Tuesday, May 11, 2021

108 திவ்யதே சங்கள் - பதிவு 97 நைமிசாரண்யம்

 🌹🌹🌹 * 108 திவ்யதேசங்கள் - பதிவு 97* 🌹🌹🌹

ஏராளமான தவ சீலர்களும், முனிவர்களும் முக்தி கண்ட தலத்தை நாம் இப்போது தரிசிக்க போகிறோம். ஆரம்பமே வித்தியாசமாக இருக்கிறதல்லவா வாருங்கள் 97 வது திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

அருள்மிகு தேவராஜன் திருக்கோவில் :-
திருநைமிசாரண்யம்
மூலவர்: தேவராஜன் (ஸ்ரீஹரி)
தாயார்: ஸ்ரீஹரிலக்ஷ்மி, புண்டரீகவல்லி
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: ஸ்ரீ ஹரி விமானம்
தீர்த்தம்: சக்ர தீர்த்தம், கோமுகி தீர்த்தம், நேமி தீர்த்தம், திவ்ய தீர்த்தம், விச்ராந்த தீர்த்தம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ ஸ்ரீஹரிலக்ஷ்மீ ஸமேத ஸ்ரீ தேவராஜாய நமஹ
ஊர்: நைமிசாரண்யம்

🌺🌺 அற்புதங்கள் :-

ஆதிநாதனான இறைவன் திருமாலின் திருஅவதாரமாகவும், ஐந்தாவது வேதமாகிய "மகாபாரதம்" இயற்றப்பட்ட புண்ணியத் திருத்தலம். புராண காலத்தில் இத்தலம் இருந்த பகுதி முழுவதும் காடுகளால் சூழப்பட்டு இருந்ததாகவும், அவ்வனத்திற்கு "நைமிசாரண்ய வனம்" என்று பெயர் பெற்று விளங்கியதாகவும் கூறப்படுகிறது.

வியாச முனிவர் தொகுத்துக் கூற முழு முதற் கடவுளான விநாயகப் பெருமான் மகாபாரதம் இயற்றிய அற்புதம் நைமிசாரண்ய வனத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

மகாபாரதமே ஐந்தாவது வேதம். அந்த ஐந்தாவது வேதமாகிய மகாபாரதமே இயற்றப்பட்ட அற்புதமான தலத்தை அறிந்திடும் போது பிரமிப்பு தான் தோன்றுகிறது. ஏனென்றால் வியாச முனிவர் சொல்ல விநாயகப் பெருமான் எழுதிய மகாபாரதம் இயற்றிய அற்புதமான வனம் நைமிசாரண்யம். அப்பேற்பட்ட நைமிசாரண்ய வனத்தில் இருந்து அருள்புரியும் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணரான தேவராஜனை நாம் தரிசித்துக் கொண்டு இருக்கிறோம் அல்லவா!!!.

🌺🌺 தலவரலாறு:-

முற்காலத்தில் பாரத பூமியில் வசித்து வந்த முனிவர்கள் அனைவரும் உலக நன்மையைக் கருதி பன்னிரண்டு ஆண்டுகள் சந்திர வேள்வியைச் செய்ய முடிவு செய்தனர். அதற்கான இடத்தைத் தெரிவு செய்ய பிரம்மாவின் துணையை நாடினர்.

அதற்கு பிரம்மா ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து அதை ஒரு சக்கரம் போன்று வளைத்து அதனை வானுலகில் இருந்து பூமியில் விட்டார். அந்த சக்கரம் "நைமிச வனம்" என்னும் பகுதியில் விழுந்தது.

வனம் என்பதற்கு வடமொழியில் "ஆரண்யம்" என்பது பொருள். இதன் காரணமாகவே இவ்விடம் "நைமிசாரண்யம்" எனப் பெயர் பெற்றது.

முனிவர்கள் எண்ணியவாறே வேள்வியை நிகழ்த்த, அவர்களுக்காக இறைவன் "தேவாதிராஜன்" என்ற திருநாமத்தில் காட்சி தந்து அருளினார்.

உலகம் உய்ய(நன்மை) வேள்வி நிகழ்ந்த இடமாதலால், இத்தலம் வந்து தரிசிப்பவர்களுக்கு முக்தி நிலை கிட்டும் என்று எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனான தேவாதிராஜன் வரமளித்தார்.

