Monday, May 17, 2021

108 திவ்யதேசங்கள் - பதிவு 106 (V)

🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 106 (V) 🌹🌹🌹

திருமலையைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இன்றைய பதிவில் அறிந்திடலாமா?

🌻🌻 ஆதிவராகர்:-

புராணக் கதைப்படி வெங்கடநாதனுக்கும் முன்னிருப்பவர் ஆதிவராகர். திருமகளை பிரிந்த விஷ்ணு இம்மலையில் வந்து தங்கினார். ஆதிவராகரிடம் சிறிது இடத்தை கேட்டு பெற்று அங்கு தங்கியிருந்தார். (பெருமாளே பெருமாளைச் சந்தித்துக் கொண்டதுதான் இங்கு விசேஷம். எப்படியென்றால் ஆதிவராகர் பெருமாளின் அம்சம், தங்க இடம் கேட்டு வரும் வேங்கடநாதனும் பெருமாளின் அம்சம்).

🌺🌺 இராமானுஜர்:-

ராஜராஜன் காலத்தில் திருமலையில் திருப்பணிகள் நடைபெற்றன. பின்னர் திருவெங்கடத்தானின் திருக்கோவில் சிவாச்சாரியார்களின் கையில் சென்று அவர்கள் எம்பெருமானைப் பூஜித்து வந்தனர். ஏனெனில், எம்பெருமான் சங்கு, சக்கரம் ஏதும் இல்லாத கோலத்தில் காட்சி அளித்ததால் "சிவபெருமான்" என்று கருதி பக்திப் பரவசத்துடன் பூஜித்து வந்தார்கள்.

அப்போது தான் அங்கு வந்த இராமானுஜர் பெருமாளை மீட்டு வைணவர்களிடம் தந்தார். ஏன் பெருமாளை மீட்டினார்?

காரணம்:-

சவாச்சார்கள் வெங்கடவனின் திருக்கோலத்தை சிவபெருமான்தான் என்று கருதினார்கள். இராமானுஜர் ஸ்ரீமந்நாராயணன் என்று கருதினார்.

அவர்கள் இருவருக்கும் மட்டுமல்ல, உலகத்தில் உள்ள அனைவரும் புரிந்து கொள்ள ஒரு சிறிய நிகழ்வு நடந்தது. அது என்னவென்றால், சிவபெருமான் எனில் அவரின் ஆயுதங்களையும், ஸ்ரீமந்நாராயணன் எனில் அவருக்குரிய சங்கு, சக்கரங்களையும் சில குறிப்பிட்ட சிவாச்சார்யர்கள் முன்னிலையிலும், இராமானுஜர் முன்னிலையிலும் வைத்து முதல் நாள் இரவு நடை அடைக்கப்பட்டது.

மறுநாள் காலை மூலவரின் சன்னிதானத்தைத் திறந்து பார்த்தால் அங்கு என்ன நடந்திருக்கும்?

மறுநாள் காலை மூலவரின் சன்னிதானத்தைத் திறந்து பார்த்தால் அங்கு சங்கு, சக்கரதாரியாக "ஏழுமலையான்" காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஆகவே, இன்று நாம் திருமலையில் காணும் தோற்றத்திற்கு இராமானுஜரே காரணம். பெருமாளுக்கு "சங்கு, சக்கரம், நாமம்" அணிவித்தவர்.

வேங்கடவனின் மார்பில் இருக்கும் "பத்மாவதி" பதக்கத்தையும் அவரே அணிவித்தார்.

🌷🌷 கோவிந்தராஜப் பெருமாள்:-

சோழ மன்னன் "கோவிந்தராஜப் பெருமாளை" கடலில் வீசியுள்ளார். அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. கடலில் வீசப்பட்ட கோவிந்தராஜப் பெருமாளை திருமலை அடிவாரத்தில் பிரதிஷ்டை செய்து, "திருப்பதி" என்ற ஊரையும் உருவாக்கினார். கோவிலுக்கு என்று சட்ட திட்டங்களை வகுத்தவர் இராமானுஜர்.

