🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 94 🌹🌹🌹
இரண்டு மூலவர்கள் காட்சி தந்து அருளும் அற்புதமான திவ்யதேசம். இராம பிரான் தர்ப்பைப் புல் மீது சயனிக்கும் அருமையான திவ்யதேசம். இத்திருக்கோவிலை நாம் இன்று தரிசிக்க இருக்கிறோம்.
திருப்புல்லாணி.
மூலவர்: ஆதி ஜகந்நாதர், சக்கரவர்த்தித் திருமகன், தெய்வச்சிலையார், தர்ப்பசயன ராமர்.
தாயார்: கல்யாணவல்லி, பத்மாஸநி
உற்சவர்: கல்யாண ஜகந்நாதர்
கோலம்: வீற்றிருந்த, சயனத் திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: கல்யாண விமானம்
தீர்த்தம்: ஹேம தீர்த்தம், ரத்னாகரம்
நாமாவாளி: ஸ்ரீ கல்யாணவல்லீ ஸமேத ஸ்ரீ கல்யாண ஜகந்நாதாய நமஹ
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
ஊர்: திருப்புல்லாணி
🌺🌺 திருப்புல்லாணி:-
அவனியெல்லாம் காக்கும் எம்பெருமானாகிய ஸ்ரீமந்நாராயணன் தர்ப்பைப் புல்லாண நாணலில் சயனித்ததால், இத்தலத்திற்கு "திருப்புல்லாணி" என்பது பெயர். பாண்டி நாட்டுத் திருத்தலங்களில் மிகவும் தொன்மை வாய்ந்த தலம் இத்திருக்கோவில் ஆகும். இத்திருக்கோவில் இராம அவதாரத்தில் உருவானதாக தலவரலாறு கூறுகிறது.
🌺🌺 தலவரலாறு:-
இராம அவதாரத்தில் இராவணன் சீதாதேவியை சிறையெடுத்துச் சென்றான். அதனால் சீதையை மீட்க சேதுக்கரையில் வானர சேனைகளுடன் இராம பிரான் தங்கியிருந்த போது கடலைக் கடப்பதற்கு உபாயம் சொல்ல வருணனை நோக்கி பிரார்த்தித்து, 7 நாட்கள் தர்ப்புல்லாண நாணலின் மீது சயனித்து, "பிரயோபவேசம்" செய்ததாகவும், அதனால் இத்தலத்திற்கு வடமொழியில் "தர்ப்பசயனம்" என்று பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. அத்தகைய தர்ப்பசயனத் திருக்கோலத்திலேயே இன்றும் காட்சி தருகிறார்.
🌺🌺 தட்சிண ஜகந்நாதம்:-
இறைவன் நாராயணன், "அருள்மிகு ஜகந்நாதப் பெருமாள்" என்ற திருநாமத்துடன், பாரத தேசத்தில் மூன்று முக்கியமான தலங்களில் சேவை சாதிப்பதாக ஐதீகம். அவை "உத்தர ஜகந்நாதம், மத்திய ஜகந்நாதம், தட்சிண ஜகந்நாதம்" என்று போற்றப்படுகிறது.
உத்தர ஜகந்நாதம் என்பது ஒரிசா மாநிலத்தில் உள்ள "பூரி ஜகந்நாதர்" ஆலயத்தைக் குறிக்கும்.
மத்திய ஜகந்நாதம் என்பது பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசை ஆழ்வார் திருஅவதாரம் செய்த, சென்னைக்கு அருகில் உள்ள ஜகந்நாத பெருமாள் திருத்தலத்தைக் குறிக்கும்.
தட்சிண ஜகந்நாதம் என்பது திருப்புல்லாணி திருத்தலத்தைக் குறிக்கும்.
🌺🌺 ஆதி ஜகந்நாதம்:-
அருள்மிகு ஜகந்நாத பெருமாள் வீற்றிருந்த (அமர்ந்த) திருக்கோலத்தில் மற்றும் ஒரு தனிச்சன்னதியில் இரு தேவியருடன் சேவை சாதிக்கிறார். காலத்தால் இத்தலம் தொன்மையானதாகவும், அதன் காரணமாக இத்தலத்திற்கு "ஆதி ஜகந்நாதம்" என்று ஒரு பெயர் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
🌺🌺 மரம் வடிவில் மகாவிஷ்ணு:-
பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில், "மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்" என்று சொல்லியுள்ளார். இத்தகைய சிறப்பு பெற்ற அரசமரமே இத்தலத்தின் தலவிருட்சமாகும். இந்த மரம் சுவாமி சன்னதிக்குப் பின் புறமாக உள்ளது. பக்தர்கள் இதை மகாவிஷ்ணுவாகக் கருதி வழிபடுகிறார்கள்.
🌺🌺 மங்களாசாசனம்:-
இத்திருக்கோவிலில் திருமங்கையாழ்வார் தன்னை பெண்ணாக பாவித்து மங்களாசாசனம் செய்துள்ளார். அது தவிர ஆண்டாள் நாச்சியார், திருமழிசை ஆழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் இங்குள்ள சேது பாலம் பற்றிப் பாடியுள்ளார்கள்.
திருமங்கையாழ்வார் 21 பாசுரங்கள் பாடியருளிய திவ்யதேசம்.
நமக்கே நலமாதலின் ஆதுதாரான் எனினும் தரும் அன்றியும் அன்பராய் போதும்
மாதே! தொழுதும் அவன் மன்னு புல்லாணியே!!!"
- திருமங்கையாழ்வார்.
🌺🌺 சிறப்புகள்:-
இரண்டு மூலவ மூர்த்திகள் அருள்புரியும் திருத்தலம்.
முதன் முதலில் தோன்றிய ஆதி ஜகந்நாதர் காட்சி தந்து அருளும் அற்புதத் திருத்தலம்.
இராமபிரான் சயனத் திருக்கோலத்தில் காட்சி தந்தருளும் திவ்யதேசம்.
திருமகள் பிராட்டி கல்யாணவல்லி என்ற திருநாமத்தில் காட்சி தந்தருளும் திவ்யதேசம்.
திருமங்கையாழ்வார் 21 பாசுரங்கள் பாடியருளிய திவ்யதேசம்.
🌺🌺 வழித்தடம்:-
இராமநாதபுரம் மாவட்டத்தில், கீழக்கரை செல்லும் பாதையில், தெற்கே 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.
அருள்மிகு கல்யாணவல்லி தாயார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில்:-
பாண்டிய நாட்டின் கடைசித் திவ்யதேசமான அருள்மிகு சத்தியமூர்த்தி திருக்கோவில் - திருமெய்யம் திருக்கோவிலைத் தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:!!!"
No comments:
Post a Comment