🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 105 🌹🌹🌹
இறைவன் எங்கும் நிறைந்திருப்பார் என்பதை நமக்கு உணர்த்தும் தலம். நவ நரசிம்மர்கள் அருள்மழை பொழியும் அற்புதமான திவ்யதேசம். இன்றைய "அகோபிலம்" திவ்யதேசத்தைத் தரிசிப்போமா!!!
அருள்மிகு பிரகலாத வரதர் திருக்கோவில் :-
திருச்சிங்கவேள் குன்றம் (அகோபிலம்)
தாயார்: அம்ருதவல்லி, செஞ்சுலட்சுமி
உற்சவர்: மாலோல நரசிம்மர்
கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: குகை விமானம்
தீர்த்தம்: இந்திர தீர்த்தம், பாப விநாச தீர்த்தம், கஜ, பார்கவ தீர்த்தம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ லக்ஷ்மீநாச்சியார் ஸமேத ஸ்ரீ நரசிம்ஹாய நமஹ
ஊர்: அகோபிலம்
🌺🌺 அகோபிலம்:-
தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்ற என்பதற்கேற்ப, "எங்கும் இறைவன் நிறைந்திருக்கிறார்" என்பதை பாரெல்லாம் உணர்த்திய பரந்தாமனாம் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணர் தூணிலிருந்து வெளியாகி இரணியனை வதம் செய்த உக்கிர மூர்த்தியாம் நரசிம்மர், ஒன்பது வடிவங்களில் நவநரசிம்மர்களாக காட்சி தந்தருளும் திருத்தலம்.
"சிம்ம வெள்" என்னும் நரசிம்ம சுவாமி சேவை சாதிக்கும் தலமாதலால் "திருச்சிங்கவேள் குன்றம்" எனப்பெயர் பெற்றது. அற்புத பலம் பொருந்திய தேகத்திற்கு வடமொழியில் "அகோபிலம்" என்பது பெயராகும்.
மலை அடிவாரத்திலிருந்து மேல் கோவில் 10 கி.மீ க்கு தூரம் உள்ளது. மலை மீதுள்ள நரசிம்ம தலங்களை தகுந்த பாதுகாப்புடன் சென்றால்தான் தரிசிக்க முடியும். மாலை நேரத்தில் மிருகங்ளின் நடமாட்டம் இருக்கிறது. கரடு முரடான பாதைகளுடன், செங்குத்தான மலைமீதும் ஏற வேண்டும். மாலை 6 மணிக்குள் மலைக்கோவில் தரிசனத்தை முடித்து இறங்கிவிட வேண்டும்.
அஹோ என்றால் "சிங்கம்". பிலா என்றால் "குகை". பிரகாலதனுக்குக் காட்சி கொடுத்ததால் "பிரகலாத வரதன்" எனப்படுகிறார்.
🌻🌻 அடிவாரத்தில் தரிசனம்:-
இந்த மலை அடிவாரக் கோவிலில் நரசிம்மரைத் தரிசனம் கண்டவர்கள் கருடன் மற்றும் அஹோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான "அழகிய சிங்கர்".
🌹🌹 மலைக்கோவில் தரிசனம்:-
மலைக்கோவிலில் நரசிம்மரை தரிசனம் கண்டவர்கள் பிரகலாதன் மற்றும் கருடன்.
🌹🌹 ஆதிசங்கருக்குக் காட்சி:-
ஆதிசங்கரர் இங்குள்ள நவ-நரசிம்மரை வழிபட வந்தபோது, அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாகவும், நரசிம்மரே வந்து ஆதிசங்கரரை காப்பாற்றியதாகவும் வரலாறு உள்ளது.
🌷🌷 உக்கிர ஸ்தம்பம்:-
மலைக்கோவிலில் பிரகாலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட "உக்கிர ஸ்தம்பம்" (தூண்) இன்றும் உள்ளது.
🌹🌹🌹 தலவரலாறு:-
இரண்யகசிபுவின் மகன் பிரகலாதன். பிரகலாதனுக்கு நாராயணர் மீது மிகுந்த பக்தி. ஆனால், தந்தையோ "நானே கடவுள்!" என்று கூறி வந்தான். ஒருமுறை உன் நாராயணனைக் காட்டு என இரணியன் கூற, "அவர் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார். அகில உலகத்தையும் அவரே காத்து வருகிறார்" என நாராயணனின் புகழ் பாடினான் பிரகலாதன்.
கோபம் கொண்ட இரணியன், தன் கதாயுதத்தால் ஒரு தூணை ஓங்கி உடைத்தான். எம்பெருமான் நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழித்தார். இந்த அவதாரம் நிகழ்ந்தது இந்த திருத்தலத்தில் தான். முன்பு பிரகலாதன் இங்கு வாழ்ந்த பகுதி தற்போது காடாக மாறிவிட்டது.
