🥀🥀🥀🥀சார்தாம் 🌻🌻🌻🌻
#சார்தாம் 12
கால் போன போக்கிலே....
- நந்து சுந்து
12. பாதை திறந்தது
மறு நாள் காலை. எல்லோரும் சீக்கிரமே எழுந்து இமய மலை தரிசனம் காணத் தயாராகி விட்டோம். மழையும் யூனியன் லீடர்கள் அறிவுரையின் பேரில் மெடிக்கல் லீவில் போயிருந்தது.
முதல் நாள் இரவு எங்கள் கோஷ்டியில் சிலர் சாயி பஜன் செய்ததின் பலன் வெளியில் தெரிந்தது. அழகாக முயல் குட்டி மாதிரி வெள்ளை நிறத்தில் ஆறு மினி பஸ்கள் நின்று கொண்டிருந்தன. பழைய பெரிய பஸ்களை சால்வை போர்த்தி நிறைய பொய் சொல்லி வி.ஆர்.எஸ்ஸில் அனுப்பியாகி விட்டது. மலைப் பாதையில் அனுக்கமாகப் போகும் மினி பஸ்களுக்கு ஆரத்தி எடுத்தாகி விட்டது.
இனி மறுபடியும் ஹரித்வார் வரும் வரை இதே பஸ் தான். எங்களுக்கு சீட் நம்பர் ஒதுக்கித் தந்தார்கள். எனக்கு ஜன்னல் ஓர சீட் என்பது சிதம்பர ரகசியம் அல்ல. என் பக்கத்தில் சிதம்பரத்திலிருந்து வந்திருந்த ஒரு நபர் அமர்ந்திருந்தார். அவரைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. சொல்லாமல் இருப்பதற்கு நிறைய இருக்கிறது.
ஹரித்வாரில் எந்த சாமியார் சபித்தார் என்று தெரியவில்லை. உத்தரகாண்ட் பயணம் முழுக்க அவர் நித்திரை காண்ட் ஆகவே இருந்தார். இந்த பயணக் கட்டுரையை படித்தால் கூட அவருக்குப் புதிதாக இருக்கும். மார்க்கோ போலோவின் கடல் யாத்திரைகள் படிப்பது போலத் தான் இருக்கும்.
எல்லோரும் ஏறியவுடன் பஸ்ஸில் சரவணன் ஏறப் போனார். அப்போது அவருக்கு போன் வந்தது. பாதியில் திரும்பிப் போன 12 பேர் கூட்டத்தின் தலைவர் தான் பேசினார்.” நாங்க பத்திரமா சென்னை வந்து சேந்தாச்சு...” என்று பெருமையாகச் சொன்னார். “நாங்க கேதார்நாத் புறப்பட்டாச்சு..” என்று பட்டென்று கூறினார் சரவணன். அந்த ஆத்மாவை நம்பி எவனாவது ஷேர் மார்க்கெட்டில் பங்குகள் வாங்கினால் அவன் அழிவது நிச்சயம்.
பஸ் பறப்பட்டது. சாலை ரிப்பன் பக்கோடா மாதிரி வளைந்து வளைந்து இருந்தது. சரவணன் திட்டத்தை விளக்கினார். கேதார்நாத் பத்ரிநாத் போகும் சாலைகள் ஓரளவுக்கு சீராகி விட்டதாகக் கூறினார். எனவே முதலில் கேதார்நாத் போவதாகக் கூறினார். கங்கோத்ரி யமுனோத்ரி பாதைகள் முற்றிலும் மூடி விட்டதாகவும் சாலைகள் திறக்க மூன்று மாதங்களாவது ஆகும் என்றும் எனவே இந்த பயணக் கட்டுரையில் ஏழெட்டு அத்தியாயங்கள் குறையும் என்றும் கூறினார்.
சார்தாம் யாத்திரை தோ தாம் ஆனது மனதிற்கு கஷ்டமாக இருந்தது. நல்ல வேளை குழுவில் யாரும் கோபத்தில் தாம் தூம் என்று குதிக்கவில்லை. கங்கோத்ரி, யமுனோத்ரி போக முடியவில்லை என்றாலும் அவைகளைப் பற்றி சிறு குறிப்பு பின்னர் பார்க்கலாம்.
முன்னே பின்னே மலைச்சரிவுகள் பற்றி அறியாததால் அவைகளை நான் சீரியசாக நினைக்கவில்லை. நேரில் பார்த்த போது தான் மலைப்பாக இருந்தது. எல்லா மணல் கொள்ளை லாரிகளும் ஒரே இடத்தில் மண்ணைக் கொட்டினால் எப்படி இருக்கும்? அந்த மாதிரி இருந்தது பல இடங்களில்.
