🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 102 🌹🌹🌹
மாயக்கண்ணனான கிருஷ்ண பரமாத்மா அவதரித்து மதுராவையே புனிதமாக்கிய அற்புதமான திவ்யதேசம்!! மதுரா, பிருந்தாவனம், கோவர்த்தனம் என மூன்று திருக்கோவில்கள் கொண்ட ஆனந்தமயமான திவ்யதேசம்!! இந்த மகத்தான திவ்வதேசத்தை நாமும் இன்று தரிசிப்போமா?
அருள்மிகு பாலகிருஷ்ணன் திருக்கோவில்:-
திருவடமதுரா (மதுரா)
தாயார்: சத்யபாமா நாச்சியார்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: கோவர்த்தன விமானம்
தீர்த்தம்: இந்திர தீர்த்தம், யமுனை ஆறு, கோவர்த்தன தீர்த்தம்
மங்களாசாசனம்: பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரிப் பொடியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ ருக்மிணீ ஸத்தியபாமா ஸமேத ஸ்ரீ கோவர்த்தநேசாய நமஹ
ஊர்: மதுரா
🌺🌺 மூன்று தலங்கள் :-
பரதபதநாதனாம் இறைவன் நாராயணர் கண்ணனாக, கார்மேக வண்ணனாக, கீதை சொன்ன ஞானியாக திருஅவதாரம் செய்தார். அத்தகைய அவதார மூர்த்தி பிள்ளையாக விளையாடி மகிழ்ந்த புண்ணிய பூமி. இறைவன் வாழ்ந்த புண்ணிய பூமியில் நாம் கால் வைப்பதே பெரும்பாக்கியம் ஆகும்.
வடமதுரை என்பது மதுரா, பிருந்தாவனம், கோவர்த்தனம் ஆகிய மூன்று தலங்களையும் சேர்த்து ஒரு திவ்யதேசமாகக் கூறுகிறார்கள்.
🌺🌺 மதுரா :-
"மது" என்ற அசுரனின் மகனான "இலவனாசுரன்" கடும் தவம் புரிந்து சிவபெருமானின் அருளால் சூலாயுதம் ஒன்றைப் பெற்றான். அந்த சூலாயுதம் இருக்கும் வரை அவனை யாராலும் அழிக்க முடியாது என்ற ஒரு வரத்தைப் பெற்றான்.
இதனால் ஆணவம் கொண்டு பலரையும் துன்புறுத்தி வந்தான். மதுவம்சம் அரசாட்சி புரிந்த பூமி என்பதால் "மதுராபுரி" என்று பெயர் பெற்றதாகத் தெரிகிறது.
இதனை அறிந்த "ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி" தனது இளைய சகோதரரான சத்ருக்கனை அனுப்பி இலவனாசுரனை வதம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வரலாற்றை உறுதி செய்யும் விதமாக, குலசேகராழ்வார் "பெருமாள் திருமொழியில்" இந்நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுள்ளார்.
"இலவணன் தன்னைத் தம்பியால் வான் ஏற்றி!"
- குலசேகராழ்வார்.
பிற்காலத்தில் கண்ணபரமாத்மாவின் தந்தையான "வசுதேவர்" இவ்விடத்தை அரசாட்சி செய்துள்ளார். அதன் பின்னரே "மாயக்கண்ணன்" அவதரித்து மதுராவையே புனிதமாக்கினான்.
🌺🌺 பிருந்தாவனம்:-
"நெருஞ்சிக்காடு" என்பதற்கு வடமொழியில் "பிருந்தாவனம்" என்பது பெயர். கண்ணன் வளர்ந்த இடமான ஆயர்பாடியில் "கம்சன்" அடிக்கடி அசுரர்களை அனுப்பி யாதவர்களுக்கு துன்பம் கொடுத்து வந்தான்.
கம்சனின் கொடுமையிலிருந்து யாதவர்களைக் காக்கும் பொருட்டு அனைவரையும் அழைத்துக்கொண்டு பகவான் கிருஷ்ண பரமாத்மா பிருந்தாவனத்தில் குடியேறியதாக கூறப்படுகிறது. சில காலம் கண்ணன் இங்கு வாழ்ந்ததால் இவ்விடமும் புனிதம் பெறுகிறது.
🌺🌺 கோவர்த்தனம்:-
கண்ணன் ஆயர்ராடியில் வாழ்ந்த சமயத்தில் இந்திரன் யாதவர்கள் மேல் கோபம் கொண்டு ஏழு நாட்கள் மழையாகைப் பொழிந்தான். அப்போது அம்மக்களைக் காக்க பகவான் கிருஷ்ணன் கோவர்த்தன யலையைப் பெயர்த்தெடுத்து, தனது சுண்டு விரலால் தாங்கி குடையாகப் பிடித்தார்.
எனவே, இத்தலத்தைத் தரிசித்தால் எத்தகைய துன்பத்திலிருந்தும் விடுபடலாம் என்பது ஐதீகம்.
🌺🌺 மங்களாசாசனம்:-
இத்திருத்தலத்தை நம்மாழ்வார் - 10, பெரியாழ்வார் - 16, ஆண்டாள் - 19, தொண்டரடிப்பொடி ஆழ்வார் - 1, திருமங்கையாழ்வார் - 4 என மொத்தம் 50 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.
"'மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய!!!"
என்று திருப்பாவையில் ஆண்டாள் அகம் மகிழ வாயார வாழ்த்திய வடமதுரைத் தலத்தைப் பார்த்தால் நம் உடல் தானாகவே சிலிர்க்கும்.
🌺🌺 வழித்தடம்:-
டில்லியிலிருந்து ஆக்ரா செல்லும் இரயில் பாதையில், சுமார் 120 கி.மீ தொலைவில் மதுரா இரயில் நிலையம் அமைந்துள்ளது. இரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் மதுரா கோவில் அமைந்துள்ளது.
மதுராவிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் பிருந்தாவனம் அமைந்துள்ளது. ஏராளமான பேருந்துகள் பிருந்தாவனம் செல்கின்றன.
மதுராவிலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் கோவர்த்தனம் அமைந்துள்ளது. ஏராளமான பேருந்துகள் கோவர்த்தனம் செல்கின்றன.
அருள்மிகு சத்தியபாமா நாச்சியார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில்:-
பகவான் கிருஷ்ணன் பிள்ளைப் பருவத்தில் நடத்திய லீலைகள் ஒன்றா! இரண்டா!! என்னென்ன??? என்பதை அருள்மிகு நவமோகன கிருஷ்ணன் திருக்கோவில் - திருகோகுலம் மூலம் நாளைய திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:!!!"
No comments:
Post a Comment