Tuesday, May 4, 2021

ஶ்ரீராம யாத்திரை - 1

 சிலரால் ஶ்ரீராம யாத்திரை download செய்ய இயலவில்லை என தெரிவிப்பதால் அதனை காபி பேஸ்ட்செய்கறேன்

பக்கம் ஒன்று

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீமான் உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி  தலைமையில் நடந்த ஸ்ரீராம அநுயாத்திரை யில் அடியேன் பெற்ற பங்கும் அனுபவங்களும்

பகிர்பவர் :எஸ். விஜயராகவன் 

முன்னுரையும் முதல் பாகமும்

 வடுவூர் ஸ்ரீ ராமனும்,சீதையும்

இந்த யாத்திரையின் நோக்கம் , ஸ்ரீ ராமர் திருப்பாதம் பட்ட இடங்களை எல்லாம் நாமும் அடியொற்றி சென்று முடிப்பதுடன் அந்தந்த இடங்களில் நடந்த விசேஷங்களை ஒட்டின ஸ்ரீ இராமாயண ஸ்லோகங்களை பாராயணம் செய்வதும் மற்றும்  ஸ்ரீ வேளுக்குடி சுவாமியின் அந்த ஸ்தலத்திய ஸ்ரீ ராம கதைகளை சுருக்கமான உபன்யாசமாக கேட்டு மனதில் தரிப்பதும் முக்கியமாக கொள்ளப்பட்டது

     இந்த யாத்திரை .பிட்டூர் ஸ்ரீ வால்மீகி ஆச்ரமத்தில் தொடங்கி இறுதியில் ஸ்ரீ ரங்கத்தில்முடிவு பெறும்படியாக இடங்களை ஒன்று கூட விடாமல் சேவித்து யாத்திரையை பூர்த்தி செய்வது என்ற பெரிய நோக்கத்துடன் 22-௦8-2௦௦6 முதல் ௦8-௦9-2௦௦6 வரை சீரிய முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அதிசயம் எழுதுவிக்க ஒன்னாததே. இருப்பினும் அடியேன் புல்லறிவைக் கொண்டு எழுத்தில் வடிக்க முயல்கிறேன். இந்த யாத்திரையில் கலந்து கொண்டவர்கள் ஆண்கள், பெண்கள் ,உபந்யாஸகர்கள், வாலண்டியர்கள்  சேர்ந்து மொத்தம் 37௦ திருநாமங்கள்.  ஆரம்ப கட்டத்தில் பலர் பல இடங்களில் சேர்ந்து கொண்டார்கள். அடியேன் அறிந்தவரை இதன் விவரம்.அமெரிக்காவிலிருந்து 22 பேர்கள் இவர்கள் சென்னை,வந்து ஆரம்பத்திலிருந்தே கலந்து கொண்டவர்கள்..மும்பையிலிருந்து கான்பூர் வந்து கலந்து கொண்டவர்கள் சுமார் 19 நபர்கள்.பெங்களூரில் இருந்து சென்னை வந்து கலந்து கொண்டவர்கள் 3 நபர்கள், 32 நபர்கள்  .ஹைதராபாத், குடந்தை போன்ற இடங்களில் இருந்து வந்து கலந்து கொண்டவர்கள் மூன்று நான்கு நபர்கள். ஸ்ரீரங்கத்திலிருந்து ஸ்ரீஉ.வே. பத்ரி நாராயண பட்டர் ஸ்வாமியும் மற்றும் பலரும்,,, காஞ்சியிலிருந்து ஸ்ரீ உ.வே.ஸ்ரீ நிதி சுவாமியும்,இன்னும் சிலரும் அடங்குவர். யாத்திரையில் குறிப்பிட்ட ஸ்தலங்களில் குறிப்பிட்ட காண்டங்களில் குறிப்பிட்ட ஸர்கங்களை வால்மீகி ஸ்ரீராமாயனத்திலிருந்து பாராயணம் நடத்தஸ்ரீ உ.வே.திருப்புல்லாணி  சுந்தரராஜ அய்யங்கார் சுவாமியும் மற்றும்  ஸ்ரீ வைஷ்ணவர்கள் சிலரும் வந்திருந்தனர்.., மீதி நபர்கள் சென்னை திருவல்லிக்கேணி, மயிலை, மாம்பலம் தாம்பரம், மற்றும் புற நகர் பகுதிகளை சேர்ந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் அடங்குவர். இதில்தென்கலையார், வடகலையார், ஸ்மார்த்தர்கள், மாத்வர்கள்,பாகவதர்கள் என்று பலரும் அடங்குவர்                                                            

                               பக்கம் இரண்டு.. 

மூன்று டாக்டர்கள் (அலபதி மற்றும் , ஹோமியோபதி) இவர்களும் தற்செயலாக இந்த யாத்திரையில் பங்கெடுத்தவர்கள். இருப்பினும் தங்கள் துணை தேவைப்படலாம் என்று சில குறிப்பிட்ட மருந்து வகைகளுடனும் சில முக்கிய ,உபகரணங்களுடனும் பயணம் செய்துள்ளனர் என்பதை பின்னர் அறியநேர்ந்தது..இது போக இரண்டு குரூப்பாக யாத்ரிகர்களுக்கு மூன்று வேலையும் குறிப்பிட்ட இடங்களில் காலை காபி பாலபோஜனம், மதியம் உணவு,, இரவு உணவு போன்ற தளிகைகளை கவனிக்க ஒரு குருப் பிரயாணம் செயதவர்களுடனும், மற்றொரு குருப் தனி வேன்களில், மளிகை சாமான்கள், மற்றும் பாத்திர பண்டங்களுடனும் முன்பாக யாத்திரை ரூட்டில் சென்று கொண்டிருந்தனர். முன்பாக செல்பவர்கள் அடுத்து தங்கக் கூடிய இடங்களில் தளிகை, பலகாரங்களை செய்து முடித்து யாத்திரையுடன் வரும் குருப்பிடம் ஒப்படைத்து விட்டு கிளம்பி அடுத்த ஹால்ட் இடத்துக்கு முன் சென்று விடுவர். அதனால் எந்த இடத்திலும் உணவிற்காக யாத்திரிகர்கள் காத்திருக்காமல் காலதாமதம் செய்யாமல் தங்கள் புரோகிராம் படி சென்று கொண்டே இருக்கலாம். எங்கேயும் தொய்வு வரக் கூடாது. காரணம் சில இடங்களில் ட்ரைன் பயணம், சில இடங்களில் PUSHBACK A/C AIRBUSகள்.,என்று பிடித்து போகவேண்டி இருந்தபடியால் எங்கேயானும் HELD UP ஆகிவிட்டால் அவ்வளவு பேருக்கும் இடை இடையே RESERVE செய்திருந்த TRAINகள்/பஸ்கள் மிஸ் ஆகி விடக் கூடும் என்று இந்த ஏற்பாடு.

யாத்திரை கால அட்டவணையில் எந்த மாற்றமும் இன்றி செல்வது முக்கியமாக கருதப்பட்டது. ப்ரோக்ராமில் உள்ள எந்த ஸ்தலமும் விடாமல் ரத்து செய்யாமல் பார்த்துக் கொண்டு போனதும் முக்கியம். 

