Wednesday, May 12, 2021

108 திவ்யதேசங்கள் பதிவு - 101 முக்தி நாராயணர் திருக்கோவில்

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் பதிவு - 101 🌹🌹🌹

முக்தி கொடுக்கும் பெருமாள்! பெரியாழ்வார், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் என்ற பல சிறப்புகளை தன்னுள்ளே வைத்துக் கொண்டும், இத்தலத்தைப் பற்றி ஆத்மார்த்தமாகப் படிக்கும் நமக்கும் வரம் கொடுக்க காத்திருக்கும் திவ்யதேசத்தைத் தரிசிப்போமா?

அருள்மிகு முக்தி நாராயணர் திருக்கோவில் :-

திருச்சாளகிராமம்.


மூலவர்: முக்தி நாராயணன், ஸ்ரீமூர்த்தி
தாயார்: ஸ்ரீதேவி நாச்சியார்
கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்
திசை: மேற்கு
விமானம்: கனக விமானம்
தீர்த்தம்: சக்ர தீர்த்தம், கண்டகி ஆறு
மங்களாசாசனம்: பெரியாழ்வார், திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ தேவிநாச்சியார் ஸமேத ஸ்ரீ மூர்த்தயே நமஹ
ஊர்: முக்திநாத்

🌺🌺 முக்திநாத் :-

நலமளிக்கும் நாதனான இறைவன் நாராயணன், முக்தி அளிக்கும் மூலப் பரம்பொருளாக "முக்தி நாராயணர்" என்ற திருநாமத்தில் காட்சி தந்து அருளும் திருத்தலம்.

இத்தலத்தை தரிசிப்பவர்கள் அனைவருக்கும் முக்தி என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளதால் இத்தலத்திற்கு "முக்திநாத்" என்ற பெயர் உண்டானதாகக் கூறுவார்கள்.

பெரியாழ்வார் இத்தலத்தை "சாளக்கிராமம்" என்றும் இத்தல இறைவனை "சாளக்கிராம நம்பி" என்றும் மங்களாசாசனம் செய்துள்ளார்.

திருமங்கையாழ்வார் இத்தலத்தை "சாளக்கிராமம் அடை நெஞ்சே" என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.

இதனைக் கொண்டு ஆராய்ந்து பார்க்கையில் இத்தலம் அக்காலத்தில் "சாளக்கிராமம்" என்று பெயர் பெற்று விளங்கியதாகத் தெரிகிறது.

இவ்விடம் முழுவதும் "சால மரங்கள்" நிறைந்துள்ளதால் "சாளக்கிராமம்" என்று இத்தலம் பெயர் பெற்றிருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

🌺🌺 பக்தியோடு வாசம்:-

இந்தியாவின் அருகே உள்ள நாடான நேபாளத்தில் அமைந்துள்ளது இந்த முக்திநாத் திருத்தலம். அன்னபூர்ணா மலைத்தொடர்களுக்கு அப்பால், சுமார் 13800 அடி உயரத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

இமயமலைச் சாரலில் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ளதால், கடுமையான குளிர் இப்பகுதி முழுவதும் இருக்கும். கடுங்குளிர் என்பதால் கம்பளி போன்ற குளிர்கால ஆடைகளை எடுத்துச் சென்றால் மட்டுமே குளிரைத் தாங்க முடியும்.

இவ்விடத்தில் பிராணவாயு (Oxygen) குறைவாக இருக்கும் என்பதால் இங்கு செல்லும் பக்தர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுச் செல்வது என்பது அவசியமான ஒன்று.

பரிபூரண பக்தியோடு மட்டுமல்லாமல், இறைவனின் கருணையும், அருளும் இருந்தால் மட்டுமே நாம் இத்தலத்திற்குச் செல்ல முடியும்.

🌺🌺 தலவரலாறு:-

மதுகுளத்து அரசனான "தர்மதுவசன்" மற்றும் அவனது மனைவி மாதவிக்கும் "விருந்தை" என்ற மகள் அவதரித்தாள். அவள் சிறு வயதிலேயே இறைவன் நாராயணனை மணாளனாக அடைய விரும்பி இறைவனை நோக்கி தவமியற்றினாள்.

அப்போது அவள் முன் தோன்றிய பிரம்மா விதிப்படி இன்னும் இரு பிறவி எடுக்க வேண்டும் என்றும் இரண்டாம் பிறவியிலேயே இறைவனை அடைய வேண்டும் என்று வரம் அளித்தார் பிரம்மதேவர்.

பிரம்மா அளித்த வரத்தின் படியே அடுத்த பிறவியில் ஜலந்தரன் என்ற அசுரனுக்கு மனைவியானாள். இருப்பினும் இறைவன் மீது பக்தி கொண்ட விருந்தை மறுபிறவியிலும் இறைவன் மீது பக்தி கொண்டு பதிவிரதையாகா வாழ்ந்தாள்.

ஜலந்தரன் ஏராளமான கொடுமைகளைச் செய்தும் அவளது விரதத்தால் காப்பாற்றப்பட்டான். அவனது கொடுமைக்கு முடிவினை எண்ணிய திருமால் அவளது விரதத்திற்கு தடை ஏற்படுத்தி அசுரனை வதம் செய்தார்.

இதனால் மனம் வெகுண்ட விருந்தை கல்லாக போகும் படி எம்பெருமானான ஸ்ரீமந்நாராயணனை சபித்தாள்.

இறைவனாக இருந்தாலும், உத்தமிகள் சாபத்திற்கு ஆளானால் அனுபவித்தே ஆக வேண்டும் என்பதற்கு இவ்வரலாறே சான்றாகும்.

சாபமளித்தவரே விமோசனம் அளிக்க வேண்டும் என்பதால், அவள் அடுத்த பிறவி வரை பெருமாள் கல்லாக இருந்ததாகவும், பிறகு உருவம் பெற்று அவளை மணந்ததாகவும், கல்லாகக் கிடந்த இவ்விடத்தில் எக்காலமும் கல்லாக, மண்ணாக, காற்றாக என அனைத்துமாகி இருந்து வரும் பக்தர்கள் அனைவருக்கும் முக்தியளிக்க வேண்டும் என்ற வரத்தையும் நமக்காக அருள்வதாக தலவரலாறு கூறுகிறது.

🌺🌺 அற்புதங்கள்:-

அக்கால புராணங்கள் பலவற்றிலும் இத்தலத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. "சாளக்கிராமத்தில் ஒவ்வொரு கல்லிலும் இறைவன் இருக்கிறார்" என்ற பதிவே அனைத்திலும் உள்ளது.

🌺🌺 மங்களாசாசனம்:-

இத்தலத்தை பெரியாழ்வார் - 2 பாசுரம், திருமங்கையாழ்வார் - 10 பாசுரம் என மொத்தம் 12 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.

🌺🌺 வழித்தடம்:-

நேபாள நாட்டின் தலைநகரான காத்மண்டுவிலிருந்து 250 கி.மீ தொலைவில் முக்திநாத் அமைந்துள்ளது. அங்கிருந்து சுமார் 600 அடி உயரத்தில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. விமானம் மூலமோ அல்லது நடந்தோ இத்திருத்தலத்தை சென்றடையலாம்.

அருள்மிகு முக்தி நாராயணன் சுவாமி திருவடிகளே சரணம்.
அருள்மிகு ஸ்ரீதேவி நாச்சியார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில்:-

102 வது திவ்யதேசமான அருள்மிகு பாலகிருஷ்ணன் திருக்கோவில் - திருவடமதுரை திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!!!"

No comments:

Post a Comment