Tuesday, May 11, 2021

108 தி வ்யதேசங்கள் - பதிவு 96 அயோத்தியா

 108 திவ்யதேசங்கள் - பதிவு 96 🌹🌹🌹

ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி அவதரித்த அற்புதமான திவ்யதேசம்.

மூலவர்: ஸ்ரீராமர், சக்கரவர்த்தி திருமகன், ரகுநாயகன்
தாயார்: சீதா பிராட்டி
கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்
திசை: வடக்கு
விமானம்: புஷ்கல விமானம்
தீர்த்தம்: பரமபதஸத்ய புஷ்கரணி, சரயுநதி
மங்களாசாசனம்: பெரியாழ்வார், குலசேகராழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ ஸீதா ஸமேத ஸ்ரீ ரகுநாதகாய நமஹ
ஊர்: அயோத்தியா

🌺🌺 திருஅயோத்தி :-

வையகத்து உயிர்களின் காவல் தெய்வமாகிய இறைவன் நாராயணன் இவ்வையகத்தைக் காக்க பத்து அவதாரங்களை மேற்கொண்டார். அதில் தர்மத்தை நிலைநாட்ட, இப்படித்தான் வாழ வேண்டும் என்று பூமிக்கு வந்து வாழ்ந்து காட்டிய தன்னிகரற்ற அவதாரம் "இராம அவதாரம்".

அத்தகைய ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி பிறந்து வளர்ந்து அரசாண்டது அயோத்தி. இறைவன் வாழ்ந்த அந்த மண்ணிற்கு செல்வதே என்பது நம்வாழ்வில் நமக்கு கிடைக்கும் மிகப் பெரிய பேராகும்.

🌺🌺 தலவரலாறு:-

தன்னிகரில்லா தனிச் சிறப்புடன் ஆட்சி புரிந்து வந்த தசரத சக்கரவர்த்திக்கு மகனாகப் பிறந்தவர் "ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி". இந்த அவதார நாயகன் பூமியில் நமக்காக அவதரித்து இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியுள்ளார்.

சூரிய குல அரசர்களான மாந்நாதா, அரிச்சந்திரா, பகீரதன், திலீபன், ரகு ஆகியோர் வழி வந்தவரே தசரத சக்கரவர்த்தி. அவருக்கு மகனாகப் பிறந்து அசுரனான இராவணனை, வதம் செய்து தர்மத்தை நிலைநாட்டும் விதமாக சிறப்பாக ஆட்சி புரிந்தார்.

அக்குலத்திற்கு "ரகு குலம்" என்ற பெயரும் உண்டு. ரகு குலத்தில் தோன்றிய அரசன் ஸ்ரீராமர் என்பதால், இத்தல இறைவன் "ரகு குல நாயகன்" என்ற திருநாமம் பெற்றார்.

அயோத்தி நகரம் சரயு நதிக்கரையில் அமைந்துள்ள அற்புதமான நகரமாகும். ஐந்து ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தல மூர்த்திகள் தற்போது திருஅயோத்தியில் இல்லை.

இந்தியாவின் மீது படையெடுத்த வேற்று சமய அரசர்களால் களவாடப்பட்டதாகத் தெரிகிறது. இராமபிரான் அவதாரம் செய்ததாகக் குறிப்பிடப்படும் இடம் தற்போது "ராம ஜென்ம பூமி" என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

தற்போது உள்ள இத்திருக்கோவில் 100 முதல் 150 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

🌺🌺 மங்களாசாசனம் :-

நம்மாழ்வார் - 1, குலசேகராழ்வார் - 4, பெரியாழ்வார் - 6, தொண்டரடிப்பொடி ஆழ்வார் - 1, திருமங்கையாழ்வார் -1 என மொத்தம் 13 பாசுரங்களால் பாடியருளியுள்ளனர்.

"சுற்றமெல்லாம் பின்தொடர தொல்கானம் அடைந்தவனே அற்றவர்கட்
கருமருந்தே அயோத்தி நகர்க் கதிபதியே கற்றவர்கள் தாம் வாழும்
கணபுரத்தென் கருமணியே சிற்றவை தன் சொல் கொண்ட சீராமா தாலேலோ!!!"

- குலசேகராழ்வார்.

🌺🌺 வழித்தடம்:-

உத்தரபிரதேசத்தின் தலை நகரமான லக்னோவிற்கும், காசிக்கும் இடையில் இத்தலம் அமைந்துள்ளது. லக்னோவிலிருந்து காசிக்குச் செல்லும் இரயில் பாதையில் பைசாபாத் என்னுமிடத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து 5 கி.மீ தொலைவில் திருஅயோத்தி அமைந்துள்ளது. பேருந்து அல்லது ஆட்டோவின் வாயிலாகச் சென்றடையலாம்.

டில்லியிலிருந்து லக்னோ வழியாக பைசாபாத் செல்வதற்கு பேருந்து வசதி உண்டு.

அருள்மிகு ரகுநாயகன் சுவாமி திருவடிகளே சரணம்.
அருள்மிகு சீதா பிராட்டியார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

அருள்மிகு தேவராஜன் திருக்கோவில் - நைமிசாரண்யம் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!!!"

No comments:

Post a Comment