எம்பெருமானின் நரசிம்ம அவதாரத்தைக் காணவேண்டி கருடாழ்வாருக்கு ஆசை ஏற்பட்டது. ஏனெனில், தன் பக்தன் பிரகலாதன் எங்கும் இருக்கிறார், இந்த தூணிலும் இருக்கிறார் என்று எம்பெருமானை அழைத்த போது, கருடாழ்வாரைக் கூட அழைக்காமல் எம்பெருமான் பக்தனுக்கு அருள் செய்ய ஓடி வந்துவிட்டார் அல்லவா!!
அதனால்தான் கருடாழ்வார் எம்பெருமானின் நரசிம்ம ரூபம் காண ஆவல் மேலிட, நரசிம்ம தரிசனம் வேண்டி இங்கு தவம் இருக்கிறார்.
கருடாழ்வாரின் தவத்திற்கு மகிழ்ந்த எம்பெருமான் மலை உச்சியில் தன் "நரசிம்ம அவதிரத்தைக் காட்டி அருளினார்". பிரகலாதனுக்காக தூணிலிருந்து வெளிப்பட்டது, இரண்யனின் வயிற்றைக் கிழித்தது. ஆக்ரோஷம் அடங்காமல் கர்ஜித்தது. பிரகலாதனின் வேண்டுகோளுக்கிணங்க சாந்தமாக, சாந்த நரசிம்மனாக அமர்ந்தது என இந்த அவதாரத்தின் 9 திருக்கோலங்கள் இங்குள்ளன. கருடன் தவமிருந்ததால் "கருடாத்ரி" "கருடாச்சலம்" என்று பெயர் பெற்றுள்ளது இந்த மலை.
சேஷாத்ரியாக உயர்ந்திருப்பது "திருவேங்கடமலை (திருப்பதி)" என்றால், "கருடாத்ரியாக" உயர்ந்திருப்பது "அஹோபிலம்" ஆகும்.
🌺🌺 நவ-நரசிம்மர்கள்:-
1. பார்கவ நரசிம்மர்
2. யோகாநந்த நரசிம்மர்
3. சத்ரவட நரசிம்மர்
4. அகோபில நரசிம்மர்
5. வராக நரசிம்மர்
6. காரஞ்ச நரசிம்மர்
7. மாலோல நரசிம்மர்
8. சுவாலா நரசிம்மர்
9. பாவந நரசிம்மர்
என ஒன்பது நரசிம்மர்கள் இத்திருத்தலத்தில் சேவை சாதிக்கிறார்கள்.
இதில் முதல் மூன்று நரசிம்மர்களான பார்கவ நரசிம்மர், யோகாநந்த நரசிம்மர், சத்ரவட நரசிம்மர் ஆகியோர் மலை அடிவாரத்திலும், மற்ற ஆறு மூர்த்திகளும் மலைமேல் சேவை சாதிக்கிறார்கள்.
🌻🌻 1. பார்கவ நரசிம்மர்:-
பார்கவ தீர்த்தம் என்னும் புண்ணிய தீர்த்தத்தின் கரையில் கோவில் கொண்டு அருள்வதால் இத்தல இறைவனுக்கு பார்கவ நரசிம்மர்" என்பது திருநாமமாகும். இரண்டு கரங்களுடன் இரணியனை வதம் செய்த நிலையில் சேவை சாதிக்கிறார். அகோபிலம் பிரகலாதவரதர் தலத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
🌹🌹 2. யோ நந்த நரசிம்மர்:-
பிரகாலாதனுக்காக யோக சாஸ்திரங்களை உபதேசித்ததால் இத்தல இறைவனுக்கு "யோகா நந்த நரசிம்மர்" என்பது திருநாமம் ஆகும். இத்தலத்தில் நரசிம்மர் யோக நிலையில் அமர்ந்த கோலத்தில் காட்சி தந்த திருத்தலம். அகோபிலம் பிரகலாத வரதர் திருத்தலத்திலிருந்து தென்கிழக்கே மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
🌷🌷 3. சத்ரவட நரசிம்மர்:-
"சத்ரவடம்" என்ற ஆலமரத்தின் அடியில் நரசிம்மப் பெருமாள் சேவை சாதிப்பதால் இத்தல இறைவனுக்கு "சத்ரவட நரசிம்மர்" என்பது திருநாமம் ஆகும். அகோபிலம் பிரகலாத வரதர் தலத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் மலையின் மேற்கில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
🐠🐠 4. அகோபில நரசிம்மர்:-
மலை மேல் இராஜகோபுரத்துடன் கூடிய பெரிய திருக்கோவிலில் குடி கொண்டுள்ள மூர்த்தி இந்த "அகோபில நரசிம்ம பெருமாளே" ஆவார். இத்தலத்தில் மட்டுமே தாயார் "செஞ்சு லட்சுமி" என்ற திருநாமத்தில் காட்சி தந்துஅருள்கிறார்.