திருமலையில் யாரும் பூ வைக்கக் கூடாது. திருமலையில் யாரும் வேறு வாகனங்களில் போகக்கூடாது. கோவில் ஊழியர்களைத் தவிர யாரும் திருமலையில் தங்கக் கூடாது என்ற சட்ட திட்டங்களை வகுத்துக் கொடுத்தவர் இராமானுஜரே.

🌹🌹 பூஜை விவரங்கள்:-

திருமலை வேங்கடேசப்பெருமாளுக்கு ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு விசேஷமான சேவை நடைபெறுகிறது. இந்த சேவைகள் அனைத்தும் "வாராந்திர சேவைகள்" என்றழைக்கப்படுகின்றன.

🌻🌻 திங்கள் - விஷேச பூஜை:-

திருப்பதி ஏழுமலையானுக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 6 மணிக்கு நடைபெறும் முக்கிய சேவை கோவில் உள்ளே இருக்கும் கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை மலையப்ப சுவாமிக்கு நடைபெறுகிறது. 1991 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இச்சேவை "ஆர்ஜித சேவையாக" நடைபெற்று வருகிறது.

🌷🌷 செவ்வாய் - அஷ்டதள பாத பத்மாராதனம்:-

ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் காலை 6 மணிக்கு இரண்டாவது அர்ச்சனையாக 108 தங்கத்தாமரையால் மூலமூர்த்திக்கு நடைபெறும் நிகழ்வே "அஷ்டதள பாத பத்மாரதனம்".

🌺🌺 புதன் - சஹஸ்ரகலசாபிஷேகம்:-

ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 6 மணிக்கு தங்கவாயில் முன்பு நடைபெறும் பிரதான சேவை "சகஸ்ரகலசாபிஷேகம்". போக ஸ்ரீநிவாச மூர்த்தியுடன் ஸ்ரீதேவி, பூமிதேவி உடனுறை திருமலையப்பர் சுவாமிக்கும் இந்த "சகஸ்ரகலசாபிஷேகம்" நடைபெறும்.

🌴🌴 வியாழன் - திருப்பாவாடை - நேத்ர தரிசனம்:-

பிரதி வியாழக்கிழமை தோறும் வெங்கடேசப் பெருமாளுக்கு இரண்டாவது அர்ச்சனைக்குப் பிறகு நடைபெறும் நிவேதனம் "திருப்பாவாடை" ஆகும். இதனை "அன்ன கூடோத்ஸவம்" என்றும் கூறுவார்கள்.

🌾🌾 வியாழன் இரவு பூவங்கி சேவை:-

பிரதி வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெறும் தோமாலை சேவையை "பூவங்கி சேவை" என்பர். இந்த சேவை மட்டும் முழுமையாக ஏகாநேதமாக நடைபெறும். எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் பூவை ஆடையாக அணிந்திருப்பது போன்று காட்சியளிக்கும்.

இந்த சேவை முடிந்த பிறகு வியாழக்கிழமை இரவு பக்தர்கள் இந்த அலங்காரத்தில் எம்பெருமானைத் ததரிசிக்கலாம்.

🌻🌻 வெள்ளிக்கிழமை - அபிஷேகம்:-

வெள்ளிக்கிழமை அபிஷேகம் ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி மூலமூர்த்திக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த வெள்ளிக்கிழமை அபிஷேகத்தை "பகவத் இராமானுஜரே" துவக்கி வைத்துள்ளார். அவர் எம்பெருமானின் திருமார்பில் உறையும் "தங்க அலர்மேல் மங்கை" உருவத்தை அலங்காரம் செய்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இநேத அபிஷேகம் ஏற்பாடு செய்தாராம். இந்த சேவை "இராமானுஜர்" காலைத்திலிருந்தே நடைபெற்று வருகிறது.

🌾🌾 ஆகாசகங்கை தீர்த்த அபிஷேகம்:-

முற்காலத்தில் எம்பெருமான் நித்திய அபிஷேக சேவை கைங்கர்யத்தில் ஈடுபட்ட மகா பக்தர் "திருமலை நம்பி" வம்சத்தவர் கொண்டு வந்த நீரை பக்தியோடு தங்கச் சங்கில் ஆகாசதீர்த்தத்தை எம்பெருமான் சிரசின் மீது பொழிந்து "ஹரி!! ஹரி!!" என்று புருஷசூக்தத்தினை தொடங்குவர்.