 நானும் என் மாப்பிள்ளை ஸ்ரீ கண்ணன் சுவாமியுடன் சேர்ந்து கொண்டேன். (இவர் திருவல்லிக்கேணி பகுதி  வாலண்டியர்) சுமார் 35 நபர்கள் கொண்ட ஒரு கோஷ்டிக்கு இரண்டு  வாலண்டியர் களை ஒப்படைத்து அவர்களிடம் GUIDE பண்ணும் பொறுப்பை ஒப்படைத்திருந்ததால் அவர்களை இலவசமாக இந்த யாத்திரையில் பங்கு பெற  ஏற்பாடாகி இருந்தது. எனக்கும் அவர் கூட வந்தது ஒரு துணைதான்.. ஆக,இந்த முப்பது நபர்களையும் யாத்திரை கோஷ்டியில் சேர்த்துக் கொண்டால் யாத்திரையில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை சுமார் 38௦ நபர்கள் ஆகிறது. சுவாமி ஏற்கனவே ஒரு கூட்டம் போட்டு யாத்ரிகர்கள் என்னென்ன  பொருட்கள் கொண்டு வரவேண்டும் அவைகளை எப்படி பாக் செய்து எடுத்து வரவேண்டும் என்றெல்லாம் விவரமாக சொல்லி இருந்தார். அதாவது குறைந்த பட்சம் இரண்டு அதிக பட்சம் மூன்று செட் வேஷ்டி உத்தரியங்கள். ஆண்டாள் கோஷ்டியார் அதேபோன்று இரண்டு மூன்று நாளைக்கான ஆடைகள்,, டவல், திருமண்பெட்டி, டார்ச்லைட்,மற்றும் தேவையான உள்ளாடைகள் பேன்ட்/ஷர்ட், சீப்பு,பேஸ்ட், பிரஷ் கண்ணாடி போன்ற இதர வஸ்துகள், இவைகள் ஓரு பெட்டியில் வைத்து பூட்டி வைத்துக்கொள்வது. கூடியவரை லக்கேஜ்களை

                               பக்கம் – மூன்று

குறைத்து பயணம் செய்து கொள்வது நல்லது. இந்த பெட்டிகளை அடிக்கடி எடுக்க முடியாது. எந்தெந்த ஸ்தலங்களில் இரவு தங்குதல், உள்ளதோ அந்தந்த இடங்களில் மட்டுமே தருவர். மற்ற சமயங்களில் பஸ்களின் டிக்குகளில் அந்தந்த வாலண்டியர்களின் கட்டுப்பாட்டில் பெட்டிகள் இருக்கும். மற்ற முக்கிய சாதனங்கள், சாப்பிடும் தட்டு, பாராயண புத்தகம், ஒரு செட் டபரா டம்ளர், அனுயாத்திரைகையேடு, போர்வை ,துணிகளை காயப்போடும் கயிறு டார்ச் லைட் அவரவர்க்கு தேவைப்படும் மருந்து வகைகள் மட்டும் கைப்பையில் வைத்திருக்க வேணும்.. இதற்காக அடிக்கடி பெட்டியை கொடுத்து வாங்கி வைக்க வேண்டிய அவசியம் இருக்காது.. மாற்று துணிகள், திருமண்பெட்டி, டவல்,.பேஸ்ட், பிரஷ்,சோப்பு, சீப்பு, கண்ணாடிகள் போர்வை,AIRPILLOW போன்றவைகள் தோள்பைகளில் அடக்கம். இரவு தங்கும் இடங்களில் கொடுக்கப்பட்டு, காலை குளியல்,ஆடை மாற்றல் ஆகி,முன்னாள் உடுத்திய துணிகளை சோப்பு போட்டு கசக்கி காயப்போட்டு விட்டு காலை பால போஜனம் காபி போன்றவைகளை முடித்துக்கொண்டு உள்ளூர் ஸ்தலம் சேவித்து திரும்புகையில் காய்ந்த துணிகளை மடித்து பெட்டியில் போட்டு பூட்டி திரும்பவும் வளண்டியரிடம் ஒப்படைக்க வேண்டும்.அடியேன் நல்ல மயில்கண் வேஷ்டி உத்தரியம் ஒன்றை சலவை செய்து வந்ததை யாத்திரையில் சீதா கல்யாணம்,போன்ற முக்கிய நிகழ்ச்சிகளிலும் நடக்கையிலும் மற்றும் அயோத்தி, திருக்குறுங்குடி, ஆழ்வார் திருநகரி, திருப்புல்லாணி, திருகோஷ்டியூர், ஸ்ரீரங்கம் போன்ற திவ்ய தேசங்களில் சேவிக்கும் காலங்களிலும் உடுத்திக்கொள்ள எக்ஸ்ட்ராவாக எடுத்து வைத்துக்கொண்டேன் இரண்டு செட்டோடு மூன்றாவதாக ஒன்று எடுத்துக்கொண்டேன். .இது ஒரு நல்ல ஏற்பாடே. அடிக்கடி பெட்டியை திறக்க வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் மதியம், இரவு சாப்பாட்டு நேரங்களில் தட்டு டம்ளர் மட்டும் கைப்பையில் இருந்து எடுத்தால் போதுமானது.சில சமயங்களில் வண்டிகளிலேயே பிரசாதங்களை உட்கொள்ள வேண்டியிருந்தால் தட்டு தம்ளர்கள் கைப்பையில் இருப்பது சௌகரியமாக இருக்கும். தீர்த்தம் எங்கே வேண்டுமானாலும் பஸ் நிற்கும் இடங்களில் பாட்டல்கள் வாங்கிக் கொள்ளலாம். இவ்வளவு இந்த விஷயங்களை பற்றி எழுதணுமா என்று சிலர் நினைக்க கூடும். சுமார் நானூறு பேர்களை அழைத்துக்கொண்டு 85௦௦ கிலோ மீட்டர் பயணம் வடக்கே நேபாள தேசத்திலிருந்து தெற்கே திருப்புல்லாணி வரை பயணிப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. மேலும் பல இடங்கள் காடுகள், நகரங்களில் அவ்வளவு பேருக்கும் தங்க இட வசதிகள், ஆகார வசதிகள் இடையிடையே ரயில்பிரயாண  டிக்கெட் ரிசெர்வேஷன்கள் பாதுகாப்பு விஷயங்கள் என்றிப்படி   எவ்வளவோ விஷயங்கள் முன் யோசனையுடன் செய்யப் பட்டிருந்தது

முன்னுரை முற்றிற்று.