65 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக இந்திய நிலப்பரப்பு இந்து மகா சமுத்திரத்தில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் தெனாவட்டு அதிகமானதும் வடக்கு நோக்கி மெதுவாக நகர ஆரம்பித்தது. ஏரியா எம்.எல்.ஏ ஏரியை அபகரிப்பது போல கொஞ்சம் கொஞ்சமாக மத்திய ஆசிய நிலப் பரப்பு பக்கம் போக ஆரம்பித்தது. திடீரென இரண்டும் மோதிக் கொண்டன.
மோதிய வேகத்தில் பூமிக்கு அடியிலிருந்து பாறைகளும் மண்ணும் டூத் பேஸ்ட் மாதிரி பிதுக்கிக் கொண்டு மேலே எழும்பின. பின்னர் அவைகள் செங்குத்தாக அப்படியே நின்று விட்டன. அது தான் இமய மலை.
சொன்னால் நம்பவே முடியாது. இந்த பூமியில் மலைகளிலேயே கடைக்குட்டி இமய மலைதான். இன்னும் செட்டே ஆகவில்லையாம். இன்று வரை டெம்பரவரியாகவே இருக்கிறது. அதற்கு பி.எப், ஈ.எஸ்.ஐ கூட கட்டுவதில்லை. பூமியில் மீதி எல்லா மலைகளும் அதற்கு நெடுங்காலம் முன்பே தோன்றி பெர்மணெண்ட் ஆகி கழுத்தில் ஐ.டி கார்டு தொங்க விட்டுக் கொண்டிருக்கின்றன.
கடைக்குட்டியாய் இருப்பதால் அவ்வப்போது இமயமலை பிடிவாதம் பிடிக்கும். கீழே பொத்தென்று விழும். எதையாவது துப்பும். துள்ளிக் குதித்து நில நடுக்கம் செய்யும். மொத்தத்தில் யாரைப் பற்றியும் கவலைப்படாது அதன் போக்கிலேயே போகும் இந்த இமயா எனப்படும் ஓவியா.
பூமியிலிருந்து கிளம்பிய மண்ணும் பாறைகளும் கெட்டியாகவும் இல்லை. அநேகமாக எல்லாமே சுண்ணாம்பு கலந்த லூசான பாறைகள். கையை வைத்தால் ரவா லாடு மாதிரி பொசுக்கென்று உதிர்ந்து விடும். கேரளாவில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை எல்லாம் முழுக்க கடினமான பாறைகளால் ஆனது. தினம் மூன்று வேளை ஜிம்முக்குப் போய் சிக்ஸ் பேக் உடம்பு மாதிரி கிண் என்று இருக்கும்.
இமய மலையில் ரோடு போடும் போது மலையை செங்குத்தாக பன்னீர் பட்டரை வெட்டுவது போல வெட்ட வேண்டும். வேறு வழி இல்லை. இதனாலும் நிலச் சரிவுகள் அதிகமாகின்றன.ஒரு சிறிய மழை பெய்தாலும் போதும். எல்லாம் பொல பொலவென கொட்டி விடும்.
ஆர்டிக், அண்டார்டிக் பிரதேசங்களுக்குப் பிறகு பூமியில் உறை பனி (Glaciers) அதிகமாக இருக்கும் இடம் இமய மலை தான் என்று நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள். கோபன்ஹேகனிலிருந்து கோட்டு போட்ட விஞ்ஞானி சொன்னால் நம்புவீர்கள்.
இமயமலை குழந்தையாக இருக்கும் போது பெயர் வைப்பது என்று முடிவெடுத்தார்கள். தாத்தா இல்லாததால் அந்த பெயரை வைக்க முடியாது. எப்போதும் பனி மூடி இருப்பதால் பனி மலை என்று பெயர் வைத்தார்கள். பனிக்கு சமஸ்கிரதத்தில் ஹிம் என்று பெயர். அசலம் என்றால் மலை. எனவே ஹிமாசலம் என்று பர்த் சர்டிபிகேட்டில் எழுதினார்கள். ஹிமகிரி என்றும் சொல்வார்கள்.
இமய மலையைப் பர்றி ஏன் இவ்வளவு விஸ்தாரமாக ஜியாக்ரபி டீச்சர் மாதிரி சொல்கிறேன் என்றால் இந்த யாத்திரையில் பிற்பாடு ஏற்படும் சில நிகழ்வுகளுக்கு இது ஒரு புரிதலாக இருக்கும் என்பதால் தான். மற்றபடி இந்தியா வரைபடத்தைக் கொடுத்து அதில் ஹிந்துகுஷ் மலைத் தொடரைக் குறிக்கவும் என்று சொல்லி உங்களை பெயில் ஆக்கும் எண்ணம் எல்லாம் இல்லை.
(பயணம் தொடரும்)
No comments:
Post a Comment