முக்தி கிடைக்கும் தலம் என்றால் எப்பேர்ப்பட்டவர்களுக்கு முக்தி கிடைத்தது? ஏராளமான முனிவர்களும், தவ சீலர்கள் முக்தி கண்ட தலம். ஒரு சில முனிவர்கள், தவ சீலர்கள் முக்தி காணும் போதே சிறப்பான தலம் என்கிறோம். ஏராளமான முனிவர்கள் என்றால் இத்தலத்தின் சிறப்பைப் பற்றி என்ன சொல்வதென்று எனக்கே தெரியவில்லை.

🌺🌺 இறைவனின் திருமேனி:-

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த இத்தலத்தின் ஆலயம், விமானம் ஆகியவை இருந்த இடம் தெரியவில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஆலயத்தையே தற்சமயம் நம்மால் தரிசனம் செய்ய முடிகிறது. ஆரண்ய ரூபமாக இறைவன் இத்தலத்தில் காட்சி தந்ததாக புராணங்களில் கூறப்படுகிறது.

🌺🌺 இயற்கை வழிபாடு:-

இயற்கை வழிபாடு முறைப்படி எம்பெருமானை வன உருவத்தில் வழிபடும் முறை 108 திவ்யதேசங்களில் இங்கு மட்டுமே காணப்படுவது சிறப்பம்சம். இறைவனுக்கு "சக்ர நாராயணன்" என்ற பெயரும் உண்டு. இந்த சக்கர நதிக்கரையில் சக்கரத்தாழ்வார், ராமர், லட்சுமணன், சீதை முதலியோர்க்கும் கோவில்கள் உண்டு. சிறப்பாக இங்கு விநாயகருக்கும் தனிச்சன்னதி உண்டு. இது வேறெந்ந்த வைணவத் தலத்திலும் இல்லாத ஒன்றாகும்.

இங்கிருந்து கோமுகி (கோமடி) நதிக்குப் போகும் வழியில் விநாஸ கட்டி என்ற இடத்தில் வேதவியாசருக்கும் ஆலயம் உள்ளது. வியாச முனிவரும், சுக முனிவரும் இங்கிருந்து கொண்டு தான் பாகவதம், பாகவதப் புராணங்கள் போன்றவற்றை இயற்றினார்கள்.

இதே ஊரில் மற்றொரு புறத்தில் அனுமன் கட்டி என்றழைக்கப்படும் ஆலயத்தில் இராம, லட்சுமணர்களைத் தமது தோளில் தாங்கி எழுந்தருளியுள்ள அனுமன் சிலை ஒன்றும் உள்ளது.

சூதபௌராணிகர் உக்கிரசிரவஸ், குலபதி சௌனகர் தலைமையிலான முனிவர்களுக்கு மகாபாரதம் மற்றும் புராணங்களை எடுத்துக் கூறினார்.

🌺🌺 சிறப்புகள்:-

கோமுகி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அற்புதத் திவ்யதேசம்.

திருமகள் பிராட்டி ஸ்ரீஹரிலக்ஷ்மி என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.

ஏராளமான முனிவர்களும், தவசீலர்களும் முக்தி கண்ட ஆனந்தமயமான திவ்யதேசம்.

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள் பாடியருளிய திவ்யதேசம்.

🌺🌺 மங்களாசாசனம்:-

திருமங்கையாழ்வார் இத்தல இறைவனை 10 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.

🌺🌺 வழித்தடம்:-

உத்தரபிரதேச மாநிலம், கல்கத்தாவின் டேராடூன் இரயில் பாதையில் அமைந்துள்ள பாலமாவ் என்ற இரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து சீதாபூர் என்ற இடத்திற்குச் செல்லும் கிளை ரயில் ஏறி நைமிசாரண்யம் என்ற இடத்தில் இறங்க வேண்டும். இரயில் நிலையத்திலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

டில்லிக்கும் லக்னோவிற்கும் இடையில் அமைந்துள்ள சீதாபூர் என்ற இடத்தில் இறங்கி, அங்கிருந்து மற்றொரு பேருந்து வாயிலாகவும் 15 கி.மீ சென்று இத்திருத்தலத்தை அடையலாம்.

அருள்மிகு தேவராஜன் சுவாமி திருவடிகளே சரணம்.
அருள்மிகு ஸ்ரீஹரிலக்ஷ்மி திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில்:-

அருள்மிகு வாசுதேவன் திருக்கோவில் - திருப்பரிதி திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!!"

No comments:

Post a Comment