தால் வந்த ஹார்ட் அட்டாக்காலா?அல்லது சென்டிமெண்ட் உண்மை ஆயிற்றா?
No comments:
Post a Comment