Monday, May 17, 2021

108 திவ்யதேசங்கள் - பதிவு 106 (III) ஏழு மலைகள்

🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 106 (III) 🌹🌹🌹

நேற்றைய பதிவில் "ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம்" பற்றி பார்த்தோம். இன்றைய பதிவு எதனைப் பற்றியது??? என்பதை யோசிக்க சொல்லியிருந்தேன் அல்லவா!! இன்றைய பதிவு எம்பெருமான், ஏழுமலையான் குடிகொண்டருளும் "ஏழு மலைகள்" பற்றி மலரப் போகிறது.

ஏழுமலையான், "ஏழாவது மலை மேல் அமர்ந்து நம் பாவங்களை எல்லாம் போக்கி, நமக்கு இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான செல்வங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்".

ஏழுமலைகளின் பெயர்கள் என்னென்ன?

🌺🌺 ஏழுமலைகள் :-

கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர் ஒரு பாம்பு போன்று நீண்டு வளைந்து கிடக்க, அதன் தலைப்பாகத்தில் திருவேங்கடமும், நடுவில் அஹோபிலமும், வால் முனையில் ஸ்ரீ சைலமும் அமைந்துள்ளன. இவற்றில் ததிருவேங்கடம் ஏழு சிகரங்களுடன் திகழ்கிறது.

🌻 1. விருஷாசலம் அல்லது விருஷாத்ரி :-

விருஷன் என்னும் அரசன் மோட்சத்தை அடைவதற்காகத் தவம் செய்த மலை என்பதால், "விருஷாசலம் அல்லது விருஷாத்ரி" என்று அழைக்கப்படுகிறது.

🌻 2. விருஷபாசலம் அல்லது விருஷபாத்ரி :-

விருஷபன் எனும் அசுரன், மஹாவிஷ்ணுவால் வதம் செய்யப்பட்ட மலை இது. அவனது பிரார்த்தனைக்கு இணங்க இந்த மலை அவன் பெயராலேயே வழங்கப்படுகிறது.

🌷 3. கருடாசலம் அல்லது கருடாத்ரி :-

கருடாழ்வார் தனது பங்காளிகளை யுத்தத்தில் கொன்று விட்டதால், பாவம் செய்தவரானார். பாவங்களை போக்கிக் கொள்ள அவர் தவத்தில் ஆழ்ந்த சிகரம் என்பதால், இச்சிகரத்திற்கு "கருடாசலம் அல்லது கருடாத்ரி" என்று பெயர்.

🌾 4. அஞ்சனாசலம் அல்லது அஞ்சநேத்ரி :-

அஞ்சனாதேவி தனக்கு குழந்தை பாக்கியம் ஒன்று வேண்டும் என்பதற்காக தவம் இருந்த சிகரம். அஞ்சனாதேவிக்கு வாயுபகவான் மூலமாக ஒரு மகன் பிறந்து "ஆஞ்சநேயன்" என்று அழைக்கப்பட்டான்.

அஞ்சனாதேவியின் நினைவாக இச்சிகரம் "அஞ்சனாசலம் அல்லது அஞ்சனாத்ரி" என்று அழைக்கப்படுகிறது.

🍀 5. நாராயணசலம் அல்லது நாராயணாத்ரி :-

"வேங்கடாசலபதி" புவியில் இருப்பதற்காக என நாராயண மகரிஷியால் அடையாளம் காட்டப்பட்ட சிகரம் இது என்பதால், "நாராயணசலம் அல்லது நாராயணாத்ரி" என்று அழைக்கப்படுகிறது.

🌹 6. வேங்கடாசலம் அல்லது வேங்கடாத்ரி :-

வேம் + கடம் - வேங்கடம். கடம் என்றால் "எரிபடுதல்" என்று பொருள். பக்தர்கள் பாதங்கள் பதிந்ததும் பாவங்கள் எரிந்து சாம்பலாகிவிடும் என்பதால், "வேங்கடாசலம்அல்லது வேங்கடாத்ரி" என்று பெயர்.

🌾 சேஷாசலம் அல்லது சேஷாத்ரி :-

வாயுபகவானோடு சண்டையிட்ட ஆதிசேஷன், ஆனந்த பர்வதத்துடன் இங்கு வந்து சுருண்டு படுத்திருப்பதாக ஐதீகம். இந்த சிகரத்தின் மேல் தான் என்அப்பன், எம்பெருமான், ஸ்ரீமந்நாராயணன் "ஸ்ரீவேங்கடேசப் பெருமாள்" கோவில் கொண்டுள்ளார்.

🌹🌹 நாளைய பதிவில் :-

ஏழுமலைகளின் சிறப்பை இன்று அறிந்தோம் அல்லவா?! நாளை திருமலை தீர்த்தங்களின் சிறப்பைப் பற்றி பார்க்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!!!"

No comments:

Post a Comment