சார்தாம் 2
கால் போன போக்கிலே....
- நந்து சுந்து
2. ரயில் பயணம்
சென்னையிலிருந்து டில்லி ரயில் மார்க்கத்தில் 2200 கிலோ மீட்டர் தூரம்.
தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இந்த தூரத்திற்கு மொத்தம் பத்து நிறுத்தங்கள் தான். ஏறத் தாழ மூன்று மணி நேரத்திற்கு ஒரு ஸ்டேஷன் வரும.
வெவ்வேறு மாநிலங்களைக் கடந்து போகும் போதும் மூடி இருக்கும் ரயில்வே கேட்டுகளைப் பார்த்தாலே போதும். அந்த ஊரின் கலாச்சாரம் புரிந்து விடும். கேட் அருகே நிற்கும் பஸ்கள், டூ வீலரில் இருக்கும் ஆசாமிகள், அவர்கள் உடைகள், கடைகளில் இருக்கும் பெயர்ப் பலகைகள் எல்லாமே ஒவ்வொரு ஊரிலும் ஒரு மாதிரி.
நாடு முழுக்க மாறாமல் இருப்பது ரயில் சத்தத்தில் தண்டவாளம் அருகிலிருந்து மிரண்டு ஓடும் மாடுகள் மட்டும் தான்.
ரயில் ஓடிக் கொண்டிருந்தது. எங்களுக்குள்ளேயே சிரித்துப் பேசிக் கொண்டிருந்தோம். காலை எட்டரை மணிக்கு ஒரு பாத்திரமும் ஒரு சில்வர் பக்கெட்டுமாக யாத்திரை சர்வீஸிலிருந்து இரண்டு பேர் இருக்கை தேடி வந்தார்கள்.
‘டிபன் ரெடி..தட்டு எடுத்துக்குங்க..”என்றான் ஒரு பையன்.“ என்ன இட்லியா கார்த்தி?” என்று பாத்திரத்துக்குள் எட்டிப் பார்த்தேன். கார்த்தியின் தோளில் கை போட்டேன். பாத்திரத்தில் அல்ல.
எப்போதுமே இது போன்ற டூர் போகும் போது சமையல் செய்பவர்கள், பரிமாறுபவர்கள் பெயர் எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது என்று என் வயிறுணர்வு சொல்லியிருந்ததால் ரயில் ஏறின உடனேயே பெயர் கேட்டு தெரிந்து கொண்டு விட்டேன்.
தட்டை எடுத்துக் கொண்டேன். (இவர்களுடன் யாத்திரை போனால் சாப்பிடும் தட்டு.. காபி குடிக்க டம்ளர் இரண்டையும் நாம் தான் வீட்டிலிருந்து கொண்டு வர வேண்டும்)
டிபன் அன்லிமிடெட் ஆதலால் கார்த்தி இட்லி வைத்துக் கொண்டே இருந்தான். நான் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கும் போது என் எதிர் சீட்டில் இருந்தவர் “போதும் சார்..” என்றார்.
மதியம் இரண்டு மணிக்கு நாக்பூர் வந்தது. அங்கு ஆரஞ்சு பழம் விசேஷமானதல் கொஞ்சம் ஆரஞ்சு வாங்கிக் கொண்டோம். ஆனால் உறிக்கவில்லை. எதிர் சீட்டில் இருப்பவர் எங்களை உறித்து விடுவாரோ என்று பயமாக இருந்தது.
வேளா வேளைக்கு சாப்பாடு சரியான நேரத்துக்கு வந்ததும் எதிர் சீட் காரருக்கு நாங்கள் திகார் ஜெயிலுக்கு போகிறோமோ என்று சந்தேகம் வந்திருக்க வேண்டும். ‘எங்கே போறீங்க?’ என்று கேட்டார்.
பத்ரி நாத் என்று கூறியதும் எங்கள் மேல் அவருக்கு கொஞ்சம் பக்தி வந்தது.”ராம்..ராம் “ என்று கை கூப்பினார்.
“லஞ்ச் ஆர்டர்….டின்னர் ஆர்டர்” என்று ஒவ்வொரு பெட்டியாக போய்க் கொண்டிருந்த கேட்டரிங் ஆட்கள் எங்கள் பெட்டிக்கு வந்தார்கள். எங்கள் தட்டு முழுக்க இமய மலை மாதிரி புளியோதரை தயிர் சாதம் நிரம்பி இருந்தன. மத்தியில் கைபர் போலன் கணவாய்கள் கூட இல்லை.
கர்ட் முரடான மலையைப் பார்த்து விட்டு ‘வியாபாரத்தை கெடுக்க வந்த வீணர்களே’ என்று சபித்துக் கொண்டே போனார்கள்.
மற்றபடி இரண்டாவது நாள் பயணத்தில் சொல்லிக் கொள்ளும் படி விசேஷமாக ஏதும் இல்லை.
அடுத்த செக்சனில் இருந்தவர்கள் சீட்டாடிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு குழந்தை எங்கள் ஏரியாவுக்கு வந்து எங்களை ஒரு நிமிடம் பார்த்து விட்டு பயந்து கொண்டு ஓடியது.
சைட் அப்பர் பெர்த்தில் ஒரு நபர் கொடுத்த டிக்கட் பணத்தையெல்லாம் விடாமல் தூங்கியே தீர்த்துக் கொண்டிருந்தார்.
பொழுது போக வேண்டுமே என்று ரயிலுக்குள்ளேயே பெட்டி பெட்டியாக நடந்தோம்.
ரயிலில் எல்லா கம்பார்ட்மெண்டிலும் பாதி பேர் பாதி கண்களை மூடிய படியே அலங்கோலமாய் இருந்தனர். ஜன்னலுக்கு வெளியே ஒரு வித்தியாசமான உலகம் இருப்பதை உதாசீனப் படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பொறுத்த வரை தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் இன்னொரு பெட் ரூம். அவ்வளவே...
அதிகாலை நாலு மணிக்கு ஆக்ரா போய் சேர்ந்தது கூட எங்களுக்கு தெரியாது. தெரிந்திருந்தால் காற்று வாங்க ப்ளாட்பாரத்தில் நடந்து கொண்டிருந்த மும்தாஜையும் ஷாஜகானையும் தேடி இருக்கலாம்.
காலை ஆறு மணிக்கு யாத்திரை மேனேஜர் வந்தார்.(இனிமேல் இவரை சரவணன் என்று பெயர் சொல்லியே அழைக்கலாம்)
டில்லி ஸ்டேஷனில் காத்திருக்கும் பஸ் நம்பரையும் எங்கள் சீட் நம்பரையும் சொல்லிவிட்டுப் போனார். இனி இந்த பஸ்ஸை அவர்கள் திருப்பி அனுப்பும் வரை எங்களுக்கு அதே சீட் நம்பர் தான். மற்றவர்களுடன் சச்சரவே வராது.
காலை ஏழு மணிக்கு ரயில் புது டில்லி ஸ்டேஷனில் நுழைந்து வெற்றி கோடு ரிப்பனைத் தொட்டு க்ளூக்கோஸ் சாப்பிட்டது.
நாங்கள் அனைவரும் பெட்டியுடன் இறங்க யத்தனித்தோம். ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
(பயணம் தொடரும்)
No comments:
Post a Comment