 இனி அநுயாத்திரை விவரங்கள் ஆரம்பம்                       

 பக்கம் –நான்கு

20-08-2006 –காலை (ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி எம்பெருமானை கால சந்தியில் சேவித்து தீர்த்த பிரசாதங்களை பெற்றுக்கொண்டு எல்லா சந்நிதிகளையும் சேவித்துக் கொண்டு எம்பெருமானிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு அகம் சேர்ந்து திருவாராதனத்தை முடித்துக்கொண்டு மாடியில் இருந்த அத்யாபகர் பார்த்தசாரதி அய்யங்கார் சுவாமியிடம் ஸ்ரீ ராம அனுயாத்திரை விவரங்களை எடுத்துக் கூறி வெற்றிலை பாக்கு பழத்தட்டில் ரூ.1௦௦/=ஐ வைத்து யாத்திரா தானமாக தட்டை அவரிடம் கொடுத்து தண்டம் சமர்ப்பித்து விட்டுவந்தேன். யாத்திரை  2௦-௦8-2௦௦6 தொடங்கி ௦8-௦9-2௦௦6 வரை நடக்குமாதலால் அகத்து நித்ய திருவாராதன பொறுப்பையும் நாங்கள் இருவருமே செல்வதால் கவனித்துக் கொள்ள வேண்டுமாய் பிரார்த்தித்து கீழிறங்கி பிறகு.போஜனாதிகள் ஆனபின்பு பாக்கிங் வேலைகளை கவனித்தோம்  அடியேனும் அடியேன் மாப்பிள்ளையும் இரண்டு பெரும் இரண்டு சிறிய சூட்கேஸும், இரண்டு தோள்பைகளும் தயார் படுத்திக்கொண்டு சுமார் ஒரு நாற்பது சிறிய நூறு கிராம் எடை கொண்ட கல்கண்டு,முந்திரி,திராட்சை கொண்ட பாக்கெட்டுகள் வாங்கி வைத்திருந்ததையும் எடுத்துக்கொண்டோம். அங்கங்கே திவ்ய தேசங்களில் பெருமாளுக்கு காட்டி ஒரு பாலிதீன் பையில் அர்ச்சகர் எடுத்துக்கொண்டு போக தருவதை சேமித்து வந்தால் யாத்திரை பூர்த்தியாகி அகம் சேர்ந்தவுடன் விசாரிக்க வருபவர்களுக்கும், ஆத்தில் உள்ளவர்களுக்கும் பிரசாதமாக தரலாம் என்று நோக்கத்தில் கொண்டு போனது...கைச்சிலவுக்கு தேவைப்படலாம் என்று பர்சில் சிறிது பணமும் செல் போனும். இதற்கு மேல் தேவைப்படின் ATM கார்டும் வைத்திருந்தோம். பெரிய ப்ளான் எதுவும் எங்களுக்கு இல்லை. சென்னை டு கான்பூர் வரை ரிசெர்வ்செய்து  ரயில் டிக்கெட் எங்கள் இருவருக்கும் ஏற்கனவே கொடுக்கப் பட்டிருந்தது.. மற்ற ஏற்பாடுகள் எல்லாம் ஸ்வாமியே எல்லாம் பார்த்துக் கொள்வதால் விசாரம் .ஒன்றும் இல்லை. முடிய மணி பதினொன்று ஆகியது. பிறகு சிறிது ஒய்வு எடுத்துக்கொண்டு இரவு ஆகாரம் ஆனவுடன் ஒன்பது மணிக்கு சென்ட்ரல் ஸ்டேஷன்-ஐ நோக்கி பயணப்பட்டோம். ஸ்டேஷனை பத்து மணிக்கு முன்னமே அடைத்தாகி விட்டது .நாங்கள் பிரயாணப்படவேண்டியடிரெயின் ராப்தி சாகர் எக்ஸ்பிரஸ்  திருவனந்தபுரத்திலிருந்து கிளம்பி சென்னை வழியாக இரவு பதினோரு மணிக்கு கோரக்பூர் நோக்கி பயணமாகும் வண்டி.. இரண்டு இரவுகளும் ஒரு பகலும்  பயணப்படவேண்டிய தூரம் .பத்துமணி யிலிருந்தே நம் யாத்த்ரிகர்கள் ஜேஜே என்று வந்த வண்ணமா யிருந்தனர். சுவாமியை மாற்றி மாற்றி தெண்டன் சமர்ப்பித்தவாறு இருந்தார்கள். எங்கே பார்த்தாலும் பஞ்சகச்ச வேஷ்டிகளும், நெற்றியில் திருமண்காப்புகளும், மடிசார் புடவைகளுமாய் அந்த இரவு மின் ஒளியில் அந்த ஸ்டேஷனே ஒரு வித்யாசமான ஸ்ரீ வைஷ்ணவ

                                  பக்கம் – ஐந்து

பயணிகள் கூட்டத்தை காட்டிக்கொண்டு இருந்தது..சுமார் ஐந்து போகிகள் (ரயில் பெட்டிகள்) நமக்கு புக் ஆகி இருந்ததில் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வருவோர்கள் மட்டும் பயணமாகி வந்திருப்பர் என்று எண்ணுகிறேன். வண்டி பத்தேகாலுக்கு. பிளாட்பாரத்தில் நுழைந்து விட்டது. ஸ்லீபர் கம்பார்ட்மெண்டுகள் ஆனபடியால் முட்டி மோத வேண்டிய அவசியமின்றி ஒரு அரை மணி காலத்தில் சீட்களை பார்த்து அமர்ந்தாகி விட்டது.. சுவாமியும் அவருடைய தேவிகளும், உபன்யாசக சுவாமிகளும், இன்னும் சில பெரியோர்கள் கூடுதல் பணம் கட்டி ஏ,ஸி பெட்டியில் பயணப்பட்டனர். அவர்களுக்கு பல  வேலைகள் இருந்தன. பல திக்குகளில் இருந்து சென்னை வந்தவர்கள் எல்லோரும் வண்டியில் ஏறி விட்டனரா, யாரேனும் வாராமல் இருந்திருந்தால் அவர்களை செல்போனில் அணுகி விவரத்தை தெரிந்துகொண்டு அந்த இடத்தை RAC-ல் புக்பண்ணப் பட்டிருந்தவர் களுக்கு வாங்கி தருதல், சமையற்காரர்களுக்கு என்று தனியாக ஒரு அரை போகி புக் செய்யப்பட்ட இடத்தில் அவர்கள் ஏறி அமர்ந்தாகி விட்டனரா என்றும் மறுநாள் மூன்று வேளைக்கு தயார் செய்யப்ப பட்ட உணவு வகைகளை மற்றும் உணவுப் பாண்டங்களை சரியாக எற்றியாகி விட்டதா என்றும் .செக் பண்ணிக் கொண்டு கார்டிடம் சொன்ன பிறகே வண்டி பதினொன்றே காலுக்கு சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் ஐ விட்டு கிளம்பியது. அடியேனுக்கும் என் மாப்பிள்ளை க்கும் சமையற்காரர்கள் இன்னும் சில வாலண்டியர்கள் பயணித்துக் கொண்டிருந்த போகியில் தான் ஸ்லீபர் வசதி கிடைத்தது. காரணம் அடியேன் ரொம்ப கடைசி நேரத்தில் இந்த யாத்திரையில்  பயணிக்க முடிவெடுத்தேன். அதனால் இந்த சமையற்காரர்கள் பட்ட கஷ்டங்கள் மறுநாள் மூன்று வேலைக்கும் ஆகாரதிகளை கெடாத வகையில் பேணிக் காத்த விவரங்களையும் ருசி குறையாமல் குளிர்பதன சாதனங்கள் இல்லாமல் எப்படி பாதுகாப்பது என்ற விவரங்களையும் நேரில் அறிய முடிந்தது..

