Wednesday, October 6, 2021

கால் போன போக்கிலே சார்தாம் 11

 🥀🥀🥀🥀சார்தாம் 🌻🌻🌻🌻

#சார்தாம் 11

கால் போன போக்கிலே....

- நந்து சுந்து

11. விஞ்ஞானக் கோவில்கள்

ஹரித்வார் கும்பகோணம் மாதிரி. நிறைய கோவில்கள் இருக்கும் ஆனால் வெற்றிலை சீவல் கிடைக்காது. இங்கு கும்பகோணம் மாதிரி பெரிய கோவில்கள் எல்லாம் கிடையாது. அறுபதாம் கல்யாணம் நடத்தும் மினி ஹால் சைஸில் தான் இருக்கும். உள்ளே போனால் எல்லாம் டெக்னாலஜி சமாச்சாரம் தான். ஸ்மார்ட் போன் மாதிரி இங்கு கடவுளும் ஸ்மார்ட்டாக இருப்பார். எனவே கண்டிப்பாக உள்ளே Ram  இருக்கும். 

கோவில்கள் எல்லாம் பள பளவென்று சலவைக்கல்லினால் கட்டப் பட்டிருக்கும். கர்ப்பகிரகத்தில் இருக்கும் மூர்த்திகளும் சலவைக்கல் தான். கண்ணுக்கு மை, நெற்றியில் சிந்தூர்  வைத்துக் கொண்டு கல்யாண பெண் மாப்பிள்ளை மாதிரி பளிச் என்று இருக்கும். எல்லா கோவில்களிலும் ராதே கிருஷ்ணா தான் ஹைலைட். கையில் புல்லாங்குழலுடன் பாதங்களை குறுக்கிட்டுக் கொண்டு    கண்ணன் வசீகரமாய் இருப்பார். பக்கத்தில் ராதா ரம்மியமாய் விசிறி மடிப்பு புடவையில்  வெட்கத்துடன்  சிரிப்பார். இருவருக்கும் எப்போதும் மேட்சிங் கலர் தான்.

எல்லா கடவுளுக்கும் அழகான தலைப்பாக்கள் உண்டு. ஆஞ்சநேயருக்குக் கூட இதே மாதிரி உடை அலங்காரம் தான். கலர் தீம் வைத்திருப்பார்கள். சிவப்பு வண்ண அங்கி என்றால் அன்று கோவிலில் எல்லா மூர்த்திகளுக்கும் சிவப்பு வண்ண உடை தான். ஃப்ளாஷ் லைட் இல்லாமலே போட்டோ எடுக்கலாம். முகத்தில் அவ்வளவு பிரகாசம் இருக்கும்.

பல கோவில்களில் கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் இருக்கும்.  மோட்டார் வைத்த கோபியர்கள் கிருஷ்ணரை சுற்றி சுற்றி வருவார்கள். ஆதிசேஷன் பாம்பு வாயிலிருந்து   ஆர்.எஸ். மனோகர் நாடகம் மாதிரி புஸ் புஸ் என்று புகையும் நெருப்பும் வரும். பாற்கடலை தேவர்கள் ஒரு பக்கமும் அசுரர்கள் ஒரு பக்கமும் நிஜமாகவே கடைந்து கொண்டிருப்பார்கள். இது போன்ற கோவில்களில் ஐந்து ரூபாய் பத்து ரூபாய் என ஓரளவுக்கு நியாயமாக கட்டணம் வசூலிக்கிறார்கள். 

எல்லாமே ஒரு எக்ஸிபிஷன் மாதிரி இருக்கும். வரிசையாகப் பார்த்துக் கொண்டு வரவேண்டும். இப்படித்தான் ஒரு  இடத்தில் வைஷ்ணோதேவி கோவில் மாதிரி வைத்திருந்தார்கள். 

அந்த காலத்தில் வைஷ்ணோதேவி தரிசனம் செய்ய ஒரு சிறிய குகை மாதிரி பொந்தில் தவழ்ந்து செல்ல வேண்டும். இங்கும் அதே மாதிரி செட் செய்து வைத்திருந்தார்கள். நுழைய முடியுமா என்று எனக்கு பயமாகப் போய் விட்டது. மனசு இடம் கொடுத்தாலும் தொப்பை இடம் கொடுக்குமா என்று சந்தேகம். வாசலில் செருப்பைக் கழட்டி வைத்தது  போல தொப்பையை கழட்டி வைக்க முடியவில்லை.

திரும்பி வரவும் முடியாது. பின்னால் வரிசையில் மக்கள். உள்ளே புகுந்து விட்டேன். அந்தக் காலத்து உம்ராவ் கெரசின் ஸ்டவ்வில் நுழைத்த திரி மாதிரி மாட்டிக் கொண்டேன். ஒரு வழியாக திருகி திருகி அந்தப் பக்கம் யாரோ இழுக்க வெளியே வந்தேன். இது போல வேடிக்கை காட்டும் கோவில்கள் நிறைய இருக்கும். இரண்டு வாரம் தங்கினால் கூட ஹரித்வாரில் பார்ப்பதற்கு இடங்கள் உள்ளன.

