Monday, May 17, 2021

108 திவ்யதேசங்கள் - பதிவு 107 திருப்பாற்கடல்

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 107 🌹🌹🌹

பரமபதத்தில் வீற்றிருக்கும் பரமபதநாதன், தன்னை வ்யூக நிலைக்கு மாற்றித் திருப்பாற்கடலுக்கு எழுந்தருளி, ஆதிசேஷன் தன்னை மெத்தையாக விரித்துக் கொள்ள, எம்பெருமான் சயனக் கோலத்தில் அருளும் அற்புதமான ஆனந்தமயமான திவ்யதேசம்:-

திருப்பாற்கடல்

============

மூலவர்: பாற்கடல்வண்ணன்
தாயார்: கடல்மகள் நாச்சியார், பூமாதேவித் தாயார்
கோலம்: சயனத் திருக்கோலம்
நாமாவளி: ஸ்ரீ ஸ்ரீகடல்மகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ க்ஷீராப்திநாதாய நமஹ
ஊர்: பாற்கடல்


🌻🌻 பெரியார் திருமொழி:-

"பையர விண்ணைப் பாற்கடலுள்
பள்ளி கொள்கின்ற பரமமூர்த்தி
உய்யவுலகு படைக்க வேண்டி
உந்தியில் தோற்றினாய் நான்முகனை
வையமனிசரைப் பொய் யென்றெண்ணிக்
காலனையு முடனே படைத்தாய்
ஐ யனி யென்னைக் காக்க வேண்டும்
அரங்கத் தரவணைப் பள்ளியோனே!!!"

- பெரியார் திருமொழி.

உலகைப் படைக்க எண்ணிய எம்பெருமான் தன் நாபிக் கமலத்திலிருந்து செல்லும் தாமரையில் பிரம்மனைப் படைத்து உலகுண்டாக்கச் செய்தார். நிலையற்ற இம்மானிடத்தை அழிக்க எமனையும் படைத்தார். இவ்விதமான பரமபதநாதனே நீயே அர்ச்சாரூபினாயாக எழுந்தருளியுள்ளாய். என்னைக் காக்க வேண்டும் பரம்பொருளே என்று பெரியாழ்வார் திருப்பாற்கடலில் எம்பெருமான் எழுந்தருளியிருப்பதை மங்களாசாசனம் செய்கிறார்.

🌹🌹 திருப்பாற்கடல்:-

திருப்பாற்கடல் என்பது இந்த நிலவுலகில் இல்லை. பரமபதம் போன்று அதுவும் விண்ணுலகிலேயே உள்ளது. இந்த ஸ்தூல சரீரத்துடன் அங்கு செல்ல முடியாது. 106 திவ்யதேசங்களைச் சேவித்தபின் இறைவன் திருவடிப்புகச் செல்லும் பக்தன் ஒருவனை பெருமாளே திருப்பாற்கடலுக்கு நேரில் அழைத்துச் சென்று சேவை சாதிக்கிறார் என்பது ஐதீகம்.

பக்தர்களின் அபயக்குரல், தேவர்களின் அபயக்குரல் கேட்டு பகவான் அபயமளிப்பது இந்த இடத்தில் தான். பரமபதத்திற்குத் தேவர்கள் கூட செல்ல முடியாது. அவ்விடத்திற்குச் செல்லக் கூடியவர்கள் "நித்ய சூரிகள்" மட்டுமே.

🌻🌻 மங்களாசாசனம்:-

பெரியாழ்வார் - 5, ஆண்டாள் - 3, குலசேகராழ்வார் - 2, திருமழிசை ஆழ்வார் - 13, தொண்டரடிப் பொடியாழ்வார் - 1, திருமங்கையாழ்வார் - 10, பொய்கையாழ்வார் - 1, பூதத்தாழ்வார் - 2, பேயாழ்வார் - 4, நம்மாழ்வார் - 9 என 50 பாசுரங்களால் "திருப்பாற்கடல் பாற்கடல் வண்ணனை" மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.

🌺🌺 சிறப்புகள்:-

பரந்தாமனாம் இறைவன் வாழும் பேரின்பக்கடல்.

வையகத்தையே வாழ்விக்கும் வைகுண்டம்.

பூவுலக திவ்யதேசங்களை தரிசித்தவர்கள் அடையும் புண்ணிய லோகம்.

கள்ளம் தவிர்த்து வெள்ளை உள்ளத்தோடு வாழும் உயிர்களுக்கு முக்தியளிக்கும் கடல்.

பிறவி என்னும் பெருங்கடலை தவிர்த்து, பரந்தாமன் காட்டும் பரமலோகம் என்ற பாற்கடல்.

ஆழ்வார்கள் முதல் ஆச்சார்யர்கள், அடியவர்கள் ஆகிய இவர்கள் மட்டுமே அனுபவித்த அற்புதக் காட்சி.

ஈரேழு பதினாக்கு லோகங்களிலும் காண இயலாத பேரின்பக் காட்சி.

அருள்மிகு பாற்கடல் வண்ணன் திருவடிகளே சரணம்.
அருள்மிகு கடல்மகள் நாச்சியார் திருவடிகளே சரணம்.
அருள்மிகு பூமாதேவித் தாயார் திருவடிகளே சரணம்.

🌻🌻 நாளைய பதிவில்:-

முக்திக்குப் பிறகு திருப்பரமபதம் - பரம் பொருள் நாதன் "பரமபதநாதன்" அருளும் 108 திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்!

"ஓம் நமோ நாராயணாய நமஹ!!!"

No comments:

Post a Comment