🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 100 🌹🌹🌹
மார்கழி முதல் சித்திரை வரை தேவர்கள் மட்டும் தங்கி தரிசனம் செய்யும் பெருமை வாய்ந்த திவ்யதேசம்!! நரன் என்னும் பக்தனுக்கு எம்பெருமான் காட்சி கொடுத்த சிறப்பு வாய்ந்த திவ்யதேசம்!! குளிர் பிரதேசத்தில் வெந்நீர் ஊற்று வருகிற அதிசயம்!!
இன்னும் என்னவெல்லாம் இருக்கு என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. 100வது திவ்யதேசத்தைத் தரிசிப்போமா?
திருவதரியாச்சரமம்.
மூலவர்: பத்ரி நாராயணன், வதரி நாராயணன்
தாயார்: அரவிந்தவல்லி
உற்சவர்: பத்ரிநாராயணன்
கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: தப்த காஞ்சன விமானம்
தீர்த்தம்: தப்த குண்டம்
மங்களாசாசனம்: பெரியாழ்வார், திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ அரவிந்தவல்லீ ஸமேத ஸ்ரீ பத்ரீ நாராயணாய நமஹ
ஊர்: பத்ரிநாத்
🌺🌺 ஆறு மாத தரிசனம்:-
பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள இறைவன் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் "பத்ரி நாராயணர்" என்ற திருநாமத்தில் கோவில் கொண்டு அருளும் புண்ணியத் திருத்தலம். கடும்குளிர் நிறைந்த பகுதி என்பதால், கம்பளி போன்ற குளிர் கால ஆடைகளை எடுத்துச் சென்றால் மட்டுமே குளிரைத் தாங்க முடியும்.
இத்திருக்கோவில் கடல் மட்டத்திலிருந்து 10,404 அடி உயரத்தில் உள்ளது. மிகவும் குளிர்ந்த பகுதி என்பதால் வருடத்தில் "ஆறு மாதங்கள்" மட்டுமே இங்கு தரிசனம் உண்டு. மற்ற ஆறு மாதங்கள் நடை அடைக்கப்படுகிறது.
இத்திருக்கோவில் மே மாதம் முதல் செப்டம்பர் மூன்றாவது வாரம் வரை திறக்கப்படுகிறது.
தீபாவளி தொடங்கி தொடர்ந்து ஆறு மாதங்கள் கடும் பனியின் காரணமாக இந்த ஆலயம் நடை அடைக்கப்படுகிறது.
மார்கழியில் இருந்து சித்திரை வரை தேவர்கள் மட்டுமே இங்கு தங்கி இறைவனைத் தரிசனம் செய்வதாக ஐதீகம்.
🌺🌺 தலவரலாறு:-
அக்காலத்தில் இத்தலத்தைச் சுற்றியும் இலந்தை மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இலந்தை என்பதற்கு வடமொழியில் "பத்ரி" என்பது பெயர். மகாலட்சுமி தாயாருக்கு மிகவும் உகந்த தலம் இந்த திருத்தலம். மகாலட்சுமி தாயார் இங்குள்ள இலந்தை மரத்தினடியில் அமர்ந்து தவம் செய்ய அதற்கு பிரசன்னமாகி பெருமாளும் அதே இலந்தை மரத்தடியில் சேவை சாதிப்பது நமக்கு முக்தி என்னும் பெரும்பேறு வழங்குவதற்காகத்தான்.
அக்காலத்தில் கீதை சொன்ன கண்ணன் மீது மிகுந்த பக்தி கொண்ட "நரன்" என்பவர் இவ்விடத்தில் ஓர் ஆசிரமம் அமைத்தார். மேலும், தனக்கு "ஓம் நமோ நாராயணாய" என்ற திருமந்திரத்திற்கான பொருளை உபதேசிக்க வேண்டி நீண்ட நாட்களாகத் தவம் செய்ததாகவும், அத்தவத்திற்கு மனமிறங்கிய இறைவன் நரனுக்கு காட்சி தந்து உபதேசித்ததாகவும் "தலவரலாறு" கூறுகிறது.
இதன் காரணமாகவே இத்தலத்திற்கு "திருவதரியாச்சரமம்" என்றும், இத்தல இறைவனுக்கு "பத்ரி நாராயணர்" என்ற திருநாமம் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
🌺🌺 வெந்நீர் தீர்த்தம்:-
இந்த திருத்தலத்தில் ஐந்து முக்கிய தீர்த்தங்கள் உள்ளன. "தப்த குண்டம், நாரத குண்டம், கூர்ம தாரா, பிரகலாதாரா, ரிஷிகங்கர்" ஆகியவையே இத்தலத்தின் ஐந்து தீர்த்தங்கள்.
இதில் கூர்மதாரா தீர்த்தம் அன்னதானத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள தப்த குண்டத்தில் நீராடிய பிறகே கோவிலுக்குள் செல்ல வேண்டும்.
இங்கு ஓடும் கங்கை நதியில் குளிப்பது இயலாத காரியம். எனவே, தப்த குண்டத்தில் பக்தர்கள் நீராடுகிறார்கள். சப்த புரிகளில் ஒன்றாகக் கருதப்படும் இத்தலத்தின் அருகில் "தப்த குண்டம்" எனறழைக்கப்படும், "வெந்நீர் ஊற்று" ஒன்று உள்ளது.