.ரயில்பெட்டியிலேயே இரவு .யாத்த்திரையில் கலந்து கொண்டவர்களுக்கு ஸ்ரீ ராம அநுயாத்திரை,-ஸ்ரீ இராமாயண சரித்திரம்,மற்றும் க்ஷேத்திர விளக்கப் புத்தகம்   என தலைப்பு கொண்ட ஒரு கையேடு வழங்கப் பட்டது. இரவு சுமார் ஒருமணி வரை ஒரொரு போகியாக ஸ்ரீ திருப்புல்லாணி சுந்தரராஜ ஐயங்கார் சுவாமி ஸ்ரீ வால்மீகி இராமாயணத்தின் பால காண்டத்தை வெகுவாக சுருக்கி ஒரு உபந்யாசத்தை ஒரு மொபைல் ஒலிபெருக்கி கருவியுடனும் மைக்குடனும் ஸாதித்தார்.. நம் ரிசெர்வ் பெட்டிகளில்  வேறு பயணிகள் இல்லாததால் பிரச்சனை ஒன்றும் இல்லை.எல்லோரும் ஆகாராதிகளை அகங்களிலேயே முடித்துக்கொண்டு வண்டி ஏறியதால் ராத்திரி ஆகார பிரச்சனை ஏதும் இல்லை. தேவைப்பட்டவர்கள் பழம், பால், பிஸ்கட் போன்றவைகளை வண்டி நின்று சென்ற ஜங்ஷன் ஸ்டேஷன்களில் வாங்கிக் கொண்டனர்.அன்று எல்லோரும் நன்றாகவே உறங்கினோம்.சுவாமி அடிக்கடி சொல்லுவார், இந்த யாத்திரை பிக்னிக் அல்ல பில்க்ரிமேஜ். ஆகையால் ரொம்ப சௌகரியங்களை எதிர்பார்க்காமல்

                                        பக்கம் – ஆறு

புனிதமான ஸ்தலங்களை சேவிப்பதிலேயே கவனத்தை வையுங்கள் என்று. இருப்பினும் அடியேன் ரொம்பவும் விஸ்தாரமாகவே எழுதிப் போகிறேன். இனி 21-08-2006 திங்கட்கிழமை நிகழ்ச்சிகள் காண்போம். அனேகமாக பாதிப்பேர் காலை நாளே முக்காலுக்கே விழித்துக் கொண்டனர். பயணித்தவர்களில் சுமார் அறுபது சதம் நபர்கள் சீனியர் சிடிசன்களே. இராத்திரி பத்து பதினோரு மணி வரை தூக்கம வராதவர்கள், காலை 5 மணிக்கு முன்பே விழிப்பவர்கள்.அதனால் அவர்கள் காலை எழுந்திருந்து பற்களை விளக்கியவுடனே காபியை எதிர்பார்ப்பவர்கள். ஆனால் காலை காபி அவரவர்களே முதல் நாள் மட்டும் பார்த்துக்கொள்ள வேண்டியது என்று ஸ்வாமி சொல்லிவிட்ட படியால் அநேகமாக ஐந்தரை மணிக்குள்ளாகவே பலரும் பல் தேய்த்து முகம் கழுவி ஆறு மணிக்கு பெருமூச்சு விட்டுக்கொண்டே வண்டி விஜயவாடா ஸ்டேஷனில் நின்றபொது காபி சாப்பிட தயாராகி விட்டனர்.. பால் வாங்கி  கையில் கொண்டு வந்திருந்த ஹார்லிக்ஸ்-ல்கலந்து சாப்பிட்டனர்.சிலர். பலரும் பால் வாங்கி SUNRISE, BRU பவுடர் சர்க்கரை சேர்த்து பருகினர். பாலுக்கு தோஷமில்லை, காபி பொடி சக்கரை தங்கள் அகத்தில் இருந்து கொண்டு வந்ததாகையால் இது கொஞ்சம் ஆசாரம் என்று அவர்களுக்கு ஒரு சமாதானம் இருந்திருக்கும்.. டம்ளர் டபரா  கைப்பையில் இருந்ததால் ஆத்தி சாப்பிட சௌகரியமாய் விட்டது. கூடியவரை டிபன் அயிட்டங்கள் வெளியே ஸ்டேஷன்களில் சாப்பிடவேண்டாம் என்று சுவாமி சொல்லியிருப்பதாக வாலண்டியர்கள் வேறு கொஞ்சம் பயமுறுத்தி வைத்திருந்தார்கள். ஆனால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அவ்வப்போது பட்டினி கிடக்காமல் பிஸ்கட் பழங்கள் போன்ற அயிட்டங்களை இரண்டொன்று சாப்பிட்டுக்கொண்டு வந்தார்கள். இந்த ஒருநாள் பயணம் ஆரம்பத்திலே சற்று சிரமத்தைக் கொடுத்தாலும் அதன்பின் வேளாவேளைக்கு ஆகாரங்கள் வெகு சுவையாகவே இருந்ததை இங்கேயே சொல்லி விடுவது நல்லது. . இன்று குளியல் இல்லை. வாஷ் பேசினில் நன்றாக முகத்தை கழுவி புதிதாக திருமண்காப்பு இட்டுக்கொண்டு அனைவருமே கொஞ்சம் FRESH ஆகி விட்டனர். மணி 8-3௦ அல்லது ஒன்பதிருக்கும். ட்ரைன் வாரங்கள் (WARANGAL) ஸ்டேஷன் –ல் நின்றது. ராத்திரியே சொன்னபடி, ஒவ்வொருவரையும் விசாரித்து எவ்வளவு தேவயோ கேட்டு கேட்டு மிளகாய்பொடி எண்ணையுடன் புரட்டி எடுத்த இட்லிகளை காலை பாலபோகமாக (BREAKFAST) அவரவர் கொண்டு வந்திருந்த தட்டில் சேர்த்தனர். காரணம் அதிகமாக கேட்டு வாங்கி, சாப்பிட முடியாமல் வேஸ்ட் பண்ணிடப் போகிறார்களே என்று பார்த்து பார்த்து ஸாதிக்கவேண்டிய நிர்பந்தம் பரிசாரகர்களுக்கு. மொத்தம் ஐந்து போகிகள் சேர்ந்தே இருந்தபடியால் வெளி பயணிகள் இல்லை.வாலண்டியர்கள் அவரவர்களுக்கு ஒப்படைத்த 35 நபர்களுக்கும் கிட்ட இருந்து பரிசாரகருக்கு காட்டி வந்ததால் எல்லோரும் ஒரு அரைமணி காலத்தில்.நபருக்கு நான்கு இட்டலிக்கு குறையாமலும்(இட்லியும் நான்றாக சற்று பெரிய சைஸ்சிலியே இருந்தது. சிலருக்கு ஆறேழு வரையும்கூட கேட்டு வாங்கி பால போஜனத்தை முடித்துக்கொண்டனர் தேவாமிருதமாக இருந்தது.. . தேவைப்பட்ட

                                                                                                                                                                         பக்கம் – ஏழு          

வர்கள் அந்த ஸ்டேஷனில் SECOND DOSE காபி வாங்கி சாப்பிட்டார்கள்.. அதில் அடியேனும் மாப்பிள்ளையும் சேர்ந்தவர்களே. டிபன் சாப்பிட்டால் காபி சாப்பிடாவிட்டால்பூர்த்தியாகாது. வண்டி சிறிது நேரம் அந்த ஸ்டேஷனில் அதிகமாகவே இளைப்பாறி புதிய என்ஜின் மாற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அடுத்த ஹால்ட் மதியம் ஒரு மணிக்கு பல்ஹார்ஷா (BALSHARSHAH) என்று போட்டிருந்ததை அடியேன் கொண்டு போயிருந்த ரயில்வே கைடு மூலம் அறிந்தேன்.

