"ஏகாதசி அன்று வார்த்து வைச்சிருந்த அடைகள் காணோம்"
(முன்பு படித்தது-இது வேறு கட்டுரையாளர்)
(அடையெல்லாம் எங்கே போச்சுங்கறது இன்னிக்கு வரைக்கும் பரமாசார்யாளுக்கு மட்டுமே தெரிஞ்ச பரமரகசியம்)
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-18-05-2017 தேதியிட்ட குமுதம் பக்தி சுருக்கமான ஒரு பகுதி)
ஏகாதசி விரதத்தை மடத்துல இருக்கிறவா எல்லோரும் கடைப்பிடிச்சா நல்லதுங்கறது மகாபெரியவாளோட அபிப்ராயம். அதேசமயம் பலர் அதை கடைப்பிடிச்சாலும் சிலரால் அனுஷ்டிக்க முடியற தில்லைங்கறது பரமாசார்யாளுக்கு தெரிஞ்சிருந்தது. ஒரு விதி விலக்கை பயன்படுத்திக்கொண்டு ஏகாதசி அன்னிக்கு சிலர் ஒரு வேளை டிபன் பண்ணி சாப்பிடுவா.
டிபன்னு சொன்னதும், இட்லியா,பூரியா,பொங்கலா என்றெல்லாம் கேட்டுடக் கூடாது.
ஏன்னா,மடத்துல டிபன்னு சொன்னாலே அது உப்புமாதான்.
ஒரு சமயம் கும்பகோணம் பக்கத்துல கிராமம் ஒண்ணுல முகாமிட்டிருந்தா பெரியவா. அந்த சமயம் ஏகாதசிவந்ததால எல்லாரும் விரதம் அனுஷ்டிக்க ஆரம்பிச்சுட்டா. மடத்தோட விதிமுறைகள் எல்லாம் பலருக்கு தெரியாதுங்கறதால,விரதத்தை முழுசா அனுஷ்டிக்காம ஒருவேளை டிபன் சாப்டறவா எல்லாரும் சேர்ந்து ஒரு திட்டம் போட்டிருந்தா.
அதாவது வழக்கமான உப்புமாவுக்கு பதிலா,டிபனுக்கு அடை பண்ணி சாப்பிடறதுன்னு தீர்மானிச்சு, அதுக்குஉரிய பொருளையெல்லாம் சேமிச்சு, மாவு அரைச்சு தயாரா வைச்சுட்டா.
மத்யானம் ஒரு வேளைதான் சாப்பிடலாம்கறதால, எப்போ உச்சிப் பொழுது ஆகும்னு காத்துண்டு இருந்தாஅவாள்லாம். மத்யானம் ஆச்சு. பரிசாரகர் அடையெல்லாம் வார்த்து தயாரா வைச்சுட்டு, எல்லாரையும் சாப்டக்கூப்பிட்டார். அத்தனை வேலையும் ரொம்ப அமைதியா பெரியவாளுக்கு விஷயம் தெரிஞ்சுடக் கூடாதுங்கறாப்ல, காதும் காதும் வைச்ச மாதிரி நடந்தது.
அடையை சாப்டறதுக்காக எல்லாரும் போய் உட்கார்ந்தா. பரிசாரகர் இலை போட ஆரம்பிச்சார். சரியா அதே நேரத்துல "பெரியவா எல்லாரையும் கூப்டறா!" அப்படின்னு ஒரு குரல் கேட்டுது. அவசர அவசரமா எழுந்து ஓடினா எல்லாரும்.
வந்தவா எல்லாரையும் மென்மையான புன்னகையோட பார்த்தார் பரமாசார்யா. "இன்னிக்கு இந்த நேரம் ரொம்ப உத்தமோத்தமமான நாழிகையா அமைஞ்சிருக்கு. இப்போ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் பண்ணினா எல்லா சௌபாக்யங்களையும் அடையலாம்னு சாஸ்த்ரங்கள்லசொல்லியிருக்கு. அதனால, நீங்க எல்லாருமா சேர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமத்தை ஒரு தரம் பாராயணம் பண்ணுங்கோ!" அப்படின்னார் பெரியவா.
"பாராயணம் பண்ணினா எல்லாத்தையும் அடையலாம்.சரி இப்போ அடையை அடையறது தள்ளிப்போறதே. சூடா சாப்டா அதோட ருசியே தனி! மனசுக்குள்ளே அடையை நினைச்சுண்டே அவசர அவசரமா விஷ்ணு சஹஸ்ரநாமத்தைச் சொல்லி முடிச்சுட்டு, வேகவேகமா சாப்பிடப் போனவாளுக்கு பெரிய அதிச்சி!
பரிசாரகர் வார்த்து வைச்சிருந்த அடைகள்ல ஒண்ணைக்கூட காணும். மடத்துக்குள்ளே புதுசா யாரும் வரலை. இருந்தவா எல்லாருமே மகாபெரியவா முன்னால்தான் இருந்தா. இடத்தைவிட்டு நகரலை. ஆனா அடையெல்லாம் எங்கே போச்சு?
மகாபெரியவாகிட்டேர்ந்து மறைக்க நினைச்சோம். இப்போ நமக்கே தெரியாம எல்லாம் மாயமா மறைஞ்சுடுத்து ஒருவேளை ஆசார்யாதான் இதையெல்லாம் தெரிஞ்சுண்டு எல்லாத்தையும் எடுத்துண்டு போகச் சொல்லி ஏதாவது இட்சிணிக்கிட்டே சொல்லியிருப்பாரோ! சீடர்கள் ஆளாளுக்கு ஒரு யூகத்தோட பேசிண்டா.
ஆனா, அந்த அடையெல்லாம் எங்கே போச்சுங்கறது இன்னிக்கு வரைக்கும் பரமாசார்யாளுக்கு மட்டுமே தெரிஞ்ச பரமரகசியம்!.
No comments:
Post a Comment