குளிர் நிறைந்த பிரதேசத்தில் வெந்நீர் ஊற்று வருகிற இந்த அதிசய மாற்றம் எப்படி நடக்கிறது? என்பதை இதுவரை யாராலும் அறியப்படவில்லை.
கங்கை நதியானது சிவபெருமானது திருமுடியில் இருந்து பெருகி வருவதாகப் புராணங்கள் கூறுகின்றன.
அக்னி சொரூபமாக விளங்கும் இறைவன் சிவபெருமான் மீதிருந்து வருவதால் வெந்நீராக வருவதாகவும் கூறப்படுகிறது.
சிவபெருமானின் துணையோடு நாராயணரை சேவிக்கும் வண்ணம் அமைந்துள்ளதால் சைவ, வைணவ ஒற்றுமைக்கு சான்றாக இத்திருக்கோவில் விளங்குகிறது.
🌺🌺 தலமகிமை:-
மகாலட்சுமி தாயாரைத் திருமணம் செய்து கொள்ள இறைவன் ஸ்ரீமந்நாராயணன் குபேரனை அழைத்து மிக ஆடம்பரமான முறையில் திருமண ஏற்பாட்டை செய்த தலம் இது என்றும் கூறுவதுண்டு.
திருமணம் கைகூடாதவர்கள் இத்தல இறைவனை தரிசிப்பது சிறப்பு. குபேரன் வசிக்கும் "அளகாபுரி" என்னும் பட்டணம் இங்கிருந்து 9 மைல் தொலைவில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
அதை நினைவுபடுத்தும் வகையில் இத்திருக்கோவிலில் குபேரனுக்குச் சன்னதி உள்ளது. இங்குள்ள "அலக்நந்தா" நதியும், குபேரப்பட்டிணத்தில் உற்பத்தியாகி வருகிறது.
இது தேவப்பிரயாக்கில் பாகிரதியுடன் கலந்து "கங்கை" என்ற பெயரைப் பெறுகிறது. இந்த தலத்தில் தான் திருமந்திரம் அவதரித்ததாகக் கூறப்படுகிறது. இந்த தலத்தை "நந்தவனம்" என்றும் குறிப்பிடலாம்.
🌺🌺 கபாலம் விழுந்த இடம்:-
பிரம்மதேவரின் ஐந்து தலையில் ஒன்றை கிள்ளிய சிவபெருமானுக்கு, பிரம்மஹத்தி தோஷம் காரணமாக பிரம்மாவின் தலை சிவபெருமானின் கையை விட்டு கீழே விழவில்லை. அவர் விஷ்ணுவிடம் சென்று கேட்க, பூலோகத்தில் பதிவிரதை ஒருவரிடம் பிச்சை ஏற்றால் "பிரம்மஹத்தி தோஷம்" நீங்கி விடும் என்று உபாயம் கூறினார்.
சிவபெருமானும் கைலாயத்தை விட்டு பூலோகத்திற்கு இறங்கி வந்தார். அச்சமயத்தில் பத்ரி காஸ்ரமத்தில் மானிடனுக்குத் தாரக மந்திரத்தை ஸ்ரீமந்நாராயணர் உபதேசித்துக் கொண்டிருந்தார்.
அச்சமயம் நாராயணணுக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருந்த மகாலட்சுமியிடம் சிவபெருமான் பிச்சை கேட்க மகாலட்சுமி பிச்சையிட்டதும், சிவபெருமான் கையிலிருந்த பிரம்மதேவரின் தலை இங்கே விழுந்து விட்டது. இதைத் தான் "பிரம்ம கபாலம்" என்பர். எனவே, இங்கு பித்ருக்களுக்கு பிண்டம் இடுவது சிறப்பு. நமக்கு நாமே இங்கு ஆத்ம பிண்டமும் இட்டுக் கொள்ளலாம்.
🌺🌺 அதிசயம்:-
இங்குள்ள மூலவர் பத்ரி நாராயணர் கறுப்பு நிற சாளக்கிராமத்தால் ஆனவர். இவர் கிழக்கு முகமாக அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இடது கையில் சங்கும், வலது கையில் சக்கரமும், மற்ற இரு கரங்களையும் இணைத்து "யோக முத்திரை" மற்றும் "அபயவரதம்" காட்டி அருள்பாலிக்கிறார்.
🌺🌺 மங்களாசாசனம்:-
இத்தல இறைவனை பெரியாழ்வார் - 1 பாசுரம், திருமங்கையாழ்வார் - 21 பாசுரங்கள் என மொத்தம் 22 பாசுரங்களால் மங்களாசாசனம் பாடியருளியிருக்கிறார்கள்.
🌺🌺 வழித்தடம்:-
டில்லியிலிருந்து ஹரித்துவார் வழியாக பத்ரிநாத்திற்கு ஏராளமான பேருந்துகள் செல்கின்றன. கல்கத்தாவில் இருந்து வருபவர்கள் கல்கத்தா - டேராடூன் இரயில் மார்க்கத்தில் அமைந்துள்ள ஹரித்துவார் இரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து சுமார் 300 கி.மீ தொலைவில் பேருந்தில் பயணம் செய்து பத்ரிநாத்தை அடையலாம்.
அருள்மிகு அரவிந்தவல்லி தாயார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில்:-
அருள்மிகு முக்தி நாராயணர் திருக்கோவில் - திருசாளக்கிராமம் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:!!!"
No comments:
Post a Comment