இந்த இடத்தில் ஒரு விஷய முன்னாள் ராத்திரி) திருப்புல்லாணி உ.வே.சுந்தரராஜ அய்யங்கார் சுவாமி சுமார் இரண்டு மணி காலத்திற்குள் ஐந்து கம்பார்ட்மென்ட்டுக்கும் சென்று   அனுயாத்திரை பற்றிய ஒரு முன்னோட்டத்தை ஒரு அரை மணிகாலம் உபன்யசித்த விஷயத்தை இங்கே சொல்லிவிடுவது நல்லது. ஸ்வாமி ஸாதித்த விஷயங்கள்: ஸ்ரீமந் நாராயணனின் அவதாரமான ராமபிரான் பாரத தேசத்தின் உயிர்நாடி. அவனுடைய வரலாற்றை வடித்த வால்மீகி ராமாயணம் நம் தேசத்துக்கே ஆதாரம். மஹாலக்ஷ்மியின் அவதாரமான சீதையும், இராமனும் தங்கள் மெல்லடி நோவ வடக்கே அயோத்தி முதல் தெற்கு கோடியில் திருப்புல்லாணி வரை நடந்தனர்.இவர்களின் யாத்ரைக்கு தேசம் முழுவதும் வாழ்ந்த பக்தர்களை கடாக்ஷிப்பதே முக்கியப் பயன். பகவானை பின்தொடர்ந்து செல்வது அநுயாத்திரை என்று போற்றப்படுகிறது. இந்த அநுயாத்திரை நம் உள்ளத்தில் நிறைந்திருக்கிற ஸீதா ராமர்களின் மார்க்கத்தை பின் தொடர்ந்து அவர்கள் திருவடி பட்ட புண்ணிய க்ஷேத்திரங்களை தர்சிக்கும் அவாவோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. ஒவ்வொரு வருக்கும் இது பற்றிய கையேடு ஒன்று  கொடுக்கப் பட்டுள்ளது..அதில் அநுயாத்திரையின் போது வரும் அந்தந்த இடங்களின் பற்றிய இராமாயண ஸ்லோகங்களின் சிறு விளக்கம் முதல் பகுதியிலும், அந்த ஸ்லோக விவரங்கள், மற்றும் யாத்திரையின் பாதை வரைபடங்கள் தரிசிக்கபோகும் முக்கிய ஸ்தலங்களின் வண்ண புகைப்படங்களும் இரண்டாவது ப்பகுதியிலும் தரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்..முதல் பாதை ஸ்ரீ ராம,லக்ஷ்மண,பரத சத்ருக்னன் அவதரித்த அயோத்தி, பின் அங்கிருந்து விஷ்வாமித்திர மகரிஷியால் அவர் தன் யாகத்தை முடிக்க ஸ்ரீ ராமனையும், லக்ஷ்மணனையும் அழைத்து செல்லப்பட்டு யாகத்தை முடித்துக்கொடுத்து அங்கிருந்த மிதிலைக்கு நடந்து அங்கே சீதா கல்யாணத்தை முடித்து மீண்டு தசராதிகளுடன் அயோத்தி திரும்பிய பாதை

 இரண்டாவது பாதை அயோத்தியிலிருந்து சித்திரகூடம், சித்திரகூடத்திலிருந்து பஞ்சவடி, பஞ்சவடியிலிருந்து கிஷ்கிந்தை, அதன்பின்பு கிஷ்கிந்தையிலிருந்து திருப்புல்லாணி வரையாக காட்டப்பட்டுள்ளது. ஒரொரு பாதையிலும் இடையிடையே ஸ்ரீ ராமன் சென்ற திருவடி பட்ட முக்கிய ஸ்தலங்கள், ஆஷ்ரமங்கள், எல்லாவற்றையும் நாமும் ஸ்ரீ ராமன் அடியொற்றி தரிசிக்கப்போகிறோம். என்று குறிப்பாக சொல்லி நிறுத்தி, மறுநாள் மதிய ஆகாரம் முடிந்த பிறகு ஸ்ரீ இராமாயணத்தில் பாலகாண்டத்தின் சுருக்கத்தை சொல்லுவேன் என்று சொல்லியிருந்தார். இனி மேலே நடந்த விஷயங்கள்:

 வண்டி பால போஜனம் முடிந்த பிறகு வெகு வேகமாக விரைந்து கொண்டிருந்ததை ஜன்னல்கள் திறந்து விட்டபடியால் அனைவரும் வெளி தேசங்களை கண்டு கொண்டே அந்தந்த  தேசாசார மக்களையும் பார்த்துக்கொண்டே பயணப்பட்டோம். பகல் ஒரு மணி வாக்கில் வண்டி   BALHARSHAH (பல்ஹர்ஷா) என்ற ஸ்டேஷன்-ஐ அடைந்தது. இந்த இடத்தில் பகல் ஒருமணிக்கு சுமார் நாலு மணி நேரம் வேகமாக ஓடி இடையில் எந்த ஸ்டேஷனிலும் நிற்காமல் ஓடியதால் பயணிகள் சற்று சோர்வோடு இருந்ததை பார்த்தேன்.ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு இருந்ததும் குறைந்திருந்தது. இடையில்