எங்களை சைக்கிள் ரிக்‌ஷாவில் ஒரு வயதான பெரியவர் தான் அழைத்துச் சென்றார். பார்த்தாலே பாவமாக இருந்தது. எல்லா கோவில்களுக்கும் கூட்டிப் போக சொற்ப வாடகை தான் கேட்டிருந்தார். கோவிலிலிருந்து நான் வெளியே வந்து ரிக்‌ஷாவில் ஏறியவுடன் தான் செருப்பு போட மறந்தது நினைவிற்கு வந்தது. நான் இறங்குவதற்குள் அந்த ரிக்‌ஷாக்காரர் ஓடிப் போய் செருப்பை தன் கைகளால் எடுத்து வந்து ரிக்‌ஷாவில் வைத்தார். எனக்கு ஒரு நிமிடம் மெய் சிலிர்த்து விட்டது. என் தந்தையைப் போல இருந்த அவர் செய்த காரியம் இன்று வரை என் மனதை விட்டு அகலவில்லை.

எளிமையா? உதவி செய்யும் மனப்பாங்கா? அல்லது ஆண்டாண்டு காலமாக பணம் படைத்தவர்களிடம் அடகு வைக்கப்பட்ட அடிமைத்தனமா?..ஏழு வருடங்கள் ஆனாலும் இந்த நிகழ்ச்சி என் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது. இதை எழுதும் போது கூட ஒரு குற்ற உணர்ச்சி குத்துகிறது..

பாவன் தாம் – இது ஒரு கண்ணாடிக் கோவில். கோவில் உள்ளே எல்லா மூர்த்திகளுக்கு இரண்டு பக்கமும் பெரிய பெரிய கண்ணாடி வைத்திருப்பார்கள். ஹை ஸ்கூலில் படித்த பிஸிக்ஸ் என்ன சொல்கிறது?.When two mirrors are aligned at 0 degree angle with each other (ie., a parallel mirror system) there as an infinite number of images. இந்த மூன்று மார்க் கேள்வியின் விடையை நிரூபிப்பது  போல இரண்டு பக்கமும் கண்ணுக்கு எட்டும் வரை அழகாக மூர்த்திகள் தெரியும். 

 கோவில் முழுக்க எல்லா சன்னதியிலும் இதே மாதிரி இருக்கும்.  மேற் கூரையிலும் கண்ணாடி இருக்கும். எங்கு பார்த்தாலும்  லட்சக் கணக்கான கடவுள்கள் தெரிவார்கள். இங்கு போனால் நாத்திகரால் கூட கடவுள் இல்லை என்று சொல்ல முடியாது. 

கண்ணாடி சில்லுகளைப் பதித்து மிகப் பெரிய அளவில் கீதோபதேசம் ஒன்று வைத்திருப்பார்கள். அந்த ரதம், குதிரைகள், அர்ச்சுனன் , கிருஷ்ணன் எல்லாமே கண்ணாடி பதித்து ஜொலிக்கும். இரவு நேரத்தில் விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் கண்ணைப் பறிக்கும். இங்கு கிருஷ்ணர் உடல் முழுக்க  கண்ணாடியாய் இருப்பதால் கண்ணன் என்று அழைக்கப் படுகிறார்...(ஒரு தல புராணம் சொந்தமாக எழுதிப் பார்த்தேன்..சமூகம் ஒத்துக் கொள்ளாது என்பதால் இதை டிலீட் செய்து விடவும்)

இரவு அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சரவணன் வந்தார். பள்ளிக்கூட ப்ரேயரில் ஹெட் மாஸ்டர் வந்து நிற்பது போல நின்றார். கத்திரிக்காய் வாழ்த்து எல்லாம் முடிந்தவுடன் பலத்த குரலில் சொன்னார். “ இமய மலைல ரோடு எல்லாம் க்ளியர் ஆயிடுச்சு...நாளைக்குக் காத்தால மலை ஏறப் போறோம்..தயாரா இருங்க...”

சந்தோஷத்தில் லுங்கி டான்ஸ் ஆட வேண்டும் போல் இருந்தது. ஆன்மீகத்துக்கு லுங்கி அனுமதி இல்லை என்பதால் ஆர்வத்தை மடித்துக் கட்டிக் கொண்டேன். அறையில் மூலைக்கொன்றாக இருந்த துணி மணிகளை எடுத்து பேக் செய்ய ஆரம்பித்தேன்.

                                                                             (பயணம் தொடரும்)






No comments:

Post a Comment