இந்த ஆகாசகங்கை தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்வதை தாமே செய்வதைப் போன்று எண்ணி ஆச்சார்யர்கள் மெய் மறந்து போவார்கள்.

🌷🌷 நிஜப்பாத தரிசனம்:-

வெள்ளிக்கிழமை அபிஷேகத்திற்குப் பிறகு, அபிஷேக சேவையில் பங்கு கொள்ளும் பக்தர்கள் எம்பெருமானைத் தரிசித்து விட்டுச் சென்ற பிறகு "நிஜப்பாத சேவை" தொடங்கும். இதை "நிஜப்பாத தரிசனம்" என்பர். மற்ற நேரங்களில் திருப்பாதத்திற்கு "தங்கக் கவசம்" போடப்பட்டிருக்கும்.

🌺🌺 வெறுங்கை வேடன்:-

ஏழுமலையான் சாத்வீக, சாந்தமான தெய்வம். எந்த தெய்வச் சிலையிலும் ஆயுதம் இருக்கும். ஆனால், ஏழுமலையானின் திருவுருவச் சிலையில் எந்த ஆயுதமும் இல்லை. அவர் நிராயுதபாணி. அதனால் தான் இலக்கியத்தில் "வெறுங்கை வேடன்" என்று அழைக்கிறார்கள்.

🌾🌾 மங்களாசாசனம்:-

பொய்கையாழ்வார் - 10, பூதத்தாழ்வார் - 9, பேயாழ்வார் -19, திருமழிசை ஆழ்வார் - 15, நம்மாழ்வார் - 52, குலசேகராழ்வார் - 11, பெரியாழ்வார் - 7, ஆண்டாள் - 16, திருப்பாணாழ்வார் - 2, திருமங்கையாழ்வார் - 61 என மொத்தம் 202 பாசுரங்களால் மங்களாசாசனம் பாடியருளியுள்ளார்கள்.

"செடியாய வல்வினைகள் தீர்க்கும்
திருமாலே நெடியானே வேங்கடவா
நின்கோயிலின் வாசல் அடியாரும்
வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துநின் பவளவாய் காண்பேனே!!"

- குலசேகராழ்வார்.

🌻🌻 திருமலை தகவல்கள்:-

திருமலை பற்றிய மேலும் தகவல்களுக்கு "திருப்பதி எனும் பிரம்மாண்டம்" என்னும் பதிவு ஏற்கனவே பதிவிடப்பட்டது. இதனை சுட்டி படித்துப் பயன் பெறலாம்.

🌹🌹 வழித்தடம்:-

ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திவ்யதேசம். இந்தியாவின் அனைத்து இடங்களிலிருந்தும் பேருந்து மற்றும் இரயில் வசதி உண்டு.

அருள்மிகு கோவிந்தராஜ பெருமாள் திருவடிகளே சரணம்.

அருள்மிகு ஸ்ரீநிவாச பெருமாள் திருவடிகளே சரணம்.
அருள்மிகு அலர்மேல் மங்கை தாயார் திருவடிகளே சரணம்.

🌾🌾 நாளைய பதிவில்:-

இன்றைய பதிவும் நாம் பூலோகத்தில் காணக்கூடிய 106 திவ்யதேசங்களும் நிறைவடைந்தது. வடநாட்டின் 11 திருக்கோவில்களின் தரிசனம் நிறைவுற்றது.

நாளைய பதிவு முதல் திருநாட்டின் 2 திவ்யதேசங்களைப் பார்ப்போமா!!! இவை இரண்டும் முக்திக்குப் பின் தான் நம்மால் காண முடியும். இந்த 106 திவ்யதேசத்தை நம் உடலாலும், மனதாலும் கண்டோம். மற்ற இரண்டும் ஆன்மாவால் மட்டுமே காண இயலும்.

"ஓம் நமோ நாராயணாய நம:!!!"

No comments:

Post a Comment