                                             பக்கம் – எட்டு

ஒருமுறை கிருஷ்ணன் சுவாமி சக ஆப்தர்களுடன் சம்பாஷித்துக்கொண்டே ஒருமுறை ஐந்து பெட்டியுள்ளும் சென்று யாத்திரை பயணிகளை விசாரித்துக்கொண்டு நடந்தபோது சிறிது கலகலப்பு ஏற்பட்டது. அந்த இடத்தில் .பகல் ஒரு மணியாகி விட்டதால் ஆகாரம்  வழங்க ஏற்பாடுகள் நடந்து வந்தது. காலை பலகாரம் கொடுத்த மாதிரியே ஒவ்வொருவர் தட்டிலும் வாலண்டியர்கள் தொடர்ந்துவர பரிசாரகர்கள் பெரிய அகப்பை போன்ற கரண்டி மூலம் இருமுறை வெத்த குழம்பு சாதத்தை தட்டில் சேர்த்துவிட்டு , ஒரு பாக்கெட் உருளை சிப்ஸ்-ஐயும் தந்துகொண்டே போனார்கள். இன்னொரு குருப் பரிசாரகர்கள் வேறு அன்டாவை நகர்த்திக்கொண்டு வந்து தயிர் சாதத்தை சாதித்துக்கொண்டே போனார்கள். முன் போகியில் இருந்து  திரும்பி பின் போகிக்கு வரும் சமயம் மீண்டும் இரு சாதங்களையும் கேட்டு பரிமாறினார்கள். அந்த வெத்தகுழம்பின் அபாரமான சுவையை 15-வருஷங்களாகியும் என்னால் மறக்க முடியவில்லை. சூடாக  இல்லை என்ற குறை தவிர வேறொன்றும் சொல்ல இயலாது. சாதம் ரொம்ப குழைத்து வடிக்கப்பட்டு ருசியான சுண்டைக்காய், மனத்தக்காளி வத்தல் குழம்பு, புளி,, காரம், உப்பு, எண்ணை எல்லாம் திட்டமாக சேர்த்து, சாதம் குழம்புடன் நெகிழ்ந்து சுவையுடன் மீண்டும், மீண்டும், கேட்டு வாங்கி சப்பிடும்படியாக இருந்தது. தயிர் சாதம் அதற்கு ரொம்ப மேட்ச் .பால் நிறைய சேர்த்திருந்தார்கள் தயிரை குறைவாக சேர்த்து கலந்து இருந்ததோடு,திட்டமான உப்பும் சேர்த்து கொஞ்சம் தளராகவே பகளாபாத் மாதிரி தட்டில் விழுந்தது. ஒருவர் கூடவே அதன்மேல் நன்கு பொறித்த கடுகு, மிளகாய், கருவேப்பிலையை  ஒரு தனி பாலிதீன் பையில் வைத்துக்கொண்டு ,சேர்த்துக்கொண்டே போனார். அவைகள் நன்றாக மொரு மொரு வென்று இருந்தது. வெத்தகுழம்பு சாதத்தை மிஞ்சும் வகையில்  தயிர்சாதம் தொட்டுக் கொள்ள எலுமிச்சை ஊறுகாயுடன் கனகச்சிதமாக இருந்தது. பக்கத்திலிருந்த என் நண்பர் நான் புகழ்ந்ததை கேட்டு, எல்லோருக்கும் நல்ல பசி , எப்படியிருந்தாலும், பசித்து புசித்தால் அதன் சுவையே தனிதான் என்று பேசிக்கொண்டு இன்று ராத்திரி மறுபடியும் தயிர்சாதம் தான். அதான் குழம்பு சாதம் அதிகம் போட்டு தயிர் சாதத்தை குறைவா செலவழிக்கிறார்கள் என்று கூற மற்றவர்கள் அவர்கள் என்ன செய்வார்கள், டிரைனில் சமைக்க முடியாது அதுவும் 35௦-பேருக்கு கஷ்டம்தான். இரண்டு சாதமுமே கெடாதபடியும் ரயில்வே சாப்பாட்டை வாங்கித் தராமலும் கூடியவரை ஆசாரமாகவே கொடுத்து வருவதையும் பாராட்டவேண்டும் என்று சர்டிபிகேட் கொடுத்துக்கொண்டே சமையல் காண்டிராக்ட் யாரு தெரியுமோன்னோ, நம்ம டி.நகர்  புருஷோத்தமனாக்கும் என்று சர்வேஸ்வரனையே சொன்னார் போல் சொல்லி தீர்த்தத்தை பருகி ஏப்பம் விட்டார். எல்லோரும் வாஷ்பேசினில் கைகளை அலம்பிக்கொண்டு  தட்டுகளை அவரவர்களே அலம்பி கொஞ்சம் உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்றபடி SLEEPER பலகைகளை தூக்கி மாட்டினார்கள்...அதைப்பார்த்து மற்றவர்களும் ஸ்லீப்பரை தூக்கி மாட்ட அடுத்த பத்தாவது நிமிஷத்தில் பெட்டியே உறக்கத்தில் இருந்தது.  வண்டி ஐந்து

                                                                                                                                                     பக்கம் –ஒன்பது

மணிக்கு நாக்பூர் வந்தபோது எல்லோரும் முழித்துக் கொண்டனர். ஒரு கப் பால் வாங்கி ப்ரூகாப்பி தயாரித்து பருகினர். வண்டி 5-௦௦ மணிக்கு ஸ்ரீமான் சுந்தரராஜ அய்யங்கார் சுவாமி எங்கள் போகியில் நடுவில் சைடு BOTTOM SLEEPER-ஐ மடக்கி பென்ச் மாதிரி ஆக்கிக்கொண்டு ஒரு  ஒலி பெருக்கியை முன் பெட்டியின் ஆரம்பத்திலும் மற்றொரு ஒலிபெருக்கியை பின்     பெட்டியின் ஆரம்பத்திலும் கொக்கிகளில் மாட்டி ஒரே சமயத்தில் மூன்று பெட்டிகளிலும் உள்ளோர் கேட்கும்படி  தயார் செய்துகொண்டு பேச ஆரம்பிக்கையில் வேளுக்குடி சுவாமி அவர் பக்கத்தில் வந்து  உட்கார்ந்து மைக்கை வாங்கி சில விஷயங்களை கூற தயாரானார்.. கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம் நன்கு தூங்கி எழுந்து விட்டபடியாலும் எல்லோரும் முகம் கழுவி தங்களை FRESH செய்துகொண்டு விட்டபடியாலும் ஊக்கத்துடன் ஸ்வாமி சொல்லப் போவதை கேட்க  தயாரானார்கள் ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமி  சொன்ன விஷயங்கள்:

அடியேன் ஏற்கனவே சென்னையில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் சில விஷயங்களை கூறி யுள்ளேன். அதை மீண்டும் இப்போது வலியுறுத்துகிறேன்.

 ஸ்ரீ சீதா ராமபிரான் அருளால் அனேகமாக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன.எல்லா டிகேட்டுகளும் முன் பதிவு செயப்பாட்டு விட்டன. அந்தந்த ஸ்தலங்கள் வரும் சமயம் யாத்திரிகர்களுக்கு வழங்கப்படும்.தங்கும் சத்திரங்களும், LODGE களும் அந்தந்த இடத்திலுள்ள வசதிப்படி ஏற்பாடாகி உள்ளது. தினப்படி நிகழ்ச்சி நிரல் ஒவ்வொரு நாள் காலையிலும் ஒலிபெருக்கி மூலம் எல்லோரையும் கூட்டி அறிவிப்போம்.