🌸🌸 5. வராக நரசிம்மர்:-
வராக தீர்த்தம் என்னும் புண்ணிய தீர்த்தத்தின் கரையில் கோவில் கொண்டு அருள்வதால் இத்தல இறைவனுக்கு "வராக நரசிம்மர்" என்பது திருநாமம் ஆகும். அகோபிலம் நரசிம்மர் திருக்கோவிலிலிருந்து 1 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
🍀🍀 6. காரஞ்ச நரசிம்மர் :-
காரஞ்ச மரத்தின் கீழ் இப்பெருமான் சன்னதி கொண்டு அருள்வதால் இத்தல இறைவனுக்கு "காரஞ்ச நரசிம்மர்" என்பது திருநாமம் ஆகும். அகோபிலம் நரசிம்மர் தலத்திலிருந்து 1/2 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
🌷🌷 7. மாலோல நரசிம்மர் :-
மரைச்சரிவில், அதாவது மலை ஓரத்தில் சன்னதி கொண்டு அருளுவதால் இத்தல இறைவனுக்கு "மலையோர நரசிம்மர்" என்பது திருநாமம். பிற்காலத்தில் மாலோல நரசிம்மர் என்ற திருநாமத்தில் வணங்கப்படுகிறார். அகோபிலம் நரசிம்மர் தலத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் மலைச்சரிவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில்.
🌴🌴 8. சுவாலா நரசிம்மர் :-
உக்கிர கோலமாக, ஒளி பிளம்பாக இரணியன் உடலைப் பிளக்கும் விதமாக காட்சி தந்து அருள்வதால் இத்தல இறைவனுக்கு "சுவாலா நரசிம்மர்" என்பது திருநாமம் ஆகும். அகோபிலம் நரசிம்மர் தலத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் வனங்கள் நிறைந்த அடர்ந்த மலைப்பகுதியில் சுமார் 3000 அடி உயரத்தில் இச்சன்னதி அமைந்துள்ளது.
கல்லும், முள்ளும் நிறைந்த ஒத்தையடி பாதையாகும் இத்திருத்தலம். மிகவும் சிரமப்பட்டு ஏறினால் மட்டுமே இத்திருத்தலத்தை அடையமுடியும்.
🌹🌹 9. பாவந நரசிம்மர்:-
பாவநீ என்னும் புண்ணிய நதியின் கரையில் கோவில் கொண்டு அருளுவதால் இத்தல இறைவனுக்கு "பாவந நரசிம்மர்" என்பது திருநாமம் ஆகும். அகோபிலம் நரசிம்மர் தலத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
🌻🌻 மங்களாசாசனம்:-
திருமங்கையாழ்வார் இத்தலத்தைப் பற்றி மங்களாசாசனம் செய்த பாடல்களில் மற்ற அவதாரங்களைப் பாடாமல் நரசிம்மரின் வடிவத்தையும், மகிமைகளையும் மட்டுமே பாடியுள்ளது மிகச் சிறப்பான ஒன்றாகும்.
திருமங்கையாழ்வார் இத்திருத்தலத்தை 10 பாசுரங்களால் மங்களாசாசனம் பாடியருளியுள்ளார்.
வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம் நின்ற பசுந்தீ மொன்டு சூறை நீள் விசும்
பூடிரிய சென்று காண்டற் கரிய கோயில் சிங்க வேள் குன்றமே!!!"
- திருமங்கையாழ்வார்.
🍀🍀 வழித்தடம்:-
ஆந்திர மாநிலத்தின் நந்தியால் - கடப்பா நெடுஞ்சாலையில், நந்தியாலில் இருந்து 40 கி.மீ தொலைவில் அர்லகட்டா என்ற இடம் அமைந்துள்ளது. அங்கிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அகோபிலம் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து மும்பை வழியாகச் செல்லும் இரயில்கள் கடப்பா வழியாகவே செல்கின்றன.
அருள்மிகு அம்ருதவல்லி தாயார் திருவடிகளே சரணம்.
🌹🌹 நாளைய பதிவில்:-
கலியுக வரதர், வேங்கடாஜலபதி, வேங்கடேசப் பெருமாள் என்றெல்லாம் அழைக்கப்படும் வட நாட்டின் கடைசி திவ்யதேசமான அருள்மிகு வெங்கடேசர் திருக்கோவில் - திருமலை திருப்பதி திவ்யதேசத்தைத் தரிசிப்போமா?
"ஓம் நமோ நாராயணாய நம:!!"
No comments:
Post a Comment