பேட்ஜ் அணிந்துள்ள வாலண்டியர்களை கேட்டாலும் சொல்லுவர். ஸ்ரீ ராமனின் பாதையைப் பற்றி அறிந்த பண்டிதர்களோடும், பல நூல்களின் உதவிகள் கொண்டும் யாத்திரை தயாரிக்கப் பட்டுள்ளது. நம் உதவியாளர்கள் ஏழுபேர்  இரண்டுமுறை சென்று எல்லா இடங்களையும் நேரில் பார்த்து குறிப்பெடுத்துக் கொண்டு வந்துள்ளனர். இருப்பினும் சூழ்நிலையை உத்தேசித்து அங்கங்கே நிகழ்ச்சி நிரல் மாறலாம். எல்லா யாத்ரிகர்களும் ஏதாவது ஒரு போட்டோ ஐ.டி. கார்டு கொண்டு வரவேண்டும் என்று சொல்லியிருந்தேன். இது நேபாள எல்லையில் ஜனகபுரி செல்ல தேவைப்படலாம். புனேவில் இருந்து குண்டக்கல்லுக்கு எல்லோருக்கும் ஒரே ரயிலில் இடம் இல்லாததால் அடுத்தடுத்து ஒரு மணிநேர இடைவெளியில் இரண்டு ரயிலில் வருகிறோம். அந்த இடங்களில் கூடஇருக்கும்  வாலண்டியர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். நாளைக் காலை 8-3௦ மன்னிக்கு வண்டி கான்பூர் செல்கிறது.அந்த இடத்தில் நாம் எல்லோரும் இறங்குகிறோம். கான்ப்போரில் இருந்து நாகபுரி வந்து சேரும் வரை 3 5 இருக்கைகள் கொண்ட pushback AIR-BUSகள்ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. முதல் பத்து தினங்கள் இதில்தான் நாம் பயணம் செய்கிறோம். அடுத்து ஒரு சுற்று குண்டக்கல் ஸ்டேஷனில் இருந்து  கிஷ்கிந்தா வட்டாரத்திலும், இரண்டாவது சுற்று மைசூர் வட்டாரத்திலும்,மூன்றாவது சுற்று மணியாச்சி ஸ்டேஷனில் இருந்து ஸ்ரீரங்கம்

                                           பக்கம் – பத்து

வரையிலும் 55- இருக்கைகள் கொண்ட 6-பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இந்த விடங்களில் AIRBUS கள் கிடைக்கவில்லை. ஆனால் மூன்று சுற்றும் சிறு தூரமே பயணம் செய்ய வேண்டியிருக்கும்..ஒவ்வொரு பஸ்சிலும் இரண்டு வாலண்டியர்கள் இருப்பார்கள். அவர்களோடு நன்றாக பரிச்சயப்படுத்திக் கொண்டு ஒத்துழைக்கவும்.பிரயாணத்தில் நாமெல்லோரும் 35௦ பேர்களும்  சீதா ராமர்களின் குழந்தைகள் என்ற உணர்வுடன் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை யுடனும் சகிப்புத் தன்மையுடனும் ஸ்ரீவைஷ்ணவ பண்புகளை கடைபிடிக்க வேண்டும். முடிந்தவரை வழியில் எந்த பொருளையும் வாங்கி சேர்த்துக்கொண்டு லக்கேஜ்-ஐ கூட்டிக்கொண்டு அவதிப்படாதீர்கள்.ஒருபெட்டி ஒரு தோள்பையோடு ஏற்கனவே சொன்னபடி பாராயண ஸ்ரீகோசம்,கையேடு,தட்டு,டம்ளர் ,டார்ச்லைட்,போர்வை, ஊதும் தலையணை கொடிக் கயிறு, அவரவர் வியாதிக்காக சாப்பிட்டு வரும் மருந்துகள் ஏதேனும் இருப்பின் அவைகளையும் , வைத்துக் கொள்ளுங்கள்..உங்களுக்கு தேவைப்படும் குடிநீரை நீங்களே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் .பொது குழாய்களிலோ, நதிகளிலோ நீர் அருந்த வேண்டாம்.விலைஉயர்ந்த பொருள்களையோ நகைகளையோ அணிந்து வரவேண்டாம் என்றும் சொல்லியுள்ளேன்..ஆழமான புண்ய நதிகளில் குளிக்க வேண்டி வந்தால் வயதானவர்கள் படிகளில் அமர்ந்து சொம்புகளில் நதி நீரை மொண்டு குளிப்பது நல்லது. நதிகளில் குளிக்காதவர்கள் தங்கும் இடத்திலேயே குளித்து தயாராகலாம். நேபாளத்தில் கலவரம்இருந்தால் சீதாமர்ஹியிலேயே சீதாகல்யாணம் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஸர்கங்கள் மற்றும் ஸ்லோகங்கள், விவரணம் கையேட்டில் உள்ளது. ஸ்லோகங்கள் சேவிக்கும்போது நீங்களும் கூடவே புத்தகத்தைப் பார்த்துக்கொண்டே சேவிக்கலாம். இதன் விளக்க உரை அடியேன் உபன்யாசங்களில் சொல்லப்படும். யாத்திரையில் பிற இரவு பேசுவது என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். ஸ்ரீ ராம நாம பஜன் தெரிந்தவர்கள் பாடலாம். அந்த பஸ்ஸில் உள்ளவர்கள் அவருடன் சேர்ந்து பாடுவதும் விசேஷம் இயன்றவரையில் தங்கும் இடம் மற்றும் உணவு ஏற்பாடுகள் நன்றாகவே செய்துள்ளோம். ஆனால் இதில் பல இடங்கள் காட்டுக்குள்ளும் முன்னே சென்று அறியாததாகவும் இருக்கிறபடியால் வசதிக்குறைவு ஏற்படும்..அதை பொருட்படுத்தாமல் இருக்க வேண்டுகிறேன் என்று சொல்லி முடித்து பின் இரண்டு போகிகளில் உள்ளவர்களுக்கு இந்த விவரங்களை சொல்ல மைக், ஒலிபெருக்கி உபகரணங்களுடன் சென்று விட்டார். மணி 7-௦௦ ஆகி விட்டது. சிலர் காபி தயாரித்து பருகினர். 8-௦௦ மணிக்கு ததியோண்ணம் (தயிர்சாதம்) ஊறுகாயுடன் பரிமாறப் பட்டது. அவரவர் பசிக்கு தகுந்தபடி பெற்று இரவு உணவை முடித்தனர்.சிலர் பால் வாங்கி அருந்தினர்.இரவு ஒன்பதிலிருந்து பத்து மணி வரை .ஸ்ரீமான் சுந்தரராஜ அய்யங்கார் சுவாமி வந்து அமர்ந்து சுருக்கமாக ஒலிபெருக்கியில் ஐந்து போகி யாத்ரிகர்களையும் இரண்டு பெட்டிகளில் நெருங்கி உட்கார வைத்து சொன்னது:பலர் அவரவர் சீட்டிலேயே காதுக்கு கேட்டவரை போதும் என்று இருந்து விட்டனர். சுமார் 1௦-௦௦ மணி வரை சுவாமி சாதித்த விஷயங்கள்.. நாம் நாளைக் காலைகான்பூர் அருகில் உள்ள பிட்டூர்என்ற ஸ்தலத்தை தரிஸிக்க போகிறோம் .ஆகையால் இந்த இடத்தைப் பற்றிய விஷயங்களை முதலில் பார்ப்போம். மேலும் ஸ்ரீ ராமாயணம் அவதரித்த ஸ்தலமும் இதுவே. என்று சொல்லி ஸ்ரீ ராமாயணத்தில் உள்ள முதலிரண்டு ஸர்க்கங்களை நிதானமாக வாசித்து விட்டு அதன் பொருளை விளக்கிச் சொன்னார்..உலகத்தில் உத்தம புருஷன் யார் என்று நாரதரைக் குறித்து வால்மீகி கேட்டார். ஸ்ரீராமபிரான் அப்பொழுது

                                    பக்கம் – பதினொன்று

கோசலவிடையிறுத்தார். ராஜ்யத்தை ஆண்டு வந்தார். அவர்தான் வால்மீகி கேட்ட உத்தம புருஷன் என்று நாரதர் விடையிறுத்தார். அதுவரை நடந்த ஸ்ரீ ராமபிரானுடைய சரித்திரத்தையும் நாரதர் சுருக்கமாக வெளியிட்டார்.வால்மீகி மகாரிஷியினால் நன்கு பூஜிக்கப்பட்ட பின்பு , நாரதர் பிரம்மா லோகத்தை நோக்கிச் சென்றார்.  பிறகு வால்மீகி தன் சிஷ்யரான பாரத்வாஜருடன் மாத்யாஹ்நிக ஸ்நானத்திற்காகதமஸா நதிக்குச் சென்றார். அதன் கரையில் இரண்டு க்ரௌஞ்ச பக்ஷிகள் கலவியில் ஈடுபட்டிருப்பதைபார்த்தார் ஒருவேடன் அவற்றில் ஆண்பக்ஷியை அடித்து வீழ்த்தினான். அதைக்கண்ட வால்மீகி நெஞ்சு பொறுக்காமல் “ஏ வேடனே! நீ நீண்ட நாட்கள் வாழமாட்டாய்” என்ற பொருளுடைய ‘மாநிஷாத’ என்ற ஸ்லோகத்தை சொன்னார். அது சாப வார்த்தையாகும்.பிறகு மாத்யாஹ்நிக ஸ்நானத்தை முடித்து விட்டு சிஷ்யருடன் திரும்பினார். அங்கே அப்போது ப்ரம்மா . ராமபிரான் முதலியவர்களுடைய ரஹஷ்ய வ்ருத்தாந்தங்களை பிரகாச விருத்தாந்தங்கள் ஆகிய யாவற்றையும் நீர் உள்ளபடி மனத்தில் காண்பீர் என்று அனுகிரஹித்தார். பிறகு ஸ்ரீ ராமபிரானுடைய சரிதத்தை இயற்றும் என்று அனுகிரஹித்து தன்னுடைய உலகத்துக்கு திரும்பினார்.

 மேலும் அந்த சுவாமி சொன்ன விஷயங்கள் .நாளை 8-3௦மணிக்கு வண்டி கான்பூர் போகிறது. ஸ்டேஷன் வாசலில் பத்து AIRBUS-கள் காத்திருக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் போர்டு பஸ் முன்புறம் அட்டையில் எழுதி மாட்டியிருக்கும். தசரதர், ஸ்ரீ ராமர், சீதை, லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன், கௌசல்யை, கைகேயி, ஸுமுத்திரை மாருதி என்றிப்படி பெயர்கள் இருக்கும்.எந்தெந்த பெயர் பஸ்களில் எந்தெந்த யாத்ரிகர்கள் பயணம் செய்வர் என்று ஒரு லிஸ்டை உங்களுக்கு தூங்கப் போகுமுன் இன்று ராத்த்ரியே கொடுப்பார்கள். அதன்படி ஏறி அமர்ந்துகொள்ள வேண்டும்.அமரும் முன்பாக ஒருவேளைஆடைகளை மட்டும் உங்கள் தோள்பையில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். காலை எட்டரை மணி வரை நிறைய அவகாசம் உள்ளது. அதற்குள் பல்விளக்கி, காலை கடன்களை ஐந்து மணியில் இருந்து எட்டு மணிக்குள் ட்ரைன் வண்டியிலேயே முடித்துக் கொண்டால் பிட்டூர் சென்றவுடன் பத்து மணிக்கு கங்கையில் குளிக்க சௌகரியப்படும்.திருமண் பெட்டியையும் தோள்பையில் வைத்துக் கொள்ளுங்கள். பெட்டிகள் பிட்டூர் சத்திரம் போன பிறகே கிடைக்கும். ஆற்றங்கரையில் டிக் திறக்கப் படாது என்பதை நினைவில் கொள்ளவும்.   .மும்பையில் இருந்து வரும் யாத்ரிகர்கள் கான்பூரில் நம்முடன் சேர்ந்து கொள்வார்கள். கான்பூரிலிருந்து கனோஜ் செல்லும்மார்க்கத்தில் கல்யான்பூரில் திரும்பி சுமார் முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது இந்த பிட்டூர். என்ற ஸ்தலம். கங்கை இங்கே படு வேகமுடன் பாய்ந்து செல்லுகிறது.இங்கே நாம் சுமார் பத்து மணிக்குள் செல்வோம்.கான்பூர் ஸ்டேஷனில் உங்கள் பெட்டிகளை உங்கள் வாலேண்டியர்கள் வாங்கி அவரவர்  பஸ்களின் டிக்குகளில் வைத்து பூட்டி விடுவார்கள். .முதலில் அந்த புண்ய நதியில் ஸ்நானம் பிறகு அங்கிருந்து

                    பக்கம்- பணிரெண்டு

உள்ள சத்திரத்திற்கு பஸ்சிலேயே போகிறோம். நாளை காலை மீண்டும் நம் நிகழ்ச்சி நிரலை ஸ்வாமியே சொல்லுவர்.என்று கூறி முடித்துக் கொண்டார். மணி பத்து.

 பதினோருமணிவரைஎல்லோரும் மதியம் இரண்டு முறை சற்று உறங்கிவிட்டதால் தூக்கம் வராமல் பேசிக்கொன்டிருந்தோம். அந்தசமயம்வாலண்டியர்கள் நாளை காலை நாங்கள் கான்பூர் ஸ்டேஷன் வாசலில் ஏறவேண்டிய பஸ் பெயர் சீட் நம்பர் வாலண்டியர் பெயர்கள் கொண்ட தகவலை ப்ரிண்ட்அவுட் எடுத்துக்  கொடுத்தனர். எல்லோருக்கும்       என் பெயர் ஐந்தாம் நம்பர் மாருதி பெயர் கொண்ட பஸ்சில் இருக்கை நம்பர் 23என்று போட்டிருந்தது.எங்கள் பஸ் வாலண்டியர்கள் பெயர் ஒருவர் பராங்குசர், மற்றவர் சதீஷ் என்று போட்டிருந்தது. அவர்களையும் பரிச்சயப் படுத்தினார். காலை ஏழரை மணிக்குள் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு காபி அருந்திவிட்டு எட்டரை மணிக்கு கான்பூரில் வண்டி நின்றது இறங்கத் தயாராய் இருக்குமாறு கேட்டுக் கொண்டனர். அச்சமயம் வண்டி இட்டார்சி (ITTAARSI) ஸ்டேஷனை  நெருங்கிக் கொண்டிருந்தது எல்லோரும் அந்த ச்டடிஒனில் ஒரு கப் பால் வாங்கி சாப்பிட்டு விட்டு உறங்க தொடங்கினோம்.அடியேன் தூங்கும் முன்பு ரயில்வே டைம் டைம் டேபிளை புரட்டுகையில் வண்டி இராத்த்ரி 12-3௦ மன்னிக்கு போபாலும்,(BHOPAL)ம் 4-3௦ மணிக்கு ஜான்சி-யும்   8-3௦ மணிக்கு கான்பூர் சென்ட்ரல் ஸ்டேஷன் ஐ அடைவதையும் குறித்துக் கொண்டேன்.  

 

.முதல் பாகம் முடிகிறது.

No comments:

Post a Comment